Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts
Showing posts with label நாரத பக்தி சூத்திரம். Show all posts

Monday 28 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 16




கிருஷ்ணா ஒரு வேண்டுதலை நிறைவேற்ற எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.அது என்னவென்றால் நான் பிருந்தாவனத்தில் ஒரு கொடியாக செடியாக பிறக்க வேண்டும்.அல்லது புல்லாக பிறந்து கோபிகை பெண்களின் பாதாஸ்பரிசம் பட்டு நான் பாக்கியம் அடைய வேண்டும்.கோபிகை பெண்களை நோக்கி நான் கூறினேன். "நீங்கள் கண்ணன் பிரிவினால் துயரம் அடையாதீர்கள்.யோகம் செய்தால் துக்கத்தை வெல்லலாம்.". அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:
          "கண்ணனை விட்டு பிரிந்தவர்களுக்கே யோகத்தை பற்றி கற்று கொடுங்கள்,நாங்கள் கண்ணனை விட்டு எங்கே பிரிந்தோம்.அவன் எங்கள் ஆத்மாவாக இருக்கிறார்."
           ஆழ்வார் வெளிப்படுத்தும் பிரேமை பக்தியும்,கோபிகா பெண்கள் செலுத்திய பக்தியை சேர்ந்தது.
         யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்  தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்விக்கவே?
         அவனாகவே என்னை ஆட்கொண்டான், என் சம்மதம் இதற்க்கு காரணம் இல்லை.அவனே என்னை வசீகரித்து,வஞ்சித்து,என் சரீரத்தில் ஒட்டி நின்று என் உயிரோடு உயிராக கலந்து விட்டான்.இப்போது நான் அவனை விட்டு பிரிந்து போவேன் என்றாலும் அவன் என்னை விடான் என்கிறார்.
          என்னை பிரிந்தாலும் கூட என்னுடைய நன் நெஞ்சத்தை அவன் ஏமாற்ற முடியாது.அதை விட்டு பிரிந்துபோக அவனாலும் முடியாது.
         என் உயிரும் அவனும் ஒரே பொருளாக போன பின் அந்த உயிரை விட்டுப்பிரிந்து அதனின்று அவன் விலகுவது அசாத்தியம்,என் ஆவி அவனை கிட்டிச் செறிந்தது.அவனை முற்றிலும் அனுபவித்து அவனும் அதுவும் ஒரே பொருள் என்று சொல்லும்படி யாகிகலந்துவிட்டது.இனி அது அகலாது.காதலில் சிக்கிய பெண்ணின் பேச்சாக பாடுகிறார்.ஆழ்வார் பாட்டு மிக உயர்ந்த செய்யுட் பாணியில் சொல்கிறது.அதில் பக்தி காதலாகி விடுகிறது.
          "காமமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
          நீ முற்றக்கண் துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
          தீ முற்றத்தேன் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
          யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே ".
          ஒலி செய்யும் கடலே நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கபெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாயில்லை , மனம் உருகி ஏங்குகிறாய்.தென்னிலங்கை முழுதினையும் நெருப்புக்கு இரையாக்கின ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை விரும்பும் நான் படும் துன்பத்தை நீயும் படுகிறாயோ? என்று கேட்கிறார்.
" தத்ராபி மஹாத்ம்யக் ஞான விஸமருத்திய பவாத:"  
          கோபிகை பெண்கள் கிருஷ்ணனின் தெயவாம்சத்தை அறிந்திருந்தார்கள்.அவன் ஆற்றலையும் குணங்களையும் அறிந்து தான் காதலித்தார்கள்.சில பேர், கோபிகை பெண்கள் கிருஷ்ணனை பரமாத்மா என்று அறியவில்லை.மனிதனாக நினைத்து காதலித்தார்கள் என்று கூறுகிறார்கள்.அது சரியல்ல.அவனை புருஷோதம பகவானாகவே நினைத்தார்கள்.பாகவத புராணம் இதையே வலியுறுத்துகிறது.
         கோபிகை பெண்கள் இறைவன் கிருஷ்ணனை நோக்கி இறைஞ்சு கூறுகிறார்கள்.
         எங்கும் நிறைந்த பரம் பொருளே உங்கள் கடமைகளை போய் செய்யுங்கள் என கூறாதீர்கள்.ஏனெனில் நாங்கள் எல்லாவற்றையும் துறந்து உங்கள் திருவடிகளில் சரண் அடைந்து விட்டோம். மோட்சத்தை விரும்பும் தவ சீலர்களை ஆதி பகவான் ஏற்றுகொள்வது போல எங்களையும் ஏற்றுகொள்ள வேண்டும்.கணவருக்கு சேவை செய்ய வேண்டும்.மக்களை கவனிக்க வேண்டும்.பந்துக்களை ஆதரிக்க வேண்டும்.,பெண்களின் கடமைகளை,தர்மத்தை அறிந்து உபதேசித்தீர்கள் , வாஸ்தவம் தான்.ஆனால் இறைவனான நீங்கள் சகல உயிர்களுக்கும் ஆத்மாவிற்கும் அன்பனாக இருக்கிறீர்கள் அல்லவா? தாங்கள் மீது எப்படி பிரியம் செலுத்தாமல் இருக்க முடியும்?(தொடரும் )
    

