Monday, 2 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 51

"பக்தி சாஸ்த்ராணி மானனீயானி ததுத்போதக கர்மாண்யபி கரணியாணி"
தர்க்க வாதங்களை தவிர்த்து பக்தியை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பிரேமை பக்தியை அதிகமாக தூண்டும் பகவத் சாஸ்திரங்களை படிக்க வேண்டும்.பக்தியை வளர்க்கும் கர்மங்களை செய்ய வேண்டும்.அதற்காக மற்ற நூல்களை படிக்க கூடாது,அரிய விசயங்களை சொல்லும் புத்தகங்களை படிக்ககூடாது என்பதில்லை. எல்லாவற்றையும் படித்து அறிந்து கொண்டாலும் பக்தி சாஸ்திரங்கள் சொல்லும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும்.பகவானின் புண்ணிய கதைகளை படிக்க வேண்டும்.அவர் குணங்களை வர்ணிக்கும் பாடல்களை பாட வேண்டும்.சான்றோர்கள் எழுதிய நூல்களையும் படிக்க வேண்டும்.அதனால் பிரேமை பக்தியில் நம்பிக்கை ஏற்படும்.
          பக்தியை கண்டனம் செய்யும் நூல்களையும் பக்திக்கு எதிரான புத்தகங்களையும் படிக்க கூடாது.உலகியல் விசயங்களை வர்ணிக்கும் இலக்கியங்களையும் காமக்குரோதாதிகளை தூண்டும் விஷயங்கள் அடங்கிய கதைகளையும் படிக்ககூடாது.அவற்றை புகழ் பெற்ற நூலாசிரியர் எழுதியதாக இருந்தாலும் வாசிக்கக்கூடாது. கீழே கூறப்பட்டுள்ள அறக்கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
          பாவப்படாத தொழில் செய்து இல்லறத்தை நல்லறமாக்கவேண்டும். தன்னை சார்ந்திருக்கும் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள் ஆகியோரை மரியாதையுடனும்,அன்புடனும் நடத்தி காப்பாற்றவேண்டும்.
          தன்னை நம்பி வந்தவர்களையும் காத்து தர்ம நியாயத்துடன் பொருளீட்டவேண்டும். பூஜை, துதி, நாமஜபம்,தியானம் எல்லாம் செய்ய வேண்டும்.சான்றோர்களை சேவித்து புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்ய வேண்டும்.
          பசுக்களை பராமரிக்க உதவி செய்ய வேண்டும்.வறியவருக்கு உதவி செய்ய வேண்டும்.
          தெய்வ காரியங்களுக்காக பொருளுதவி செய்ய வேண்டும்.இவற்றையெல்லாம் செய்தால் பகவத்பக்தி நிச்சயம் உண்டாகும்.
என்று பாகவத புராணம் கூறுகிறது.
          அதன் பின் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போன பின் சாதாரண மனிதர்களை விட வேறுபட்டு போய்விடுவான்.அந்த நிலையில் சப்த பிரம்மத்தை (ஓம்)உபாசித்து சித்தி பெற்ற குருவை தேடி ஞானம் பெறுவதற்காக போக வேண்டும்.குருவிடம் நன்கு சேவை செய்த பின் அனைத்தையும் கற்று தேர்ந்து பகவான் மகிழும்படி பாகவத தர்மங்களை உபதேசிக்க வேண்டும்.மனதில் பற்றை அகற்றி சகல உயிர்களில் நட்பும் இரக்கமும் அன்பும் கொள்ள வேண்டும்.
          தன் ஆத்மாவை புனிதப்படுத்த தூய்மை,தவம்,பொறுமை,மௌனம்,நேர்மை,வேத அத்தியயனம், பிரம்மச்சர்யம்,அகிம்சை,சமத்துவம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.சகல உயிர்களிடம் இறைவனை காண வேண்டும்.இவ்வாறு இல்லறம் நடத்தலாம்.அல்லது துறந்து தனித்து வாழலாம். துவர் ஆடை,மரப்பட்டை உடுத்தி எது கிடைத்தாலும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
          மனதையும் வாக்கையும் கட்டுப்படுத்தி சத்தியத்தையும் சாந்தத்தையும் கடைபிடித்து கட்டுப்பாடாக வாழ வேண்டும்.ஜென்மம் எடுத்ததே அவனுக்காக எனவும் செய்வதெல்லாம் அவனுக்காகவே என்று எண்ணிகொண்டு இஷ்டமாக இருப்பதையும் தானம் செய்து புண்ணியங்களையும் ஜபம் செய்த பலனையும் மற்றும் தமக்கு பிரியமாக இருக்கப்படும் பொருளையும் மனைவி மக்களையும் வீடுகளையும் தன் உயிரையும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.மகான்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து பக்தர்களுடன் கூட்டு சேர்ந்து பகவானின் புண்ணிய கதைகளையும் தூய புகழையும் பாடி பரஸ்பரம் இன்புற வேண்டும்.அதில் நிறைவும் காண வேண்டும்.அவ்வாறு பக்தி மேலும் உச்சக்கட்டத்தை அடையும் சமயம் பகவானுடன் இரண்டறக்கலந்து புளகாங்கித பரவசநிலையும், பேரின்ப நிலையும் கிடைக்கும்.
"ஸுகதுக்கேச்சாலாபாதித்யக்தே காலே ப்ரதிக்ஷயமானே  க்ஷனார்த்தமபி வ்யர்த்தம் ந நேயம் "
சுகம்,துக்கம் ,ஆசை,லாபம்,முதலியவை தாமாக கழன்று விடைபெற்ற பின் இது தான் நல்ல தருணம் என்று அரை நொடியும் (பஜனை ஜபமில்லாமல்) வீணாக்க கூடாது.
         மேற்சொன்னவாறு எல்லாம் தாமாக தன்னிடமிருந்து விடைபெற்ற பின் பகவானை அடைவதற்கு பல சாதனங்கள் இருக்கும் போது நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்?
         சிலர் வயதான பின் பக்தியில் ஈடுபட்டுக்கொள்ளலாம்.உலகில் பல கடமைகளை ஆற்ற வேண்டி உள்ளது.என்று கூறுவார்கள்.ஆனால் அவர்கள் கூறுவது சரியல்ல.கடமைகளும் தொல்லைகளும் எப்போதுமே ஓயாது.உலகியல் விவகாரங்கள் அலை எப்போதும் ஓயப்போவது இல்லை.நாம் தான் அவற்றில் இருந்து விடுபட வேண்டும்.மேலும் தேகம் நன்கு ஆரோக்யத்துடன் இருக்கும் போதே பகவத் பக்தியில் ஈடுபட வேண்டும்.மரணமும் வியாதியும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.(தொடரும்)

No comments:

Post a Comment