Thursday 26 September 2013

மன்னன் யயாதி



  


முன்னொரு காலத்தில் பாற்கடலில் அமுதம் கடையப்பட்டு அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் அமுதத்தை பருகிவிட்டார்கள். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. போரில் பல பலசாலி அரக்கர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி  போரில் இறந்து போனான். பார்கவரிஷ சுக்கிராசாரியார்(அரக்ககுரு) இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார்.அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ள, சுக்கிரர் மிருத சஞ்சீவினி வித்தையை பயன்படுத்தி அசுரத்தலைவன் பலியை பிழைக்கச்செய்து விட்டார்.

          இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி வித்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக இருந்து குரு சேவை செய்து அந்த வித்தையை கற்றுக்கொண்டு வரட்டும் என்றார். தேவர்களின் திட்டப்படி கசன் சுக்கிராசாரியாரிடம் வந்து கூறினான்.

“பகவானே நான் பிரகஸ்பதியின் புதல்வன். பலவித சாஸ்திரங்களை கற்றவர்,ஆயினும் கற்க வேண்டிய கல்விக்கோ எல்லையே இல்லை. முற்றிலும் கற்றவர் எவரும் இல்லை. நான் தங்களிடம் விசேச வித்தையை கற்க வந்திருக்கிறேன். கற்பதில் ஆர்வம் கொண்ட மாணவனை நல்லாசிரியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். தங்கள் மாணாக்கனாக சேர்ந்து நான் குருசேவை செய்ய விரும்புகிறேன். தாங்கள் மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சுக்கிரரை சரண் அடைந்தான். சுக்கிராசாரியார் அப்படியே ஆகட்டும் என்று அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். கசன் குருவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். காட்டிற்க்கு சென்று மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவான்.         

       

          கசன் சிஷ்யனாக சேர்ந்த செய்தியை அசுரர்கள் அறிந்து கொண்டனர். அசுரகுலத்திற்கு ஆபத்து வரும் என்று நினைத்தனர். ஒருநாள் அவர்கள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த கசனை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டனர். சுக்கிரரின் மகள் தேவயானி கசன் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தாள். அவன் தந்தையிடம் கூறினாள். காட்டிற்கு சென்ற தங்கள் சிஷ்யன் கசன் திரும்பவில்லையே அவன் ஆபத்தில் சிக்கிக்கொண்டான் போலும்” என்றாள். சுக்கிரர் ஞானதிருஷ்டியில் அனைத்தையும் அறிந்து மிருத சஞ்சீவினி வித்தையை உபயோகித்து கசனை பிழைக்க வைத்து விட்டார்.

          சமித்துகளை சேகரிக்க,மாடுகளை மேய்க்க,விறகு வெட்ட,பழங்கள் பறிக்க,அல்லது பூஜைக்கு மலர்கள் கொண்டு வர காட்டிற்க்கு சென்ற போது ஒவ்வொரு முறையும் கசனை அரக்கர்கள் கொன்றனர். கசன் மீது வைத்த காதலால் தேவயானி கசன் திரும்பவில்லை என்று அழுவாள். சுக்கிராசரியார் மகள் மீது இருந்த பாசத்தினால் ஒவ்வொரு முறையும் மிருத சஞ்சீவினி வித்தையை கொண்டு கசனை பிழைக்கவைத்துக்கொண்டு இருந்தார். இறுதியில் ஒருநாள் கசன் காட்டிற்கு சென்றிருந்தபோது அவனை வெட்டி அசுரர்கள் தீயிட்டு எரித்தார்கள். அந்த சாம்பலை எடுத்து வந்து சுக்கிரருக்கு தெரியாமல் மதுவில் கலந்து கொடுத்து விட்டனர். சுக்கிரரும் அதை குடித்து விட்டார். தேவயானி வழக்கம் போல் கசனை நினைத்து அழுதாள். அவர் சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க மதுவுடன் கலந்த சாம்பலுடன் வயிற்றில் சென்ற கசன் பேசினான். “குரு நான் இங்கு உமது வயிற்றில் உயிர் பெற்று இருக்கிறேன். நான் வெளியில் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தால் தாங்கள் இறந்து விடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

          சுக்கிராசாரியார் வேறு வழியின்றி வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். கசன் சுக்கிரர் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தான். கசன் இறந்து போன சுக்கிரரை குறித்தும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தான். சுக்கிரர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியால் மனம் திருந்திய சுக்கிரர் வானகத்து தேவர்கள் கேட்டுக்கொண்டிருக்க பஞ்ச பூதங்கள் சாட்சியாக தர்ம சாஸ்திர சட்டப்பூர்வமாக வாக்கு கொடுத்தார். “இன்றிலிருந்து பிராமணர்கள் மது அருந்த கூடாது. மாமிசம் புசிக்க கூடாது. அவ்வாறு மீறி நடந்தால் அவர்கள் பிராமண தன்மையை இழந்து பெரும் பாவத்திற்குள்ளாவார்கள்” என்றார். இதனை தேவர்களும் ரிஷிகளும் ததாஸ்து(அப்படியே ஆகட்டும்) என்று ஆமோதித்தனர்.

          தேவயானி கசனை நோக்கி கூறினாள். “பிருகஸ்பதி மகனாரே இது நாள் வரை உங்களை நான் காதலித்து வந்தேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும். நான் பலமுறை உங்களை உயிர் பிழைக்க வைத்தேன்.” தேவயானி திடீரென இவ்வாறு கூறியதும் கசன் கூறினான். “ குருவின் மகளே இது வரை உன்னை மணக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. நான் உன்னை காதலிக்கவும் இல்லை. மேலும் நான் இப்போது உன் தந்தையின் வயிற்றிலிருந்து மறுபிறவி எடுத்து விட்டேன். சுக்கிரர் எனக்கு தந்தை முறை ஆகி விட்டார். ஆதலால் நான் உன்னை மணக்க முடியாது.”

