Monday 28 October 2013

மன்னன் யயாதி3

  
       
தேவயானி கூறினாள். “ இன்று தெய்வாதீனமாக உங்கள் தரிசனம் கிடைத்தது. இதை பகவானின் விருப்பம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் சுக்கிராசாரியாரின் மகள் பிராமணப்பெண்ணான என்னை எந்த பிராமணனும் மணந்து கொள்ள மாட்டான். என்று பிரகஸ்பதி மகன் கசன் முன்பு எனக்கு சாபமிட்டு விட்டான். ஏனெனில் அவனுக்கு. “நீ கற்ற வித்தையை மறந்துவிடுவாய்” என்று   நான் ஒரு சாபம் கொடுத்தேன்.
          பிராமணப்பெண்ணான என்னை க்ஷத்திரியன் மணப்பது முறையன்று என்று அறிந்திருந்தும் இதை தெய்வ சங்கல்பம் என்றே நினைத்தான். மேலும் தேவயானியை கண்டதும் அவன் மனம் காதல் வயப்பட்டது. தேவயானியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு தன் தலைநகரம் சென்று அடைந்தான். தேவயானி கதறி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள்.தந்தையிடம் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அநியாயத்தையும் சொல்லி அழுதாள். சுக்கிராசாரியார் அதை கேட்டு மனம் வருந்தி கூறினார்.  “பிறரை அண்டி பிழைக்கும் பிழைப்பு மோசமானது. அதற்கு பதில் வயலில் சிந்திக்கிடப்பதை புறா போல பொறுக்கி எடுத்து வந்து வாழ்க்கை நடத்தலாம்.” என்று நினைத்தார்.
          மன்னன் விருஷபர்வா, குரு சுக்கிரர் தன் ஆசிரமத்தை விட்டு மகளுடன் வெளியேறும் செய்தியை அறிந்து குரு தேவர் போய் விட்டால் தமக்கும் அசுர குலத்திற்க்கும் நல்லதல்ல என்று எண்ணி சுக்கிரரை சமாதானப்படுத்த அரண்மனையை விட்டு வந்து அவசரமாக அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். சுக்கிரர் கூறினார்.-“மன்னா எனக்கு என் மகள் தான் முக்கியம். அவளை சமாதானப்படுத்தி அவள் விருப்பப்படி நடந்தால் நான் ஆசிரமத்தை விட்டு செல்ல மாட்டேன்.” என்றார். மன்னர் விருஷபர்வா அப்படியே ஆகட்டும் என்றான்.
          தேவயானி கூறினாள். “ என் தந்தையால் எவருடன் நான் மணம் முடிக்கப்பட்டு எங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளோடு பணிப்பெண்ணாக வந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்.” என்றாள். தன் தந்தையின் இக்கட்டான நிலைமை அறிந்து அசுர குலத்தின் நலனையும் கருதி சர்மிஷ்டா தேவயானியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.
          சுக்கிராசாரியார் அரசன் யயாதியை அழைத்து திருமணம் பேசி முடித்தார். விருஷபர்வா ராஜ மரியாதைகளுடன் தேவயானியின் திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தான். தேவயானியின் விருப்பப்படி சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளுடன் பணிப்பெண்ணாக சென்றாள்.
          காலம் சென்ற பின் தேவயானி இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்தாள். தேவயானி புதல்வர்களை பார்த்து சர்மிஷ்டா தான் புதல்வர்களை பெற்றால் அவர்களும் அரசாள்வார்கள். என்று நினைத்தாள். யயாதி மன்னனை ரகசியமாக சந்தித்து அவனை மணந்து கொண்டாள். யயாதியும் க்ஷத்திரிய ராஜகுமாரியை மணப்பது தர்மத்திற்க்கு விரோதமானதல்ல என்று அவளை ஏற்றுக்கொண்டான். சர்மிஷ்டா மூன்று புதல்வர்களை பெற்றாள். அவர்கள் த்ருஹ்யு,அனு,புரு,என்று பெயர் பெற்று விளங்கினார்கள். இறுதியில் சர்மிஷ்டா தன் கணவரை மயக்கி விட்டாள் என்றறிந்து தேவயானி ஆத்திரம் அடைந்தாள். யயாதி பலமுறை சமாதானப்படுத்தியும் சாந்தமாகாமல் தந்தையிடம் சென்று முறையிட்டாள். சுக்கிரர் யயாதியை பார்த்து “பெண்பித்து பிடித்தவனே இப்பொழுதே நீ இளமை பருவத்தை இழந்து தொண்டு கிழவனாக மாற வேண்டும்” என்றார். யயாதி மிகவும் வருந்தி கூறினான். “பிரம்மரிஷியே அரசாங்கம் நடத்த முடியாத, எதையும் சாதிக்க முடியாத இந்த கிழப்பருவத்தை உங்கள் மகளும் விரும்பமாட்டாள்.” இதை கேட்டு சுக்கிரர் கூறினார். “அப்படியென்றால் எவராவது மனமுவந்து உன் கிழப்பருவத்தை ஏற்று தன் இளமை பருவத்தை கொடுத்தால் நீ மீண்டும் பழைய நிழையை அடைவாய்” என்றார்.
          யயாதி தேவயானியை அழைத்துக்கொண்டு தன் தலைநகரம் திரும்பினான்.   அங்கு சென்றதும் தேவயானி பெற்ற தன் மூத்த மகன் யதுவிடம் தன் முதுமையை ஏற்றுக்கொண்டு இளமையை தருமாறு கேட்டான். அதற்கு யது கூறினான். “ தந்தையே காலம் கடந்த பின் வரப்போகும் முதுமையை நான் இப்போதே ஏற்கமாட்டேன். புலனின்பங்கள் அனுபவிப்பதற்கு முன்னால் எப்படி வைராக்கியம் வரும்?  (தொடரும்)

