Wednesday 21 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 40

ஆசைகளை அடிப்படையாக கொண்டு உலகில் பெயருடன் புகழுடன் வாழ வேண்டும்.இஸ்வர்யங்கள் பெற்று வசதியாக, சுகமாக வாழ வேண்டும்.என்று ஆராதனை செய்வது(அதாவது இதில் விக்ரஹ  ஆராதனையும் கோவில் வழிபாடும் இருக்கும்)இதுவே ராஜச பக்தி எனப்படுகிறது.
           கோவிலை கட்டி பிறர் புகழ வேண்டும் என்பதற்காக போலியான பக்தி பஜனை செய்வது,அல்லது கோவிலில் விளக்கு போட்டு உபயம் என்று எழுதி வைப்பது,அல்லது கோவிலுக்கு தேவையான பொருள் உதவி செய்யும் போதும் பண உதவி செய்யும் போதும் தன் பெயரை பொறிக்கசெய்து உபயம் என்று எழுதி வைப்பது ராஜச பக்தி எனப்படுகிறது.
         பிறருக்கு கஷ்டத்தை கொடுத்து இம்சித்து பக்தி பஜனை எல்லாம் செய்வது தாமச பக்தியாகும்.இந்த வரிசையில் உயிர் பலி கொடுத்து இம்சித்து பூஜைகளை நடத்துவதும் தாமச பக்தியை சேர்ந்தது.பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுப்பதும் பொருட்களை கோவிலுக்கு தானமாக தந்ததை பெருமையாக பேசிக்கொள்வதும் தாமச பக்தியை சேர்ந்தவை.
          தாமச பக்திக்கு எடுத்துக்காட்டாக மூர்க்க நாயனார் என்ற ஒரு சிவ பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் திருவேற்காட்டில் அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்து வந்தார்.அவர் சிவனடியாருக்கு உணவளித்து அதை பார்த்து மகிழ்ந்த பின் தான் உண்பது வழக்கம்.
          அவர் நாள் தோறும் தூய்மையான சோறு நெய் சுவை மிகுந்த கறி வகைகள் முதலியவற்றை நன்றாக சமைக்க செய்து தம்மிடம் வந்த சிவனடியார்களை வணங்கி உபசரித்து அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்துதவி அத்தொண்டில் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.இப்படி இருக்க நாளுக்கு நாள் அடியவர்கள் கூட்டம் பெருகலாயிற்று.நாயனாரிடம் இருந்த பொருட்கள் எல்லாம் செலவாயின.அவர் தம்மிடம் இருந்த அடிமைகளோடு பரம்பரை உரிமையான நிலம் அணிகலன்கள் முதலிய பொருட்கள் எல்லாம் விற்று சிவனடியாருக்கு விருந்து படைக்கும் திருத்தொண்டில் மகிழ்ந்து வந்தார்.முடிவில் எவ்வகை பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் விருந்து படைக்க வழியில்லாமல் அவர் வறுமையில் வாடி இனி பொருளுக்கு என்ன செய்வது என்று மனம் சோர்ந்தார்.பிறகு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்ட கருதினார்.அவ்வூரில் சூதாடுவோர் இல்லாததால் அவ்வூரில் இருந்து புறப்பட்டார்.
          அவர் சூதாடும்போது முதல் ஆட்டத்தில் தோற்று பணய பொருளை இழப்பார்.ஆனால் பின் ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று பெரும் பணய பொருளை அள்ளிக்கொள்வார். எதிர் ஆட்டம் ஆடுபவர் வாக்கு மாறினால் தமது உடை வாளால் அவரை குத்துவார்.  சூதாட்டத்தில் தாம் வெற்றி பெற்ற பொருளை தம் கையாளும் தீண்ட மாட்டார்.தமக்காகவும் பயன்படுத்த மாட்டார்.அவற்றை சமையல் செய்வோரிடம் கொடுப்பார்.அவர்கள் அமுதாகுவார்கள்.அடியார்கள் யாவரும் விருந்துன்டபின் கடைசி பந்தியில் தாமும் அமர்ந்து அமுது செய்வார்.
          மூர்க்க நாயனார் இவ்வுலகை விடுத்த பின் சிவ புண்ணிய பேற்றால் பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட ஆனந்த தாண்டவம் செய்தருளும் சிவபெருமானது உலகமாகிய சிவபுரம் அடைந்து பேரின்பமடைந்தார்.
         கௌணீ பக்தர்கள் முறையாக பகவானை உபாசிப்பதில்லை என்றாலும் இவர்கள் நிச்சயம் பகவானை நெருங்க முயற்சி செய்கிறார்கள்.படிப்படியாக இவர்களும் அகத்தூய்மை பெற்று நிச்சயம் பகவானை அடைவார்கள்.
          கருணைக்கடலான பகவான் அவரை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கிறார்.இவர்களும் இறுதியில் பகவானின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.இவர்களையும் புண்ணிய ஆத்மாக்களாக மகா புருசர்கள் பக்தி செலுத்தி ஊக்குவிப்பார்கள்.ஏனெனில் பக்தியால் மட்டும் பகவானை சார்ந்து சரண் அடைவது பகவத் தியானம் பஜனை எல்லாம் தாமாகவே வந்துவிடும்.ஆனால் எப்படியும் பகவானை அடையவேண்டும் என்ற லட்சியம் வேண்டும்.வேறுவிதமாக மூன்று வகை பக்தர்கள் இருக்கிறார்கள்(தொடரும்)

No comments:

Post a Comment