          கசன் இவ்வாறு கூறியதும் தேவயானி கோபமாக கூறினாள். தேவகுரு மகனே எந்த லட்சியத்திற்காக இங்கு வந்தீர்களோ (கற்ற மிருதசஞ்சீவினி வித்தை)உமக்கு மறந்து போக்கக்கடவது” என்று சபித்தாள். இதை கேட்டு கசன் பதிலுக்கு சாபமிட்டான். “ தேவயானி நீ பிராமணப்பெண்ணாக இருந்தாலும் உன்னை எந்த பிராமணனும் மணந்துகொள்ள மாட்டான். என்று சபித்து விட்டு தேவலோகம் போய் சேர்ந்தான்.  (தொடரும்)    

                  




    



        

            


Thursday 19 September 2013

ஸ்ரீ பரசுராமர்3

  

பரசுராமர் தந்தையின் யோக சக்தியையும், தபோபலத்தையும் அறிந்திருந்தார். அதனால் அவர் கூறினார். “தந்தையே என் தாயும்,அண்ணன்களும் உயிர் பெற்று எழ வேண்டும். நான் வெட்டி கொலை செய்த விஷயம் அவர்கள் நினைவில் இருக்க கூடாது.” இதை கேட்ட ஜமதக்னி முனிவர் அப்படியே ஆகட்டும் என்றார். அக்கணமே தாயும்,அண்ணன்களும் தூங்கி எழுந்தவர்கள் போல உயிர் பெற்று எழுந்தார்கள். பரசுராமர் தன் தந்தையின் யோக சக்தியை அறிந்தே அவ்வாறு கொலை செய்தார்.
          மாஹிஸ்மதிபுரியில் ஹைஹைய ராஜ வம்ஸத்து ராஜகுமாரர்கள் தன் தந்தை பரசுராமரால் கொல்லப்பட்டதை நினைத்து நினைத்து மனம் குமுறிக்கொண்டு இருந்தனர். பழிக்கு பழி வாங்க துடித்தனர். ஒரு நாள் பரசுராமர் தன் அண்ணன்களோடு சேர்ந்து காட்டிற்கு சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து கார்த்தவீரியன் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். ஜமதக்னி மகரிஷி அக்னி சாலையில் ஹோமம் வளர்த்து இறைவனை நினைத்து தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளி உலக நினைவின்றி இறைவனோடு ஐக்கியமாகி இருந்தார். ஒரு பாவமும் அறியாத ஜமதக்னி முனிவரை அந்த பாவி ராஜகுமாரர்கள் வாளால் வெட்டினர். ரேணுகாதேவி அழுதுகொண்டே கெஞ்சி தடுத்தாலும் அவரது வெட்டுண்ட தலையை ராஜகுமாரர்கள் எடுத்து சென்றனர்.
          ரேணுகாதேவி தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதாள். தாயின் அழுகுரலால் காடே அதிர்ந்தது. அதை கேட்டு பரசுராமர் விரைந்து ஓடோடி வந்தார். ஆசிரமத்தில் தன் தந்தை தலையில்லாமல் வெட்டுண்டு கிடப்பதை பார்த்தார். அந்த காட்சியை கண்டு பொறுக்காமல் மனம் கலங்கி எல்லை கடந்த சோகத்தால் மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்து “தந்தையே தாங்கள் உயர்ந்த உள்ளம் படைத்த மகாத்மாவாக இருந்தீர்களே! தவத்தில் ஆழ்ந்து தர்மத்தை கடைபிடித்து எவருக்கும் தீங்கு நினைக்காத சாந்தமூர்த்தியாக இருந்தவருக்கு இந்த கதி ஏன் வரவேண்டும்? என்று புலம்பிவிட்டு கார்த்தவீரியனின் மகன்களை நினைத்து வெகுண்டார். அண்ணன்களிடம் தன் தந்தையின் உடலை ஒப்படைத்து விட்டு கையில் கோடாரி எடுத்து க்ஷத்திரியர்களை சம்ஹாரம் செய்ய விரைந்தார்.

மாஹிஸ்மதி நகரம் சென்று கார்த்தவீரியனின் புதல்வர்களோடு போர் செய்து அவர்கள் தலைகளை வெட்டி வீழ்த்தினார். நகரத்தின்  மையப்பகுதியில் தலைகளால் குன்று போல உருவாக்கினார். பிராமணர்களை கொன்ற அரச குல க்ஷத்திரியர்களின் நாடு மங்களமிழந்து  காணப்பட்டது. ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு நல்லவர்களுக்கு துரோகமிழைத்த க்ஷத்திரியர்களின் நெஞ்சம் நடுங்கியது. அந்த நகரத்தில் இருந்த ராஜாவம்ச க்ஷத்திரியர்களை அழித்தபின்பும் பரசுராமருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தன் தந்தைக்கு செய்த துரோகத்தை நினைத்து அப்பாவி மக்களையும் ஒரு பாவமும் செய்யாத பிராமணர்களையும் கொடுமை படுத்தும் க்ஷத்திரிய அரசர்களையும் இருபத்தி ஓர் முறை அழித்தார். சாமந்த பஞ்சகம் என்ற குருக்ஷேத்திர தலத்தில் ஐந்து குளங்களை ரத்தத்தால் நிரப்பினார்.
          பரசுராமர் தன் தந்தையின் தலையை கொண்டு வந்து உடலோடு சேர்த்தார். யாகங்களை வளர்த்து ஆத்மசொரூபனான பரமனை வழிபட்டார். யாகங்கள் முடிந்தவுடன் தான் வெற்றிகண்ட நாடு நகரங்களையும் நிலங்களையும் தானமாக வழங்கினார். தென்கிழக்கு பூமியை ரித்விஜர்களுக்கும்,கச்யபருக்கு நடுவில் இருக்கும் நிலத்தையும் ஆரிய வர்த்த தேசங்களை உபதிரஷ்டா ரிஷிகளுக்கும், மற்ற திசைகளை சபாநாயகர்களுக்கும் தானமாக வழங்கிவிட்டு பிரம்ம நதி சரஸ்வதி நதியில் யாகம் முடித்து ஸ்னானம் செய்து பாவங்கள் கழுவப்பட்டு மேகங்கள் விலகிவிட்ட சூரியன் போல பிரகாசித்தார்.
ஜமதக்னி முனிவர் தெய்வ சரீரம் பெற்று உயிர்த்தெழுந்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்டவர், உயிருக்கு உயிராக நேசிக்கப்பட்டவர் வானகத்தில் சப்தரிஷி மண்டலத்தில்   ஒருவராக வணங்கப்படுகிறார். அடுத்து வரும் சிருஷ்டி காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவராக இருந்து வேத தர்மங்களை காப்பாற்றுவார்.
சீதாதேவியின் சுயம்வரத்தில் ஸ்ரீராமர் சிவதனுசை முறித்து சீதையை மணந்தார்.அதனால் கோபமடைந்த பரசுராமர் தசரத மகன் ராமனை நோக்கி கூறினார். எனது வில்லை வளைத்து அம்பை பொருத்தி உன் பலத்தை வெளிப்படுத்துவாய்” என்றார். ஸ்ரீ ராமர் பரசுராமர் சொற்படி அவர் வில்லை வளைத்து அம்பை பொருத்தி அந்த அம்பை எங்கு விடவேண்டும்?( ஏனெனில் அம்பை பொருத்தியவுடன் அதை வீணாக்கலாகாது என்பதால்) பரசுராமரும் தம்முடைய பரலோகம் செல்லும் வழியை அடைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் பரசுராமரின் பரலோகம் செல்லும் வழியை அடைத்து விட்டார். அதனால் பரசுராமர் பூலோகத்தில் மகேந்திர மலையில் தவமியற்றிக்கொண்டு இருக்கிறார். சித்த கந்தர்வ தேவர்கள்  இன்னும் அவர் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீ விஷ்ணு பகவானின் அவதாரமாக பரசுராமர் பிறந்து நல்லவர்களை காத்து தீய அசுர  க்ஷத்திரியர்களை சம்ஹாரம் செய்தார். பரசுராமர் தன் தந்தையிடம் கொண்ட பக்தி உலகில் பிரசித்தி பெற்றது.       
  
