Thursday 30 May 2013

அஜாமிளன் 4

 
அஜாமிளன் யமதூதர்களுக்கும் பாகவத சேவகர்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தான்.நோயுற்று படுக்கையில் கிடந்தவன் திடீரென சொஸ்தமாகி விட்டான். பகவானின் பார்ஷத சேவகர்களை நோக்கி கண்ணீர் வடித்து வணங்கி ஏதோ சொல்ல வந்தான். பகவானின் பார்ஷத சேவகர்கள் அதை அறிந்து மாயமாய் மறைந்தனர்.யமதூதர்கள் சொன்ன வேத நெறிகளையும் தர்மத்தை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவையும் கேட்டு தன் வாழ்நாளை எப்படி வீணாக்கி விட்டோம் என்று நினைத்து அழுதான்.அவன் அப்போது தான் தர்மத்தை பற்றி சிந்தித்தான்.
          தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைத்து தன்னை தூற்றிக்கொண்டான்.ஒரு பிராமணனாக இருந்தும் கேவலம் தாசியுடன் வாழ்க்கை நடத்தி விட்டேன்.அப்பாவியான சொந்த மனைவியை துறந்தேன்.தாய் தந்தையரை கவனிக்கவில்லை. அவர்களையும் அனாதையாக்கி துறந்தேன்.
          போன ஜன்மத்தில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ?மரணத்தின் இறுதிக்காலத்தில் விஷ்ணு பகவானின் தெய்வ தூதர்களை கண்டேன்.அவர்கள் என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.அவர்களின் தரிசனத்தால் என் மனம் தூய்மையாகி விட்டது.நான் மகா பாவியாகி விட்டேன்.இறைவன் கொடுத்த நல்ல தூய்மையான வாழ்க்கையை விட்டு விட்டு பாவ மூட்டையாகி விட்டேனே?ஏதோ நான் செய்த எந்த புண்ணியமோ?என்னை பவித்திரமான நாராயணனின் திருநாமத்தை உயிர் பிரியும் போது உச்சரிக்க வைத்தது.அஜாமிளன் இப்படி பலவாறு புலம்பி அழுதான்.அக்கணமே தன் வீட்டையும் மனைவி மக்களையும் துறந்தான்.கால் நடையாக யாத்திரை செய்து ஹரித்வார் என்ற புனித தலத்தை அடைந்தான்.அங்கு கங்கை நீரை மட்டும் பருகிக்கொண்டு பகவானை தியானம் செய்து தவமிருந்தான்.எல்லா பற்றுக்களையும் அறவே ஒழித்துவிட்டு தியானம் செய்தான்.சில நாட்கள் கழித்து அந்திம காலம் வந்தபோது முன்பு தரிசனம் செய்த விஷ்ணு சேவகர்களை கண்டான்.அவர்கள் தாள் தொட்டு வணங்கினான்.அவர்கள் அஜாமிளனை வைகுண்டலோகம் கொண்டு சென்றனர்.
         இந்த அஜாமிளன் கதையை படித்தவர்கள் நரகத்திற்க்கு செல்ல மாட்டார்கள்.அவர்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் பகவானின் பக்தியில் கரைந்து விடுவார்கள்.இறுதியில் வைகுண்டம் செல்வார்கள்.அஜாமிளன் பகவானை நினைக்காமல் அவன் மகனின் பெயரை உச்சரித்தான்.அது நாராயணனின் திரு நாமமாக இருந்தது.ஆனால் பகவானை நினைத்து உள்ளன்புடன் பக்தியில் ஒன்றிப்போய் அவர் பெயரை உச்சரித்தால் அதன் பலனை சொல்வதற்கோ வார்த்தைகள் இல்லை.
          யமதூதர்கள் யமதர்ம ராஜாவிடம் போய் கேட்டனர். பகவானே உலகில் ஜீவன்கள் பாவ புண்ணிய கர்மங்களை சேர்ந்தே செய்கின்றன.மிக அபூர்வமான மகாத்மாக்கள் மட்டும் புண்ணியங்கள் செய்து அதில் புண்ணிய பலனை எதிர்பாராமல் கர்மம் செய்வார்கள்.எங்களுக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் பாவ புண்ணிய கர்மங்களுக்கு பலனாக தண்டனை தருபவர் யார்? யார் இந்த ஜீவலோகத்தை ஆட்சி செய்கிறார்கள்?