Tuesday 3 September 2013

நரசிம்மாவதாரம்10

  
நரசிம்ம பகவான் காண்பதற்கு மிக பயங்கரமாக இருந்தார்.நெருப்பிலிட்ட தங்கக்குமிழ் போல கண்கள் பளபளத்து கோபம் கொப்பளித்தது. வாயை பிளந்து பிடரி கேசத்தை சிலுப்பினார். பயங்கர தாடை பற்களிடையில் வாள் போன்ற நீளமான நாவு துடித்தது.  புருவங்கள் நெளிந்து முகம் மேலும் பயங்கரமாக தெரிந்தது. இரண்டு காதுகளும் விரைப்பாக நின்றிருந்தன.விடைத்த தடித்த மூக்கும் வாயும் மலை குகை போல தோற்றமளித்தன. தாடை மிக பயங்கரமாக தெரிந்தது. விசாலமான சரீரம் வானகத்தை தொட்டது. கழுத்து குட்டையாக தடித்து காணப்பட்டது. மார்பு மிகவும் அகன்று இடுப்பு குறுகி இருந்தது. சந்திரனின் ஒளி கிரணங்கள் ரோமங்கள் பளபளப்பாக மின்னின. ஆயிரக்கணக்கான நீண்ட கைகளில் நகங்களே ஆயுதங்கள் போலிருந்தன. அந்த கைகளில் அவருக்குரிய சங்கு சக்கர ஆயுதங்களும் வஜ்ரம் சூலம் முதலிய ஆயுதங்களும் இருந்தன.அந்த ஆயுதங்களின் சக்தியால் அசுரர்கள் அங்கும் இங்கும் ஓடினர். ஹிரணியகசிபு புரிந்து கொண்டான். இது நிச்சயம் விஷ்ணு பகவானின் மாயை தான் ஆனால் இவரால் என்னை என்ன செய்ய முடியும்? என்று யோசித்து சிம்மநாதம் செய்து கதை எடுத்து ஓங்கினான். விட்டில் பூச்சி நெருப்பில் விழுவது போல அவரை நெருங்கினான்.
          பிரளயத்தின் காரணமாக இருளை சிருஷ்டியின் தொடக்கத்தில் தம் பேரொளி விழுங்கிவிட்டது போல ஹிரணியகசிபு அவர் ஒளியில் கலந்தான். கருடன் சர்பத்தை பிடிப்பது போல திடீரென பகவான் அவனை பிடித்தார். கருடன் பிடியில் இருந்து பாம்பு நழுவிவிடுவது போல அவர் பிடியில் இருந்து நழுவிவிட்டான். தேவர்கள் அனைவரும் மேகங்களில் மறைந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். ஹிரணியகசிபு தமக்கு பயந்து தான் நரசிம்மர் தன்னை விட்டு விட்டார் என்று எண்ணினான். அதனால் புதியதெம்புடன் வாளையும் கேடயத்தையும் எடுத்து வெட்டப்போனான். அவர் தாக்கவருவதை களரிக்கலை வித்தையை பயன்படுத்தி குதித்து குதித்து தடுத்தான்.
          நரசிம்மர் மிக பயங்கர சிம்ம கர்ஜனை செய்தார். அவர் ஒளியாலும் பலத்த சப்தத்தாலும் தாங்க முடியாதஹிரணியகசிபு கண்களை சற்றே மூடினான். அச்சமயம் நரசிம்மர் லபக்கென அவனை பிடித்து விட்டார். சர்பம் எலியை பிடிப்பது போல அவனை பிடித்தார்.
          பிரம்மாவின் வரப்பிரசாதத்தால் எந்தவித ஆயுதங்களாலும் அவன் இறக்க மாட்டான்என்பதால் பகவான் வைத்திருந்த ஆயுதங்களால் அவன் காயம் அடையவில்லை. பகவான் நகங்களுடன் சேர்த்து கைகளால் அவனை பிடித்து தர்பார் கொலு மண்டபத்தின் வாசற்படிக்கு கொண்டு வந்தார். ஏனெனில் வீடு அரண்மனை ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் இறக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். துடித்துக்கொண்டிருந்த