  
           
  (தொடரும்)     



    


        
            


Wednesday 23 October 2013

மன்னன் யயாதி2

  

அசுர குலத்தவருக்கு அரசனாக விருஷபர்வா என்பவன் அறம், நீதி,நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் சர்மிஷ்டா என்பவள் அழகும் குணங்களும் நிறைந்திருந்தாள். சுக்கிராசாரியார் மன்னன் விருஷபர்வாவிடம் ராஜகுருவாக இருந்தார். அதனால் தேவயானி சர்மிஸ்டாவின் தோழியாக இருந்தார்.
          ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில்  சர்மிஷ்டா, தேவயானியுடன் ஆயிரம் தோழிகள் சூழ மலர்கள்,செடிகொடிகள் பக்கம் உலவிக்கொண்டிருந்தாள். அங்கே அரண்மனை பக்கம் தாமரைகள் பூத்த ஒரு குளத்தில் நீராட மனம் கொண்டாள். தேவயானியுடன் நீருக்குள் இறங்கி ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்து நீராட முனைந்தனர். அரண்மனையிலிருந்து தோழிகள் பட்டாடைகளை கொண்டுவந்து கரையில் வைத்தனர். அச்சமயம் அன்னியர் யாரோ வருவது போல சப்தம் கேட்க தேவயானியும் சர்மிஷ்டாவும் அவசர அவசரமாக கரைக்கு வந்து பட்டுச்சேலைகளை உடுத்திக்கொண்டனர். அவசரத்தில் தவறுதலாக சர்மிஷ்டா தேவயானியின் ஆடைகளை உடுத்திக்கொண்டாள். இதைக்கண்டு தேவயானி கொந்தளித்து பேசினாள்.
          “எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு எவ்வளவு திமிர்? என் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாளே. இந்த அடாத செயலை என்னவென்று சொல்வேன். இச்செயல் யாகத்தில் இடவேண்டிய ஹவிஸ் பாயாச பாத்திரத்தை  நாய் தூக்கிக்கொண்டு போவது போலிருக்கிறது. பிராமணர்களின் தவ வலிமையால் இவ்வுலகம் க்ஷேமமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பரமாத்மாவின் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள். மக்கள் நெறி தவறாமல் வாழ்வதற்காக வேதங்களை பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
          நாங்களோ பிராமணர்களில் சிறந்தவர்களான பார்கவ வம்ஸத்து பிராமணர்கள். இவள் தந்தையோ ஓர் அரக்கன்.  எப்படியோ என் தந்தையின் சிஷ்யனாகிவிட்டான்.” தேவயானி இவ்வாறு அவமானப்படுத்தி பேசியதை கேட்டு சர்மிஷ்டா மனம் கொதித்து கம்பால் அடிபட்ட நாக சர்பம் போல சீறி மூச்சிறைக்க பேசினாள். “தேவயானி என்ன உளறுகிறாய்! உன் நிலைமை அறிந்து தான் பேசுகிறாயா? காக்கையும் நாயும் அன்னத்திற்காக வெளி வாசலில் காத்திருப்பது போல நாங்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள வாசலில் நிற்கும் பிச்சைக்காரி தானே நீ! என் தந்தை உன் தந்தைக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் உன் தந்தைக்கு புகலிடம் எது?” என்று கொடுஞ்சொற்களால் ஏசி விட்டு தேவயானியின் வஸ்திரங்களை பறித்துக்கொண்டு  அவளை பிடித்து இழுத்து அங்கு பக்கத்தில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு தன் ஆயிரம் தோழிகளுடன் அரண்மனை போய் சேர்ந்தாள்.  