                  



    


        
            


Monday 16 September 2013

ஸ்ரீ பரசுராமர்2

  

இவ்வாறு சர்வ வல்லமை படைத்த ஆயிரம் கைகளுடய கார்தவீரியார்ச்சுனன் கர்வம் கொண்டு மார்பில் வைஜயந்தி மலர் மாலை அணிந்து ஒரு நாள் நர்மதா நதியில் மதம் கொண்ட யானை போல அழகான பல பெண்களுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தான். நதியின் பிரவாகத்தை ஆயிரம் கைகள் கொண்டு தடுத்து கரை கடந்து எதிர் திசையில் ஓடச்செய்தான். சற்று தூரத்தில் இலங்கை வேந்தன் இராவணன்(சீதையை கவர்ந்து சென்று ராமரிடம் போரிட்டு இறந்தவன்) கூடாரம் போட்டு தங்கி இருந்தான். திக் விஜயம் செய்து கொண்டிருந்தபோது படைகளோடு அங்கு தங்கி இருந்தான். திடீரென நர்மதா பிரவாகம் எதிர் திசை நோக்கி வெள்ளமாக பாய்ந்து ராவணனின் படைகளின் கூடாரங்களை தண்ணீரில் மூழ்கடித்தது. வெள்ளப்பெருக்கின் காரணத்தை அறிந்தவன் அதை பொறுக்காமல் கார்தவீரியார்ச்சுனனை கண்டபடி ஏசினான். போருக்கு அறைகூவல் விடுத்தான். 

