Wednesday, 4 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 53

கூடுமானவரை பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கூட்டாக சேர்ந்து பஜனை செய்யலாம்.அதை தன் வீட்டில் செய்தால் மிகவும் நல்லது.சிராத்த கர்மங்களை தவறாமல் செய்ய வேண்டும்.தாய் தந்தையர்கள் சேவையை மறக்காமல் செய்ய வேண்டும்.
அகத்தூய்மை:கர்வம்,பற்று,பொறாமை,துவேசம்,சோகம்,பாவம் செய்வதை நினைப்பது,காமசிந்தனை இவற்றை எல்லாம் பகவானை சரணடைந்து விரட்ட வேண்டும்.இதற்க்கு பதிலாக நேர்மை,பிரேமை,பணிவு,வைராக்கியம்,சந்தோசம்,நிறைவு,பகவத் சிந்தனை,இவற்றை எல்லாம் உள்ளத்தில் புகுத்த வேண்டும்.
தயா:பிறர் துன்பப்படுவதை கண்டு அந்த துன்பத்தை போக்க முயற்சிக்க வேண்டும்.மித்ரனாக இருந்தாலும் சத்ரூவாக இருந்தாலும் பெரிய மனம் படைத்தது உதவ வேண்டும்.பிற உயிர்களை எப்போதும் கொல்லக்கூடாது. பிராணிகள் மீதும் விலங்குகள் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும்.சிறு புழு பூச்சியாக இருந்தாலும் உயிருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
          ஆறறிவு இல்லாத உயிரினங்களும் மரம் முதலிய தாவரங்களும் அழிவதை கவலைப்படாமல் தன் சுயநலத்திற்க்காக ஆதாயம் தேடுவது நல்லதல்ல.
கடவுள் நம்பிக்கை:வேதங்களையும் புராணங்களையும் நம்ப வேண்டும்.பரலோகம்,புனர்ஜென்மம் ஆகியவற்றை நம்பினால் தான் பாவம் செய்யாமல் வாழ முடியும்.இல்லையெனில் கண்டதே காட்சி,கொண்டதே கோலம் இருக்கிறவரை அனுபவித்து சாவோம். பிறர் எப்படி போனால் நமக்கு என்ன?என்று வாழ்ந்தால் அதில் பாவமே மிஞ்சும்.இதை விட சூது இல்லாத விலங்குகளும் பூச்சி புழுக்களும் மேலானவையே.
          எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இருக்கிறான்.அவன் ஆற்றல் விசுவமெங்கும் பரவி இருக்கிறது.காரணமில்லாமல் காரியம் இல்லை, என்பதை உலகில் கண்கூடாக காண்கிறோம்.அவன் சர்வேஸ்வரன், சர்வக்ஞன், கருணைக்கடல். ஆத்மாவாக அனைவருக்கும் அன்பனாக இருக்கிறான்.பக்த வத்சலன்,ஏழைப்பங்காளன் என்று அறிந்து கொண்டால் வாழ்வில் அவனை துணையாக்கிக்கொள்ளலாம்.அவன் ஞானமும் வைராக்யமும் ,பக்தியும், பிரேமையும்,சந்தோசமும் தரக்காத்திருக்கிறான்.தனச்செல்வம் கேட்டால் அதையும் தருவான்.ஜகத்தின் எல்லா செல்வங்களுக்கும் தலைவியான லக்ஷ்மிதேவியை வைத்திருக்கிறான்.புகழ் வேண்டுமென்றால் நம்மை புகழின் உச்சிக்கே கொண்டு செல்வான்.உலகில் இருக்கும் சௌந்தர்யங்களும் இனிமையும்,பிரேமையும் ஞானமும் தனங்களும்,சுகபோகங்களும் புகழும் எல்லாம் சேர்ந்து அவனது மகாமஹிமையின் முன் தூசிக்கு சமம் கூட இல்லை.

