"யதஸ்ததீயா:"
பக்தர்களின் ஜாதி வித்தியாசமோ மற்ற ஏற்ற தாழ்வுகளோ ஏன் பார்க்ககூடாது?ஏனென்றால் அவர்கள் இறைவனின் அடியார்கள்.பகவானுக்கு சொந்தமானவர்கள்.
"வாதோ நாவலம்ப்ய : "
பக்தியோக சாதகர்கள் வாத விவாதங்களில் ஈடுபட கூடாது.அதற்க்கு அவசியமும் இல்லை.தாம் பகவானை பக்தி செய்வதிலேயே, பஜனை செய்வதிலேயே பொழுதை போக்க வேண்டுமே அன்றி வாத விவாதங்களில் ஈடுபட்டு பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது.
உன் வாதம் சரியில்லை.நான் சொல்வது தான் சரி என்று நாத்திக வாதம் அல்லது பிற மனிதர்கள் கருத்துக்களை முறியடித்து தர்க்க வாதங்களை வளர்க்க கூடாது.பகவானின் பிரேமை பக்தியை மறந்து வேறு பல விசயங்களில் சிக்கிக்கொள்ள கூடாது.
தர்க்கம் செய்யும்போது இரு தரப்பினரும் தன் கருத்துக்களை நிலை நாட்ட பிடிவாதமாகவே இருப்பார்கள்.இறுதியில் சண்டையாக கூட மாறலாம்.
"தர்க்கா பிரதிஸ்தாத் " என்று பிரம்மா சூத்திரம் கூறுகிறது.
விசிச்டாத்வைத கருத்துக்களை பிரதானமாக கொண்டு எழுதிய ராமானுஜா சாரியார் பக்திக்கு தர்க்கவாதத்திற்கு இடமில்லை என்று பாஷ்யம் எழுதியுள்ளார்.கடோபநிசத் கூறுகிறது.
"நைஷா தர்கேன மதிராபனேயா"
தர்க்க வாதத்தால் பிரம்ம தத்துவத்தை புரிய வைக்க முடியாது.இந்த சத்திய தத்துவம் தூய சித்தம் படைத்த சாத்வீக மனிதனுக்கு தாமாகவே உணரப்படுகிறது.
தர்க்க வாதம் செய்து சாஸ்திர தத்துவங்கள் அறியப்படலாம் தான்.ஆனால் அதை குருவிடம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தர்க்க ரீதியாக அணுகலாம்.அதில் குற்றமில்லை.
பிற மனிதரோடு பிடிவாதமாக ஒருவர் கருத்தை ஒருவர் வலியுறுத்த வாதம் செய்யும் போது கோபம் வரும். ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்வார்கள்.பகை என்ற தீ பெரிதாக வளர்ந்து கை கலப்பில் முடியும்.தவிர்க்க முடியாத வாதம் செய்யும் சந்தர்பம் ஏற்பட்டாலும் அதை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.எதிராளி மிக பிடிவாதக்காரனாக இருந்தால் வாதத்தை தவிர்த்து விட வேண்டும்.
அவர்கள் கருத்து தன் பக்திக்கு, வழிபாட்டிற்கு எதிராக சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ள கூடாது.வார்த்தைகளை வளர்க்க கூடாது.தனது கருத்தை புகழ கூடாது.வாதம் செய்யும் நோக்கம் கொண்டு பேசக்கூடாது.பிறர் குற்றங்களை சுட்டிக்காட்டி அவர் மனம் புண் படும்படி பேசக்கூடாது.தன் கருத்தை மதிக்காதவர்களிடம், ஒப்புக்கொள்ளாதவர்களிடம்தன் கருத்தை திணிப்பதற்காக அவர்களின் கருத்தை வெட்டிவிட்டு அழுத்தமாக பேசக்கூடாது.ஏனெனில் அப்படி பேசினால் எதிர் வாதம் செய்பவர்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் சிரத்தையுடன் கேள்வி கேட்கப்படும் போது நிச்சயம் பகவத் விசயங்களை பற்றி கூற வேண்டும்.பிறரை கேலி செய்வது போல பேசக்கூடாது.பக்தியில் இருக்கும் நம்பிக்கையை தகர்க்க கூடாது. தானும் கடைத்தேற்றி பிறரையும் கடைத்தேற்றவேண்டும். என்ற எண்ணம் இருக்க வேண்டும். பக்தியில் நன்மை பயக்கும் சொற்களை இனிமையாக அன்பாக கூற வேண்டும்.
தர்க்க வாதங்கள் நிச்சயமாக பகவத் பிரேமையை அளிக்காது.இறைவனடி சேர்க்காது.ஞானத்தையும் உண்டாக்காது.தர்க்கவாதம் நடக்கும் இடத்தில அகந்தை,துவேசம்,கோபம்,பகை,இம்சை எல்லாம் கூட்டம் கூடி அமர்ந்துவிடும்.
"பாஹூல்யாவகாசாதநியதத்வாச்ச "
வாத விவாதங்கள் செய்துகொண்டே இருந்தால் அவை நீண்டு கொண்டே போகும்.தத்தம் கருத்துக்களை நிலை நாட்ட வார்த்தை ஜாலங்கள் சிக்கலை ஏற்படுத்தும்.மேலும் தர்க்க வாதத்தால் எந்த பயனும் இல்லை.தர்க்க வாதம் செய்து சித்தாந்தத்தை நிலை நாட்டி வென்று விட்டாலும் பலனில்லை.பேசுவது என்பது எதுவும் நடைமுறைக்கு பயன்படாது.
பேசுவதை சுலபமாக பேசலாம்.வாழ்கையில் உண்மையை கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறையாகும்.வாழ்கையில் சூதின்றி பகவானை தொழுவது சிரத்தையுடன் திருநாமங்களை ஜபம், பஜனை செய்வது மேலான கடமையாகும்.(தொடரும்)
No comments:
Post a Comment