Monday, 19 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 38

"ப்ரகாசதே க்வாபி பாத்ரே "
சில பக்தர்களிடம் மட்டும் பிரேமை வெளிப்படையாக தெரியும்.பகவான் அருள் அவர்கள் தேகத்தில் இறங்கும்.ரோமாஞ்சனம் உண்டாகும்.பிரேமையின் உச்சகட்டத்தில் அவர்கள் ஆடுவார்கள்.பித்து பிடித்தவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
           உதாரணமாக கோபிகை பெண்கள் பிரேமையின் உச்ச கட்டத்தில் தன்னை கிருஷ்ணனாகவே பாவித்தார்கள்.ஒரு பெண் மற்றொரு பெண் மீது ஏறி உறியிலிருந்து வெண்ணை திருடுவது போல பாவனை செய்தாள். ஒரு பெண் காளியநாகமாக மாறி நடித்தாள். மற்றொரு பெண் அவள் மீது ஏறி "ஏ காளிய நாகமே உனக்கு பாடம் புகட்டவே நான் வந்திருக்கிறேன் " என்று கூறினால். இவ்வாறு அந்த பிரேமை வெளிப்படுகிறது.
" குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷண வர்தமான மவிச்சின்னம் சூக்ஷமதரமனுபவரூபம் " 
         உண்மையான அன்பு குணத்தை பார்த்து வருவதில்லை.அது தாமாகவே இயற்கையாக வரும்.குணத்தை பார்த்து வந்தால் அந்த நபரின் குணம் மாறுபடும்போது அன்பு இருக்காது.அன்பு என்றும் மாறாதது.குணங்களையும் குற்றங்களையும் கண்டால் அன்பு செலுத்த முடியாது.உண்மை பிரேமை என்ற அன்பு குணங்களின் வட்டத்தில் அடங்காதது.
         உண்மையான பிரேமை என்ற அன்பு ஆசையின் அடிப்படையிலோ லாபத்தை வைத்தோ வராது.
         பிரேமைக்கு பாத்திரமான நபர் நலமாக மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை தவிர தமக்கு ஒரு லாபம் வர வேண்டும் என்று அன்பு செலுத்துபவர்கள் கருத மாட்டார்கள்.அன்பில் சுய நலம் கலந்தால் அந்த அன்பு களங்கப்படுகிறது.அன்பு எந்த சூழலிலும் குறையாது.அது பிரதிக்ஷனமும் பெருகிக்கொண்டே போகும்.
         பக்தன் அந்த பெருகிக்கொண்டே போகும் பிரேமையை நிச்சயம் உணர்வான்.அந்த பிரேமை ஒருபோதும் எந்த சூழலிலும் அறுபடாது.
         பிரேமை என்பது இதயம் என்ற குகைக்குள் நம்மையும் அறியாமல் உதயமாகிறது.அதனால் அது மிகவும் நுண்ணியமானது.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.இதயத்தில் அது முளை விடும்போது படிப்படியாக வளர்கிறது.
அதன் பின் ஆனந்தமயமாக மாறுகிறது.அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறுகிறது.ஸ்ரீ ராமனின் பிரேமை பக்தி சக்தியால் ஹனுமான் மலையையும் தூக்கிவிட்டான்.பிரேமை அன்பை அனுபவித்து செயல்பட்டான்.
"தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ச்ருனோதி ததேவ பாஷயதி ததேவ சிந்த்யதி"  
பிரேமையின் தெய்வீக ஆனந்த ரசத்தில் மூழ்கி விட்டவனுக்கு எல்லா பொருள்களும் உயிர்களும் தன் இனிய தலைவன் பகவானின் ரூபங்களாகவே தெரியும்.எதை கேட்டாலும் பகவானின் குரலாகவே கேட்கும்.எதை பேசினாலும் தன் பிரபுவான பகவானை பற்றியே பேசுவான்.சிந்திப்பதெல்லாம் தன் அன்புக்குரிய நாயகன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.மற்ற நபருக்கோ பொருளுக்கோ இடமிருக்காது.பக்தன் பகவானை நினைத்து பித்தன் போல நடந்து கொள்கிறான்.என்பதையே ஆழ்வார் பாசுரம் விளக்குகிறது.
 வேய் மருதோள்-இணை மெலியும்-ஆலோ !
மெலிவும் என் தன்மையும் யாதும் நோக்காக் -
காமரு குயில்களும் கூவும் ஆலோ !
கண மயில் -அவை கலந்து ஆலும் ஆலோ !
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு 
ஒரு பகல் ஆயிரம் ஊழி,ஆலோ!
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ!
தவவலை தகவிலையே நீ,கண்ணா!
கோகுலத்து இடைப்பெண்ணாக பாவித்து பாடுகிறார் ஆழ்வார்.-
உன்னை பிரிந்து விரக தாபத்தால் மூங்கில் போன்ற என் கைகள் இரண்டும் மெலிந்து போகின்றனவே.என் விரகதாபத்தை கண்டு கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் இந்த அழகிய குயில்கள் சந்தோசமாக கூவுகின்றனவே கூவி என் விரகதாபத்தை அதிகப்படுத்துகின்ற்னவே இந்த மயில் கூட்டங்களும் அவ்வாறே கூடிக்கூடி நடனம் ஆடுகின்றனவே,நீ பசுக்களை மேய்க்க காடு சென்று விட்டாய்.ஒரு பகல் ஆயிரம் ஊழிகாலமாக நீள்கிறதே.நீ எப்போது திரும்பி வருவாய்.(தொடரும்)

No comments:

Post a Comment