Saturday 26 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 15

பக்தி பரவசமாக ஈசனை வழிபாடும் போது பக்தனுடைய நடவடிக்கை பிறருக்கு பித்து பிடித்தவன் செய்கை  போல தோன்றும்.உண்மை பக்தன் ஆவேசம் கொண்டு முறையும் கிரமமும் ஏதும் கவனிக்காமல் வழிபடுவான்.
          பாகவத புராணத்தில் பகவானே தன் பக்தர்களின் மகிமையை கூறுகிறார்:
என் மீது உயிரையே வைத்திருக்கும் என் பக்தர்களை விட பிரியமானவர்கள் எவருமில்லை.ப்ரம்மா,சங்கரர்,லக்ஷ்மி,பலராமர் இவர்களும் எனக்கு பிரியமானவர்கள் இல்லை. என் பக்தர்கள் பகை துறந்து மன அமைதி பெற்று அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்களாக எங்கும் என்னையே காண்பவர்களாக பற்று அற்று இருப்பார்கள்.என்னை நினைத்து பரமானந்தம் அடைபவர்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.என்னையே தமக்கு சொந்தம் ஆக்கிகொண்டவர்களின் பக்தியே உயர்ந்தது.இதுவே நாரதர் கூறும் பக்தி.இவர்கள் பாத தூசி படாதா என்று இவர்கள் பின்னால் திரிந்து கொண்டு இருப்பேன்.
          " அஸ்த்யேவமேவம் "
            மேற்சொன்னவாறு ஸ்ரீ நாரதர் கூறும் பக்தியின் சொரூபம் இது தான்.
            " யதா வ்ரஜகோபிகானாம் "
            பக்தி என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமென்றால் கோகுலத்தில் கிருஷ்ணனையே தன் ஜீவிதமாக கொண்ட கோபிகை கண்ணிகள் செலுத்திய பக்தி ஒப்பற்றது.எந்த பக்தர்களும் அவர்களுக்கு ஈடாக மாட்டார்கள்.பாகவத புராணத்தில் கிருஷ்ண பகவானே கூறுகிறார்.:
          கோபிகா பெண்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றியும் சற்றும் சிந்திக்காமல் என்னையே உயிர் மூச்சாக கொண்டவர்களின் பக்தியை எப்படி விமர்சிப்பது? இவர்களுக்கு நான் எப்படி கைம்மாறு செய்வேன்?
          ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவரிடம் கூறுகிறார்:
கோகுலத்தை விட்டு நான் மதுரா வந்து துவாரகை வந்து விட்டேன்.அவர்கள் என்னை நினைத்து நினைத்து உருகிக்கொண்டு இருக்கிறார்கள்.விரக தாபத்தால் வியகுலமடைந்து யோகிகள் அடையும் பரமாத்மாவோடு ஒன்றிய நிலை அடைந்து விட்டார்கள்.நான் தொலைவில் விலகி இருந்தாலும் என்னை ஆத்மாவில் நிறுத்தி உலக வாழ்கையை மறந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.
          கோபிகை பெண்கள் பால் கறக்கும் போதும், உலக்கையால் தானியங்களை இடிக்கும் போதும் வீடு மெழுகி சுத்தப்படுத்தும் போதும் தாலாட்டு பாடி குழந்தைகளை தூளியில் தூங்கவைக்கும் போதும் சித்தமெல்லாம் கண்ணனை பக்தியில் நிரப்பி கசிந்து கண்ணீர் மல்க கண்ணனை நினைத்து பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.உத்தவர் கண்ணனிடம் கூறுகிறார்:- கண்ணா நான் கோகுலத்திற்கு பொய் நேரில் பார்த்ததை கூறுகிறேன்: கோபிகை பெண்கள் ஜென்மம் எடுத்ததற்கு மேலான பலன் கிடைத்து விட்டது.ஏனெனில் விசுவாசமான ஹரியுடன் இரண்டற கலந்து விட்டனர்.அந்த நிலை அடைய முனிவர்களும் தவசிகளும் யத்தனித்து கொண்டிருக்கிறார்கள்.யாகங்களாலும் தவத்தாலும் எட்ட முடியாத மேல் நிலையை பிரேமை பக்தியால் எட்டி விட்டார்கள்.திருமகளும் அந்த பாக்கியத்தை அடைய வில்லை.  (தொடரும்)

