Tuesday, 20 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 39

உன் தாமரை கண்கள் என் உள்ளத்தை பிளக்கின்றனவே.உனக்கு கருணை என்பது கிடையாது.நீ மிக்க கொடுமைக்காரன் என்று பாடி வருந்துகிறார்.
          மேலும் விளக்கமாக கூற வேண்டுமென்றால், காடு ,மலை அடங்கிய இந்த மேதினி எங்கும் தன் பிரபுவான இதயத்தின் நாயகனை காண்பார்கள்.காதுகளால் எல்லா சங்கீதங்களையும் அவன் புகழ் கீதமாக கேட்பார்கள்.இனிய நறுமணத்தில் நாயகனின் துளசி மணத்தை நுகர்வார்கள். இறைவன் திருநாமங்களை இனிக்க இனிக்க உச்சரிப்பார்கள்.தேகத்தால் பகவானை பூஜை செய்வார்கள்.
          ஆகாயத்தில் ஓம் என்ற ஒலி ஆண்டவனின் குரலாக கேட்கிறது.உலகில் ஒலிக்கும் ஒலியெல்லாம் ஓங்கார ஒலியின் வடிவங்களே.வாயுவில் பகவானின் தெய்வீக  மணமும் ஸ்பரிசமும் உணரப்படுகின்றன.அக்னியில் இருக்கும் ஜோதி பரஞ்சோதியாக தெரிகிறது.பூமியில் இருக்கும் மணம் எல்லாம் நறுமணமாக இறைவன் உணரப்படுகிறான்.பறவைகளின் குரல்களும் சலசலக்கும் தாவரங்களும் ஹரிசிவா,ஹரிசிவா,என்றே ஒலி எழுப்புகின்றன.என்று மகான்கள் கூறுகிறார்கள்.உலகமனைத்தும் பேரின்பமயமாக இருக்கிறது.எங்கும் ஆனந்த மயமாக ஆருயிர் கண்ணன் அமுத மயமான இறைவன் சௌந்தர்யமும் மாதுர்யமும் நிறைந்து உணரப்படுகிறான்.பார்ப்பவன் பார்க்கப்படும் காட்சி ஜீவராசிகளின் அதிசயங்கள் எல்லாம் மதுரமாக தெரிகின்றன.
          வேதம் கூறுகிறது: -"பகவானின் அருள் எங்கும் நிறைந்து இனிமையான காற்று வீசட்டும்.சமுத்திரங்கள் இனிய ஓசை கிளப்பட்டும்.மதுவை பொழியட்டும்.பயிர் பச்சைகளும் தாவரங்கள் ஒளசதங்களும் அமிர்தம் பொழிந்து பூமியின் ஒவ்வொரு மண் துகளும் புனிதமாக இனிமையாக இருக்கட்டும்"
           இவ்வாறு பக்தனின் பார்வையில் எல்லாம் இன்பமயமாக இருக்கும்.
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
          என்னை எங்கும் காணும் பக்தன் என்னில் சகலத்தையும் காண்கிறான்.அவன் மனக்கண் முன்னிருந்து நான் மறைவதில்லை.அவனும் என் சிந்தையில் இருந்து மறைவதில்லை.
          சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது:
யத்ர நான்யத் பச்யதி ----- பிரம்மத்தை தவிர அவன் எதையும் அறிய மாட்டான்.அவன் அமரத்தன்மை வாய்ந்தவன்.பிரம்மத்தை மறந்து எதையும் பார்ப்பவன்,கேட்பவன்,அற்பமானவன் அவனே இறப்பவன்.எல்லையற்ற பிரமாண்டமாக இருக்கும் பிரம்மம் அமிர்தமயமானது,சாத்தியமானது,மதுரமானது,அது போல பிரேமையும் அதே தன்மையுடன் இருக்கிறது.
"கெளணீ த்ரிதா குணபேதாதார்தாதி பேதாத்வா" 
          இதுவரை மேலான மேன்மை தரும் பக்தியை பற்றி விவரமாக கூறினார்கள்.அதற்க்கு சற்று கீழ்தளத்தில் உள்ள பக்தி குண பேதங்களால் மூன்று வகைப்படும் அல்லது ஆர்த்த பக்தியின் பேதங்களாலும் மூன்று வகைப்படும்.
          மேல்நிலை பக்தியில் திளைத்தவர்கள் சீக்கிரமே பகவானின் பிரேமை அன்பில் கலந்து விடுவார்கள்.பகவத் கீதையில் இதை ஞானியின் பக்தி என்றும் நிர்குண பக்தி என்றும் காரணமில்லா பக்தி என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த காரணமில்லா பக்தியில் பக்தனின் சித்தமும் செயல்பாடுகளும் இடைவிடாமல் தன்னிச்சையாக பகவானை நோக்கி பிரவாகமாக ஓடும்.சித்தம் அனன்ய பிரேம பாவம் கொண்டு பகவானை விட்டு விலகாமல் இருக்கும்.
         கெளணி பக்தி என்பது முக்குணங்களை கொண்டது.அதாவது சாத்வீகம்,ராஜசம்,தாமசம்,ஆகிய மூன்று குண பேதங்களுடன் இருக்கிறது.அனைத்து கர்மபலன்களும் பகவானுக்கே அர்ப்பணம் செய்து எதற்கும் ஆசைபடாமல் பகவானை ஆசையுடன் வழிபட்டு வருவது சாத்வீக பக்தியாகும்.(தொடரும்) 

No comments:

Post a Comment