Thursday, 30 May 2013

அஜாமிளன் 4

 
அஜாமிளன் யமதூதர்களுக்கும் பாகவத சேவகர்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தான்.நோயுற்று படுக்கையில் கிடந்தவன் திடீரென சொஸ்தமாகி விட்டான். பகவானின் பார்ஷத சேவகர்களை நோக்கி கண்ணீர் வடித்து வணங்கி ஏதோ சொல்ல வந்தான். பகவானின் பார்ஷத சேவகர்கள் அதை அறிந்து மாயமாய் மறைந்தனர்.யமதூதர்கள் சொன்ன வேத நெறிகளையும் தர்மத்தை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவையும் கேட்டு தன் வாழ்நாளை எப்படி வீணாக்கி விட்டோம் என்று நினைத்து அழுதான்.அவன் அப்போது தான் தர்மத்தை பற்றி சிந்தித்தான்.
          தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைத்து தன்னை தூற்றிக்கொண்டான்.ஒரு பிராமணனாக இருந்தும் கேவலம் தாசியுடன் வாழ்க்கை நடத்தி விட்டேன்.அப்பாவியான சொந்த மனைவியை துறந்தேன்.தாய் தந்தையரை கவனிக்கவில்லை. அவர்களையும் அனாதையாக்கி துறந்தேன்.
          போன ஜன்மத்தில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ?மரணத்தின் இறுதிக்காலத்தில் விஷ்ணு பகவானின் தெய்வ தூதர்களை கண்டேன்.அவர்கள் என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.அவர்களின் தரிசனத்தால் என் மனம் தூய்மையாகி விட்டது.நான் மகா பாவியாகி விட்டேன்.இறைவன் கொடுத்த நல்ல தூய்மையான வாழ்க்கையை விட்டு விட்டு பாவ மூட்டையாகி விட்டேனே?ஏதோ நான் செய்த எந்த புண்ணியமோ?என்னை பவித்திரமான நாராயணனின் திருநாமத்தை உயிர் பிரியும் போது உச்சரிக்க வைத்தது.அஜாமிளன் இப்படி பலவாறு புலம்பி அழுதான்.அக்கணமே தன் வீட்டையும் மனைவி மக்களையும் துறந்தான்.கால் நடையாக யாத்திரை செய்து ஹரித்வார் என்ற புனித தலத்தை அடைந்தான்.அங்கு கங்கை நீரை மட்டும் பருகிக்கொண்டு பகவானை தியானம் செய்து தவமிருந்தான்.எல்லா பற்றுக்களையும் அறவே ஒழித்துவிட்டு தியானம் செய்தான்.சில நாட்கள் கழித்து அந்திம காலம் வந்தபோது முன்பு தரிசனம் செய்த விஷ்ணு சேவகர்களை கண்டான்.அவர்கள் தாள் தொட்டு வணங்கினான்.அவர்கள் அஜாமிளனை வைகுண்டலோகம் கொண்டு சென்றனர்.
         இந்த அஜாமிளன் கதையை படித்தவர்கள் நரகத்திற்க்கு செல்ல மாட்டார்கள்.அவர்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் பகவானின் பக்தியில் கரைந்து விடுவார்கள்.இறுதியில் வைகுண்டம் செல்வார்கள்.அஜாமிளன் பகவானை நினைக்காமல் அவன் மகனின் பெயரை உச்சரித்தான்.அது நாராயணனின் திரு நாமமாக இருந்தது.ஆனால் பகவானை நினைத்து உள்ளன்புடன் பக்தியில் ஒன்றிப்போய் அவர் பெயரை உச்சரித்தால் அதன் பலனை சொல்வதற்கோ வார்த்தைகள் இல்லை.
          யமதூதர்கள் யமதர்ம ராஜாவிடம் போய் கேட்டனர். பகவானே உலகில் ஜீவன்கள் பாவ புண்ணிய கர்மங்களை சேர்ந்தே செய்கின்றன.மிக அபூர்வமான மகாத்மாக்கள் மட்டும் புண்ணியங்கள் செய்து அதில் புண்ணிய பலனை எதிர்பாராமல் கர்மம் செய்வார்கள்.எங்களுக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் பாவ புண்ணிய கர்மங்களுக்கு பலனாக தண்டனை தருபவர் யார்? யார் இந்த ஜீவலோகத்தை ஆட்சி செய்கிறார்கள்?