Thursday 15 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 33

துஸ்ஸங்க: ஸர்வதைவ த்யாஜ்ய :"


பாண்டிய மன்னன் தீயவர்களான சமணர்களோடு இணைந்து நட்பு கொண்டதால் இறைவன் அருளை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானான்.அந்த நாட்களில் பாண்டிய நாட்டில் சமண மதம் பெருகி சைவ மதம் குன்றி இருந்தது.பரம்பரை பரம்பரையாக சைவ நெறியில் நின்ற பாண்டியமன்னன் முந்தய பிறவியில் செய்த தீவினையின் பயனாக சைவ சமயத்தை நீக்கி சமண சமய நெறியின் சார்பையே நல்லறம் எனகருதியிருந்தான்.
          இந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்து மஹா ராணியார் மங்கையர்க்கரசி மந்திரியாரையும் வீரர்களையும் அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வர செய்தார்.இதற்கிடையில் சமணர்கள் தவ வேடத்தில் தங்களை மறைத்துக்கொண்டு திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள்.அங்கு தீ மூட்ட மந்திரம் ஜெபித்தார்கள். மந்திரத்தால் மடத்திற்கு தீ மூட்ட முனைந்தார்கள்.ஆனால் அவர்கள் மந்திரம் ஜெபித்தும் தீபற்றவில்லை.இதனால் மனம் தளர்ந்து ஒன்று கூடி அச்சம் பெருகிடக்க ஆலோசித்தார்கள்.பிறகு அரசன் இதை அறிந்ததால் நமது மேன்மையை மதிக்கமாட்டான் நமது பிழைப்பையும் கெடுப்பான் என்று எண்ணி அவர்கள் தம் கையால் தீக்கோல் எடுத்து சென்று சிவனடியார்களின் மடத்திற்கு தீயிட்டார்கள்.
         மடத்தின் வெளிப்புறத்தில் பற்றிய தீயை கண்ட சிவனடியார்கள் மனம் கலங்கி அதை தணித்தார்கள். சமணர்கள் செய்த பாவ காரியங்களால் அந்த வினைப்பயன் வீண் போகவில்லை.அவர்கள் மூட்டிய தீ பாண்டியமன்னனிடம் வெப்ப நோயாக வந்து சேர்ந்தது பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது.எரியும் நெருப்பை போன்ற சூடு கணகண வென்று அவன் உடம்பெல்லாம் பரவியது.மன்னன் சமணர்களை பார்த்து "நீங்களும் சிவனடியாரான ஞானசம்பந்த பிள்ளையாரும் என் நோயை தீர்த்து உங்கள் தெய்வத்தன்மையை நிலை நிறுத்தி கொள்ளுங்கள் "என்றான்.
        பாண்டியன் தன்னை சூழ்ந்து ஓலமிடும் சமணர்களையும் அருளுடைய ஞானசம்பந்தரையும் நோக்கி "எனக்குள்ள அந்த வெப்பு நோயை நீங்கள் தனித்தனியாக வெவ்வேறு  விதமாக விரைவில் தீர்த்து வையுங்கள்.அதை தீர்த்து வைபவர்களே வாதில் வெற்றிபெற்றவர்கலாவர் "என்று மன்னன் சொன்னான்.உடனே சமணர்கள் அரசே நாங்கள் மந்தரித்து எங்கள் தெய்வ வல்லமையால் உமது உடம்பின் இடது பாகத்திலுள்ள நோயை தீர்ப்போம். என்று சொல்லி அரசனது இடது பாகத்து நோயை தீர்பதற்காக அவர்கள் மன்னவனருகே தங்கள் நாமத்தை முழங்கி மயிர்ப்பீலிக்கற்றயினால்  அரசனது இடப்பாகத்தை தடவினார்கள்.அதனால் வெப்பம் முன்னிலும் அதிகமாக கொதிதெழுந்து பாண்டிய மன்னனை வருத்தி எடுத்தது.மன்னன் அதை பொறுக்கமுடியாதவனாகி ஞானசம்பந்தரை பார்த்தான்.சம்பந்தர் ஆலவாய் சொக்கநாதரை நினைத்து "ஆலவாய் அண்ணலே அரசனின் வலப்பக்கத்து வெப்பு நோயை நீரே மந்திரமாகி, மருந்துமாகி தீர்ப்பீர் என்று வேண்டிக்கொண்டு பெருமானை நினைத்து மந்திரமாவது  நீறு என்னும் திருநீற்று பதிகத்தை பாடி அந்த திருநீற்றை கொண்டே அரசனது வலப்பக்கத்தில் தடவியருளினார்.தடவியதும் வலப்பக்கமிருந்த வெப்புநோய் முழுவதும் நீங்கி பொய்கை போல குளர்ந்தது. ஆனால் அவ்வலப்பக்க நோய் 
இடப்பக்கம் புகுந்து முன்பிருந்த நோயோடு சேர்ந்து இருமடங்காக பெருகலாயிற்று.சமணர்களின் பீலிகள் அந்த நோயின் வெப்பத்தால் எரிந்து கருகின.உடம்பின் இடப்பக்கத்து வெப்பம் தங்களையும் தாக்க ஆரம்பிக்கவே சமணர்கள் நடுங்கி அதை தாங்க முடியாமல் தள்ளி பொய் ஒதுங்கி நின்றார்கள். திருஞானசம்பந்தர் வலப்புறத்து வெப்பு நோயை போக்கியது கண்டு அங்கிருந்த பெரியவர்கள் அதிசயித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.உலகில் வெப்பமும் தட்பமும் பொருந்தி இருப்பது போல அரசன் உடம்பிலும் ஒரு பக்கம் வெப்பமும் மறுபக்கமும் குளிர்ச்சியும் பொருந்தி இருந்தது.
          மன்னன் கூறினார்.என்னுடல் ஒன்றிலேயே இந்த இருவேறு தன்மைகளின் இயல்பையும் அனுபவித்தேன்.என்னே அதிசயம்.வெப்பமான சமணர்களே நீங்கள் தோற்று விட்டீர்கள்.என்னை விட்டு தூர போய் விடுங்கள்.என்று கூறி ஞானப்பிள்ளையார் சம்பந்தரை நோக்கி என்னை வாழ்விக்க வந்த மறைக்குல வள்ளலாரே என் உடலின் இடப்பக்கத்திலுள்ள வெப்பு நோயும் தீர நீரே அருள் செய்யும் என்று வேண்டினார்.ஞானசம்பந்தர் தமது திரு முகத்தில் கருணை காட்டி திருக்கையில் வெண் திருநீறு காட்டி திருப்பதிகம் நிறைவாக்கிதுதித்து பாண்டியனுடலில் இடது பக்கம் ஒருமுறை தடவ அரசனது இடப்பக்கத்து வெப்பம் அகன்று நோய் முழுவதும் நீங்கியது.பாண்டி மா தேவியாரும் மந்திரி முதலிய பெரியோர்களும் சம்பந்தர் திருவடிகளை தங்கள் தலைகளால் வணங்கி நாங்கள் பெருமை பெற்றோம் மேன்மையுற்றார் எங்கள் மன்னர் என்று கூறி உள்ளம் மகிழ்ந்தனர்.
                                                                                      (தொடரும்) 

No comments:

Post a Comment