"லப்யதே அபி தத்க்ருபயைவ "
எல்லாம் வல்ல அந்த இறைவனின் திருவருளால் மட்டும் மஹா புருசர்கள் சந்திப்பு நிகழும்.
திருஞானசம்பந்தர் என்ற மகானுக்கு நேரடியாக சிவபெருமானின் அருள் கிடைத்து இருந்தது.பிள்ளை பிராயத்தில் இருந்தே சிவபெருமானை நினைத்து உருகிபதிகங்களை பாடிகொண்டே இறைவன் குடிகொண்ட கோயில்களுக்கு சென்ற வண்ணம் இருந்தார்.
திருநெல்வாயில் அறத்துறையில் மூர்த்தியாக வீற்றிருக்கும் சிவபெருமான் ஞானசம்பந்தர் தம் காலால் நடந்து வந்ததை கண்டு மனமிரங்கினார்.சிவபெருமான் அன்று இரவே அவூரில் உள்ள ஒவ்வொரு அந்தணர் கனவிலும் தோன்றி "ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான் முத்து சிவிகையும், முத்து மணிக்குடையும் நம்மிடம் இருந்து எடுத்து சென்று அவனுக்கு கொடுங்கள் " என்று கூறி மறைந்தார்.வேதியர்கள் எல்லோரும் விழித்து எழுந்தனர்.அவ்வூரில் உள்ள சந்திரசேகர பெருமானின் ஆலயத்திற்கு எல்லோரும் திரண்டு சென்றனர்.ஆலயத்தினுள் இருந்தவரும் அக்கனவு கண்டு எழுந்தார்.அனைவரும் சேர்ந்து ஆச்சர்யம் அடைந்தனர்.திருப்பள்ளி எழுச்சிக்காலம் வந்தது.அன்பர்கள் திருக்காப்பு நீக்கினார்கள்.
அங்கே சந்திரசேகர பெருமானின் முன்னிலையில் சந்திரனை போல பிரகாசமான ஒரு முத்து சிவிகையும் ஒரு வெண்குடையும் ஊதும் முத்து சின்னமும் காணப்பட்டன.எல்லோரும் அளவில்லா ஆனந்தம் அடைந்து தலை மீது கை குவித்து கும்பிட்டு ஆரவாரம் செய்தார்கள்.
அங்கு திருஞானசம்பந்தர் அன்று இரவே கனவில் சிவபெருமான் தோன்றி நாம் உனக்கு கொடுத்துள்ள முத்து சிவிகை முதலானவற்றை ஏற்றுக்கொண்டு சிவிகையில் ஏறி எம்மிடம் வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.இவ்வாறு இறைவனை முழுமையாக அறிந்து கொண்ட ஞானசம்பந்தர் சிவபெருமானின் பேரன்பு பொழியும் பக்தராக இருந்தார்.
உண்மையில் பகவானின் அருளும் மகான்களோடு ஏற்படும் தொடர்பும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும்.
" தஸ்மின் ஸ்தஜ்ஜனே பேதா பாவாத் "
பகவானுடன் ஒன்று கலந்து பிரேமையில் திளைத்த பக்தர்களுக்கும் பகவானுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லாததால் மகான்கள் உயர்ந்தவர்கள்.
" ப்ரஹ்மவித் ப்ரஹ்மை பவதி " என்ற உபநிசத வாக்கு படி இறைவனை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் பிரம்மமாகி விடுவார்கள்.அப்படிப்பட்ட மகான்களை சேவித்தால் அது பகவானுக்கே செய்யும் சேவை ஆகிறது.பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்.சாதுக்கள் என் இதயம் ஆவார்கள்.என் இதயம் சாதுக்களிடம் உள்ளது.என்னை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.நானும் அவர்களை விட்டு பிரிய மாட்டேன்.(தொடரும்)
No comments:
Post a Comment