Wednesday, 11 September 2013

ஸ்ரீ பரசுராமர்

 
 
வீர தீர பிரதாபங்கள் நிறைந்த புரூருவஸ் என்ற மன்னன் மீது மையல் கொண்டு தேவலோக அப்சரஸ் ஊர்வசி தாமாக சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து அவனை மணந்து கொண்டாள். இவர்களுக்கு  ஆயு,சுருதாயு,சத்யாயு, ஏயா, விஜயா,ஜயா என்று ஆறு புதல்வர்கள் பிறந்தனர். விஜயனின் வம்சத்தில் ஜஹ்னு என்பவர் தோன்றினார். (இவரே கங்கையை காது வழியாக வெளியேற்றியவர்)  ஜஹ்னுவின் பேரன் காதி என்பவர் புகழ் பெற்ற மன்னனாக விளங்கினான். காதி மன்னன் சத்யவதி என்ற ஒரு அழகான மகளை பெற்றிருந்தான். ஒரு சமயம் ரிசீகரிஷி அவரிடம் சென்று பெண் கேட்டார். அரசன் பெண் கொடுக்க விருப்பமில்லாமல் முனிவரிடம் கூறினான். “ முனிவரே நாங்கள் கௌசிக வம்சத்தை சேர்ந்தவர்கள். எங்கள் வம்சத்தில் மணப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆதலால் தாங்கள் எமக்கு வரதட்சிணையாக ஓர் ஆயிரம் குதிரைகள் கொடுக்க வேண்டும். குதிரைகளின் உடம்பு முழுவதும் வெண்மை நிறமாக இருக்கவேண்டும். ஆனால் ஒரு காது மட்டும் கருப்பாக இருக்க வேண்டும். ரிசீகரிஷி அவர் எண்ணத்தை அறிந்து வருணபகவானிடம் சென்றார். காதி கூறியது போல ஒரு காது மட்டும் கருப்பு நிறம் கொண்ட ஓராயிரம் குதிரைகளை தானமாக கேட்டு பெற்றுக்கொண்டு வந்தார். குதிரைகளை பெற்றுக்கொண்ட மன்னன் காதி சத்தியவதியை ரிசீகரிஷிக்கு மணம் முடித்து கொடுத்தார்.
          ஒரு சமயம் ரிசீக முனிவரின் மனைவி சத்தியவதியும், சத்தியவதியின் தாயும்(ரிசீக முனிவரின் மாமியார்) தமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று ரிசீக முனிவரிடம் கேட்டுக்கொண்டார்கள். மகரிஷி ரிசீகர் இருவருக்கும் தனித்தனியாக மந்திரித்து பாயாசம் தயாரித்து விட்டு பூஜை பொருட்கள் சேகரிக்க காட்டிற்குள் சென்று விட்டார். அவர் சென்ற பின் மன்னன் காதியின் மனைவி ரிசீகரிஷி தன் மனைவிக்காக உயர்ந்த சக்தி வாய்ந்த பாயாசத்தை தயாரித்திருப்பார் என்று நினைத்து சத்தியவதியிடம்  அவள் பருக வேண்டிய பாயாசத்தை கேட்டு வாங்கி அதை சாப்பிட்டு விட்டாள். சத்தியவதி தன் தாய் பருகவேண்டிய பாயாசத்தை சாப்பிட்டு விட்டாள். காட்டிற்க்கு சென்ற ரிசீகரிஷி திரும்பி வந்தார். தாயும், மகளும் செய்த காரியத்தை அறிந்து வருந்தினார். தன் மனைவி சத்தியவதியிடம் கூறினார். “நீயும் உன் தாயும் தவறு செய்து விட்டீர்கள் சத்தியவாதி! உனக்கு பிறக்கப்போகும் மகன் தீயவர்களை தண்டிப்பவனாகவும் பழி வாங்கும் குணமுடன் மிக மிகக் கோபக்காரனாகவும் இருப்பான்.ஆனால் உன் தம்பி பிராமணனுக்கு உரிய சாந்த குணம் படைத்து பரம்பொருள் பிரம்மத்தை அறிந்த ஞானியாக இருப்பான்.” ரிசீகரிஷி இவ்வாறு கூறியவுடன் மிகவும் வருத்தமடைந்த சத்தியவதி, என் மகன் அப்படி கோபக்காரனாக இருக்க கூடாது. சுவாமி! நான் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து  விடுங்கள் என்றாள். அவள் அவ்வாறு கேட்டுக்கொண்டதும் ரிசீகரிஷி அப்படியானால் உன் மகனுடய மகன்(ஒரு பரம்பரை கடந்து) ஆத்திரக்காரனாக இருப்பான். இதற்கு மேல் என்னால் ஏதும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். காலம் சென்ற பின் சத்தியவாதி நற்குணம் நிறைந்த பிராமணரும் ரிஷியுமாக ஒரு மகனை பெற்றெடுத்தாள். அவனுக்கு ஜமதக்னி என்று பெயரிட்டார்கள். மன்னர் காதியின் மனைவி விசுவாமித்திரர் என்ற ராஜகுமாரனை பெற்றெடுத்தாள். சத்தியவாதி காலப்போக்கில் தெய்வீக தன்மையுடன் விளங்கியதால் மக்களை தூய்மை படுத்தும் கௌசிகீ என்ற புண்ணிய நதியாக மாறினாள்.
         சத்தியவதியின் மகன் ஜமதக்னிரிஷி ரேணு ரிஷியின் மகளான ரேணுகாதேவியை மணந்தார். அவருக்கு வசுமான் முதலிய புத்திரர்களுடன் பரசுராமர்(பாயாசத்தின் சக்தியின்படி பிறந்தவர்) அனைவருக்கும் இளையவராக பிறந்தார்.
          ஹைஹைய வம்சத்தில் மாமன்னர் கார்த்தவீரியார்ஜுனர் தோன்றினான். அவன் மிகச்சிறந்த க்ஷத்திரிய வீரன். பகவான் விஷ்ணுவின் அவதாரமான யோகிராஜன் தத்தாத்ரேயரை நினைத்து தவம் செய்து சத்ருக்களை வெற்றி கொள்ளும் வீர தீர பராக்கிரம சக்தியும் பெற்றிருந்தான். ஒருவனே பல மாவீரர்களோடு போர் செய்வதற்காக தமக்கு ஆயிரம் கரங்கள் வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான். அபாரமான தேக பலத்தையும் புலங்களின் அபூர்வ சக்தியையும் பெற்றிருந்தான். மேலும் அளப்பரிய செல்வங்கள், தேஜஸ்,கீர்த்தி,ஆகியவற்றை தத்தாத்ரேயரிடம் வரமாக பெற்று பல யோக சக்திகளையும் கிடைக்கப்பெற்றிருந்தான். சூட்சுமத்திலும் சூட்சும(அணு ரூபமாக) மாறுவான். மலைபோல கனமான உருவமும் எடுப்பான். அஷ்டமா சித்திகளை பெற்றவன் உலகில் வாயு போல எங்கும் தங்கு தடையின்றி சஞ்சாரம் செய்வான்.(தொடரும்)
  
                  
 
 
 
    
 
 
        
            
 

No comments:

Post a Comment