Tuesday, 15 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 5

         அகந்தை முதலிய துர்குணங்களை வென்ற நான் ஸ்ரீஹரியை பாடி புகழ்ந்து காலத்தை கடத்தினேன். அப்பிறவி கழிந்த பின் நான் பிரம்மதேவரின் புதல்வனாக நாரத மாமுனியாக வந்தேன். "சிருஷ்டியின் கல்ப காலம் முடிந்து பிரளயம் ஏற்பட்ட பின் அடுத்த கல்பகால துவக்கத்தில் யுகங்கள் ஆரம்பிக்குமுன் பிரபஞ்சத்தில் உயிர்கள் பிறந்து வாழ முதன் முதலில் ரிஷிகளை சிருஷ்டித்தார் பிரமமா. அந்த தெய்வ ரிஷிகளோடு ரிஷியாக நானும் பிறந்தேன். நாரதர் என்று பெயர் பெற்றேன்.பக்தர்களுக்கு எல்லாம் முதல்வனனேன்."
            "பிரம்மச்சாரியாகவே இருந்து நாத பிரம்மத்தை ஒலிக்கும் தம்பூராவை மீட்டிக்கொண்டு ஸ்ரீ ஹரியின் குணா நாமங்களை பாடிகொண்டே மூவுலகிலும் தடையின்றி சஞ்சரிகின்றேன்.நாரதரான பின் பிரேமையில் பரவசமாகி நான் பாடி பகவானை அழைத்தால் மருக்ஷணம் என் முன் கோடி இன்பம் தரும் தன் ஒளிமயமான திருமேனி தரிசனம் தந்து என்னை ஆட்கொள்கிறார்.எல்லையற்ற கருணைக்கடலான பிரபு".
            " அன்றிலிருந்து அல்லல்படும் மாந்தர்கள் துயர் தீர எங்கும் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறேன்" இதை கேட்ட பின் வியாச பகவான் பக்தியை பிரதானமாக கொண்டு ஆத்ம தத்துவங்களை விளக்க கூடிய ஒரு மாபெரும் நூலை எழுதினார் . அதுவே ஸ்ரீமத் பாகவத புராணம் என்று புகழ் பெற்றது.
            பாகவத புராணம் என்ற குளிர்ந்த கங்கை நீரில் மூழ்கி இருப்பவர்கள் உலகியல் துன்பங்கள் என்ற வெப்பத்தை உணர மாட்டார்கள்.மேலும் நாரதரை பற்றி அறிய வேண்டுமானால் அவர் எப்படி பட்டவர் என்று ஸ்ரீ மகாபாரதம் கூறுகிறது.
         நற்குணசீலர் நாரதர் தேவர்களாலும் பூஜிக்கபடுபவர்.இதிகாச புராணங்களையும் நான்குவேதங்களையும் நன்கு அறிந்தவர். கல்பகாலதிற்கு முன் நடந்த விசயங்களையும் அறிந்தவர்.அறம்,பொருள், இன்பம்,வீடு,பேறு,ஆகிய தத்துவங்களையும் அறிந்தவர்.சங்கீத ஞானி,கவிஞர் ,பிரகஸ்பதிக்கு சமமான அறிவு படைத்தவர்.தன் யோகபலத்தல் வானகம்,வையகம்,கீழுலகம்,ஆகிய மூவுலகங்களிலும் நடப்பதையும் அறிந்து கொண்டவர். காரணமில்லாமல் மக்களிடம் அன்பு கொண்டவர்.இறைவன்பால் கொண்ட அவரது அன்பான பக்தி உன்னதமானது.அவர் பாதங்களை வணங்கி அவர் இயற்றிய பக்தி சூத்திரங்களுக்கு விளக்கம் தருகிறோம்.அவர் காட்டிய பக்தி மார்கத்தில் சென்று அவர் உபதேசம் செய்த பிரகாரம் வாழ முயற்சிப்போம்.
          இறைவன் மீது பக்தி எப்படி வருகிறது என்று மதுசூதன ஆச்சரியார் சரஸ்வதி பக்தி ரஸாயன நூலில் கூறுகிறார்.
* மஹா புருஷர்களுக்கு சேவை செய்தல்.
*அவர்கள் காட்டிய வழியில் நம்பிக்கை.
*அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெறுதல்.
*சிரத்தையுடன் இறைவனின் கல்யாண குணங்களை கேட்டு பரவசமாவது.
*இறைவனை பற்றி கேட்டறிந்த பின் அவன் மீது அன்பு பெருகி பக்தி உருவாவது.
*பிரேமை பக்தியால் பரமாத்மா சொருபத்தை அறிதல்.
*பாகவத குணங்களை பெறுதல்.
*தன்னையே அற்பணிதுவிட்டு தொண்டு செய்தல் 

.                                                          (  தொடரும் )

No comments:

Post a Comment