Friday 16 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 34

தீயவர்களின் சேர்க்கையில் இருந்து தப்பித்து இருக்க வேண்டும்.நல்லவர்களின் சேர்க்கையின் அவசியத்தை கூறிவிட்டு தீயவர்களை தவிர்க்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.நல்லவர்களின் சேர்கையால் பகவானின் கதை கேட்பதும் பஜனையும் நாமஜபமும் செய்தால் பகவான் மீது பிரேமை வளரும்.நல்லொழுக்கம் நிலைத்து இருக்கும்.சாஸ்திர ஞானமும் வைராக்கியமும் உண்டாகும்.அப்யாசம் பலப்படும்.பெரியோர்கள் மகான்கள் சேவை தொடரும்.நேர்மை இருக்கும்.
          மேற்சொன்ன விசயங்களுக்கு எதிராக தீயவர்களின் நட்பால் தீய விஷயங்கள் மனதில் குடி புகும்.புலன் விசயங்களுக்கு அடிமையாகி விடுவது,பிறரை துவேசிப்பது,தன சொந்த சுகத்தை நாடி போவது,.ஒழுக்கம் கேட்டு திரிவது,பெரியோருக்கு கீழ் படியாமல் இருப்பது,தன்னுடைய சந்தோசமே பெரிது என்று நினைப்பது, தீய விசயங்களை பற்றி கொள்வது,சுய கௌரவம் கருதுவது,கோபம் கர்வம்,பொறுமையின்மை அகத்தூய்மை புறத்தூய்மை இல்லாமல் இருப்பது, இரக்கமின்மை,அசாத்தியமாக இருப்பது,அமைதி இல்லாமல் அலைவது, இவற்றுடன் உயிர் வாழ்ந்தால் தன் ஆத்மாவை அதொகதிக்கு தள்ளிவிட்டவன் ஆவான் மனிதன்.அசுர சம்பத்து படைத்த அனைத்து குணங்களும் குடியேறி விடும்.
          பாகவத புராணத்தில் கபில முனிவர் தன் தாயிடம் கூறுகிறார்:
நல்லவர் நலபை துறந்து மீண்டும் ஏன் பாவகுழியில் விழவேண்டும்? பெண் பித்து பிடித்தவர்களோடு சேர்ந்தால் அவர்கள் மனதில் இருள் சூழும்.மேலும் சத்தியம்,தூய்மை, தயை,நல்லறிவு,திரு,மானம்,புகழ், சாந்தி எல்லாம் பறந்தோடி விடும்.இவர்கள் எதிர்காலம் சிதறுண்டு போகும்.ஆதலால் புலன் இன்பங்களை பெரிதாக நினைக்கும் கீழ் பிறவி அடைந்த மனிதர்களோடு தொடர்பு கொள்ள கூடாது.துளசிதாசர் ராமாயணத்தில் கூறுகிறார்.நரகம் மிக மோசமானது.தீயவர்களின் சேர்கை அதனினும் கீழானது.தீயவர்களின் சேர்கை இல்லாதபோதும் மனம் வேறு விசயங்களை பற்றி சிந்தித்து தடுமாறினால் உடனே பகவானை சரணடைய வேண்டும்.தன்னுடைய முயற்சியிலும் வெற்றி காண வேண்டும்.நாம் வாழும் வாழ்க்கை முறை தீமைகள் இருக்கின்றனவா என்று எப்போதும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
" காமக்க்ரோத மோஹஸ்ம்ருதிப்ப்ரம் ச புத்திநாச ஸர்வநாச காரணத்வாத்"
தீயவர்களின் சேர்கையால் காம குரோத மதி மயக்கங்களால் நினைவாற்றல் அழிந்து அறிவும் நாசமாகி இறுதியில் சர்வ நாசமும் ஆகிவிடும்.
          பகவான் சம்பந்தப்பட்ட தத்துவங்களையும் நாம ஜெபம் பஜனைகளும் விட்டு விட்டு புலன்களுக்கு இன்பம் தரும் உலகியல் விசயங்களில் கவனம் செலுத்துவதே தகாத விஷயம்.சர்வ நாசத்திற்க்கும் இதுவே மூலகாரணம்.
சித்தம் ஓயாது எதை சிந்திக்கிறதோ அதில் பற்று ஏற்படுகிறது.தீயவர்கள் அல்லது தீமை விளைவிக்கும் விசயங்களோடு தொடர்பு கொள்வதால் மனிதனின் சரீரம், வாக்கு,மனம் யாவும் அடங்காத ஆசைகளோடு அடிமையாகின்றன.ஆசைக்கு அடிமையாகிவிடும்போது பேராசை மேலும் பெருகுகிறது.ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தால் மதி மயக்கமும் நினைவாற்றலும் அழிகிறது.அறிவு நாசத்தால் இகலோக பரலோக நலன்கள் அழிகின்றன.பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.ராஜச குணத்தால் உண்டாகும் காமமும் (சகலவித ஆசைகளும் காமத்தில் அடங்குகின்றன)குரோதமும் தான் மனிதனை பாவக்குழியில் தள்ளுகின்றன.எல்லா நன்மைகளையும் இவை அழித்து விடுகின்றன.அர்ஜுன இவை இரண்டையும் நீ பரம வைரிகளாக நினைப்பாயாக.(தொடரும்) 

No comments:

Post a Comment