அசுர குலத்தவருக்கு அரசனாக
விருஷபர்வா என்பவன் அறம், நீதி,நெறி தவறாமல் ஆட்சி புரிந்து
வந்தான். அவனுக்கு ஒரு மகள் சர்மிஷ்டா என்பவள் அழகும் குணங்களும்
நிறைந்திருந்தாள். சுக்கிராசாரியார் மன்னன் விருஷபர்வாவிடம் ராஜகுருவாக இருந்தார்.
அதனால் தேவயானி சர்மிஸ்டாவின் தோழியாக இருந்தார்.
ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் சர்மிஷ்டா, தேவயானியுடன் ஆயிரம் தோழிகள் சூழ
மலர்கள்,செடிகொடிகள் பக்கம் உலவிக்கொண்டிருந்தாள். அங்கே
அரண்மனை பக்கம் தாமரைகள் பூத்த ஒரு குளத்தில் நீராட மனம் கொண்டாள். தேவயானியுடன்
நீருக்குள் இறங்கி ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்து நீராட முனைந்தனர்.
அரண்மனையிலிருந்து தோழிகள் பட்டாடைகளை கொண்டுவந்து கரையில் வைத்தனர். அச்சமயம்
அன்னியர் யாரோ வருவது போல சப்தம் கேட்க தேவயானியும் சர்மிஷ்டாவும் அவசர அவசரமாக
கரைக்கு வந்து பட்டுச்சேலைகளை உடுத்திக்கொண்டனர். அவசரத்தில் தவறுதலாக சர்மிஷ்டா
தேவயானியின் ஆடைகளை உடுத்திக்கொண்டாள். இதைக்கண்டு தேவயானி கொந்தளித்து பேசினாள்.
“எங்கள் வீட்டு வேலைக்காரிக்கு எவ்வளவு
திமிர்? என் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாளே. இந்த அடாத செயலை
என்னவென்று சொல்வேன். இச்செயல் யாகத்தில் இடவேண்டிய ஹவிஸ் பாயாச பாத்திரத்தை நாய் தூக்கிக்கொண்டு போவது போலிருக்கிறது.
பிராமணர்களின் தவ வலிமையால் இவ்வுலகம் க்ஷேமமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள்
பரமாத்மாவின் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள். மக்கள் நெறி தவறாமல்
வாழ்வதற்காக வேதங்களை பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
நாங்களோ பிராமணர்களில் சிறந்தவர்களான பார்கவ
வம்ஸத்து பிராமணர்கள். இவள் தந்தையோ ஓர் அரக்கன்.
எப்படியோ என் தந்தையின் சிஷ்யனாகிவிட்டான்.” தேவயானி இவ்வாறு
அவமானப்படுத்தி பேசியதை கேட்டு சர்மிஷ்டா மனம் கொதித்து கம்பால் அடிபட்ட நாக
சர்பம் போல சீறி மூச்சிறைக்க பேசினாள். “தேவயானி என்ன உளறுகிறாய்! உன் நிலைமை
அறிந்து தான் பேசுகிறாயா? காக்கையும் நாயும் அன்னத்திற்காக வெளி வாசலில்
காத்திருப்பது போல நாங்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள வாசலில் நிற்கும் பிச்சைக்காரி
தானே நீ! என் தந்தை உன் தந்தைக்கு சம்பளம் கொடுக்காவிட்டால் உன் தந்தைக்கு
புகலிடம் எது?” என்று கொடுஞ்சொற்களால் ஏசி விட்டு தேவயானியின்
வஸ்திரங்களை பறித்துக்கொண்டு அவளை
பிடித்து இழுத்து அங்கு பக்கத்தில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு தன்
ஆயிரம் தோழிகளுடன் அரண்மனை போய் சேர்ந்தாள்.
ஒரு சமயம் இந்திரன் விருதாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் பிரம்ம ஹத்தியா பாவ
தோஷத்திற்கு ஆளானான். அதனால் இந்திர பதவியை இழந்து தாமரை தண்டிற்குள் நுழைந்து
வாசம் செய்தான். தேவலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தகுந்த தேவராஜாவை தேவர்கள்
பூலோகமெங்கும் தேடினார்கள். அச்சமயம் அறம் வழுவாமல் நஹூஷன் என்பவன் பூமியில்
நல்லாட்சி செய்து வந்தான். தேவலோகத்திற்கு அரசனாக தேவர்கள் கேட்டுக்கொண்டபடியால்
நஹூஷன் இந்திரனானான். சிறிது காலம் சென்ற பின் நஹூஷனுக்கு கர்வம்
தலைக்கேறியது.அவன் இந்திரன் மனைவி மீது ஆசைப்பட ஆரம்பித்தான். தமக்கு இந்திராணியாக
வரவேண்டும் என்று இந்திராணியை ஓயாது கேட்டுக்கொண்டு இருந்தான். அதற்கு இந்திராணி
நஹூஷனிடம் கூறினாள். “ தாங்கள் ஸப்தரிஷிகள் தூக்கிக்கொண்டு வரும் பல்லக்கில் என்
இல்லம் வருவீர்களானால் நான் உமக்கு இந்திராணி ஆவேன். இதை கேட்டு சப்தரிஷிகளை
அழைத்து அவர்களை பல்லக்கு தூக்கவைத்து அதில் ஏறி அமர்ந்து பயணப்பட்டான். நடு
வழியில் அகஸ்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கு சரி சமமாக இல்லாமல் ஆடியது.
அதனால் பல்லக்கு ஏன் சரிசமமாக தூக்கப்படவில்லை என்று நஹூஷன் அகஸ்திய முனிவரை
காலால் எட்டி உதைத்தான். அதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் நஹூஷனை நீ மலைபாம்பாக போய்
விடுவாய் என்று சபித்தார். அந்த புகழ் மிக்க இந்திர பதவியை அடைந்த நஹூஷன் மகன்
யயாதி பூலோகத்தில் பட்டத்திற்க்கு வந்தான். தந்தையின் நிலைமையை அறிந்து மிக கவனமாக
அறம் வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான்.
ஒருநாள் யயாதி மன்னன் வேட்டையாட காட்டிற்கு
சென்றான். தாகம் அதிகமாக தண்ணீரை தேடி வந்தவன் கிணற்றுக்குள் பார்த்தான். அங்கு ஒரு
அழகான பெண் குறைந்த வஸ்திரம் அணிந்து பரிதாபமாக இருப்பதை கண்டான். யயாதி முதலில் அவளுக்கு
தன் அங்கவஸ்த்திரத்தை கொடுத்தான். பின் அவளை கிணற்றில் இருந்து கை தூக்கி விட்டான்.
தேவயானி கூறினாள்.-“வீரரே உங்களை பார்த்தால்
அரசனை போல தெரிகிறது. நீங்கள் என் கரத்தை பற்றி தூக்கி விட்டீர்கள். இனி நான் வேறு
எவர் கரத்தையும் பிடிக்க மாட்டேன். என்றாள். மன்னன் தான் யயாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.
(தொடரும்)
No comments:
Post a Comment