ஏனெனில் எங்களுக்கு தெரிந்து நீங்கள் தானே செய்த பாவ புண்ணியங்களுக்கு நற்பலனை அல்லது தண்டனையை தருகிறீர்கள்.இன்று உங்கள் ஆணை மீறப்பட்டு விட்டது.தண்டனை தருபவர்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அங்கு ஒரே தர்ம நெறி ஒரே நியாயம் என்று இருக்காது. இன்று வரை தங்கள் ஆணை மீறப்பட்டது இல்லை.நாங்கள் அறிந்த வரை தர்மநியாயத்தை காப்பவர்நீங்கள் தான். உங்களை தவிர  ஜீவராசிகளை அடக்கி ஆள்பவர் வேறு ஒருவர் இருக்கிறாரா?ஏனெனில் இன்று வாழ்நாள் முழுவதும் பஞ்சமாபாதகங்களை செய்த ஒரு பாவியை நரகத்திற்க்கு இழுத்து வர சென்று இருந்த போது அந்த பாவி நாராயணா!நாராயணா!என்று கூவினான். அந்த க்ஷணமே நான்கு தெய்வ புருஷர்கள் தோன்றி அந்தபாவியை காப்பாற்றி எம் பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர்.
          யமதர்மராஜா கூறினார்- என்னை விட மகா பெரியவர் எல்லாம் வல்லவர் ஒருவர் இருக்கிறார்.அவரே பிரம்மா,விஷ்ணு, ருத்திரர் என்று திருமூர்த்திகளாக பிரிந்து பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து அருள் புரிகிறார்.விவசாயி ஒருவன் தன் எருதுகளை முதலில் சிறிய கயிறுகளால் கட்டி பின்பு எல்லா கயிரையும் சேர்த்து ஒரு பெரிய கயிரால் இழுத்து செல்வது போல மனிதர்களின் வர்ணாசிரம தர்மம் மற்றும் பற்பல அறநெறிகள் வேத தர்மம் என்ற பெரிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.பகவானே வேத சொரூபமானவர்.யமதூதர்களே இந்திரன் நைர்ரிதிகாலன், வருணன்,சந்திரன்,அக்னி,சிவன்,வாயு,சூரியன்,பிரம்மா,பன்னிரெண்டு ஆதித்யர்கள்,சாத்ய தேவர்கள்,சித்தர்கள்,பிருகு,பிரஜாபதி இந்த சக்தி வாய்ந்த தேவர்களும் இறைவனது திருவுள்ளப்படி என்ன நடக்கும் என்று அறியாதவர்கள்.அந்த இறைவனால்வஸ்த்திரத்திற்கு நூல் காரணமாக இருப்பது போல் இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் ஆற்றல் பரவி இருக்கிறது.பாகவத தர்மத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.அவர் மன்னிக்கும் சுபாவமுள்ளவர்.அவர் திருநாமம் சகல பாவங்களில்இருந்தும் விமோசனம் அளிக்கும் சக்தி வாய்ந்தது.
          பகவானின் திருநாமம் பற்றுக்களை அறுத்து மனதை தூய்மையாக்கி இறுதியில் மோட்சத்தை கொடுக்க சக்தி படைத்தது.ஆனால் பாவங்களை நாசப்படுத்த மற்ற வழிகளான பூஜை விரதம்,சாந்த்ராயண விரதம்,ஹோமம்,தியானம்,தானம்,தவம் ஆகியவற்றால் ஆசைகளை ஒழிக்க முடியாது.மோட்சமும் எளிதாக கிடைக்காது.பகவானின் திருநாமம் மட்டுமே மேலானது.
ஆதலால் யம தூதர்களே பகவானின் திருநாமங்களை சொல்லும் பக்தர்களை நெருங்காதீர்கள்.அஜாமிளனை காக்கும் பொருட்டு பகவானின் பார்ஷத சேவகர்களை எதிர்த்து பேசியதற்காக நான் பகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அவர் மகாமகிமை பொருந்திய பரந்த மனம் கொண்டவர்.அதனால் என்னை நிச்சயம் மன்னிப்பார்.
          யம தூதர்கள் யமதர்மராஜாவிடம் விஷ்ணு பகவானின் அருமை பெருமைகளை அவர் திருநாமத்தின் மகிமையை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர்.அன்று முதல் அவர்கள் பகவானின் பக்தர்களை நெருங்குவதில்லை.ஏறெடுத்தும் பார்பதில்லை.       
.