Friday 25 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 14

பகவான் காதலிக்க தக்கவன்,அந்த காதலை அனுபவித்து பிரிவினால் துயரம் கொண்டு அலைபவன் போல ஆழ்வார் பாடுகிறார்.
          ஆண், பெண்களுக்குள் அன்பு தோன்றி ஆர்வம் மேலிட்டால் காதல் ஆகிறது.பகவானிடம் செலுத்தும் அன்பு பக்தி ஆகிறது.பக்தன் பரவசமாகி, ,பெண் பாவம் கொள்கிறான்.நாரையையும்,குயில்களையும், அன்னம்களையும் ,கிளிகளையும்,வண்டுகளையும்,காற்றையும் தம் நெஞ்சையும் பல பாட்டுகளில் கேட்டு கொள்கிறார்.தம் நிலையை நாராயணனிடம் சென்று அறிவியுங்கள் என்று அவற்றை எல்லாம் இறைஞ்சுகிறார்.
         " நீர் அலையே சிறு பூவாய் நெடு மாலார்க்கு என் தூதாய் நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய். சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது வாய் அலகில் இன் -அடிசில் வைப்பரை நாடயே."
          பணிக்காற்றுக்கு சொல்கிறார்.- அவள் நமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டானாகில் அதையாவது வந்து சொல்லிவிட்டு என்னை முடித்து விடு.என் துயரம் தீர்ந்து விடும் என்கிறார்.
          "நாடாத மலர் நாடி நாள்தோறும் நாராயணன் தன வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் சொல்வதோ? ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே"
          பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
         எல்லா உயிர்களையும் நான் சரி சமமாகத்தான் பார்க்கிறேன். எனக்கு பகையும் இல்லை, பாசமும் இல்லை.ஆனால் பக்தியோடு வழிபடுகிறவர்கள் என்னில் கலந்து போவார்கள்.நானும் அவர்களில் கலந்து போகிறேன்.எனக்கு செய்ய வேண்டிய பூஜை ஓர் இலை,ஒரு புஷ்பம்,ஒரு பழம்,அல்லது ஒரு ஜலம், அதை பக்தியோடு படைத்தால் போதும் அதை விருந்தாக அருந்துவேன்.என்று கண்ணன் சொன்னதை ஆழ்வார் பாடுகிறார்.:
        " பரிவது இல் ஈசனை பாடி,விரிவது மேவல் உறுவீர் பிரிவகை இன்றி நல்நீர் தூய்புரிவதுவும் புகைபூவே"
          பட்ச பாதமற்ற சர்வேஸ்வரனை, ஆத்ம சொரூபத்தின் முழு மலர்ச்சியை அடைய உறுதி கொண்டவர்களே அகலாமல் ஒரே உறுதியுடன் வேறு விசயங்களில் மனம் செலுத்தி நில்லாமல் ஆண்டவனிடம் பக்தி செலுத்துவதை விட்டு பிரியாமல் ஏலம் முதலிய வாசனை பொருட்களின் கலப்பின்றி தண்ணிரே போதும்.  ஈசனுக்கு கொடுக்கும் அருட்கொடை நிவேதனம் ,புகைபூவே.: ஏதேனும் புகையும் பூவும் அன்புடன் அர்ப்பணம் செய்யலாம்.
          பகவானை ஆராதிக்கும் வழி மிக எளிது அதை பற்றி கவலையே வேண்டாம் என்பதை மேலும் பாடுகிறார்:
         " மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
          எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே ."
  பகவான் விஷ்ணு, சர்வேஸ்வரன் அவனுக்கு வேதத்தில் சொல்லப்பட்ட சர்வேஸ்வரன் அவனுக்கு என்னுடைய பணி என்ன, எது, எப்படி என்றெல்லாம் கவலையும் ஐயமும் வேண்டாம்.பூஜா கிரமங்களை பற்றி கவலை பாடவும் வேண்டாம்.அதுவே ஆட்செயும் ஈடே : அதுவே அவனுக்கு செய்ய வேண்டிய கைங்கர்யம் ,அந்த பக்தியே உனக்கு அதிகாரம் தரும் அதாவது பூஜை செய்யும் தகுதியை தரும்.
         " ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே
          பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே "
          தமக்கு உவமை இல்லாதவன் என்று வள்ளுவர் சொன்னபடி பகவானுக்கு சமமானதும் இல்லை. அப்படி இருக்கையில் மேற்பட்டது எப்படி இருக்கும்? என் மனம் அவனை அடுத்து நிற்பதை விடாது.- விடாமல் என் நா அவனை போற்றி பாடும்.என் அங்கம் உடல் மகிழ்ச்சி பரவசமாஹி ஆடும்.தெய்வம் ஏறியவர்கள் ஆடுவது போல என் உடல் ஆடி குதிக்கும். தேவர்களும் அவனை துதி செய்யும் போது பிதற்றி பிணங்கி கிரமம் தவறியே பாடுவார்கள்.அத்தகைய கல்யாண குணங்கள் நிறைந்த பகவானை துதி செய்யும் போது அங்கம் தெய்வம் ஏறினால் போல ஆடி ஆடி வணங்கி வழிபடுவேன்.(தொடரும்)



