Saturday 10 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 28

அறியாது தன்னிச்சையால் பகவான் நாமம் உச்சரிக்கப்படும் போதே இவ்வளவு பலன்கள் கிடைகின்றதேன்றால் பிரியமுடன் அன்பு மேலிட உள்ளம் உருகி உச்சரிக்கும் போது அதன் பலனை கேட்கவா வேண்டும்.பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் ஒழியும். பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட்டு இறுதியில் இறைவனிடம் சேர்ந்து விடலாம்.
"முகயதஸ்து மஹத்க்ருபையைவ பகவத்க்ருபாலேசாத்வா " 
அவன் தாள் பணிய அவன் அருள் வேண்டும்.என்று கூறியிருக்கிறார்.மாணிக்கவாசகர்.
          பிரேமை பக்தி கை கூட வேண்டுமானால் சிறிதளவாவது பகவான் அருள் வேண்டும்.மகான்களின் அனுக்கிரகம்மிகவும் அவசியம்.
         மகான்களின் கருணையால் அடியார்களும் இறைவன் அருளை எளிதில் பெற்று விடுகிறார்கள்.திருநாவுக்கரசர் என்ற மகான் அன்பான கருணையால் அப்பூதி அடிகளாரினை கடைதேற்றினார்.இதற்க்கு உதாரணமாக இந்த கதையை கூறலாம்.
 சோழ நாட்டில் திங்களூரில் அந்தன குலத்தில் அப்பூதியடிகள் என்ற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆனந்த தாண்டவம் புரியும் சிவபெருமானுக்கு அன்பர்.திருநாவுக்கரசு சுவாமிகளை கண்டறியும் முன்பே அவருடைய திருத்தொண்டின் பெருமைகளையும் அதற்க்கு இறைவன் அருளிய திருவருட்பன்பையும் பற்றி கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் மீது மானசீகமாக பேரன்பு கொண்டார்.
          தமது வீட்டிலுள்ள அளவுக்கருவிகளுக்கும் மக்கள்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற பொருள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரை வைத்து அன்புடன் அழைத்து வந்தார்.தாம் அமைத்த திருமடம்,தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
         அவ்வாறு அப்பூதியடிகள் தர்மங்கள் புரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார்.திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார்.திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.கருணை வடிவானவரே தாங்கள் என் வீட்டிக்கு வந்தருளினீர்கள்.இது நான் செய்த தவம் என்றார்.திருநாவுக்கரசர் அதற்க்கு "திருபுவனத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வரும்போது வழியில் நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை கண்டோம்.அவ்வாறே நீர் செய்து வரும் மற்ற அறங்களை பற்றியும் கேள்விப்பட்டோம்.அதனால் உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.என்று கூறினார்.அப்பூதியடிகளே நீங்கள் தண்ணீர் பந்தலுக்கு தம்முடைய பெயரை எழுதாமல் வேறொரு பெயரை எழுத வேண்டிய காரணம் என்ன ? அதை கூறுங்கள் என்று கேட்டார்.
          இதை கேட்டதும் அப்பூதியடிகள் சற்று கோபமாக கூறினார்."சிவனடியாரே நீங்கள் இப்படி சொல்லகூடாது.சமணர்களுடன் சேர்ந்து கொண்டு பல்லவ மன்னர் இழைத்த கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டின் வலிமையினாலே வென்றார்.அத்தகையவரின் திருபெயரயா வேறொரு பெயர் என்று சொல்கிறீர்கள்? சிவபெருமானின் திருவடியின் கீழ் அன்புடன் செய்யும் திருத்தொண்டின் மூலமாக இப்பிறவியிலும் நாம் கடைத்தேறலாம் என்று நினைத்து திருநாவுக்கரசர் என்று பெயர் எழுதினேன்" என்றார்.
           அவருடைய அன்பின் பெருமையை திருநாவுக்கரசர் உணர்ந்து "புறச்சமயமான சமணத்துறையில் நான் முன்பு பிரவேசித்து விட்டேன்.அதை தடுப்பதற்காக சிவபெருமானால் பெருஞ்சுலை நோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு பாக்கியம் பெற்றிருந்தாலும் சிறு தொண்டன் நான் என்றார்.
         அவருடைய வார்த்தைகளை கேட்டு அவர் தாம் திருநாவுக்கரசர் என்பதை அப்பூதியடிகள் அறிந்து கொண்டார்.தம் இரு கைகளையும்   தலைமேல் குவித்து ஆனந்த கண்ணீர் அருவியாக பெருகி வழிய வாய் குழற உடம்பெல்லாம் புல்லரிக்க தரையில் அப்படியே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடிகளை தம் தலை மீது வைத்தார்.
          அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து அந்நீரை அவர்கள் எல்லோர்க்கும் தங்கள் தலை மீது தெளித்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். தம் மனைவியாரை பார்த்து ஆண்டவன் அருளால் பெறுவதற்கரிய பேரு பெற்றோம்.என்று கூறி மிகவும் மகிழ்ந்து சமைக்க புகுந்தார்.அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதர்க்காக தம் பிள்ளைகளில் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.
         பெற்றோர் சொல்படி திருநாவுக்கரசு என்ற பெயர் கொண்ட மூத்த மகன் கொல்லைப்புற தோட்டத்திற்கு விரைந்து ஒரு பெரிய வாழை குருத்தை அரிந்தான். அப்போது ஒரு பாம்பு அவன் கையை தீண்டி சுற்றிக்கொண்டு கண்ணில் கனல் எரிய படமெடுத்தபடி இருந்தது.(தொடரும்)

No comments:

Post a Comment