ஆயிரம் கரங்கள் கொண்ட கார்தவீரியார்ச்சுனன் தம் கரங்களால் அப்படியே லபக்கென்று பிடித்து தன் தலைநகரம் மாஹிஷ்மதிபுரிக்கு கொண்டு சென்று ஒரு குரங்கை அடைப்பது போல அவனை சிறையில் அடைத்தான். அதன் பின் புலஸ்திய மகரிஷி கேட்டுக்கொண்டதானால் கார்தவீரியார்ச்சுனன் ராவணனை விடுவித்தான்.
          அத்தகைய வீர பிரதாபங்கள் நிறைத்த கார்தவீரியார்ச்சுனன் ஒரு நாள் வேட்டைக்காக காட்டிற்குள் சென்றவன் ஓர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து விட்டான். யதேட்சையாக அங்கு ஜமதக்னி ரிஷி ஆசிரமத்தை கண்டான். மகா தபஸ்வி ஜமதக்னி முனிவர் கார்தவீரியார்ச்சுனனை மிக மரியாதையுடன் வரவேற்றார். தம்மிடம் இருந்த காமதேனு நந்தினியின் தெய்வ சக்தியை கொண்டு அரசனின் படைகளுக்கும் வாகனங்களுக்கும் விருந்து படைதார்.
          கார்தவீரியார்ச்சுனன் தன்னையும் மிஞ்சி சீறும் சிறப்பும் ஐசுவர்யமும் நிறைந்த ஜமதக்னி ரிஷி இருப்பதை பொறுக்காமல் காமதேனு நந்தினி தமக்கே உரித்தாகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஜமதக்னிரிஷி அதற்கு சம்மதிக்கவில்லை. மன்னன் படைகளை ஏவி பலவந்தமாக காமதேனுவை இழுத்துச்சென்று மாகிஷ்மதிபுரியில் இருக்கும் தன் செல்வம்மிக்க அரண்மனையில் போய் சேர்த்தான். சமித்துகளை சேகரிக்க காட்டிற்குள் சென்ற பரசுராமர் ஆசிரமம் திரும்பிவந்தார். தாம் இல்லாத நேரத்தில் கார்தவீரியார்ச்சுனன் காமதேனுவை பலவந்தமாக அபகரித்து சென்ற செய்தியை கேட்டு வெகுண்டெழுந்தார். கார்தவீரியார்ச்சுனனின் அடாத செயலை பொறுக்காதவர் மரம் வெட்டும் கோடாரியை எடுத்தார். வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டார்.
           மாகிஷ்மதிபுரியை நோக்கி பரசுராமர் வெள்ளமென பாய்ந்தார். பரசுராமர் மிக அற்புதமாக பயங்கரமாக காட்சியளித்தார். பிராமண தவசிக்குரிய கருமான் தோல் உடுத்தி ஜடாமுடி தரித்து சூரியன் போல தேஜஸ்படைத்து ஓடி வந்தார். அவர் வருகையை அறிந்த ஆயிரம் கரத்தவன் பரசுராமரை கொல்வதற்காக வாள்,வில்,வேல்,அம்பு,சதக்னி, சக்தி ஆயுதங்கள் நிறைந்த பயங்கரமான பதினேழு அக்குரோனி சேனைகளை அனுப்பினான்.
          பரசுராமரின் வேகம் மனோவேகம் வாயு வேகமாக இருந்தது. அவர் பயங்கரமாக போர் செய்து படைகளை தாக்கினார். சேனை வீரர்களும் தேர் படைகளும் நொடிப்பொழுதில் வெட்டப்பட்டு நாசப்பட்டு தரையில் விழுந்தனர். வாகனங்கள் வெட்டுண்டு வீழ்ந்தன. வெட்டப்பட்ட மாவீரர்களின் கைகளும் தொடைகளும் பூஜங்களும் பூமியில் சிதறி விழுந்தன. ரத்த ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த அதிசயத்தை கண்ட  கார்தவீரியார்ச்சுனன் தன் மானம் இழந்தவனாக பொங்கி எழுந்தான். தாமே போர் முனைக்கு சென்றான்.
கார்தவீரியார்ச்சுனன் தன் ஆயிரம் கரங்களில் ஐநூறு தனுசுகளை பிடித்து அம்புகளை எய்தான். ஆயுத தாக்குதலில் வல்லவரான பரசுராமர் ஒரே வில்லில் கணக்கற்ற அம்புகளை வீசி ஒரே நேரத்தில் எதிரில் வரும் அம்புகளை உடைத்தெறிந்தார். அதை கண்டு கார்தவீரியார்ச்சுனன் தன் ஆயிரம் கரங்களை கொண்டு மலைகளையும் மரங்களையும் பெயர்த்து பரசுராமர் மீது எறிந்தான். பரசுராமர் மிக வேகமாக தன் கோடாரியால் அவனது பாம்புகள் போல் இருந்த ஆயிரம் கரங்களை வெட்டிச்சாய்த்தார்.மலை சிகரம் போல நின்ற கார்தவீரியார்ச்சுனன் தலையையும் வெட்டிச்சாய்த்தார். தந்தை இறந்து போனதை கண்டதும் அவனது புதல்வர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பரசுராமர் இவ்வாறு கார்தவீரியார்ச்சுனனை வென்று விட்டு காமதேனுவை மீட்டுக்கொண்டு ஆசிரமம் திரும்பி வந்தார். தந்தை ஜமதக்னியிடமும் அண்ணான்மார்களிடமும் மாகிஷ்மதிபுரியில் தான் போரில் சாதித்த சாதனைகளை விரிவாக கூறி முடித்தான்.
ஜமதக்னிமுனிவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மிகவும் வருத்தமுடன் கூறினார். நீ பாவம் செய்து விட்டாய் பரசுராமா! நீ மாபெரும் வீரன் தான். ஆனால் ஒரு மாமன்னனை நீ கொன்றிருக்க கூடாது. ஏனெனில் நாட்டின் மன்னன் தெய்வத்திற்க்கு சமமானவன். மன்னனை கொன்றது மகா பாவமாகும். நாம் எல்லாம் பிராமணர்கள். பொறுமையும் சாந்தியும் ஏற்று வாழ்வதனால் மக்களால் மதிக்கப்பட்டு வாழ்கிறோம். சாந்த குணம் பெற்ற பிராமணர்கள் தெய்வத்தன்மையுடன் பிரகாசிப்பார்கள். ஸ்ரீ விஷ்ணு பகவான், மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட பொறுமைசாலி பிராமணர்களையே அதிகம் விரும்புவார். மகனே ராஜாவை கொன்ற பாவம் மிகப்பெரிய பாவம். நீ புனித திருத்தல யாத்திரை செய்து புனித நீராடி அந்த பாவத்தை போக்கி கொள்வாய். தந்தையின் சொல் கேட்டு பரசுராமர் அப்படியே ஆகட்டும் என்று கூறி தீர்த்த யாத்திரை செய்ய புறப்பட்டார்.   பரசுராமர் புனித திருத்தல யாத்திரை செய்து விட்டு ஒரு வருடம் கழித்து ஆசிரமம் திரும்பினார்.
          ஒரு நாள் பரசுராமரின் தாய் ரேணுகாதேவி பூஜைக்காக புனித நீர் எடுத்து வர கங்கை  நதிக்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி சற்றே அவரை நிலை குலைய வைத்தது.அங்கு கந்தர்வராஜன் சித்ரரதன் என்பவன் தாமரை மலர் மாலை அணிந்து அப்சரஸ்களுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டு இருந்தான். தண்ணீர் எடுக்க குடத்துடன் சென்ற ரேணுகாதேவி கந்தர்வராஜனின் ஒளி மிக்க தெய்வ தேஜசை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பூஜைக்கு தாமதமாவதை நினைத்து தன் நிலை உணர்ந்து வெகு சீக்கிரமாக குடத்தில் நீர் எடுத்து ஆசிரமத்திற்க்கு வந்து ஜமதக்னியின் முன் கைகூப்பி அஞ்சி நடுங்கி நின்றாள்.

