Friday, 6 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 54

"ஸர்வதா ஸர்வபாவனே நிச்சிந்திதைர் பகவானேவ பஜனீய:" 
காலம் நேரம் பார்க்காமல் எப்போதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிந்தனை எல்லாம் இறைவன் பால் திருப்பிவிட்டு பஜனை செய்ய வேண்டும்.
          ஸர்வபாவென என்றால் பகவானின் அருளையும் ஆற்றலையும் உண்மையாக அறிந்து கொண்டு அல்லது சான்றோர் சொல்வதை கேட்டு மனம்,வாக்கு, சரீரத்தால் வழிபடுவதை கூறியிருக்கிறார்கள்.
          மகா மகிமை பொருந்திய இறைவன் அனைவருக்கும் அன்பன்,நண்பன். அவர் நம்மை அரவணைப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.இதை நன்கு அறிந்துகொண்டவன்,உலகியல் செல்வங்களை விரும்புகிறவனும் மோட்சம் விரும்பும் சித்தனும்,பகவானை மட்டும் விரும்பும் பக்தனும் அரை நொடியும் அவர் சிந்தனையை விட்டு விலக மாட்டான்.அவ்வாறு நெருங்காதவன் பகவானிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அர்த்தம்.
          பகவத் கீதையில் பகவானே சத்தியம் செய்கிறார்.என் திருவடிகளை பற்றிக்கொண்டவனை என்றும் நான் கைவிட மாட்டேன்.
          என் மீது பிரேமை பக்தி கொண்டவனாக என்னையே சிந்தித்து என்னை வணங்குபவனாக இரு. என்னையே நீ அடைவாய்.என்று சத்தியம் செய்கிறேன்.ஏனெனில் நீ எனக்கு பிரியமானவன்.
          எந்த விவகாரங்களிலும் சிக்காமல் எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னையே நீ சரண் அடைந்து விடு.நான் எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை விடுவிப்பேன்.கவலைப்படாதே,வருந்தவும் வேண்டாம்.
          இவ்வாறு பகவானே உறுதியாக கூறும்போது அவரை தொழாமல் இருந்தால் நிச்சயம் துன்பத்தில் விழுந்து சாவோம்.
"ஸ கீர்த்தியமான சீக்ரமேவாவிர் பவதி அனுபாவயதி ச பக்தான்"
பகவானை பிரியமாக கீர்த்தனை செய்த பின் அவர் வெகு சீக்கிரமே பிரகடனமாகி விடுவார்.தன் தெய்வீகத்தை அனுபவிக்கச்செய்வார்.
          பிரகடனமாகிறார் என்றால் உவமையில்லா சௌந்தர்யத்துடன் தாபத்தை தணிக்கும் எல்லையில்லா ஆனந்தம் தரும் தன் இனிய சொரூபத்தை காண்பிக்கிறார்.
          பகவானின் திருமேனி மனிதருக்கோ அல்லது பிற உயிருக்கோ இருப்பது போல ரத்தமும் சதையும் சேர்ந்து உருவான தேகமல்ல.அது ஒளிமயமான தெய்வீக திரு உருவம்.கீதையில் கோடி சூரிய பிரகாசம் கொண்டது என்று சரியாக சொல்ல முடியாது என்று அர்ச்சுனன் கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பிருந்தாவனத்தில் இருந்து கம்சனை சந்திக்க மதுராபுரி வந்தடைந்தனர்.தன் தெய்வீக திருமேனியிலிருந்து ஜோதி வெள்ளம் எங்கும் பரவ இருவரும் மதுரா வீதிகளில் நடந்து வந்தனர்.கண்கள் பெற்ற பாக்கியத்தை முழுமையாக அடையவேண்டுமென்று மக்கள் வைத்த கண் வாங்காமல் அந்த அழகை பருகினர்.அவர்களில் சிலர் புசித்துக்கொண்டிருந்த உணவை துறந்து கிருஷ்ண பலராமர் அழகில் மயங்கி நின்றனர்.நீராடிக்கொண்டிருந்தவர்கள், தூங்கிகொண்டிருந்தவர்கள், குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் மார்கள் ஓடி வந்து கிருஷ்ண பாலராமர்களை கண்டு தன்னையும் தன் கடமைகளையும் மறந்து அவர்கள் அழகில் சொக்கி போய் சிலையானார்கள்.இவை கடவுளின் திருமேனி பற்றி விளக்கப்பட்டவை. கடவுள் திருமேனியின் அருள் ஒளி பிரகாசமாக தோன்றுவதால் தேவர்களும் ஆத்மா ஞான முனிவர்களும் கூட தன்னை மறந்து பரவசமாகிறார்கள்.பகவானின் உருவம், மணம்,ஒளி,ஸ்பரிசம்,இனிய நாத ஒலி இவற்றால் உணர்வுகளை மறந்து சமாதி இன்பத்தை அடைகிறார்கள்.
(தொடரும்)

No comments:

Post a Comment