Saturday 19 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 9

"ஸா ந காமயானா நிரோத ரூபத்வாத் "  
          பிரேமை பக்தி எப்படிபட்டது? என்பதை கூறுகிறார்கள்.ஓளி வாங்கி கண்ணாடி ஒளியை வேறுபக்கம் சிதறடிக்காமல் ஒரே இடத்தில குவிக்கிறது.அதனால் அந்த ஒளிக்கு ஆற்றல் அதிகமாகிறது.அதுபோல உண்மையான பக்தி வேறு இடத்திற்கு போகாது. அதை அனன்ய பக்தி என்று கூறுவார்கள்.
          பிரேமை பக்தி வேறு ஆசையை வைத்து உருவாகாது. கோவிலுக்கு போகும் பக்தர்கள் இறைவனை பாடி துதித்து உலகில் தமக்கு புகழ் சேரவேண்டும்,நோயன்றி சுகமாக வாழ வேண்டும், அளவற்ற செல்வம் வேண்டும்,சத்ருக்களை ஜெயிக்கவேண்டும் என்று வேண்டி கொள்வார்கள்.நிச்சயமாக இதுவும் ஒரு பக்தியின் ஒரு நிலைப்பாடு தான்.கோரிக்கைகள் நிறைவேறாமல் போனால் சில பக்தர்களுக்கு முன்பு போல பக்தியின் தீவிரம் இருக்காது அல்லது கடவுளின் மீது கோபம் வரும்.
          அனன்ய பக்தி என்பது நீ எனக்கு இன்னல்களை கொடுத்தாலும் சோதித்தாலும் நெருப்பிலிட்ட தங்கம் போல நான் மின்னுவேன் என்ற மனபக்குவதுடன் இருப்பது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தார்கள் இருந்தும் இறைவன் பால் மாறாத பக்தி கொண்டார்கள். ஐந்து வகை முக்திகளையும் சிறந்த பக்தர்கள் விரும்ப மாட்டார்கள்.

  1. சாலோக்யம் : வைகுண்டம், கைலாசம் முதலிய லோகங்களுக்கு சென்று இறையவன் திருவடியை விட்டு பிரியாமல் இருப்பது.
  2. சார்ஷ்டி : வைகுண்டம் முதலிய லோகங்களில் கடவுளுக்கு சமமாக ஐஸ்வர்யம் பெற்றிருப்பது.
  3. சாமீப்யம்: வைகுண்டம்,கைலாசம் முதலிய லோகங்களில் இறைவனை விட்டு பிரியாமல் பக்கத்திலேயே இருப்பது.
  4. சாரூப்யம்: வைகுண்ட லோகங்களில் இறைவன் போலவே உருவெடுத்து வாழ்வது. அதாவது விஷ்ணு என்றால் சங்கு சக்கரங்கள் வைத்திருப்பது.சிவன் என்றால் சூலம்,டமரூகம்,சர்ப்பம் இவற்றுடன் அவரை போலவே உருவம் பெற்றிருப்பது.
  5. சாயுஜ்யம்:இறைவனிடம் இரண்டற கலப்பது.இந்த முக்திகளை கபில முனிவர் பாகவத புராணத்தில் கூறுகிறார்.(தொடரும்)

No comments:

Post a Comment