Sunday 4 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 22

அந்த அம்மையாருக்கு ஓர் உபாயம் தோன்றியது.உடனே அவர் தம் கணவரை நோக்கி" நம் வறுமை நீங்குவதற்காக இன்று பகல் பொழுதெல்லாம் வயலில் செந்நெல் விதைத்தோமே அவவிதைகள் இப்போது சேற்றில் ஊறி முளை விட்டிருக்கும் அவற்றை ஒரு கூடையில் அள்ளிக்கொண்டு வந்தால் அவற்றை கொண்டு கூடியவரை சோறு சமைக்கலாம்.இதை தவிர வேறு வழி எனக்கு தோன்றவில்லை".என்றார்.
          தம் மனைவி கூறிய வார்த்தைகளை கேட்டதும் நாயனாருக்கு பெருஞ்செல்வம் பெற்றது போன்றதொரு பெரு மகிழ்ச்சி போங்க வயலில் விதைத்த செந்நெல்லை தோண்டி எடுத்துவர புறப்பட்டார்.
        (விதை நெல்லை விதைக்கே வேளாளர்கள் பயன் படுத்துவார்களே தவிர விதையை குத்தி சாப்பிடும் வழக்கம் இல்லை)
         வானம் பெருகி பெருமழை பொழிந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவில் எங்கும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது.வழி திசை கண் மண் எதுவும் தெரியாத கும்மிருட்டு சூழ்ந்த உலகத்தவர் அஞ்சி நடுங்கும் படியான அந்த நடு சாமத்தில் மாறனாரோ உள்ளூர சிவனடியார் அன்பு ஊக்க தூண்டுவதால் ஓர் கூடையை தமது தலையில் கவிழ்த்திக்கொண்டு வயலை நோக்கி நடந்தார்.திசை தெரியாத கருமிருள் படலதினூடே மாறனார் தமக்கு பழக்கமான வழித்தடத்தை குறிப்பால் உணர்ந்து காலினால் தட்டி தடவியவாறு வயலை அடைந்தார்.அங்கு வயலில் மலை நீரில் மிதக்கும் செந்நெல் முளைகளை தம் கையினால் சேகரித்து அள்ளி அள்ளி தம் கூடை நிறைய நிரப்பினார்.பிறகு அந்த பெருங்கூடையை தம் தலை மீது தூக்கி சுமந்து கொண்டு வீடு நோக்கி வேகமாக திரும்பி வந்தார்.
         அவர் வருகையை பேராவலுடன் எதிர்பார்த்து அவர் மனைவியார் தம் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.நாயனார் வந்ததும் அவரது தலையிலுள்ள கூடையை அன்புடன் வாங்கிகொண்டார்.நெல் முளைகளில் படிந்திருந்த சேறு போகும்படி அவற்றை நன்றாக நீரில் கழுவி ஊற்றினார்.நாயனாரை நோக்கி அடுப்பில் தீ மூட்ட விறகு இல்லையே என்றார்.மாறனாரோ தம் வீட்டின் கூரையோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கிலமான வரிச்சு கொம்புளை வெட்டி அடுப்பில் தீ மூட்ட கொடுத்தார்.அதன் பின் தம் வீட்டு விருந்துக்கு வந்திருக்கும் சிவனடியார் வழி நடந்த இளைப்போடும் வருந்தும் பசியோடும் துன்புருவாரே என்று நினைத்து அன்புடன் தன் வீட்டு கொல்லை புறத்திற்கு சென்று அங்கு குழிகளில் முளைத்திருக்கும் சிறு கீரைகளையும் பூசணி முதலியவற்றின் புன்செய் குரும்பயிர்களையும் கையினால் தடவி வேரோடு பறித்துக்கொண்டு வந்து மன மகிழ்வோடு மனைவியாரிடம் தந்தார்.அவர் சுத்தமான நீர் விட்டு கழுவி புனிதமான பாத்திரத்தில் வைத்து தன் கைதிறமையினால் வகையாக கறி சமைத்தார். இனி சிவனடியாருக்கு இங்கே விருந்து பரிமாறி திருப்தியாக அமுது செய்விப்போம் என்றார்.
           சிவனடியாரோ ஒருபுறம் உறங்குபவர் போல படுத்திருந்தார்.எவராலும் உணர முடியாத ஒருவரான அப்பெருமானுக்கு விருந்து தயாராகிவிட்டதை உணர்த்த விரும்பி மாற நாயனார் அடியாரின் முன்னே சென்று துயிலை நீக்கினார்.
         பெரியவரே எழுந்தருள்க மாயை இருளில் அழுத்திக்கிடக்கும் அடியேன் உய்யும் படி எழுந்தருளி இங்கு திருவமுது செய்ய அருள்க என்று மாற நாயனார் அன்புடன் அழைத்தார்.உடனே சிவனடியார் வேடந்தாங்கிவந்த சிவபெருமான் சோதி வடிவமாய் எழுந்தருளினார். அந்த சோதி வடிவமான காட்சியை கண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் திகைத்து மயங்கி குழம்பினார்கள்.சிவபெருமான் மனம் மகிழ்ந்து ரிஷப வாஹனத்தில் உமாதேவியாருடன் அவர்களுக்கு காட்சி தந்தருளினார்.(தொடரும்)

No comments:

Post a Comment