Wednesday 15 May 2013

அஜாமிளன் 3

அந்த சூட்சும சரீரமே எல்லா ஜன்மங்களில் மகிழ்ச்சி,சோகம்,பயம்,பீடை,எல்லாம் அனுபவித்துக்கொண்டு பிறப்பு,இறப்பு,சுழற்சியில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.அதன் காரணம் காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மத மாத்ஸர்யம் ஆகிய  சத்ருக்களை ஜெயிக்காமல் விருப்பு வெறுப்பு என்ற வாசனைகள் மனதின் அடித்தளத்தில் தேங்கி விடுகின்றன.அவற்றுக்கு அடிமையாகி மேலும் மேலும் கர்மங்கள் செய்து அவற்றின் பலன்கள் என்ற நூலால் பட்டுபுழு போல தன்னையே சுற்றிக்கொள்கிறான்.பூர்வ ஜென்மத்தின் கர்மங்களுக்கு தக்கவாறு அவனுக்கு தேகம் கிடைக்கிறது.ஆணாகி,பெண்ணாகி பிறக்கிறான்,மடிக்கிறான்..பர லோகங்களில் பாவங்களை அனுபவிக்கிறான்.
பிறப்பு இறப்புகளில் இருந்து விடுதலை பெற இறைவனருள் வேண்டும்.இறைவனருள் புண்ணியாத்மாக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
         தெய்வங்களே இதோ பாருங்கள். இவன் தன் சொந்த சுகத்திற்காக, சொந்த சந்தோசத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாவத்தையே செய்திருக்கிறான்.ஆதலால் இவனை யமலோகத்திற்க்கு அழைத்துச்சென்று யமதர்ம ராஜாவின் தீர்ப்புபடி இவனுக்கு தண்டனை வழங்குவோம்.இவன் பாவத்திற்க்கு தக்க தண்டனை அனுபவித்து விட்டு பின்பு தான் சுத்தமாவான்.யமதூதர்களின் சொற்பொழிவை கேட்டு ஸ்ரீவிஷ்ணுவின் சேவகர்கள் கூறினார்கள்.
          வருத்ததிர்க்குறிய விஷயம் என்னவென்றால் நியாயம் நடக்க வேண்டிய இடத்தில் அநியாயம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தண்டிக்க தகாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பிரஜைகளின் ரட்சகர்களே பிரஜைகளுக்கு துரோகம் செய்வதா?யமதூதர்களே இவன் மரணதருவாயில் பகவானின் மோட்சம் தரும் திருநாமத்தை உச்சரித்து விட்டான்.இவன் கோடி ஜன்மங்களின் பாவங்களுக்கு பிராயசித்தம் செய்து விட்டான். கொள்ளையடிப்பவன்,குடிகாரன்,நண்பனுக்கு துரோகம் செய்பவன்,பிராமணனை கொன்றவன்,தாய்,தந்தை,பெண்,பசு ஆகியோரை கொன்றவன் அனைவரும் பகவானின் திருநாம ஜபம் செய்து தன் பாவங்களை போக்கிக்கொள்ள முடியும்.
           பாவத்திற்க்கு பிராயசித்தம் என்பது மீண்டும் பாவ வழியில் போனால் அது பிராயசித்தம் ஆகாது.தவ,தானம்,விரதம் ஆகியவற்றால் பிராயசித்தம் செய்தால் அந்த பாவங்கள் நிச்சயம் அழிந்து விடும். ஆனால் பகவானின் திருநாமங்களை ஜபம் செய்தால் பாவங்கள் அழிவதுடன் திருநாமத்தை உச்சரிக்கும் மனமும் தூய்மை அடைகிறது.  வேறு பிராயசித்தங்களால் மனதில் இருக்கும் அழுக்குகள் வேருடன் அழிவதில்லை . தெரியாமல் அறியாமல் நெருப்பை தொட்டால் அது சுட்டு விடுகிறது.அது போல தெரியாமல் அறியாமல் பகவான் நாமத்தை உச்சரித்தால் பாவங்கள் தாமாக எரிக்கப்படும்.அதற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.அதிகமாக ஜபம் செய்யும் போது அது மந்திரமாக மாறிவிடுகிறது.
          யம தூதர்களே நாங்கள் சொல்கிறோம்.அதை பிரமானமாக எடுத்துக்கொள்ளுங்கள்.வேறு ஒரு கருத்தை நினைத்து,அல்லது பிற வஸ்துவை அல்லது மனிதரை குறிப்பிடும் போது, அந்த திருநாமத்தை வைத்து பிறரை பரிகாசம் செய்யும்போது பிறரை குறித்து கோபித்துகொள்ளும்போது,நீண்ட ராகம் எடுத்து பாடும்போது உச்சரிக்கப்படும் பகவானின் திருநாமம் பாவங்களை நாசப்படுத்துகிறது. மேலும் சறுக்கிவிழும்போது,தும்மும்போது வலியால் துடிக்கும்போது கீழே விழுந்து அடிபடும்போது மேலே தீ பட்டு சுடும்போது ,பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது ஹரி,ஹரி என்று உச்சரிக்கவேண்டும்.அப்போது யம யாதனை (யம வாதை)வராது என்று கூறி விஷ்ணு பகவானின் தூதர்கள் மரண தருவாயில் பகவான் நாமம் உச்சரிக்கப்படும்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.என்று கூறிவிட்டு யமகிங்கரர்கள் பிடியில் இருந்த அஜாமிளனை காப்பாற்றி விட்டு மறைந்து விட்டனர்.
(தொடரும்)