ஏனெனில் எங்களுக்கு தெரிந்து நீங்கள் தானே செய்த பாவ புண்ணியங்களுக்கு நற்பலனை அல்லது தண்டனையை தருகிறீர்கள்.இன்று உங்கள் ஆணை மீறப்பட்டு விட்டது.தண்டனை தருபவர்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அங்கு ஒரே தர்ம நெறி ஒரே நியாயம் என்று இருக்காது. இன்று வரை தங்கள் ஆணை மீறப்பட்டது இல்லை.நாங்கள் அறிந்த வரை தர்மநியாயத்தை காப்பவர்நீங்கள் தான். உங்களை தவிர  ஜீவராசிகளை அடக்கி ஆள்பவர் வேறு ஒருவர் இருக்கிறாரா?ஏனெனில் இன்று வாழ்நாள் முழுவதும் பஞ்சமாபாதகங்களை செய்த ஒரு பாவியை நரகத்திற்க்கு இழுத்து வர சென்று இருந்த போது அந்த பாவி நாராயணா!நாராயணா!என்று கூவினான். அந்த க்ஷணமே நான்கு தெய்வ புருஷர்கள் தோன்றி அந்தபாவியை காப்பாற்றி எம் பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர்.
          யமதர்மராஜா கூறினார்- என்னை விட மகா பெரியவர் எல்லாம் வல்லவர் ஒருவர் இருக்கிறார்.அவரே பிரம்மா,விஷ்ணு, ருத்திரர் என்று திருமூர்த்திகளாக பிரிந்து பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து அருள் புரிகிறார்.விவசாயி ஒருவன் தன் எருதுகளை முதலில் சிறிய கயிறுகளால் கட்டி பின்பு எல்லா கயிரையும் சேர்த்து ஒரு பெரிய கயிரால் இழுத்து செல்வது போல மனிதர்களின் வர்ணாசிரம தர்மம் மற்றும் பற்பல அறநெறிகள் வேத தர்மம் என்ற பெரிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.பகவானே வேத சொரூபமானவர்.யமதூதர்களே இந்திரன் நைர்ரிதிகாலன், வருணன்,சந்திரன்,அக்னி,சிவன்,வாயு,சூரியன்,பிரம்மா,பன்னிரெண்டு ஆதித்யர்கள்,சாத்ய தேவர்கள்,சித்தர்கள்,பிருகு,பிரஜாபதி இந்த சக்தி வாய்ந்த தேவர்களும் இறைவனது திருவுள்ளப்படி என்ன நடக்கும் என்று அறியாதவர்கள்.அந்த இறைவனால்வஸ்த்திரத்திற்கு நூல் காரணமாக இருப்பது போல் இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் ஆற்றல் பரவி இருக்கிறது.பாகவத தர்மத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.அவர் மன்னிக்கும் சுபாவமுள்ளவர்.அவர் திருநாமம் சகல பாவங்களில்இருந்தும் விமோசனம் அளிக்கும் சக்தி வாய்ந்தது.
          பகவானின் திருநாமம் பற்றுக்களை அறுத்து மனதை தூய்மையாக்கி இறுதியில் மோட்சத்தை கொடுக்க சக்தி படைத்தது.ஆனால் பாவங்களை நாசப்படுத்த மற்ற வழிகளான பூஜை விரதம்,சாந்த்ராயண விரதம்,ஹோமம்,தியானம்,தானம்,தவம் ஆகியவற்றால் ஆசைகளை ஒழிக்க முடியாது.மோட்சமும் எளிதாக கிடைக்காது.பகவானின் திருநாமம் மட்டுமே மேலானது.
ஆதலால் யம தூதர்களே பகவானின் திருநாமங்களை சொல்லும் பக்தர்களை நெருங்காதீர்கள்.அஜாமிளனை காக்கும் பொருட்டு பகவானின் பார்ஷத சேவகர்களை எதிர்த்து பேசியதற்காக நான் பகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அவர் மகாமகிமை பொருந்திய பரந்த மனம் கொண்டவர்.அதனால் என்னை நிச்சயம் மன்னிப்பார்.
          யம தூதர்கள் யமதர்மராஜாவிடம் விஷ்ணு பகவானின் அருமை பெருமைகளை அவர் திருநாமத்தின் மகிமையை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர்.அன்று முதல் அவர்கள் பகவானின் பக்தர்களை நெருங்குவதில்லை.ஏறெடுத்தும் பார்பதில்லை.       
.

1 comment: