Tuesday 15 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 4

         மஹாமுனிவரே என்னுடைய(நாரதர்) வரலாற்றினை கூறுகிறேன் கேளுங்கள்.--முன் ஜென்மத்தில் நான் ஒரு தபோவனத்தில் முனிவர்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரிக்கு மகனாக இருந்தேன். என் தாயுடன் சேர்ந்து குரு குலத்தில் தவம் செய்யும் முனிவர்கள் ஆசிரமத்தில் அவர்கள் இட்ட பணிகளை பணிவுடன் செய்து வந்தேன். ஒரு சமயம் மழைகாலத்தில் தீர்த்த யாத்திரை செய்யும் தவசி மகாத்மாக்கள் அந்த தபோ வனத்தில் தங்க வந்தார்கள். நான் அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பணிவிடை செய்தேன். வேலை நேரம் போக அவர்கள் மற்ற சிஷ்யர்களுக்கு சொற்பொழிவாற்றியதை கேட்டேன்.அச்சமயம் இறைவன் பால் ஈர்க்கப்பட்டேன்.அவர்கள் எனது பணிவான சேவைகளையும் அமைதியான குணத்தையும் விளையாடும் அந்த வயதில் இறைவனிடம் இருக்கும் பக்தியையும் கண்டு மகிழ்ந்தனர்.மழைக்காலம் முடிந்து அங்கிருந்து செல்லும்போது என்னை அன்புடன் அழைத்து எனக்கு ஞான உபதேசம் செய்தனர். 
          அவர்கள் சென்றவுடன் என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டது.பரமனை நினைத்து அவன் அன்பில் கரைந்தேன்.முனிவர்களுக்கு சேவை செய்யும் பணிகளை தொடர்ந்தேன்.ஒரு நாள் விடியலில் என் தாய், பசு மடியிலிருந்து பால் கறந்து கொண்டு இருந்தபோது ஒரு கருநாகம் அவளை தீண்டி விட்டது.
என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த எனது தாய் இறந்து விட்டாள். 
தாயை இழந்த நான் அந்த தபோவனத்தை விட்டு வடதிசை நோக்கி கால் போன போக்கில் நடந்தேன். ஓர் அடந்த காட்டை அடைந்தேன்.
          ஒரு காட்டாற்றில் தாகத்தை தீர்த்துக்கொண்டு ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அந்த மகான்கள் கூறியது போல தியானம் செய்தேன். உடனே என் மனம் ஒருநிலைபட்டது. பக்தியுடன் இறைவன் பாத கமலங்களை நினைத்தேன்.அந்த தியான நிலையில் ஸ்ரீ ஹரியின் பிரேமை மிகுதியால் கசிந்துருகி கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஒரு பரவச நிலை கிட்டியது. என் மனக்கண் முன் பேரொளியுடன் பிரகாசித்து மனதை கொள்ளைகொள்ளும் திருமேனி அழகுடன் பாவங்களை போக்கும் ஸ்ரீ ஹரி தோன்றினார். அதை கண்டு அந்த பரமானந்த அமுத வெள்ளத்தில் மூழ்கிவிட்டவன் அதை தாங்காமல் மனம் பதற்றமடைந்து நடுங்கி விழுந்து தன்னையே மறந்தேன்.அந்த அற்புத காட்சியால் சகல தேகமும் புல்லரித்து சொல்லிலடங்காத ஒரு பேரின்ப நிலையை அடைந்தேன்.திடீரென மின்னல் போல அந்த காட்சி மறைந்தது.
          நான் மீண்டும் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு வேட்கை தனியாதவன்  போல அந்த காட்சியை காண யதனித்தேன்.அச்சமயம் என் துக்கத்தையும் ஏக்கத்தையும்  தணிக்கும் வகையில் கம்பீரமான குரலில் ஒரு அசரிரி கேட்டது."அப்பனே இந்த ஜென்மத்தில் என் தரிசனம் உனக்கு கிட்டாது. பக்தியால் பக்குவம் அடையாதவர்கள் என்னை காண முடியாது.என்னை காணும் ஆசை தூண்டுவதற்காகவே சிறிதளவு தெய்வீக உருவத்தை காண்பித்தேன்.என் மீது கொண்ட ஆசையே எல்லா பற்றுகளையும் அறுக்க வல்லது.மகான்களின் சேவையினால் உன் மதி தூய்மை அடைந்து என் பால் ஈர்க்கப்பட்டது. இந்த பிறவியை துறந்து நீ பக்தியோகத்தில் தேர்ந்து பக்தர்களில் பிரதானமாக கருதப்படுவாய்" இதை கேட்டதும் நான் சமாதனம் அடைத்தேன்.
                                 (தொடரும்)      

No comments:

Post a Comment