Monday 28 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 16




கிருஷ்ணா ஒரு வேண்டுதலை நிறைவேற்ற எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.அது என்னவென்றால் நான் பிருந்தாவனத்தில் ஒரு கொடியாக செடியாக பிறக்க வேண்டும்.அல்லது புல்லாக பிறந்து கோபிகை பெண்களின் பாதாஸ்பரிசம் பட்டு நான் பாக்கியம் அடைய வேண்டும்.கோபிகை பெண்களை நோக்கி நான் கூறினேன். "நீங்கள் கண்ணன் பிரிவினால் துயரம் அடையாதீர்கள்.யோகம் செய்தால் துக்கத்தை வெல்லலாம்.". அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:
          "கண்ணனை விட்டு பிரிந்தவர்களுக்கே யோகத்தை பற்றி கற்று கொடுங்கள்,நாங்கள் கண்ணனை விட்டு எங்கே பிரிந்தோம்.அவன் எங்கள் ஆத்மாவாக இருக்கிறார்."
           ஆழ்வார் வெளிப்படுத்தும் பிரேமை பக்தியும்,கோபிகா பெண்கள் செலுத்திய பக்தியை சேர்ந்தது.
         யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்  தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்விக்கவே?
         அவனாகவே என்னை ஆட்கொண்டான், என் சம்மதம் இதற்க்கு காரணம் இல்லை.அவனே என்னை வசீகரித்து,வஞ்சித்து,என் சரீரத்தில் ஒட்டி நின்று என் உயிரோடு உயிராக கலந்து விட்டான்.இப்போது நான் அவனை விட்டு பிரிந்து போவேன் என்றாலும் அவன் என்னை விடான் என்கிறார்.
          என்னை பிரிந்தாலும் கூட என்னுடைய நன் நெஞ்சத்தை அவன் ஏமாற்ற முடியாது.அதை விட்டு பிரிந்துபோக அவனாலும் முடியாது.
         என் உயிரும் அவனும் ஒரே பொருளாக போன பின் அந்த உயிரை விட்டுப்பிரிந்து அதனின்று அவன் விலகுவது அசாத்தியம்,என் ஆவி அவனை கிட்டிச் செறிந்தது.அவனை முற்றிலும் அனுபவித்து அவனும் அதுவும் ஒரே பொருள் என்று சொல்லும்படி யாகிகலந்துவிட்டது.இனி அது அகலாது.காதலில் சிக்கிய பெண்ணின் பேச்சாக பாடுகிறார்.ஆழ்வார் பாட்டு மிக உயர்ந்த செய்யுட் பாணியில் சொல்கிறது.அதில் பக்தி காதலாகி விடுகிறது.
          "காமமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
          நீ முற்றக்கண் துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
          தீ முற்றத்தேன் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
          யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே ".
          ஒலி செய்யும் கடலே நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கபெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாயில்லை , மனம் உருகி ஏங்குகிறாய்.தென்னிலங்கை முழுதினையும் நெருப்புக்கு இரையாக்கின ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை விரும்பும் நான் படும் துன்பத்தை நீயும் படுகிறாயோ? என்று கேட்கிறார்.
" தத்ராபி மஹாத்ம்யக் ஞான விஸமருத்திய பவாத:"  
          கோபிகை பெண்கள் கிருஷ்ணனின் தெயவாம்சத்தை அறிந்திருந்தார்கள்.அவன் ஆற்றலையும் குணங்களையும் அறிந்து தான் காதலித்தார்கள்.சில பேர், கோபிகை பெண்கள் கிருஷ்ணனை பரமாத்மா என்று அறியவில்லை.மனிதனாக நினைத்து காதலித்தார்கள் என்று கூறுகிறார்கள்.அது சரியல்ல.அவனை புருஷோதம பகவானாகவே நினைத்தார்கள்.பாகவத புராணம் இதையே வலியுறுத்துகிறது.
         கோபிகை பெண்கள் இறைவன் கிருஷ்ணனை நோக்கி இறைஞ்சு கூறுகிறார்கள்.
         எங்கும் நிறைந்த பரம் பொருளே உங்கள் கடமைகளை போய் செய்யுங்கள் என கூறாதீர்கள்.ஏனெனில் நாங்கள் எல்லாவற்றையும் துறந்து உங்கள் திருவடிகளில் சரண் அடைந்து விட்டோம். மோட்சத்தை விரும்பும் தவ சீலர்களை ஆதி பகவான் ஏற்றுகொள்வது போல எங்களையும் ஏற்றுகொள்ள வேண்டும்.கணவருக்கு சேவை செய்ய வேண்டும்.மக்களை கவனிக்க வேண்டும்.பந்துக்களை ஆதரிக்க வேண்டும்.,பெண்களின் கடமைகளை,தர்மத்தை அறிந்து உபதேசித்தீர்கள் , வாஸ்தவம் தான்.ஆனால் இறைவனான நீங்கள் சகல உயிர்களுக்கும் ஆத்மாவிற்கும் அன்பனாக இருக்கிறீர்கள் அல்லவா? தாங்கள் மீது எப்படி பிரியம் செலுத்தாமல் இருக்க முடியும்?(தொடரும் )
    

No comments:

Post a Comment