உண்மையில் பிரகலாதனின் கடவுள் நம்பிக்கை மிகவும் மேம்பட்டு இருந்தது.இதை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.பாகவத புராணம் கூறுகிறது.ஹிரண்ய கசிபு தன் மகனை நோக்கி கூறுகிறான்.
மகனே பிரகலாதா இது நாள் வரை குருவிடம் கற்ற பாடத்தில் எதை சிறப்பாக கருதுகிறாயோ அதை கூறுவாய் என்றார். அதற்கு பிரகலாதன் தந்தையே விஷ்ணு பகவானின் பக்தியே மிக மென்மையாக கருதுகிறேன்.அது ஒன்பது வகையானது.பகவானின் திருவிளையாடல்களையும் பிறர் பாடும் திருநாமங்களையும் கேட்பது,பகவானின் பாத சேவை,பூஜை தொண்டு செய்தல்,தன்னையே அர்ப்பணம் செய்தல்,தாச பாவம் அல்லது தோழமை கொள்வது,அடியவர்களை வணங்குதல் ஆகியவை பக்தியின் அங்கங்கள்.இதை கேட்டு ஹிரண்யனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
ஹிரண்யன் பிரகலாதனுக்கு கல்வி புகட்டிய குருவை கடிந்த பின்பு கூறினான். உனக்கு இந்த புத்தி எங்கிருந்து வருகிறது? அதற்கு பிரகலாதன் பதிலளித்தான்.எவருடைய அறிவும் மனமும் பகவானின் பாத கமலங்களை தொடுகிறதோ அவரை பகவானே தன் வசம் இழுத்துக்கொள்கிறார்.உலக விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்கள் மேலான பெரும் பேற்றினை அறிய மாட்டார்கள்.
          ஹிரண்ய கசிபு பிரகலாதனை கொல்வதற்காக அரக்கர்களுக்கு ஆணையிட்டான்.கோரை பற்கள் கொண்டு கொடூர குணம் படைத்த அரக்கர்கள் பயங்கரமாக கத்திக்கொண்டு சூலத்தால் தாக்க முற்ப்பட்டார்கள்.பிரகலாதனோ தன்னை பகவானிடம் முழுவதுமாக அர்ப்பணித்து விட்டு மனம் வாக்கு புலன்களுக்கு எட்டாத சர்வாத்மாவாக சகல சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் பர பிரம்மமாக விளங்கும் பரமாத்மாவிடம் மனதை லயிக்கச்செய்து விட்டதால் அரக்கர்களின் தாக்குதல்கள் அவனை ஒன்றும் செய்ய வில்லை.ஹிரண்ய கசிபு மிகவும் ஆத்திரம் அடைந்து கூறுகிறான்.எமக்கு கீழ் படியாத அதிகப் பிரசிங்கியே, அசுர குலத்தை களங்கப்படுதுபவனே எனது கோபக்கண் அசைவினால் மூவுலகங்களும் நடுங்குமே , யாரை துணை கொண்டு அல்லது பலத்தினால்,தைரியத்தினால் நீ பயப்படாமல் இருக்கிறாய்? அதற்கு பிரகலாதன் பதிலளிக்கிறான்.உங்களுக்கும் எனக்கும் சக்தி அளிப்பவர் அந்த பரம புருஷனே ஆவார்.அவர் பலசாலிகளுக்கும் பலசாலி மட்டுமல்ல.தாவர ஜங்கமங்களுக்கெல்லாம் ஈசன்.தேவர்களுக்கெல்லாம் தலைவர்.காலத்தின் கடவுள்.அவரே தேஜஸாக இருக்கிறார்.அவரே புலன்களுக்கும் தேகத்திற்கும் சக்தி அளிப்பவர்.அவரே உயிர்களுக்கெல்லாம் ஆத்மாவாக இருக்கிறார்.என்று திட நம்பிக்கையோடு கூறினான்.(தொடரும்)  


No comments:

Post a Comment