Thursday 24 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 13

"தல்ல க்ஷணானி  வாச்யந்தே நா நா மதபேதாத்"  
பிரேமை பக்தியின் லக்ஷணத்தை கூறுகிறார்கள்.பக்தியின் லக்ஷணங்களை பல ஆச்சாரியர்கள் பலவிதமாக கூறுகிறார்கள்.அவர்கள் கருத்தை கூறிவிட்டு
ஸ்ரீ நாரதர் அதன் பின்பு தன கருத்தை கூறி இருக்கிறார்கள்.
"பூஜாதிஷ் வனுராக  இதி பாராசர்யா:"
பராசர மாமுனிவர் புதல்வர் ஸ்ரீ வியாசபகவான் பகவானை பூஜிபபதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தலாம், அதில் மிகுந்த ஈடுபாடு தான் பக்தி என்று கூறுகிறார்.மனம்,வாக்கு,தேகம்,இவை மூன்றையும் பூஜை செய்யும் கருவிகளாக பிரயோகிக்கவேண்டும்.பகவானின் பிரதிமைக்கு (விக்ரஹத்திற்கு)பூஜை செய்ய வேண்டும்.அல்லது பகவானை விசுவாத்மாவாக நினைத்து அனைத்து உயிர்களிலும் உறைபவன் என்று அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்.இப்படிப்பட்ட பக்தன் முற்றிலும் பகையை துறந்து விடுவான்.ஆசைகளுக்கு அடிமையாக மாட்டான்.விஷ்ணு பகவானை பூஜை செய்பவர்கள் சாசுவதமான பரம பதத்தை அடைவார்கள் என்று விஷ்ணு ரகசியம் கூறுகிறது.
"கதா திஷ்விதி கர்க:"
ஸ்ரீ கர்காசாரியார் பகவானின் திருவிளையாடல் கதைகளில் பிரியமுள்ளவர்களே இறைவனிடம் உண்மை பக்தி செலுத்துபவர்கள் என்று கூறுகிறார்.
          பகவான் நிகழ்த்திய திருவிளையாடல் புராண கதைகள்,பகவானின் கல்யாண குணங்கள் ஆகியவற்றில் பிரியம் வைப்பார்கள்.திரு நாமங்களை பஜனை செய்வார்கள்.பாராயணம் செய்யும் இடத்திருக்கு சென்று கதை கேட்பார்கள்.
          உலகியல் விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு பகவானின் கதைகளை கேட்டால் அதில் என்ன லாபம் வரப்போகிறது?என்று கேட்பார்கள்.அவர்கள் பணம்,பொருள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.உண்மையான பக்தர்கள் பணத்தாசையை விட்டிருப்பார்கள்.
          உயிர் வாழ தேவையான பொருட் செல்வதை பகவானிடம் அர்ப்பணம் செய்துவிட்டு தமக்காக உபயோகிக்க மாட்டார்கள்.
பாகவத புராணம் கூறுகிறது:
          தவம்,வேத பாராயணம்,யாகம்,மந்திரம்,ஞானம் ,தானம் இவை அனைத்தும் பகவானின் திருநாமங்களையும் அவரது குணங்களையும் பக்தி கொண்டு பாடினால் தான் முழு பலன்களை தருகின்றன.
         " ஆத்ம ரத்ய விரோ தேனேதி சாண்டில்ய :"
தன்னுள் இருக்கும் சாத்தாத்மாவை உணர்வதும் அதற்க்கு சாதகமான விசயங்களில் அன்பு செலுத்துவதும் தான் உண்மையான பக்தி என்று சாண்டில்ய மகரிஷி கூறுகிறார்.