 ஜமாதக்னி முனிவர் தன் மனைவியின் சஞ்சலித்து விட்ட மனதை அறிந்து கொண்டார். அவர் கோபமாக கூறினார். “புதல்வர்களே இந்த பாவப்பட்டவளை வெட்டுங்கள்.” என்றார். பரசுராமரின் அண்ணான்மார்கள் ஏதுமறியாமல் திகைத்து நிற்க, பரசுராமர் தாயை கொல்வதற்காக கோடாரியை ஓங்க அண்ணன்மார்கள் நடுவில் வந்தார்கள். ஆனால் பரசுராமர் தந்தையின் ஆணைப்படி அண்ணான்மார்களோடு சேர்த்து தாயையும் வெட்டிக்கொன்றார். உடனே தமக்கு கீழ்படிந்த பரசுராமரை கண்டு மகிழ்ந்து போன ஜமதக்னி கூறினார். “மகனே நீ விரும்புவதை கேள் தருகிறேன்” என்றார். (தொடரும்)
  
                  



    


        
            


Wednesday 11 September 2013

ஸ்ரீ பரசுராமர்

 
 
வீர தீர பிரதாபங்கள் நிறைந்த புரூருவஸ் என்ற மன்னன் மீது மையல் கொண்டு தேவலோக அப்சரஸ் ஊர்வசி தாமாக சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து அவனை மணந்து கொண்டாள். இவர்களுக்கு  ஆயு,சுருதாயு,சத்யாயு, ஏயா, விஜயா,ஜயா என்று ஆறு புதல்வர்கள் பிறந்தனர். விஜயனின் வம்சத்தில் ஜஹ்னு என்பவர் தோன்றினார். (இவரே கங்கையை காது வழியாக வெளியேற்றியவர்)  ஜஹ்னுவின் பேரன் காதி என்பவர் புகழ் பெற்ற மன்னனாக விளங்கினான். காதி மன்னன் சத்யவதி என்ற ஒரு அழகான மகளை பெற்றிருந்தான். ஒரு சமயம் ரிசீகரிஷி அவரிடம் சென்று பெண் கேட்டார். அரசன் பெண் கொடுக்க விருப்பமில்லாமல் முனிவரிடம் கூறினான். “ முனிவரே நாங்கள் கௌசிக வம்சத்தை சேர்ந்தவர்கள். எங்கள் வம்சத்தில் மணப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆதலால் தாங்கள் எமக்கு வரதட்சிணையாக ஓர் ஆயிரம் குதிரைகள் கொடுக்க வேண்டும். குதிரைகளின் உடம்பு முழுவதும் வெண்மை நிறமாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு காது மட்டும் கருப்பாக இருக்க வேண்டும். ரிசீகரிஷி அவர் எண்ணத்தை அறிந்து வருணபகவானிடம் சென்றார். காதி கூறியது போல ஒரு காது மட்டும் கருப்பு நிறம் கொண்ட ஓராயிரம் குதிரைகளை தானமாக கேட்டு பெற்றுக்கொண்டு வந்தார். குதிரைகளை பெற்றுக்கொண்ட மன்னன் காதி சத்தியவதியை ரிசீகரிஷிக்கு மணம் முடித்து கொடுத்தார்.
          ஒரு சமயம் ரிசீக முனிவரின் மனைவி சத்தியவதியும், சத்தியவதியின் தாயும்(ரிசீக முனிவரின் மாமியார்) தமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று ரிசீக முனிவரிடம் கேட்டுக்கொண்டார்கள். மகரிஷி ரிசீகர் இருவருக்கும் தனித்தனியாக மந்திரித்து பாயாசம் தயாரித்து விட்டு பூஜை பொருட்கள் சேகரிக்க காட்டிற்குள் சென்று விட்டார். அவர் சென்ற பின் மன்னன் காதியின் மனைவி ரிசீகரிஷி தன் மனைவிக்காக உயர்ந்த சக்தி வாய்ந்த பாயாசத்தை தயாரித்திருப்பார் என்று நினைத்து சத்தியவதியிடம்  அவள் பருக வேண்டிய பாயாசத்தை கேட்டு வாங்கி அதை சாப்பிட்டு விட்டாள். சத்தியவதி தன் தாய் பருகவேண்டிய பாயாசத்தை சாப்பிட்டு விட்டாள். காட்டிற்க்கு சென்ற ரிசீகரிஷி திரும்பி வந்தார். தாயும், மகளும் செய்த காரியத்தை அறிந்து வருந்தினார். தன் மனைவி சத்தியவதியிடம் கூறினார். “நீயும் உன் தாயும் தவறு செய்து விட்டீர்கள் சத்தியவாதி! உனக்கு பிறக்கப்போகும் மகன் தீயவர்களை தண்டிப்பவனாகவும் பழி வாங்கும் குணமுடன் மிக மிகக் கோபக்காரனாகவும் இருப்பான்.ஆனால் உன் தம்பி பிராமணனுக்கு உரிய சாந்த குணம் படைத்து பரம்பொருள் பிரம்மத்தை அறிந்த ஞானியாக இருப்பான்.” ரிசீகரிஷி இவ்வாறு கூறியவுடன் மிகவும் வருத்தமடைந்த சத்தியவதி, என் மகன் அப்படி கோபக்காரனாக இருக்க கூடாது. சுவாமி! நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து  விடுங்கள் என்றாள். அவள் அவ்வாறு கேட்டுக்கொண்டதும் ரிசீகரிஷி அப்படியானால் உன் மகனுடய மகன்(ஒரு பரம்பரை கடந்து) ஆத்திரக்காரனாக இருப்பான். இதற்கு மேல் என்னால் ஏதும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். காலம் சென்ற பின் சத்தியவாதி நற்குணம் நிறைந்த பிராமணரும் ரிஷியுமாக ஒரு மகனை பெற்றெடுத்தாள். அவனுக்கு ஜமதக்னி என்று பெயரிட்டார்கள். மன்னர் காதியின் மனைவி விசுவாமித்திரர் என்ற ராஜகுமாரனை பெற்றெடுத்தாள். சத்தியவாதி காலப்போக்கில் தெய்வீக தன்மையுடன் விளங்கியதால் மக்களை தூய்மை படுத்தும் கௌசிகீ என்ற புண்ணிய நதியாக மாறினாள்.
         சத்தியவதியின் மகன் ஜமதக்னிரிஷி ரேணு ரிஷியின் மகளான ரேணுகாதேவியை மணந்தார். அவருக்கு வசுமான் முதலிய புத்திரர்களுடன் பரசுராமர்(பாயாசத்தின் சக்தியின்படி பிறந்தவர்) அனைவருக்கும் இளையவராக பிறந்தார்.
          ஹைஹைய வம்சத்தில் மாமன்னர் கார்த்தவீரியார்ஜுனர் தோன்றினான். அவன் மிகச்சிறந்த க்ஷத்திரிய வீரன். பகவான் விஷ்ணுவின் அவதாரமான யோகிராஜன் தத்தாத்ரேயரை நினைத்து தவம் செய்து சத்ருக்களை வெற்றி கொள்ளும் வீர தீர பராக்கிரம சக்தியும் பெற்றிருந்தான். ஒருவனே பல மாவீரர்களோடு போர் செய்வதற்காக தமக்கு ஆயிரம் கரங்கள் வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான். அபாரமான தேக பலத்தையும் புலங்களின் அபூர்வ சக்தியையும் பெற்றிருந்தான். மேலும் அளப்பரிய செல்வங்கள், தேஜஸ்,கீர்த்தி,ஆகியவற்றை தத்தாத்ரேயரிடம் வரமாக பெற்று பல யோக சக்திகளையும் கிடைக்கப்பெற்றிருந்தான். சூட்சுமத்திலும் சூட்சும(அணு ரூபமாக) மாறுவான். மலைபோல கனமான உருவமும் எடுப்பான். அஷ்டமா சித்திகளை பெற்றவன் உலகில் வாயு போல எங்கும் தங்கு தடையின்றி சஞ்சாரம் செய்வான்.(தொடரும்)
  
