Friday 25 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 14

பகவான் காதலிக்க தக்கவன்,அந்த காதலை அனுபவித்து பிரிவினால் துயரம் கொண்டு அலைபவன் போல ஆழ்வார் பாடுகிறார்.
          ஆண், பெண்களுக்குள் அன்பு தோன்றி ஆர்வம் மேலிட்டால் காதல் ஆகிறது.பகவானிடம் செலுத்தும் அன்பு பக்தி ஆகிறது.பக்தன் பரவசமாகி, ,பெண் பாவம் கொள்கிறான்.நாரையையும்,குயில்களையும், அன்னம்களையும் ,கிளிகளையும்,வண்டுகளையும்,காற்றையும் தம் நெஞ்சையும் பல பாட்டுகளில் கேட்டு கொள்கிறார்.தம் நிலையை நாராயணனிடம் சென்று அறிவியுங்கள் என்று அவற்றை எல்லாம் இறைஞ்சுகிறார்.
         " நீர் அலையே சிறு பூவாய் நெடு மாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய். சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது வாய் அலகில் இன் -அடிசில் வைப்பரை நாடயே."
          பணிக்காற்றுக்கு சொல்கிறார்.- அவள் நமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டானாகில் அதையாவது வந்து சொல்லிவிட்டு என்னை முடித்து விடு.என் துயரம் தீர்ந்து விடும் என்கிறார்.
          "நாடாத மலர் நாடி நாள்தோறும் நாராயணன் தன வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் சொல்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே"
          பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
         எல்லா உயிர்களையும் நான் சரி சமமாகத்தான் பார்க்கிறேன். எனக்கு பகையும் இல்லை, பாசமும் இல்லை.ஆனால் பக்தியோடு வழிபடுகிறவர்கள் என்னில் கலந்து போவார்கள்.நானும் அவர்களில் கலந்து போகிறேன்.எனக்கு செய்ய வேண்டிய பூஜை ஓர் இலை,ஒரு புஷ்பம்,ஒரு பழம்,அல்லது ஒரு ஜலம், அதை பக்தியோடு படைத்தால் போதும் அதை விருந்தாக அருந்துவேன்.என்று கண்ணன் சொன்னதை ஆழ்வார் பாடுகிறார்.:
        " பரிவது இல் ஈசனை பாடி,விரிவது மேவல் உறுவீர் பிரிவகை இன்றி நல்நீர் தூய்புரிவதுவும் புகைபூவே"
          பட்ச பாதமற்ற சர்வேஸ்வரனை, ஆத்ம சொரூபத்தின் முழு மலர்ச்சியை அடைய உறுதி கொண்டவர்களே அகலாமல் ஒரே உறுதியுடன் வேறு விசயங்களில் மனம் செலுத்தி நில்லாமல் ஆண்டவனிடம் பக்தி செலுத்துவதை விட்டு பிரியாமல் ஏலம் முதலிய வாசனை பொருட்களின் கலப்பின்றி தண்ணிரே போதும்.  ஈசனுக்கு கொடுக்கும் அருட்கொடை நிவேதனம் ,புகைபூவே.: ஏதேனும் புகையும் பூவும் அன்புடன் அர்ப்பணம் செய்யலாம்.
          பகவானை ஆராதிக்கும் வழி மிக எளிது அதை பற்றி கவலையே வேண்டாம் என்பதை மேலும் பாடுகிறார்:
         " மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
          எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே ."
  பகவான் விஷ்ணு, சர்வேஸ்வரன் அவனுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட சர்வேஸ்வரன் அவனுக்கு என்னுடைய பணி என்ன, எது, எப்படி என்றெல்லாம் கவலையும் ஐயமும் வேண்டாம்.பூஜா கிரமங்களை பற்றி கவலை பாடவும் வேண்டாம்.அதுவே ஆட்செயும் ஈடே : அதுவே அவனுக்கு செய்ய வேண்டிய கைங்கர்யம் ,அந்த பக்தியே உனக்கு அதிகாரம் தரும் அதாவது பூஜை செய்யும் தகுதியை தரும்.
         " ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
          பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே "
          தமக்கு உவமை இல்லாதவன் என்று வள்ளுவர் சொன்னபடி பகவானுக்கு சமமானதும் இல்லை. அப்படி இருக்கையில் மேற்பட்டது எப்படி இருக்கும்? என் மனம் அவனை அடுத்து நிற்பதை விடாது.- விடாமல் என் நா அவனை போற்றி பாடும்.என் அங்கம் உடல் மகிழ்ச்சி பரவசமாஹி ஆடும்.தெய்வம் ஏறியவர்கள் ஆடுவது போல என் உடல் ஆடி குதிக்கும். தேவர்களும் அவனை துதி செய்யும் போது பிதற்றி பிணங்கி கிரமம் தவறியே பாடுவார்கள்.அத்தகைய கல்யாண குணங்கள் நிறைந்த பகவானை துதி செய்யும் போது அங்கம் தெய்வம் ஏறினால் போல ஆடி ஆடி வணங்கி வழிபடுவேன்.(தொடரும்)



No comments:

Post a Comment