Friday 9 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 27

இந்த புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்களும் மகிமைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இவை உலக தாபங்களையும் துக்கங்களையும் தணிக்ககூடியவை.இதை கேட்பவர்களும் சொல்பவர்களும் புனிதமாகி விடுவார்கள்.
          எல்லையற்ற இறைவன் உவமை அற்றவர், தெவிட்டாத பேரின்பமானவர். அவரிடம் பக்தி கொண்டு விட்டால் இப்பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டோம் என்பதை அறிய வேண்டும்.உலகியல் சந்தோசங்கள் இதற்க்கு முன் தூசி பெறாதவை.இதை விட மேலானது எதுவும் இல்லாததால் இனி எதையும் அடைய தேவையில்லை.
         ஒரு வீட்டில் அல்லது ஓர் இடத்தில பகவானின் திருநாம குணங்களை பாடி ஒலிக்கசெய்யும்   போது அங்குள்ள சூழ்நிலையே மாறிவிடும்.தீமைகளும் தீய எண்ணங்களும் அங்கிருந்து ஓடி விடும்.
        பகவான் நாமங்களை உச்சரித்தால் பாவங்கள் நாசப்பட்டு போகின்றன.மரண காலத்திலோ எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.நிச்சயம் அந்த ஆத்மா நற்கதி அடையும்.பகவானை ஆராதிக்கும் பொது பத்து குற்றங்களை செய்ய கூடாது.
  1. சான்றோர்களை நிந்திப்பது,
  2. பகவான் நாமங்களை தரக்குறைவாக பேசுவது அல்லது அவமதிப்பது,
  3. குருவை அவமதிப்பது,
  4. சாஸ்திரங்களை நம்பாமல் குற்றம் காண்பது,
  5. பகவான் நாமங்களின் மகிமையை நம்பாமல் இருப்பது,
  6. பக்தி  இல்லாத  தானம்,விரதம்,யாகம் எல்லாம் பகவான் நாமங்களுக்கு ஈடாகாது என்று சொல்வது,
  7. பகவான் நாமங்களை பஜனை செய்ய பிடிக்காதவர்களிடம் பக்தியை பற்றி பேசுவது,உபதேசிப்பது,
  8. இறைவனை நினைத்து உருகாத மனம் படைத்தவரை நிர்பந்திப்பது.
  9. பகவானின் பூஜைக்காக பணம் வசூலித்து அதை கொள்ளை அடிப்பது,
  10. அகந்தை கொண்டு பணியாமல் இருப்பது. 
ஸ்ரீ பாகவத புராணம் கூறுகிறது:
          பகவான் நாமத்தை எப்படி நினைத்தாலும் அது தன சக்தியை அவசியம் வெளிப்படுத்தி விடும்.நெருப்பின் சக்தியை தெரியாமலும் அதை தொட்டால் அதன் சக்தியை காட்டி விடும்.
         அது போல பகவானின் பெயரால் வேறு ஒருவரை அழைத்தாலும் அல்லது கேலி செய்தாலும் அல்லது வேறு விஷயங்கள் பேசும்போது நடுவில் அறியாமையில் பகவானின் பெயரை உச்சரிக்கபடுவதாலும் அந்த திரு நாமத்திற்கு சக்தி குறையாது.அதாவது எந்த சூழலிலும் மனிதர்கள் பாவம் அழியும்.
          பகவானின் மகிமையை புகழ்பாடும் அனைத்து புராணங்களும் திருநாமங்களை பற்றி பெருமை பேசுகின்றன.எல்லா தெய்வங்களுக்கும் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன.பாகவத புராணத்தில் தன தாயிடம் கபில முனிவர் கூறுகிறார்: 
" பகவான் நாமங்களை உச்சரிப்பவன் புலயனாக இருந்தாலும் அவன் மேன்மை அடைகிறான்.அவன் தவங்களை செய்து விட்டான்.கங்கை முதலிய ஆறுகளில் நீராடிவிட்டான்,யாகங்கள் செய்து விட்டான்,வேதங்களை ஓதி விட்டான்,இதை அறிந்து கொள்க,அவர் மேலும் கூறுகிறார்:
         மனிதன் நடந்து கொண்டிருக்கும் போது தடுக்கி விழுந்தால் ஹரி,ஹரி,என்று ஹரே நமஹா என்று சொல்ல வேண்டும்.அல்லது ராம,ராமா என்று உச்சரிக்கவேண்டும்.வலியால் துடிக்கும் போதும் ஹரி ஹரி அல்லது இஷ்ட தெய்வங்களான சிவா சிவா என்றோ கூற வேண்டும். இவ்வாறு பழகி விட்டால் பழக்கம் காரணமாக தன்னை அறியாமல் பகவான் நாமம் வாயிலிருந்து வந்தால் எல்லா பாவங்களும் கழுவப்படும்.
          பகவான் நாமங்களை உச்சரிக்கும் போது முடிவில்லா பரம்பொருளான இறைவன் நிச்சயமாக  செவிமடுக்கிறார்.ஆபத்து காலத்திலோ அல்லது தேவைப்படும் போதோ பக்தர்கள் ஹரி நாமத்தை உச்சரித்து அழைத்தால் இறைவன் நிச்சயம் அங்கு வருவார்.பிரத்யட்சமாக தெரியாவிட்டாலும் அவர் அருளை நிச்சயமாக அங்கு உணர முடியும்.ஆபத்துகள் விலகும்.துன்பத்தில் மாட்டிக்கொள்பவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடுவார்கள்.இது சத்தியம்.
மேலும் பகவான் திருநாமங்களை உச்சரிக்கும் போது பகவான் அவர் சித்தத்தில் அமர்ந்து பாவங்களையும் அஞ்ஞான இருளையும் அழித்து விடுகிறார்.சூரிய ஒளி பரவும் போது இருள் காணாமல் போகிறதல்லவா?
                                                                                     (தொடரும்)
        

No comments:

Post a Comment