Wednesday 16 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 6

          முதலில் அந்த பக்தியை பற்றி கூறுகிறார்கள்.
      "அதாதோ பக்திம் வ்யாக்யாஸ் யாம: "
இந்த சூத்திரத்தில் அத,அத: இந்த இரு சொற்களும் தேவரிஷி நாரதர் முன்பே பல சித்தாந்தங்களை கூறிவிட்டார் என்பதை உணர்த்துகின்றன.அதன் பின் தயநிதியான ஸ்ரீ நாரதர் பக்தி மார்கத்தின் ஆச்சரியார் பக்தியின் சொருபத்தையும் அதன் சாதனங்களையும் இனி விளக்க போகிறோம் என்று கூறுகிறார்கள்.
       "ஸா த்வஸ்மின் பரமப்பிரேமரூபா"
          அந்த பக்தி இறைவன் பால் பிரேமை ரூபமாக அதாவது காதலாக உருவெடுக்கிறது.
          பக்தியின் பொருள் பல இடங்களில் பல சூழலில் வேறு வேறு விதமாக மாறுவதும் உண்டு. பக்தி என்றால் விசுவாசம்,பயம் கலந்த பணிவு, சிரத்தையின் வெளிப்பாடு, அல்லது தன்னைவிட மேல்நிலையில் இருப்பவரிடம் செலுத்தப்படும் மரியாதை என்று பல அர்த்தங்களை கூறலாம். ஆனால் இங்கு நாரதர் குறிப்பிடுவது அன்பின் எல்லையே பக்தி, அது இறைவனிடம் மட்டும் செலுத்தக்கூடிய பக்தி, ஞானமோ கர்மமோ எந்த காரணத்தினாலும் உருவாகாத ஆசை சுயநலம் இல்லாத பக்தி.
           அந்த தூய பக்தி இறைவனிடம் மட்டும் உருவாகி விட்டால் அது ஜகத்தில் எந்த பொருளையும் சுகத்தையும் சார்ந்து இருக்காது.புண்ணியங்களால் கிடைக்கும் பரலோக இன்பங்களையும் மோட்சபதவியையும் விரும்ப மாட்டார்கள்.இதை அனன்ய பக்தி என்று கூறுவார்கள்.
          "அம்ருதஸ்வரூபா ச"
            அந்த பிரேமை பக்தி அமுத மயமானது.இனிமையானது.
 பல பிறவிகளில் இருந்து தொடர்ந்து வரும் விருப்பு வெறுப்புகளும் கர்ம பலன்களும் சித்தத்தில் வாசனைகளாக படிந்திருப்பதால் ஜனன மரணங்கள் தொடர்ந்து கொண்டே போகும்.இறைவனிடம் மட்டும் பக்தி உருவாகிவிட்டால் ஜனன மரணம் இல்லாமல் அமுத நிலை அடைந்து விடலாம்.
          பக்தனின் சித்தத்தில் பகவானிடம் வைத்திருக்கப்பட்ட பிரேமை பக்தி என்றென்றும் நூதனமாக அதாவது சலிக்காத தூய சாத்வீக குணங்களுடன் பதிந்து விடும்.அது மற்ற வாசனைகளை அழித்து விடும்.பக்தன் எப்போதும் பிரேமை பக்தியில் திளைத்து பகவானை விட்டு பிரியாமல் இருப்பான். பகவானும் அவனை எந்த சூழலிலும் கைவிட மாட்டார்.(தொடரும்)

No comments:

Post a Comment