Friday 27 January 2012

ஸ்ரீதுருவன் கதை

 ஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார்.அவருக்கு சுநீதி,சுருசி என்று இரு மனைவிமார்கள் இருந்தனர்.சுருசி பட்டத்து அரசியாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்றொரு மகன் இருந்தான்.இளையவள் சுநீதிக்கு துருவன் என்றொரு மகன் இருந்தான்.
          ஒரு சமயம் அரசன் உத்தான பாதன் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது மூத்த மகன் உத்தமனை தன் மடியில் அமரச்செய்திருந்தான்.அப்போது இளையவன் ஓடி வந்து தந்தையின் மடியில் ஏற முயற்சித்துக்கொண்டிருந்தான். அதைக்கண்டு பட்டத்தரசி சுருசி ஏளனமாக துருவனை நோக்கி வார்த்தைகளால் தாக்கினாள். துருவனே ராஜசிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உன் தந்தையின் மடி மீது ஏறாதே.நீ அதற்க்கு தகுதியற்றவன்.ஏனென்றால் உன்னை நான் வயிற்றில் சுமந்து பெறவில்லையே. தகுதிக்கு மீறி ஆசைப்படாதே.நீ சிம்மாசனத்தில் அமர தகுதியற்றவன்.ராஜசிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிய விருப்பம் இருந்தால் நீ நாராயணனை ஆராதித்து தவம் செய்திருக்க வேண்டும்.என்றாள். பெரியம்மா ஏசுவதையும் பேசுவதையும் கேட்டு தந்தை பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருப்பதை கண்டு துருவனின் வருத்தம் மேலும் அதிகரித்தது.ஆறு வயது பாலகன் துருவன் அழுதுகொண்டே தன் தாயிடம் சென்றான்.அழுதுகொண்டே நடந்ததை கூறினான்.சுநீதி அவனை மடியில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டே கூறினாள். என் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக நீ ராஜ சிம்மாசனத்தில் உட்காரமுடியாது.என்று கூறுகிறார்கள்.நீயும் ஒரு ராஜகுமாரன் என்று மதிக்கவில்லை.உன் பெரியம்மா சரியாக தான் கூறினாள்.உலகில் பெரிய பதவிகளை அடைய வேண்டுமானால் ஸ்ரீ நாராயணனை குறித்து தவம் செய்ய வேண்டும்.போகட்டும் நீ மற்றவர்களை போல் மனதை புண்படுத்தாமலும் துவேசிக்காமலும் இரு.
          உன் தாத்தாவும் பகையை துறந்து யாகங்கள் பல செய்து விஷ்ணு பகவானை ஆராதித்து மோட்ச பதவியை அடைந்தார்.நீ கடமையை செய்து கொண்டே அந்த விஷ்ணு பகவானை மனதில் ஆராதித்துக்கொண்டு இருப்பாய்.அவரே உன் துயரங்களை தீர்க்கும் ஒப்பற்ற தெய்வம்.என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள்.
           அன்றிரவு  துருவன் தூக்கமில்லாமல் தவித்தான்.அந்த நள்ளிரவில் அனைவரும் உறங்கிகொண்டிருக்கும்போது காவலாளிகளுக்கு தெரியாமல் அரண்மனையை விட்டு புறப்பட்டான்.பூப்பாதம் நோக கால் போன போக்கில் நடந்து நடந்து ஊர் எல்லையையும் கடந்து காட்டிற்கு வந்து சேர்ந்தான்.
          காட்டில் ஓர் இடத்தில நின்றதும் ஸ்ரீ நாரத மகரிஷி அவன் முன் தோன்றி கூறினார்: "ஏதும் அறியாத பாலகன் நீ இந்த காட்டிற்கு ஏன் வந்தாய்?" என்று அவன் தலையில் கை வைத்து தொட்டு வருடினார். இந்த சிறிய வயதில் அவமதிப்பையும் கடுஞ்சொற்களையும் தாங்காத க்ஷத்திரிய பாலகனே விளையாடும் வயதில் சாதனை புரிய வந்து விட்டாயே! அறியாமையால் உண்மையில் மனிதனுக்கு பகையும் துக்கமும் ஏற்படுகிறது.இந்த வயதில் மான அவமானங்கள் எல்லாம் ஏன் வரவேண்டும்.உன் தாய் சொன்னது போல தவத்தாலும் யோகத்தாலும் கூட அந்த இறைவன் நாராயணனை அவ்வளவு எளிதில் மகிழ்விக்க முடியாது.யோகிகளும் முனிவர்களும் ரிஷிகளும் பல ஜென்மங்களாக அந்த பரம்பொருளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கும் பகவானின் அருள் சாமான்யமாக கிடைப்பதில்லை.அவ்வாறு இருக்க அந்த பகவானை உன்னால் எப்படி அடையமுடியும்?நான் சொல்வதை கேள்.பேசாமல் நீ திரும்பி போய்விடு.நான் உன்னை அழைத்து செல்கிறேன்.அங்கே உன் தாயும் தந்தையும் தேடிக்கொண்டிருப்பார்கள்.பெரியம்மா நேற்று சொன்னதை மறந்து போய் இருப்பாள். என்றார்.துருவன் கூறினான்.மகரிஷியே தாங்கள் சுக துக்கங்களை நிவர்த்திசெய்ய நல்ல உபாயங்களை கூறினீர்கள்.அது ஞானிகளுக்கு வேண்டுமானால் நல்ல உபதேசமாக இருக்கலாம்.(தொடரும்) 

No comments:

Post a Comment