Sunday, 18 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 37

"ய: கர்மபலம் த்யஜதி கர்மாணி ஸன்யஸ்யதி ததோ நிர்த்வந்த்வோ பவதி "
யோக ஷேமங்கள் பற்றி கவலை படாமல் தாம் செய்து வந்த பூஜை வழிபாடு அல்லது நல்ல காரியங்களின் புண்ணிய பலன்கள் தம்மை சேர வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு அவற்றை ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய  வேண்டும். 
பகவான் சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்லாத காரியங்களையும் துறக்கவேண்டும்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு சுக துக்கங்களை சமமாக நினைக்க வேண்டும்.மனம் ,வாக்கு,சரீரத்தால் எந்த கர்மங்கள் செய்தாலும் அதை பகவானுக்காக செய்ய வேண்டும்.அதன் பலனை பகவானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.இன்பம்,துன்பம்,லாபம்,நஷ்டம்,தனது,பிறரது என்ற இரண்டு விசயங்களையும் ஒன்றாக பாவிக்கவேண்டும்.
           பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
வேதங்களும் முக்குணங்கள் கொண்டவை. அதாவது முக்குணங்களை வெளிப்படுத்தும் உலகியல் விசயங்களையே பேசுகின்றன.ஆதலால் அர்ச்சுனா நீ முக்குணங்கள் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.நிதமும் தூய சத்துவ சித்தமுடன் சுக துக்கங்களால் பாதிக்கபடாமல் யோக க்ஷேமங்களை சிந்திக்காமல் பரமாத்மா சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
"வேதானபி ஸன்ன்யஸ்யதி கேவலம விச்சின்னானு ராகம்லபதே " 
          வேதங்கள் உலகியல் விசயங்களையே பகர்கின்றன.அவற்றில் ஞானகாண்டம் தான் ஆத்மா,பரமாத்மா தத்துவங்களை விமர்சிக்கிறது.வேதங்கள் சொல்லும் சில முக்கியமான கடமைகளை மட்டும்
செய்யலாம்.சொர்கத்திற்கு வழிகாட்டும் யக்ஞயாகங்கள் செய்யதேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை துறக்க வேண்டும் என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.
          பக்தர்களோ பகவான் பிரேமையில் மூழ்கி மற்ற விசயங்களை மறந்து விடுவார்கள்.இதில் வேதங்களில் சொல்லப்பட்ட கர்மங்களை சரிவர செய்ய முடியாமல் போக எல்லா கர்மங்களும் தாமாக விடுபட்டு விடும்.அவன் வேதங்களை கடந்து உபநிசதங்கள் கூற்றுப்படி இறைவனில் இரண்டற கலந்து விடுகிறான்.என்றென்றும் மனதில் இறைவனை குடி வைத்து அவனை விட்டு இணை பிரியாமல் பேரின்பம் அடைகிறான்.
"ஸ தரதி ஸ தரதி ஸ லோகான்ஸ்தாரயதி "
இப்படிப்பட்ட பக்திமான் பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேர்கிறான்.தான் மட்டுமில்லாமல் தன்னிடம் வந்தவர்களையும் கரை சேர்த்து விடுகிறான்."மத் பக்தி யுக்தோ புவனம் புனாதி "என்று பாகவதம் கூறுகிறது.அதாவது தூய பக்திமான் இறைவனோடு உண்மை,பிரேமை கொண்டவன் ,தான் இருக்கும் சுற்று சூழலை தூய்மை ஆக்குகின்றான்.உலக மக்களையும் கரை சேர்ப்பதால் அகில உலகையும் தூய்மை படுத்துவான்.
          பிரேமை எப்படி லட்சங்களுடன் இருக்ககூடியது என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
   "அனிர்வசனீயம் பிரேமாஸ்வரூபம் "
பகவானிடம் இருக்கப்படும் பிரேமை காதல் எல்லாம் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள். "அன்பே சிவம்" என்ற கூற்று படி பகவான் அன்பு மயமானவர்.பிரேமைக்கும் பகவானுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.பகவானை நினைத்தால் இனிக்கும் அனுபவம் ஏற்படுகிறது. உள்ளம் உருகி பரவசமாகிறது.பரபிரம்மம் வாக்குக்கு அப்பாற்பட்டது என்று உபநிசதங்கள் கூறுகின்றன.
          உலகில் நெடுநாள் பிரிந்து போன, தமக்கு அன்புக்குரிய மகன், உற்றவர்,தாய் தந்தை,நண்பர் மீண்டும் சந்திக்கும் போது அளவில்லா ஆனந்தம் உண்டாகிறது.அவர்களுடன் பேசுவதிலும் தொடுவதிலும் அலாதியான அன்பு சுரந்து இன்பம் உண்டாகிறது.அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ராமாயணத்தில் இலங்கையில் இருக்கும் சீதைக்கு ஸ்ரீ ராமர் செய்தி அனுப்புகிறார்.
"பிரியே உனக்கும் எனக்கும் இருக்கும் அன்புக்காதலை என் மனம் மட்டும் தான் அறியும். என் மனம் எநநேரமும் உன் நினைவில் தான் உருகுகிறது.அந்த பிரீத்தி ரகசியத்தை நான் மட்டும் தான் அறிவேன்.
           மனம் எந்நேரமும் பகவானின் பிரேமை என்ற நீருக்குள் மூழ்கி விட்டால் பேச முடியாது. ஆனந்த அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
"மூகாஸ்வாதனாவத் " 
          இனிப்பின் ருசியை சுவைத்து சாப்பிட்டு பார்த்தால் தான் உணரமுடியும்.அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வாய் பேச தெரிந்த நாம் இனிக்கிறது என்று கூறுவோம்.இனிக்கிறது என்றால் என்ன ? இதற்க்கு பதில் கூற முடியாது.ஊமை ஒருவன் இனிப்பை சாப்பிட்டு அந்த ருசியை அவனால் கூற முடியாது.அந்த நிலை தான் பிரேமையை உணர்ந்த பக்தர்களுக்கு உண்டாகிறது.அவர்களும் அதை வர்ணிக்க இயலாமல் ஊமையாகி விடுவார்கள்.
பிரகலாதன் கூறுகிறார்:
          காந்தம் அருகில் இருக்கும் இரும்பை இழுப்பது போல சக்கரதாரி விஷ்ணு பகவான் என்மனதை கவர்ந்து இழுக்கிறார்.அதன் காரணத்தை யான் அறியேன்.
அவரை நினைத்த மாத்திரத்தில் என்னையே நான் மறந்து விடுகிறேன்.வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவச நிலை ஒன்று என்னை ஆட்கொள்கிறது.(தொடரும்)  

No comments:

Post a Comment