ஒரு சமயம் இந்திரன் விருதாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் பிரம்ம ஹத்தியா பாவ தோஷத்திற்கு ஆளானான். அதனால் இந்திர பதவியை இழந்து தாமரை தண்டிற்குள் நுழைந்து வாசம் செய்தான். தேவலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தகுந்த தேவராஜாவை தேவர்கள் பூலோகமெங்கும் தேடினார்கள். அச்சமயம் அறம் வழுவாமல் நஹூஷன் என்பவன் பூமியில் நல்லாட்சி செய்து வந்தான். தேவலோகத்திற்கு அரசனாக தேவர்கள் கேட்டுக்கொண்டபடியால் நஹூஷன் இந்திரனானான். சிறிது காலம் சென்ற பின் நஹூஷனுக்கு கர்வம் தலைக்கேறியது.அவன் இந்திரன் மனைவி மீது ஆசைப்பட ஆரம்பித்தான். தமக்கு இந்திராணியாக வரவேண்டும் என்று இந்திராணியை ஓயாது கேட்டுக்கொண்டு இருந்தான். அதற்கு இந்திராணி நஹூஷனிடம் கூறினாள். “ தாங்கள் ஸப்தரிஷிகள் தூக்கிக்கொண்டு வரும் பல்லக்கில் என் இல்லம் வருவீர்களானால் நான் உமக்கு இந்திராணி ஆவேன். இதை கேட்டு சப்தரிஷிகளை அழைத்து அவர்களை பல்லக்கு தூக்கவைத்து அதில் ஏறி அமர்ந்து பயணப்பட்டான். நடு வழியில் அகஸ்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கு சரி சமமாக இல்லாமல் ஆடியது. அதனால் பல்லக்கு ஏன் சரிசமமாக தூக்கப்படவில்லை என்று நஹூஷன் அகஸ்திய முனிவரை காலால் எட்டி உதைத்தான். அதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் நஹூஷனை நீ மலைபாம்பாக போய் விடுவாய் என்று சபித்தார். அந்த புகழ் மிக்க இந்திர பதவியை அடைந்த நஹூஷன் மகன் யயாதி பூலோகத்தில் பட்டத்திற்க்கு வந்தான். தந்தையின் நிலைமையை அறிந்து மிக கவனமாக அறம் வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான்.   
          ஒருநாள் யயாதி மன்னன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். தாகம் அதிகமாக தண்ணீரை தேடி வந்தவன் கிணற்றுக்குள் பார்த்தான். அங்கு ஒரு அழகான பெண் குறைந்த வஸ்திரம் அணிந்து பரிதாபமாக இருப்பதை கண்டான். யயாதி முதலில் அவளுக்கு தன் அங்கவஸ்த்திரத்தை கொடுத்தான். பின் அவளை கிணற்றில் இருந்து கை தூக்கி விட்டான்.    

தேவயானி கூறினாள்.-“வீரரே உங்களை பார்த்தால் அரசனை போல தெரிகிறது. நீங்கள் என் கரத்தை பற்றி தூக்கி விட்டீர்கள். இனி நான் வேறு எவர் கரத்தையும் பிடிக்க மாட்டேன். என்றாள். மன்னன் தான் யயாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.    
  (தொடரும்)