Sunday, 8 September 2013

நரசிம்மாவதாரம்12

  
பிரகலாதன் இவ்வாறு துதி பாடி முடித்ததும் நரசிம்ம பகவான் சாந்தமாகிவிட்டார். அவர் பிரகலாதனை நோக்கி கூறினார். அப்பனே “பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எதை விருப்பப்படுகிறாயோ அதை கேள். நான் ஜீவராசிகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் தெய்வம். என்னை மகிழ்விக்காமல் என் தரிசனம் கிடைப்பது மிகவும் கடினம். என் தரிசனம் கிடைத்து விட்டாலோ அந்த பக்தன் மனதில் துயரமும் துன்பமும் நாசப்பட்டு போகும். இஷ்டப்பட விஷயங்கள் அவனை தேடிவரும். ஆதலால் சான்றோர்கள் புலனடக்கம் பெற்றவர்கள் என்னை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்த முயல்வார்கள்.”என்று கூறி வேண்டிய வரங்களை கேட்கச்சொன்னார்.
          வரம் கேட்டால் அது பக்திக்கு இடையூறாக இருக்கும் என்று நினைத்து பிரகலாதன் நரசிம்ம பகவானிடம் கூறினான்.-“பிரபோ அசுரப்பிறவியாகிய நான் ஆசைகளுக்கு சீக்கிரம் அடிமையாகி விடுவேன். ஆசைகளை தூண்டும் விஷயங்களில் இருந்து மிக ஜாக்கிரதையாக விலகியே இருப்பவன் நான். அதனால் ஏற்படும் தீமைகளை நினைத்து தான் நான் உங்களை சரண் அடைந்தேன். என்னிடம் பக்தியின் லட்சணங்கள் இருக்கின்றனவா என்று சோதிக்க தானே தாங்கள் வரம் கேட்க என்னை தூண்டுகிறீர்கள். இதயத்தில் ஆசைகளை தேக்கி வைத்துக்கொண்டால் பிறப்பு இறப்பு சுழற்சியில் சிக்க நேரிடும். தாங்கள் பரம தயாள குணம் படைத்தவர். சோதனைக்காகவே அன்றி நீங்கள் உண்மையாக வரம் கேட்க தூண்ட மாட்டீர்கள். மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஸ்வாமியிடம் ஏதாவது ஒரு பொருளை கேட்கிறவன் உண்மையான சேவகனாக இருக்க மாட்டான். அது கொடுக்கல் வாங்கல் செய்யும் வாணிப முறை ஆகிறது. ஸ்வாமியும் சேவையின் மூலம் காரியம் சாதித்துக்கொண்டு அவன் கேட்டதை கொடுக்கும்எஜமானனும் அல்ல. பகவானே தங்களுடைய காரணமில்லா சேவகன் நான். தாங்கள் எனக்கு மேன்மைகள் வழங்கினாலும், துன்பத்தில் வாட்டி எடுத்தாலும் சேவகனாகவே இருப்பேன். வரத ராஜ மகா பிரபுவே தாங்கள் எனக்கு வரம் கொடுக்க நினைத்தால் என் இதயத்தின் அடித்தளத்தில் எந்த ஆசையும் முளை விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு இடத்தில் ஆசை வைக்காத மனிதனே பகவான் மீது ஆசை வைப்பான். பக்தனாக மாறிவிடுவான். பகவானே அனைவரது இதயத்தில் குடியிருக்கும் தெய்வமே பரபிரம்ம சொரூபமே தங்களை வணங்குகிறேன்.” நரசிம்ம பகவான் கூறினார். “குழந்தாய் பிரகலாதா இகலோக, பரலோக மேன்மைகளை அடைய விரும்பாமல் என் பக்தனாக மட்டும் இருக்க விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். இருப்பினும் நீ தைத்திய,அசுர,தானவ,யக்ஷ,ராக்சசர்களுக்கெல்லாம் அதிபதியாக ஒரு மன்வந்தர காலம் இருப்பாயாக. கவலைப்பட வேண்டாம். அனைத்து உயிரினங்களில் ஆத்மாவாக வீற்றிருக்கும் என்னை பார்த்துக்கொண்டு இருப்பாய். ஐசுவர்ய லோகங்களை அனுபவித்து கர்ம பலன்களை தொலைப்பாய். புண்ணிய கர்மங்களை அனுபவிப்பதன் மூலமாக நிஷ்காம கர்மங்களால் தீ வினைகளை தொலைத்துவிட்டு இறப்புக்கு பின்என்றும் என் சேவகனாக என்னிடம் வந்து வீடு. தேவலோகத்திலும் மானிட லோகத்திலும் உன்னை உதாரணம் காட்டி பக்த சிரோன்மணி என்று புகழ்வார்கள். என்னையும் உன்னையும் நினைத்தால் அவர்கள் பாவங்கள் தீர்ந்து நற்கதி கிடைக்கும்.” பிரகலாதன் கூறினான். பகவானே தாங்கள் என்னை வரம் கேட்க தூண்டினீர்கள். நான் தங்களிடம் ஒரே ஒரு