                  
 
 
 
    
 
 
        
            
 

Sunday 8 September 2013

நரசிம்மாவதாரம்12

  
பிரகலாதன் இவ்வாறு துதி பாடி முடித்ததும் நரசிம்ம பகவான் சாந்தமாகிவிட்டார். அவர் பிரகலாதனை நோக்கி கூறினார். அப்பனே “பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எதை விருப்பப்படுகிறாயோ அதை கேள். நான் ஜீவராசிகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் தெய்வம். என்னை மகிழ்விக்காமல் என் தரிசனம் கிடைப்பது மிகவும் கடினம். என் தரிசனம் கிடைத்து விட்டாலோ அந்த பக்தன் மனதில் துயரமும் துன்பமும் நாசப்பட்டு போகும். இஷ்டப்பட விஷயங்கள் அவனை தேடிவரும். ஆதலால் சான்றோர்கள் புலனடக்கம் பெற்றவர்கள் என்னை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்த முயல்வார்கள்.”என்று கூறி வேண்டிய வரங்களை கேட்கச்சொன்னார்.
          வரம் கேட்டால் அது பக்திக்கு இடையூறாக இருக்கும் என்று நினைத்து பிரகலாதன் நரசிம்ம பகவானிடம் கூறினான்.-“பிரபோ அசுரப்பிறவியாகிய நான் ஆசைகளுக்கு சீக்கிரம் அடிமையாகி விடுவேன். ஆசைகளை தூண்டும் விஷயங்களில் இருந்து மிக ஜாக்கிரதையாக விலகியே இருப்பவன் நான். அதனால் ஏற்படும் தீமைகளை நினைத்து தான் நான் உங்களை சரண் அடைந்தேன். என்னிடம் பக்தியின் லட்சணங்கள் இருக்கின்றனவா என்று சோதிக்க தானே தாங்கள் வரம் கேட்க என்னை தூண்டுகிறீர்கள். இதயத்தில் ஆசைகளை தேக்கி வைத்துக்கொண்டால் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்க நேரிடும். தாங்கள் பரம தயாள குணம் படைத்தவர். சோதனைக்காகவே அன்றி நீங்கள் உண்மையாக வரம் கேட்க தூண்ட மாட்டீர்கள். மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஸ்வாமியிடம் ஏதாவது ஒரு பொருளை கேட்கிறவன் உண்மையான சேவகனாக இருக்க மாட்டான். அது கொடுக்கல் வாங்கல் செய்யும் வாணிப முறை ஆகிறது. ஸ்வாமியும் சேவையின் மூலம் காரியம் சாதித்துக்கொண்டு அவன் கேட்டதை கொடுக்கும்எஜமானனும் அல்ல. பகவானே தங்களுடைய காரணமில்லா சேவகன் நான். தாங்கள் எனக்கு மேன்மைகள் வழங்கினாலும், துன்பத்தில் வாட்டி எடுத்தாலும் சேவகனாகவே இருப்பேன். வரத ராஜ மகா பிரபுவே தாங்கள் எனக்கு வரம் கொடுக்க நினைத்தால் என் இதயத்தின் அடித்தளத்தில் எந்த ஆசையும் முளை விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு இடத்தில் ஆசை வைக்காத மனிதனே பகவான் மீது ஆசை வைப்பான். பக்தனாக மாறிவிடுவான். பகவானே அனைவரது இதயத்தில் குடியிருக்கும் தெய்வமே பரபிரம்ம சொரூபமே தங்களை வணங்குகிறேன்.” நரசிம்ம பகவான் கூறினார். “குழந்தாய் பிரகலாதா இகலோக, பரலோக மேன்மைகளை அடைய விரும்பாமல் என் பக்தனாக மட்டும் இருக்க விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். இருப்பினும் நீ தைத்திய,அசுர,தானவ,யக்ஷ,ராக்சசர்களுக்கெல்லாம் அதிபதியாக ஒரு மன்வந்தர காலம் இருப்பாயாக. கவலைப்பட வேண்டாம். அனைத்து உயிரினங்களில் ஆத்மாவாக வீற்றிருக்கும் என்னை பார்த்துக்கொண்டு இருப்பாய். ஐசுவர்ய லோகங்களை அனுபவித்து கர்ம பலன்களை தொலைப்பாய். புண்ணிய கர்மங்களை அனுபவிப்பதன் மூலமாக நிஷ்காம கர்மங்களால் தீ வினைகளை தொலைத்துவிட்டு இறப்புக்கு பின்என்றும் என் சேவகனாக என்னிடம் வந்து வீடு. தேவலோகத்திலும் மானிட லோகத்திலும் உன்னை உதாரணம் காட்டி பக்த சிரோன்மணி என்று புகழ்வார்கள். என்னையும் உன்னையும் நினைத்தால் அவர்கள் பாவங்கள் தீர்ந்து நற்கதி கிடைக்கும்.” பிரகலாதன் கூறினான். பகவானே தாங்கள் என்னை வரம் கேட்க தூண்டினீர்கள். நான் தங்களிடம் ஒரே ஒரு வரம் கேட்கிறேன். என் தந்தை சர்வ சக்தி படைத்த கடவுளான தங்கள் தேஜசையும், தேவர் மானுடர் அசுரர் என்ற சகல ஜீவராசிகளுக்கு இறைவன் தங்களையும் அறிந்து கொள்ளாமல் தானே பெரியவன் என்று அவமரியாதை செய்தார். தன் தம்பியை கொன்றவன் என்றார். மேலும் உங்களின் பக்தனான என்னை பலவிதத்தில் இம்ஸித்தார். அதனால் அவர் பாவியாகி விட்டார். என்று கூறுவதும் தவறு. ஏனெனில் தாங்கள் அவரை தொட்டவுடனே அவர் புனிதமாகிவிட்டார் என்றே கூறுவேன். என் பிதாவை மன்னித்து அவருக்கு நற்கதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
நரசிம்ம பகவான் கூறினார். “தூயவனே பிரகலாதா! உன் பிதா எப்பொழுதோ தூயவராகி விட்டார். அவர் மட்டுமல்ல இருபத்திஒரு தலைமுறைக்கு முன்னும் பின்னும் உன் பித்ருக்கள் மோட்சம் அடைந்து விட்டனர். ஹிரணியகசிபு உன்போன்ற  பிள்ளையை பெற்றதனால் பித்ருக்களையும் கரை சேர்த்து தானும் பரமபதம் அடைந்து விட்டார்.
சாந்தமான ,சமநோக்குள்ள, நற்சீலமுள்ள எனது பிரியமான பக்தர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல புழு பூச்சிகளும் புனிதமாகி விடுவார்கள். ஏனெனில் பற்றற்ற பக்தர்கள் எங்கிருந்தாலும் எவருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். நீ பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக திகழ்வாய். என் ஸ்பரிசம் பட்டு தூயவராகி விட்ட உன் தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்வாய். உன்னை பெற்றதனால் அவர் தேவர்களும் போற்றும் பரமபதம் அடைந்து விட்டார். பிதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வாய். வேதம் அறிந்த முனிவர்களின் ஆணைப்படி என் மீது மனதை வைத்து என்னையே சரண் அடைந்து எதையும் நான் எனது என்று கருதாமல் எங்கும் என் அருளை கண்டு அசுரர்களுக்கு அதிபதியாக உன் கடமைகளை செய்து முடிப்பாய். பிரகலாதன் பகவான் கூறியபடி தந்தைக்கு ஈமக்கிரிகைகள் செய்த பின் ரிஷி முனிவர்களால் ராஜ்யாபிஷேகம் செய்யப்பட்டான்.
          பிரம்மா முதலிய தேவர்கள் சாந்தமாக நரசிம்ம பகவானை தொழுது பூஜித்தனர். பிரம்ம தேவர் கூறினார். “பகவானே அனைவரது அந்தராத்மாவில் உறையும் ஈசனே நான் கொடுத்த வரத்தால் ஹிரணியகசிபு தர்மத்தின் எல்லையை மீறி தன் இஷ்டம் போல் நடந்தான். பாவங்களை செய்தான். பக்தனான இந்த பாலகனால் தாங்கள் நரசிம்மாவதாரம் எடுத்து அவனை சம்ஹாரம் செய்து மூவுலகையும் ரட்சித்தீர்கள். இப்பொழுது பிரகலாதன் தங்கள் திருவடிநிழலில் இருக்கிறான். தங்களது நரசிம்ம திருவுருவத்தை தியானம் செய்பவர்கள் எல்லா பயங்களில் இருந்தும் விடுபடுவார்கள். திடீரென வரும் மரணமும் ஏதும் செய்ய முடியாமல் விலகி போய்விடும்.”
          நரசிம்ம பகவான் பிரம்மாவை நோக்கி கூறினார். “பிரம்மதேவரே அசுரர்களுக்கு நீங்கள் இப்படிப்பட்ட வரங்களை தந்தருளாதீர்கள். ஏனெனில் அசுரர்கள் இயற்கையாகவே கொடியவர்கள். நியாய தர்மத்தை சிந்திக்காதவர்கள். பாம்புக்கு பால் வார்த்தால் அதன் விஷம் குறைந்தா போகும்.” இவ்வாறு கூறிவிட்டு நரசிம்ம பகவான் மறைந்தார். சுக்கிராசாரியாரும் ரிஷி முனிவர்களும் பிரம்மதேவரும் பிரகலாதனுக்கு தைத்ய தானவ அசுரர்களுக்கு அரசனாக அபிஷேகம் செய்து வைத்தனர். பிரகலாதன் பிரம்மா, சிவபெருமான்,தேவர்கள், பிரஜாபதிகள் அனைவரையும் முறைப்படி பூஜித்து வணங்கினான். அவர்கள் நல்லாசிபெற்று நல்லாட்சி நடத்தினான்.       
 
