Friday 2 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 20

பகவத் பக்தனான பிரகலாதன் கூறுகிறார்:
          தேவரிஷி முனிவர்களாலும் தன் புலமை மிக்க தெய்வீக துதிகள் மூலமாகவும் பகவானை மகிழ்விக்கமுடியவில்லை என்றால் அசுர குணம் படைத்த என்னால் எப்படி பகவானை துதிக்க முடியும்?
         உண்மையில் செல்வம்,உயர்குடியில் பிறப்பு, அழகு,தவம்,கல்வி,மிகுந்த ஆற்றல்,செல்வாக்கு,பலம்,பேரறிவு,பௌருஷம் என்ற ஆண்மை,யோகம் இவை எல்லாம் ஒரு மனிதனிடம் இருந்தாலும் பகவானை ஆராதனை செய்து மகிழ்விக்க முடியாது.பக்தியால் மட்டும் தான் பகவான் மனமிரங்கி வருவார்.அறிவில்லாத கஜேந்திரனுக்கும் கருணையுடன் அவர் அருள் புரிந்தவர் அல்லவா?உண்மையில் பகவான் பற்று பகை அற்றவர். அவருக்கு அனைவரும் சமமானவர்கள்.பாமரர்,படித்தவர் அனைவரையும் கடைதேற்றுபவர்.கல்வியிலும் வலிமையிலும் கர்வம் கொண்ட அசுர குணம் படைத்தவர்களை தண்டித்து தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.எளிய பக்தனுக்கோ சீக்கிரம் அருள் கிடைத்து விடும்.ஏனெனில் நீயே கதி என்று அவன் சரண் அடைந்து விடுகிறான்.அவனுக்காக மகா வல்லவனான இறைவன் தன் மகா மகிமையை விட்டு இறங்கி வந்து சிறுமை அடைந்து பக்தனுக்கு சமமான எளியவனாகி விடுகிறார்.
          இறைவன் முன் பக்தன் கதியில்லாமல் ஏழையாக இரக்கதிற்குரியவனாக நினைத்து அவர் முன் மண்டியிட்டு கதறுகிறான்.அவன் தன்னை பாவியாகவும் இழிவாகவும் நினைத்து பிரார்த்தனை செய்கிறான்.இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து ஊன் உருக உள்ளம் உருக பக்தி செய்கிறானென்றால் அவனே பரம பக்தன், உண்மையான பக்தனிடம் ஆணவம் இருக்காது.பகவானின் தரிசனம் கிடைக்க வேண்டும என்று ஏங்குபவனிடமே பகவான் நிச்சயம் வருவார்.
         " தஸ்யா க்ஞானமேவ ஸாதன மித்யேகே "  
          பக்தி எப்படி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? உலகில் ஒருவர் மீது காரணமின்றி அன்பு உண்டாகிறது என்று கூறினாலும் அவசியம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.பக்திக்கு ஞானமே காரணமாகிறது என்று சில ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்.இறைவனை பற்றி நன்கு அறிந்து கொள்வதே ஞானம்.அந்த ஞானமே இயக்கம் கருவி என்று கூறுகிறார்கள்.
          என்னுடைய நாதன் அனைத்திற்கும் ஆதாரமாக மகேஸ்வரனாக இருப்பவர்.அருள் நிறைந்தவர்.இந்த ஞானம் உண்டாகும்போது மரியாதையும் பிரேமை பக்தியும் உண்டாகிறது.பிரியம் வரும் போது பக்தி ஏற்படுகிறது என்பதோ உண்மை தான்.
         பக்தி மனதில் ஏற்படுவதற்கு ஞானம் அவசியம் இல்லை. என்று நாரதர் கூறுகிறார்.
         "அன்யோன்யாச்ரயத்வமித்யன்யே"  
வேறு பல ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்:
          ஞான தத்துவத்தை அறிந்த பின் இறைவன் மீது பக்தி உண்டாகிறது.அதனால் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.அன்பால் பக்தி பெருக்கெடுத்து வரும் போது ஞானமும் தத்துவமும் அங்கு முக்கியத்துவம் அடைவதில்லை.அவற்றை சிந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது.அன்பால் விளைந்த பக்தி செய்யும் பக்தனும் ஞானியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. (தொடரும்)

No comments:

Post a Comment