Thursday 26 September 2013

மன்னன் யயாதி



  


முன்னொரு காலத்தில் பாற்கடலில் அமுதம் கடையப்பட்டு அசுரர்களை ஏமாற்றி தேவர்கள் அமுதத்தை பருகிவிட்டார்கள். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. போரில் பல பலசாலி அரக்கர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி  போரில் இறந்து போனான். பார்கவரிஷ சுக்கிராசாரியார்(அரக்ககுரு) இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார்.அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ள, சுக்கிரர் மிருத சஞ்சீவினி வித்தையை பயன்படுத்தி அசுரத்தலைவன் பலியை பிழைக்கச்செய்து விட்டார்.

          இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி வித்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக இருந்து குரு சேவை செய்து அந்த வித்தையை கற்றுக்கொண்டு வரட்டும் என்றார். தேவர்களின் திட்டப்படி கசன் சுக்கிராசாரியாரிடம் வந்து கூறினான்.

“பகவானே நான் பிரகஸ்பதியின் புதல்வன். பலவித சாஸ்திரங்களை கற்றவர்,ஆயினும் கற்க வேண்டிய கல்விக்கோ எல்லையே இல்லை. முற்றிலும் கற்றவர் எவரும் இல்லை. நான் தங்களிடம் விசேச வித்தையை கற்க வந்திருக்கிறேன். கற்பதில் ஆர்வம் கொண்ட மாணவனை நல்லாசிரியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். தங்கள் மாணாக்கனாக சேர்ந்து நான் குருசேவை செய்ய விரும்புகிறேன். தாங்கள் மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சுக்கிரரை சரண் அடைந்தான். சுக்கிராசாரியார் அப்படியே ஆகட்டும் என்று அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். கசன் குருவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். காட்டிற்க்கு சென்று மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவான்.         

       

          கசன் சிஷ்யனாக சேர்ந்த செய்தியை அசுரர்கள் அறிந்து கொண்டனர். அசுரகுலத்திற்கு ஆபத்து வரும் என்று நினைத்தனர். ஒருநாள் அவர்கள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த கசனை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டனர். சுக்கிரரின் மகள் தேவயானி கசன் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தாள். அவன் தந்தையிடம் கூறினாள். காட்டிற்கு சென்ற தங்கள் சிஷ்யன் கசன் திரும்பவில்லையே அவன் ஆபத்தில் சிக்கிக்கொண்டான் போலும்” என்றாள். சுக்கிரர் ஞானதிருஷ்டியில் அனைத்தையும் அறிந்து மிருத சஞ்சீவினி வித்தையை உபயோகித்து கசனை பிழைக்க வைத்து விட்டார்.

          சமித்துகளை சேகரிக்க,மாடுகளை மேய்க்க,விறகு வெட்ட,பழங்கள் பறிக்க,அல்லது பூஜைக்கு மலர்கள் கொண்டு வர காட்டிற்க்கு சென்ற போது ஒவ்வொரு முறையும் கசனை அரக்கர்கள் கொன்றனர். கசன் மீது வைத்த காதலால் தேவயானி கசன் திரும்பவில்லை என்று அழுவாள். சுக்கிராசரியார் மகள் மீது இருந்த பாசத்தினால் ஒவ்வொரு முறையும் மிருத சஞ்சீவினி வித்தையை கொண்டு கசனை பிழைக்கவைத்துக்கொண்டு இருந்தார். இறுதியில் ஒருநாள் கசன் காட்டிற்கு சென்றிருந்தபோது அவனை வெட்டி அசுரர்கள் தீயிட்டு எரித்தார்கள். அந்த சாம்பலை எடுத்து வந்து சுக்கிரருக்கு தெரியாமல் மதுவில் கலந்து கொடுத்து விட்டனர். சுக்கிரரும் அதை குடித்து விட்டார். தேவயானி வழக்கம் போல் கசனை நினைத்து அழுதாள். அவர் சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க மதுவுடன் கலந்த சாம்பலுடன் வயிற்றில் சென்ற கசன் பேசினான். “குரு நான் இங்கு உமது வயிற்றில் உயிர் பெற்று இருக்கிறேன். நான் வெளியில் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தால் தாங்கள் இறந்து விடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

          சுக்கிராசாரியார் வேறு வழியின்றி வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். கசன் சுக்கிரர் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தான். கசன் இறந்து போன சுக்கிரரை குறித்தும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தான். சுக்கிரர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியால் மனம் திருந்திய சுக்கிரர் வானகத்து தேவர்கள் கேட்டுக்கொண்டிருக்க பஞ்ச பூதங்கள் சாட்சியாக தர்ம சாஸ்திர சட்டப்பூர்வமாக வாக்கு கொடுத்தார். “இன்றிலிருந்து பிராமணர்கள் மது அருந்த கூடாது. மாமிசம் புசிக்க கூடாது. அவ்வாறு மீறி நடந்தால் அவர்கள் பிராமண தன்மையை இழந்து பெரும் பாவத்திற்குள்ளாவார்கள்” என்றார். இதனை தேவர்களும் ரிஷிகளும் ததாஸ்து(அப்படியே ஆகட்டும்) என்று ஆமோதித்தனர்.

          தேவயானி கசனை நோக்கி கூறினாள். “பிருகஸ்பதி மகனாரே இது நாள் வரை உங்களை நான் காதலித்து வந்தேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும். நான் பலமுறை உங்களை உயிர் பிழைக்க வைத்தேன்.” தேவயானி திடீரென இவ்வாறு கூறியதும் கசன் கூறினான். “ குருவின் மகளே இது வரை உன்னை மணக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. நான் உன்னை காதலிக்கவும் இல்லை. மேலும் நான் இப்போது உன் தந்தையின் வயிற்றிலிருந்து மறுபிறவி எடுத்து விட்டேன். சுக்கிரர் எனக்கு தந்தை முறை ஆகி விட்டார். ஆதலால் நான் உன்னை மணக்க முடியாது.”

          கசன் இவ்வாறு கூறியதும் தேவயானி கோபமாக கூறினாள். தேவகுரு மகனே எந்த லட்சியத்திற்காக இங்கு வந்தீர்களோ (கற்ற மிருதசஞ்சீவினி வித்தை)உமக்கு மறந்து போக்கக்கடவது” என்று சபித்தாள். இதை கேட்டு கசன் பதிலுக்கு சாபமிட்டான். “ தேவயானி நீ பிராமணப்பெண்ணாக இருந்தாலும் உன்னை எந்த பிராமணனும் மணந்துகொள்ள மாட்டான். என்று சபித்து விட்டு தேவலோகம் போய் சேர்ந்தான்.  (தொடரும்)    

                  




    



        

            


No comments:

Post a Comment