 
 
    
 
 
        
            
 

Thursday 5 September 2013

நரசிம்மாவதாரம்11

  
 
பிரம்மா சிவபெருமான் ஆகிய பிரதான தெய்வங்களாலும் அவரை சாந்தப்படுத்தி அருகில் நெருங்க முடியாமல் போனதும் பிரம்மா முதலிய தேவர்கள் லக்ஷ்மி தேவியை அருகில் சென்று சாந்தப்படுத்த சொன்னார்கள். லக்ஷ்மிதேவியோ இது வரை கண்டிராத கேட்டிராத கோர பயங்கர உருவத்தை கண்டதும் பயந்து அருகில் போகவில்லை.
அப்போது பிரம்மதேவர் பிரகலாதனை அழைத்து கூறினார். “ மகனே பிரகலாதா உன் காரணமாகத்தானே உன் தந்தை மேல் பகவானுக்கு இவ்வளவு தூரம் கோபம் ஏற்பட்டது. அதனால் நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்துவாய். அகில உலகங்களும், தேவர்களும்,மனிதர்களும் ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்கவேண்டும். நரசிம்மர் கோபத்தை சாந்தப்படுத்த வேண்டும்.இல்லையேல் நாம் அனைவரும் அழிந்து விடுவோம்.” பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் பிரகலாதன் அப்படியே ஆகட்டும் என்று கூறி கைகள் கூப்பி அருகில் சென்று சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினான்.
          பிரகலாதன் தன் தாள்களில் விழுந்து வணங்கியது நரசிம்மர் இதயத்தில் கருணை பெருக்கெடுத்தது. அவர் காலனின் அச்சத்தை போக்கும் தன் அபயத்திருக்கரத்தை பிரகலாதன் சிரசில் வைத்தார். பிரகலாதன் ஆனந்த கண்ணீர் வடித்தான். சரீரம் புல ஹாங்கிதமடைந்து மிகுந்த பக்தியுடன் துதி செய்தான்.
 
