Wednesday, 23 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 12

"லோகே வேதேஷீ ததனுகூலாசரணம் தத் விரோதிஷீ தாஸினதா"
          தினசரி நடத்தும் தெய்வ வழிபாடுகளும் தான தர்மங்களும் குடும்பத்தை காப்பாற்றுவதும் லௌகிக கர்மங்கள் ஆகின்றன .
          தேவர்களையும் பித்ருக்களையும் பூஜித்து நீத்தார் கடன் செய்வது மந்திரங்கள் ஓதுவது இவையெல்லாம் பிரேமை பக்திக்கு துணையாக இருந்தால் மட்டும் பக்தன் அவற்றை கடைபிடிப்பான்.தன் கடமைகளாக இருந்தும் அவை எதிராக இருந்தால் பக்தியில் மூழ்கியவன் துறந்து விடுவான்.உதாரணமாக தந்தை சொல்படி நடக்கவேண்டும் என்பது மகனுக்கு கடமையாகிறது.
          பிரகலாதனோ தந்தை சொற்படி நடக்கவில்லை.ஸ்ரீ ராமனை தெய்வமாக கருதிய விபிஷணன் அண்ணனை துறந்தான்.பரதன் தன் அன்னை சொற்படி கேட்கவில்லை.மகாராஜா பலி தன் குருவையும் அலட்சியபடுதினான்.
         பக்தன் என்பவன் மனம்,வாக்கு,காயம்,ஆகியவற்றால் எதை செய்தாலும் அதை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவான்.அவனது ஒவ்வொரு செயலும் ஆண்டவன் பிரீதிக்காகவே இருக்கும்.தனக்கு இன்பம் தரும் ஆசையின் அடிப்படையில் எந்த செயலும் செய்யமாட்டான்.ஏனெனில் அந்த செயல்கள் அவனை ஆண்டவன் சன்னதியில் கொண்டு போய் சேர்க்காது.வேத சாஸ்திரங்கள் தடை போட்ட, கூடாத செயல்கள் அனைத்தும் பாவ செயல்கள்.அவற்றில் பக்தன் ஒரு போதும் ஈடுபடமாட்டான்.  சுய நலத்தை கருதி செய்யும் செயல்கள் பெரும்பாலும் பாவச் செயல்களாகவே நிகழ்ந்து விடுகின்றன.
"பவது நிச்சய தார்ட்யா தூர்வம் சாஸ்த்ர ரக்ஷணம் "
          நாரதர் இதை கவனத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.பிரேமை பக்தியில் பக்தன் லயித்து போயிருந்தாலும் தன் கடமைகளை சாஸ்திர முறைப்படி செய்வதை தவற விட கூடாது.
         " எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக்கைமாறு எனது ஆவி
தந் தொழிந்தேன், இனி மீள்வது என்பது உண்டோ எனது ஆவி ஆவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் , எனது ஆவி யார் யார் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே "
          ஆழ்வார் பாடிய இந்த பாட்டு பரவச நிலையின் உச்சகட்டத்தை எட்டுகிறது.இந்த உச்ச நிலைக்கு போன பின் கடமைகள் சம்பிரதாயங்கள் என்ற கட்டுக்கள் தாமாகவே சுழன்று விடுகின்றன.ஆனால் அது வரை சாஸ்திர விதிப்படி கடமைகளை செய்து கொண்டு தான் இருக்க வேண்டும்.
"அன்யதா பாதித்யாசங்கயா"
         தமக்குரிய கடமைகளை செய்யாமல் இருந்தால் பாவ தோஷங்கள் வந்து சேரும்.அவன் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் துரோகம் செய்தவன் ஆவான்.பக்தி என்ற போர்வையில் கடமைகளை துறந்து வாழ்வியலில் மேம்பட்டு இருக்க முடியாது.
"லோகோபி தாவதேவ கிந்து போஜனாதிவ்யாபாரஸ் தவாச ரீர தாரணாவதி" 
லௌகீக இன்ப துன்பங்கள் கோபம்,சோகம்,ஆகியவற்றால் பக்தியில் திளைப்பவன் பாதிக்கப்பட மாட்டான்.உயிர் வாழ்வதற்கு பயன்படும் அனைத்து செயல்களை பற்றற்று செய்து கொண்டு உயிர் வாழும் ஒவ்வொரு துளியிலும் பரமனை நினைத்து எல்லாவற்றிலும் அவனையே காண்பான்.
          உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழ வழி வகுத்து உணவளிக்கும் இறைவன் பக்தர்களுக்கு உணவளிக்க தவறுவானா?சரீரம் தரிக்க எப்படி வாழ வேண்டுமோ அதற்க்கெல்லாம் வழி வகுத்து தருவான்.அதனால் பக்தர்கள் அதை பற்றி கவலை பட மாட்டார்கள்.அவை தாமாக எல்லாம் நடக்கும்.அதாவது இதுவரை இருந்த உலகியல் விசயங்களில் மிகுந்த ஈடுபாடு படிப்படியாக குறைந்து வரும்.உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை,எல்லாம் சரீரம் உள்ள வரை இறைவன் அருளால் தாமாக நடக்கும் என்று கூறுகிறார்கள். (தொடரும்)

No comments:

Post a Comment