Sunday 13 April 2014

யோகாசனங்கள்

                       ஸ்ரீ கணேசாய நமஹ
யோகாசனங்கள்
யோகாசனம் என்றால் என்ன? யோகாசனம் ஏன் செய்ய வேண்டும்?
நம் தேகத்தினுள் இருக்கப்படும் இயற்கை சக்தியை நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்டு உடம்பின் இயக்கத்தை சமச்சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு யோகாசனங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன.
          செல்வம், சொத்து, வசதியான வாழ்க்கை, ருசியான உணவு, மற்ற இன்பம் தரும் விஷயங்கள் எல்லாம் மனதிற்கும் தேகத்திற்கும் நிச்சயம் சந்தோசம் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.தண்டால்,பஸ்கி,ஓடுவது, பந்தாடுவது ஆகிய உடற்பயிற்சிகளும் தற்காலிகமாக உடம்பை உறுதியாக பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. ஆனால் யோகாசனங்கள் வெறும் சரீரத்துடன் தொடர்பு கொண்டவை மட்டும்அல்லாமல் மனதையும் உறுதிப்படுத்துகின்றன. யோகாசங்களின் தாக்கம் சூட்சும சரீரம் வரை சென்று ஆத்மாவையும் தொடுகிறது. அதனால் மனதிற்கும் தேகத்திற்கும் நிரந்திரமாக சுகமும் ஆரோக்கியமும் கிடைக்கின்றன.
          பரம்பொருள் பரமாத்மாவை மனம் ஒன்றி தியானிப்பதற்கு யோகாசனங்கள் சிறந்த அஸ்திவாரமாக அமைகின்றன. “ஸ்திரசுகமாசனம்” என்று பதஞ்சலியோகம் கூறுகிறது. அதாவது ஸ்திரமாக சுகமாக ஒரு நிலையில் சரீரத்தை வைத்துக்கொள்வதே ஆசனம். ஆசனத்தால் அலை பாயும் மனம் ஒரு நிலைப்படுகிறது.

          இயற்கையாகவே மனிதனின் தேகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அது போல் விலங்கு, பறவைகள் ஆகிய ஜீவராசிகள் நோய் வாய்ப்படுவதில்லை. ஆரம்பத்தில் மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலும் மனிதன் ஆரோக்கியமாக தான் வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் மருந்துகள் குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றைய யுகத்தில் மனிதன் மிக அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்கிறான்.அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. உண்மையில் இயற்கையாகவே மனிதன் தேகத்தில் நோயை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் உட்கொள்ளப்படும் மருந்துகள் நோயை குணப்படுத்த உதவி தான் செய்கின்றன. அதனால் மருந்தில்லாமல் பல சந்தர்பங்களில் நோய் தாமாகவே சரியாகிவிட்டது என்று சொல்கிறோம். உடற்கூறு சாஸ்த்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் யோகாசனங்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் நோய் குணமாகிறது. சில மூச்சு பயிற்சிகளாலும் நோய்கள் குணமாகின்றன. யோகாசனப்பயிற்சிகளாலும் மூச்சு பயிற்சிகளாலும் நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தேகத்தின் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறுகின்றன.நான் இதனுடன் ஆசனங்கள் வகைகள்,செய்முறைகள், பயன்கள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். சிறந்த ஒரு வழிகாட்டி உதவியுடன் தம் சரீரத்திற்கு ஏற்றவாறு ஆசனத்தை தேர்ந்தெடுத்து செய்யவும். (தொடரும்)