Tuesday, 6 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 24

ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஆனந்த ரூபமானது.அது அன்பு மயமானது.ஏனெனில் ஆத்மா,பரமாத்மா இறைவனின் அம்சம் தான்.இறைவன் பரமானந்த சொரூபமானவர்.பரம பிரேமை என்ற அன்புமயமானவர்.
         ஜீவனில் சித்தம் ஆசை,துக்கம்,கிலேசம் முதலிய வற்றை பற்றிக்கொள்ளும் போது அது கலங்கி போகிறது.அதில் தெளிவு ஏற்படாது.ஆதலால் துக்கத்தை தரும் ஆசைக்கு அடிமையாகி விடுகிறது.ஆதலால் சித்தத்தில் பரமாத்மனின் தெய்வீக சொரூபத்தின் ஒளி பிரதிபலிக்காமல் இருக்கிறது.அந்த ஆத்ம ஜோதி தெரிய வேண்டுமென்றால் விசயங்களை நோக்கி ஓடும் எண்ணங்களை இறைவன் பால் திருப்ப வேண்டும்.அதற்க்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன.மற்ற உலக விஷய ஆசைகளை துறக்க வேண்டும்.உலக விஷய சுகங்களில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி செலுத்த முடியாது.பற்றில்லாமல் உலகில் கடமைகளை செய்துகொண்டு பக்தி செய்ய  முடியும். ஏனெனில் இறைவன் ஒருவரே அன்புக்கும் ஆசைக்கும் உரியவர்.அவரிடம் மட்டும் பிரியம் வைக்க வேண்டும்.ஏனெனில் நான்,எனது என்று நினைக்கும் போது தான் அங்கு ஆசை உண்டாகிறது.பகவானின் பக்திக்கு முன் நான் என்பது எங்கே வரும்?நான் பகவானுக்கு சொந்தமாகிவிட்டேன் அல்லவா,எனது என்பதும் இல்லை,ஏனெனில் எனது என்பது உலகில் எதுவும் இல்லை.எனக்கு சொந்தமானது அனைத்தையும் அவர்க்கு அர்ப்பணித்து விட்டேன் அல்லவா.
          புலன் வழி சுகங்களில் மனதை செலுத்தினால் அவற்றில் மனம் சிக்கிக்கொள்ளும்.விசயதியாகம் என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது.பகவான் சம்பந்தமான விசயங்களை நாம சங்கீர்த்தன பஜனை வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரான விஷயங்கள்.
         மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணிப்பார்க்கும்போது மனதை பிரவிபெருங்கடலில் வீழ்த்திவிடும். ஆதலால் சான்றோர்களை சேவிக்கவேண்டும்.பக்தர்களோடும் நல்லவர்களோடும் நட்பு கொண்டு வாழவேண்டும்.முடிந்தவரை இது பகவானின் கட்டளை என்று நினைத்து பலனை கருதாமல் கடமைகளை செய்யலாம், அது தியாக வாழ்க்கைக்கு சமமாகும்.
            ஒரு சமயம் திருநாவுக்கரசர் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம் ராமேஸ்வரம்,திருநெல்வேலி, திருகாளாப்பெர் முதலிய திருப்பதிகளை கண்டு வணங்கி ஆங்காங்கே திருப்பதிகங்களை பாடித்தந்து பாண்டியநாட்டை விட்டு சோழநாட்டை அடைந்து திருப்புகலூர்க்கு வந்து சேர்ந்தார்.. அங்கேயே தங்கி இருந்து பல திருப்பதிகங்களை பாடியவண்ணம் வழிபாடு செய்தார்.
          அவருடைய பற்றற்ற நிலையினை உலகுக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினார்.அதனால் திருநாவுக்கரசர் உலவாரதிருப்பணி செய்யும் இடங்களில் எல்லாம் பரர்கற்களோடு   செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தார்.அப்பர் அவற்றை எல்லாம் பருக்கை கற்களோடு சேர்த்து கூட்டி உலவாரத்தில் ஏந்தி தடாகத்தில் வீசி எறிவார்.புல்லுக்கும்,கல்லுக்கும், பொன்னுக்கும் மணிக்கும் சொல்லை தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றுஅற்று நிலையில் இருந்தார்.அப்பரின் இந்த தூய துறவு நிலையை மென்மேலும் விளங்கசெய்ய பூம்புகலூர் புண்ணியனார் விரும்பினார்.
          அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானகத்தில் இருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல மன்னுலகத்திர்க்கு   வந்தார்கள்.
                                                                                                               (தொடரும்)
                                                                

No comments:

Post a Comment