Friday 5 April 2013

அஜாமிளன் 2

அவர்கள் விஷ்ணுவின் சேவகர்களை பார்த்து யார் நீங்கள்? தெய்வ புருஷர்கள் போல இருக்கிறீர்கள்! எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?இந்த பாவிக்காக பரிந்து கொண்டு எதையும் பேசமுடியாது என்றால் இவன் பஞ்சமா பாதகங்களை வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறான்.யமதர்ம ராஜாவின் ஆணையை மீற நீங்கள் யார்?தன் பேரொளியால் இருட்டை போக்கி எங்கும் பிரகாசமாக்கி கொண்டு ஏன் வந்தீர்கள்?
           விஷ்ணு பகவானின் தூதர்கள் சிரித்து விட்டு மேகம் இடியோசை குரலில் பேசினார்கள்.—யம தூதர்களே நீங்கள் உண்மையிலேயே யமதர்மராஜாவின் ஆணைப்படி நடக்கிறீர்கள் என்றால் தர்மத்தின் சொரூபம் என்ன?அதன் தத்துவம் என்ன?தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்? பாவத்திற்க்கு பிராயசித்தம் செய்து விட்டவனுக்குமா தண்டனை தரப்படும்?இதற்குமுதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு இந்த ஆத்மாவை எடுத்து செல்லுங்கள் என்றனர்.
          யமதூதர்கள் பதில் அளித்தார்கள்-வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வதே தர்மம் என்றும் விதிக்கப்படாத தடுக்கப்பட்ட கர்மங்களை அதர்மம் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.எல்லாம் வல்ல இறைவனே வேத சொரூபமானவர்.வேதங்களே அவரது மூச்சு. தன்னோளி பெற்ற ஞானம்.அவரால் படைக்கப்பட்ட சாத்வீக ராஜச தாமச குணங்களை கொண்டு பொருள்களும் பிராணி வர்க்கங்களும் அவரை ஆதாரமாக கொண்டு உள்ளன.குணங்கள் காரியங்கள் ரூபம் அனைத்தும் வேதங்களால் வகுக்கப்படுகின்றன.இவ்வுலகத்தில் ஜென்மமெடுத்த ஜீவனால் மனதின் எண்ணங்களோடு செய்யப்படும் கர்மங்களுக்கு சாட்சியாக சூரியன்,அக்னி,ஆகாயம்,வாயு,புலன்கள்,சந்திரன்,சந்தியாகாலம்,இரவு,பகல்,திசைகள்,ஜலம்,பூமி,காலம்,தர்மம் இவையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.இவைகளால் அதர்மம் நிச்சயிக்கப்படுகிறது.அதற்கு தகுந்தாற்போல் தண்டனை நிச்சயிக்கப்படுகிறது.தேவ புருசர்களே ஒரு பிராணி அல்லது ஜீவன் எந்த கர்மத்தை செய்தாலும் அது அவரது குணத்தை அனுசரித்தே இருக்கும்.அதனால் எல்லோராலும் பாவமும் புண்ணியமும் செய்யப்படுகின்றன.தேகம் தரித்த எந்த ஜீவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது.எவ்வளவு பாவமும் புண்ணியமும் செய்கிறானோ அதற்கு தக்கவாறு பரலோகத்தில் அந்த பலனை பெறுவான்.
சாத்வீகம் ,ராஜசம்,தாமஸம்,இந்த மூன்று குண பேதங்களால் இந்த லோகத்தில் மூன்று விதமான ஜீவன்கள் உள்ளன.ஒன்று புண்ணியம் செய்பவர்கள்,பாபாத்மாக்கள்,பாவம் புண்ணியம் இரண்டும் செய்பவர்கள்.அதற்க்கு தகுந்தாற்போல சுகமாகவும் துக்கமாகவும் சுகம் துக்கம் இரண்டும் கலந்து இருக்கிறார்கள்.பரலோகத்தில் சுக துக்கங்களை கூடுதலாக, குறைவாக பெற்றிருப்பார்கள்.எங்கள் ஸ்வாமி யமதர்மராஜா எல்லாம் அறிந்தவர்.பிறப்பற்றவர்.அவர் அனைவரது இதயங்களில் வீற்று இருக்கிறார்.சாட்சியாக பூர்வ கர்ம வினைகளையும் அறிவார்.எதிர்கால கர்ம வினைகளும் அறிவார்.
          தூங்கிக்கொண்டு இருக்கும் மனிதன் சொப்பனத்தில் இருக்கப்படும் சரீரத்தை மட்டும் உணர்ந்து அதை சத்தியமாக நினைக்கிறான்.விழித்த நிலையில் இருக்கும் சரீரத்தை மறந்து விடுகிறான்.   
அதுபோலவே அவன் இந்த ஜென்மத்தில் பூர்வ ஜென்ம ஞாபகங்களை மறந்து விடுகிறான்.தற்காலத்தில் பெற்ற சரீரத்தை தவிர முன் ஜென்ம விவரங்களையும் இனி நடக்கபோக்கும் விஷயங்களையும் ஜென்மங்களையும் அறிய மாட்டான்.தெய்வங்களே! ஜீவன் என்பவன் ஐந்து ஞானேந்திரியங்களுடன்(கண்,காது,மூக்கு,ரசனை,ஸ்பரிசம்)ஐந்து கர்மேந்திரியங்களுடன்(கை கால வாக்கு பாயு உபஸ்தம்)மனம் புத்தி நான் என்ற தன்மையுடன் (அகங்காரம்) கர்மங்களை செய்கிறான் அல்லது விதிக்கப்பட்ட சுக துக்கங்களை அனுபவிக்கின்றான்.சூட்சும சரீரம் மேற்சொன்ன புலன்ங்களோடு சேர்ந்தும் இருக்கும் (தொடரும்)