வரம் கேட்கிறேன். என் தந்தை சர்வ சக்தி படைத்த கடவுளான தங்கள் தேஜசையும், தேவர் மானுடர் அசுரர் என்ற சகல ஜீவராசிகளுக்கு இறைவன் தங்களையும் அறிந்து கொள்ளாமல் தானே பெரியவன் என்று அவமரியாதை செய்தார். தன் தம்பியை கொன்றவன் என்றார். மேலும் உங்களின் பக்தனான என்னை பலவிதத்தில் இம்ஸித்தார். அதனால் அவர் பாவியாகி விட்டார். என்று கூறுவதும் தவறு. ஏனெனில் தாங்கள் அவரை தொட்டவுடனே அவர் புனிதமாகிவிட்டார் என்றே கூறுவேன். என் பிதாவை மன்னித்து அவருக்கு நற்கதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
நரசிம்ம பகவான் கூறினார். “தூயவனே பிரகலாதா! உன் பிதா எப்பொழுதோ தூயவராகி விட்டார். அவர் மட்டுமல்ல இருபத்திஒரு தலைமுறைக்கு முன்னும் பின்னும் உன் பித்ருக்கள் மோட்சம் அடைந்து விட்டனர். ஹிரணியகசிபு உன்போன்ற  பிள்ளையை பெற்றதனால் பித்ருக்களையும் கரை சேர்த்து தானும் பரமபதம் அடைந்து விட்டார்.
சாந்தமான ,சமநோக்குள்ள, நற்சீலமுள்ள எனது பிரியமான பக்தர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல புழு பூச்சிகளும் புனிதமாகி விடுவார்கள். ஏனெனில் பற்றற்ற பக்தர்கள் எங்கிருந்தாலும் எவருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள். நீ பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக திகழ்வாய். என் ஸ்பரிசம் பட்டு தூயவராகி விட்ட உன் தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்வாய். உன்னை பெற்றதனால் அவர் தேவர்களும் போற்றும் பரமபதம் அடைந்து விட்டார். பிதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வாய். வேதம் அறிந்த முனிவர்களின் ஆணைப்படி என் மீது மனதை வைத்து என்னையே சரண் அடைந்து எதையும் நான் எனது என்று கருதாமல் எங்கும் என் அருளை கண்டு அசுரர்களுக்கு அதிபதியாக உன் கடமைகளை செய்து முடிப்பாய். பிரகலாதன் பகவான் கூறியபடி தந்தைக்கு ஈமக்கிரிகைகள் செய்த பின் ரிஷி முனிவர்களால் ராஜ்யாபிஷேகம் செய்யப்பட்டான்.
          பிரம்மா முதலிய தேவர்கள் சாந்தமாக நரசிம்ம பகவானை தொழுது பூஜித்தனர். பிரம்ம தேவர் கூறினார். “பகவானே அனைவரது அந்தராத்மாவில் உறையும் ஈசனே நான் கொடுத்த வரத்தால் ஹிரணியகசிபு தர்மத்தின் எல்லையை மீறி தன் இஷ்டம் போல் நடந்தான். பாவங்களை செய்தான். பக்தனான இந்த பாலகனால் தாங்கள் நரசிம்மாவதாரம் எடுத்து அவனை சம்ஹாரம் செய்து மூவுலகையும் ரட்சித்தீர்கள். இப்பொழுது பிரகலாதன் தங்கள் திருவடிநிழலில் இருக்கிறான். தங்களது நரசிம்ம திருவுருவத்தை தியானம் செய்பவர்கள் எல்லா பயங்களில் இருந்தும் விடுபடுவார்கள். திடீரென வரும் மரணமும் ஏதும் செய்ய முடியாமல் விலகி போய்விடும்.”
          நரசிம்ம பகவான் பிரம்மாவை நோக்கி கூறினார். “பிரம்மதேவரே அசுரர்களுக்கு நீங்கள் இப்படிப்பட்ட வரங்களை தந்தருளாதீர்கள். ஏனெனில் அசுரர்கள் இயற்கையாகவே கொடியவர்கள். நியாய தர்மத்தை சிந்திக்காதவர்கள். பாம்புக்கு பால் வார்த்தால் அதன் விஷம் குறைந்தா போகும்.” இவ்வாறு கூறிவிட்டு நரசிம்ம பகவான் மறைந்தார். சுக்கிராசாரியாரும் ரிஷி முனிவர்களும் பிரம்மதேவரும் பிரகலாதனுக்கு தைத்ய தானவ அசுரர்களுக்கு அரசனாக அபிஷேகம் செய்து வைத்தனர். பிரகலாதன் பிரம்மா, சிவபெருமான்,தேவர்கள், பிரஜாபதிகள் அனைவரையும் முறைப்படி பூஜித்து வணங்கினான். அவர்கள் நல்லாசிபெற்று நல்லாட்சி நடத்தினான்.       
 
 
 
    
 
 
        
            
 

No comments:

Post a Comment