Thursday 5 September 2013

நரசிம்மாவதாரம்11

  
 
பிரம்மா சிவபெருமான் ஆகிய பிரதான தெய்வங்களாலும் அவரை சாந்தப்படுத்தி அருகில் நெருங்க முடியாமல் போனதும் பிரம்மா முதலிய தேவர்கள் லக்ஷ்மி தேவியை அருகில் சென்று சாந்தப்படுத்த சொன்னார்கள். லக்ஷ்மிதேவியோ இது வரை கண்டிராத கேட்டிராத கோர பயங்கர உருவத்தை கண்டதும் பயந்து அருகில் போகவில்லை.
அப்போது பிரம்மதேவர் பிரகலாதனை அழைத்து கூறினார். “ மகனே பிரகலாதா உன் காரணமாகத்தானே உன் தந்தை மேல் பகவானுக்கு இவ்வளவு தூரம் கோபம் ஏற்பட்டது. அதனால் நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்துவாய். அகில உலகங்களும், தேவர்களும்,மனிதர்களும் ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்கவேண்டும். நரசிம்மர் கோபத்தை சாந்தப்படுத்த வேண்டும்.இல்லையேல் நாம் அனைவரும் அழிந்து விடுவோம்.” பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் பிரகலாதன் அப்படியே ஆகட்டும் என்று கூறி கைகள் கூப்பி அருகில் சென்று சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினான்.
          பிரகலாதன் தன் தாள்களில் விழுந்து வணங்கியது நரசிம்மர் இதயத்தில் கருணை பெருக்கெடுத்தது. அவர் காலனின் அச்சத்தை போக்கும் தன் அபயத்திருக்கரத்தை பிரகலாதன் சிரசில் வைத்தார். பிரகலாதன் ஆனந்த கண்ணீர் வடித்தான். சரீரம் புல ஹாங்கிதமடைந்து மிகுந்த பக்தியுடன் துதி செய்தான்.
 
“பகவானே பிரம்மா முதலிய தேவர்கள், ரிஷி முனிவர்கள், சித்தர்கள், ஆகியோர் மனமும் அறிவும் எக்காலமும் சாத்வீக தன்மை நிறைந்து இருக்கும். அவர்களின் தெய்வீக குணங்களாலும் உங்களை சந்தோசப்படுத்த முடியவில்லையென்றால் பிறவியிலேயே தீய குணங்கள் படைத்த அசுரப்பிறவிகளாகிய எங்களை கடைத்தேற்ற எங்கள் மீது கருணை கொண்டு ஒரு அவதாரமே எடுத்து விட்டீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. பிரபுவே தனச்செல்வம்,உயர்குடி, அழகு, தவம்,கல்வி,தேஜஸ்,ஆற்றல்,ஆற்றல் அதிகாரம், பலம்,ஆண்மை அறிவு,யோகம் பதவி இவையெல்லாம் ஒருவனை லௌகீக வாழ்வில் மேன்மைபடுத்தும் சாதனங்களாக (காரணங்களாக)இருந்தும் அவற்றால் பரமபுருசன் பகவானை சந்தோசப்படுத்த முடியாது. மேற்சொன்ன மேன்மைகளுடன் அவன் பிராமணனாக இருந்தாலும் பகவத் பக்தியில்லாமல் தங்கள் அருளை பெற முடியாது. ஆனால் மேற்சொன்ன மேன்மைகள் இல்லாமல் மனம், வாக்கு,காயம், செல்வம், பிராணன் அனைத்தையும் பகவானுக்கு அற்பணித்து பகவத்பக்தி நிறைந்தவன் சண்டாளானாக இருந்தால் என்ன? அவன் அடியார்களில் சிறந்தவன். பூஜிக்கத்தக்கவன், தூயவனாகிறான்.
          பகவானே தாங்கள் எளிய பக்தர்களின் பூஜையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். தன் முகத்தை எவ்வாறு முகம் பார்க்கும் கண்ணாடி பிரதி பலிக்கிறது போல தங்களை குறித்து செய்யப்படும் வழிபாடுகளின் பலன்கள் அவர்களுக்கே வந்து சேர்கின்றன. நான் எதற்கும் தகுதியற்றவன். அசுரனாக பிறந்து எந்த உரிமையும் இல்லாதவன்.அவ்வாறு இருந்தும் என் அறிவுக்கு ஏற்றவாறு தங்களை துதி பாடுகிறேன். மற்ற தேவர்கள் அனைவரும் அசுரர்கள் போல தங்களை துவேசிப்பதில்லை.
          பகவானே அனைவரையும் இம்சித்து தொல்லை கொடுத்த என் தந்தையை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். கொடுமைக்காரன் இறந்தான் என்று அனைவரும் நிம்மதியாக இருக்க தாங்கள் சாந்தமடையுங்கள். அனைவரும் தங்களின் சாந்தமான சுய உருவத்தை காண விரும்புகிறார்கள். பரமாத்மாவே தங்களது பயங்கர உருவம் நீளமான நாவு காண கண் கூசும் கண்கள் நெளிந்த புருவம் குடலை மாலையாக போட்ட தங்கள் திருமேனி விறைத்த காதுகள் திக்கஜங்களை பயமுறுத்தும் சிம்மநாதம் சத்ருக்கள் உடலை கிழித்து எறியும் நகங்கள் எல்லாம் பார்த்து பயப்படவில்லை. தீனபந்து உலகில் இருக்கும் துயரங்களை கண்டு தான் பயப்படுகிறேன். கர்மபந்தத்தால் கட்டுண்டு வினைப்பயன்களை அனுபவிக்கும் துன்பம் ஓயாது ஜனன மரண சுழற்சியில் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறேன். இதிலிருந்து எப்படி விடுபடுவேன்? தங்கள் தாமரை தாழ் பணிந்து எப்படி உய்வடைவேன்?
          என் தந்தை தவமிருந்து ஐசுவர்யம்,ஆயுள் அரசபோகங்கள் அனைவரையும் ஆட்கொள்ளும் திறமை முதலிய எல்லாமேன்மைகளையும் பெற்று இருந்தார். எவ்வளவு தான் பெற்றிருந்தாலும், உயர்வடைந்து இருந்தாலும் எதுவும் நீடித்து நிற்கவில்லை. ஏனெனில் அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. எல்லாம் தங்கள் திருவருளால் நடக்கின்றன. நான் தங்களை நினைத்து சிறிதளவே பக்தி செலுத்தினேன். தாங்கள் தனிப்பெருங்கருணை காட்டி தன் பக்தர்களோடு சேர்த்து தன்னுடயவனாக்கிக்கொண்டீர்கள்.தங்கள் மகிமையை புகழ வார்த்தைகள் இல்லை.
          பகவானே மக்கள் பந்தபாசங்களில் சிக்குண்டு வினைப்பயன்களை ஓயாது அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். உலகில் பல வன்கொடுமைகள் நடக்கின்றன. பிரபுவே உலக மக்கள் துன்பங்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள். நான் மட்டும் மோட்சமடயவிரும்பவில்லை  அல்லல் படும் மானிடர்களை தங்கள் கடைக்கண்ணால் பாருங்கள். அவர்களுக்காக நான் பிரார்தனை செய்கிறேன். பக்தர்களுக்கு எல்லாமுமாக இருக்கும் இறைவன் தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம் செய்து வணங்குகிறேன்.     
(தொடரும்)
 
 
 
    
 
 
        
            

No comments:

Post a Comment