ஹிரணியகசிபுவை தொடையில் கிடத்தி (பூமியிலும் ஆகாயத்திலும் சாகக்கூடாது என்ற வரத்தினால்)அவன் நெஞ்சை நகங்களால் பிளந்தார். அந்த கோரக்காட்சியை எவராலும் பார்க்க முடியவில்லை. திருமேனியில் ரத்தம் பட்டு குடலை மாலையாக அணிந்து யானையை கொன்ற சிங்கம் போன்று காட்சியளித்தார். அச்சமயம்  நரசிம்மர் பிடரி கேசத்தை சிலுப்பினார். அதனால் மேகங்கள் சிதறின. கண்களின் ஜ்வாலை ஒளியால் சூரிய சந்திர ஒளியும் மங்கிப்போயிற்று. அவர் விட்ட மூச்சுக்காற்றால் சமுத்திரம் கொந்தளித்தது. திசையில் இருக்கும் திக்கஜங்கள் பயத்தால் பிளிறின. அவர் பிடரி கேசத்தால் அடிபட்டு தேவர் விமானங்கள் உடைந்தன. பேரலைகளால் ஆடுவது போல சொர்க்கம் நிலைகுலைந்தது. அவர் பாதம் பட்டு பூமி நடுக்கம் ஏற்பட்டது. மலைகள் உடைந்து சரிந்தன. அவரது பேரொளியால் ஆகாயமும் திசைகளும் கண்களுக்கு தெரியாமல் மறைந்தன. அச்சமயம் நரசிம்மரை எதிர்பவர் எவரும் இல்லாமல் அனைவரும் ஓடி ஒளிந்தனர். ஹிரணியகசிபுவை கீழே தூக்கி வீசி எறிந்தார். அவர் கோபம் சாந்தமாகாமல் மேலும் பெருகியது. நரசிம்மர் மிகக்கோபமாக ராஜ சிம்மாசனத்தில் போய் அமர்ந்தார். அவர் தேஜசும் கோபத்தில் முகம் மிக பயங்கரமாக இருந்ததாலும் தேவர்களும் பிரம்மாவும் அருகில் நெருங்க அஞ்சினார்கள். அவரை சாந்தப்படுத்த முடியாமல் திணறினார்கள்.
          சொர்க்கத்தில் தேவமாதர்கள் ஹிரணியகசிபு மாண்டுவிட்ட செய்தியை அறிந்து முகம் மலர்ந்தார்கள். தெய்வீக மலர்களை மழை போல தூவினார்கள். ஒரு தலைவலி தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தார்கள். அங்கு சற்று தொலைவில் தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கினர். கந்தர்வர்கள் கானமிசைத்தனர். அப்சரசுகள் நடனமாடினார்கள். அச்சமயம் பிரம்மா, இந்திரன், சிவபெருமான், தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், சித்தர்கள்,வித்யாதரர்கள்,நாகதேவர்கள்,மனுக்கள்,பிரஜாபதிகள், கந்தர்வர்கள், அப்சரசுகள், சாரண,யக்ஷ,கிம்புருட,வேதாள கின்னரர்கள்,சுநந்த,குமுத முதலிய பகவானின் பார்ஷத சேவகர்கள் அனைவரும் நரசிம்மரை சாந்தப்படுத்த முடியாமல் தவித்தனர். தலை மீது கைகள் உயர்த்தி அஞ்சலி செய்து ஒவ்வொருவராக துதி செய்தனர்.
          மேற்சொன்ன தேவர் இனத்தை சேர்ந்தவரும் மனித இனத்தில் பிரம்ம ரிஷிகளும் மகாமுனிவர்களும் சப்தரிஷிகளும் துதி செய்தனர். இறுதியில் விஷ்ணு பகவானின் சொந்த பார்ஷத சேவகர்களாலும் துதி பாடி சாந்தப்படுத்த முயன்றனர். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
 (தொடரும்)
 
 
 
    
 
 
        
            
 

No comments:

Post a Comment