“பகவானே பிரம்மா முதலிய தேவர்கள், ரிஷி முனிவர்கள், சித்தர்கள், ஆகியோர் மனமும் அறிவும் எக்காலமும் சாத்வீக தன்மை நிறைந்து இருக்கும். அவர்களின் தெய்வீக குணங்களாலும் உங்களை சந்தோசப்படுத்த முடியவில்லையென்றால் பிறவியிலேயே தீய குணங்கள் படைத்த அசுரப்பிறவிகளாகிய எங்களை கடைத்தேற்ற எங்கள் மீது கருணை கொண்டு ஒரு அவதாரமே எடுத்து விட்டீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. பிரபுவே தனச்செல்வம்,உயர்குடி, அழகு, தவம்,கல்வி,தேஜஸ்,ஆற்றல்,ஆற்றல் அதிகாரம், பலம்,ஆண்மை அறிவு,யோகம் பதவி இவையெல்லாம் ஒருவனை லௌகீக வாழ்வில் மேன்மைபடுத்தும் சாதனங்களாக (காரணங்களாக)இருந்தும் அவற்றால் பரமபுருசன் பகவானை சந்தோசப்படுத்த முடியாது. மேற்சொன்ன மேன்மைகளுடன் அவன் பிராமணனாக இருந்தாலும் பகவத் பக்தியில்லாமல் தங்கள் அருளை பெற முடியாது. ஆனால் மேற்சொன்ன மேன்மைகள் இல்லாமல் மனம், வாக்கு,காயம், செல்வம், பிராணன் அனைத்தையும் பகவானுக்கு அற்பணித்து பகவத்பக்தி நிறைந்தவன் சண்டாளானாக இருந்தால் என்ன? அவன் அடியார்களில் சிறந்தவன். பூஜிக்கத்தக்கவன், தூயவனாகிறான்.
          பகவானே தாங்கள் எளிய பக்தர்களின் பூஜையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். தன் முகத்தை எவ்வாறு முகம் பார்க்கும் கண்ணாடி பிரதி பலிக்கிறது போல தங்களை குறித்து செய்யப்படும் வழிபாடுகளின் பலன்கள் அவர்களுக்கே வந்து சேர்கின்றன. நான் எதற்கும் தகுதியற்றவன். அசுரனாக பிறந்து எந்த உரிமையும் இல்லாதவன்.அவ்வாறு இருந்தும் என் அறிவுக்கு ஏற்றவாறு தங்களை துதி பாடுகிறேன். மற்ற தேவர்கள் அனைவரும் அசுரர்கள் போல தங்களை துவேசிப்பதில்லை.
          பகவானே அனைவரையும் இம்சித்து தொல்லை கொடுத்த என் தந்தையை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். கொடுமைக்காரன் இறந்தான் என்று அனைவரும் நிம்மதியாக இருக்க தாங்கள் சாந்தமடையுங்கள். அனைவரும் தங்களின் சாந்தமான சுய உருவத்தை காண விரும்புகிறார்கள். பரமாத்மாவே தங்களது பயங்கர உருவம் நீளமான நாவு காண கண் கூசும் கண்கள் நெளிந்த புருவம் குடலை மாலையாக போட்ட தங்கள் திருமேனி விறைத்த காதுகள் திக்கஜங்களை பயமுறுத்தும் சிம்மநாதம் சத்ருக்கள் உடலை கிழித்து எறியும் நகங்கள் எல்லாம் பார்த்து பயப்படவில்லை. தீனபந்து உலகில் இருக்கும் துயரங்களை கண்டு தான் பயப்படுகிறேன். கர்மபந்தத்தால் கட்டுண்டு வினைப்பயன்களை அனுபவிக்கும் துன்பம் ஓயாது ஜனன மரண சுழற்சியில் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறேன். இதிலிருந்து எப்படி விடுபடுவேன்? தங்கள் தாமரை தாழ் பணிந்து எப்படி உய்வடைவேன்?
          என் தந்தை தவமிருந்து ஐசுவர்யம்,ஆயுள் அரசபோகங்கள் அனைவரையும் ஆட்கொள்ளும் திறமை முதலிய எல்லாமேன்மைகளையும் பெற்று இருந்தார். எவ்வளவு தான் பெற்றிருந்தாலும், உயர்வடைந்து இருந்தாலும் எதுவும் நீடித்து நிற்கவில்லை. ஏனெனில் அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. எல்லாம் தங்கள் திருவருளால் நடக்கின்றன. நான் தங்களை நினைத்து சிறிதளவே பக்தி செலுத்தினேன். தாங்கள் தனிப்பெருங்கருணை காட்டி தன் பக்தர்களோடு சேர்த்து தன்னுடயவனாக்கிக்கொண்டீர்கள்.தங்கள் மகிமையை புகழ வார்த்தைகள் இல்லை.
          பகவானே மக்கள் பந்தபாசங்களில் சிக்குண்டு வினைப்பயன்களை ஓயாது அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். உலகில் பல வன்கொடுமைகள் நடக்கின்றன. பிரபுவே உலக மக்கள் துன்பங்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள். நான் மட்டும் மோட்சமடயவிரும்பவில்லை  அல்லல் படும் மானிடர்களை தங்கள் கடைக்கண்ணால் பாருங்கள். அவர்களுக்காக நான் பிரார்தனை செய்கிறேன். பக்தர்களுக்கு எல்லாமுமாக இருக்கும் இறைவன் தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம் செய்து வணங்குகிறேன்.     
(தொடரும்)