          சங்கராச்சாரியார் கூறுகிறார்:
          சகல உயிர்களுக்கும் இறைவன் ஆத்மாவாக வீற்று இருக்கிறார்.அந்த சர்வாத்மா மீது அன்பு செலுத்துவது தான் பக்தி.அந்த பக்தி குடி கொண்டு விட்டால் முக்தி நிச்சயம் கிடைக்கும்.
         " நாரதஸ்து ததர்பிதாகிலாசாரிதா தத்விஸ்மரணே பரமவ்யாகுலதேதி "
          நாரதர் தன் கருத்தை கூறுகிறார் :
          பிறவியெடுத்த தேகத்தால் செய்யப்படும் செயல் அனைத்தும் அவனுக்காகவே இருக்கும். அவனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும்.தன் காதல் நாயகன் போல இருக்கும் பகவானை நினையாத நொடி வீனனதே என்று வருந்துவதே உண்மையான பக்தி.பகவானை பூஜை செய்வது,அவர் குணங்களை பாடுவது,சர்வாத்மாவாக இருக்கும் பகவானிடம் அன்பு செலுத்துவது எல்லாமே பக்தியின் லக்ஷணங்கள் என்று அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயம்.ஆச்சாரியார்களின் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாரதர் கூறுகிறார்.
          உடல் ,ஆத்மா,பொருள் எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அவனை நினைத்துகொண்டு கர்மங்கள் செய்யவேண்டும்.எந்த சந்தர்பத்திலும் மனம் அவனை விட்டு நீங்காதிருக்க வேண்டும்.
ஆழ்வார் செய்த பக்தி மிகவும் உயர்ந்தது.
          ஆழ்வார் தம்மை ஒரு ஸ்திரியாக பாவித்து பகவானாகிய நாயகனை பிரிந்த தாபத்தை பல பாசுரங்களாக பாடியிருக்கிறார்.பகவானிடம் கொண்ட பாகவத பிரேமை வேகத்தை பாடும் இப்பாட்டுக்கள் காதலி தன் நாயகனை சேர ஆசை பட்டு சொல்லிய பிரிவு ஆற்றாமைச்சொற்களை  போலிருக்கும்.
இறைவன் கேட்கதக்கவன்,நினைக்கதக்கவன்,தியானம் செய்ய தக்கவன் ,பார்க்கதக்கவன் என்பது ஸ்ருதியின் வாக்கு.(தொடரும்)

Wednesday 23 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 12

"லோகே வேதேஷீ ததனுகூலாசரணம் தத் விரோதிஷீ தாஸினதா"
          தினசரி நடத்தும் தெய்வ வழிபாடுகளும் தான தர்மங்களும் குடும்பத்தை காப்பாற்றுவதும் லௌகிக கர்மங்கள் ஆகின்றன .
          தேவர்களையும் பித்ருக்களையும் பூஜித்து நீத்தார் கடன் செய்வது மந்திரங்கள் ஓதுவது இவையெல்லாம் பிரேமை பக்திக்கு துணையாக இருந்தால் மட்டும் பக்தன் அவற்றை கடைபிடிப்பான்.தன் கடமைகளாக இருந்தும் அவை எதிராக இருந்தால் பக்தியில் மூழ்கியவன் துறந்து விடுவான்.உதாரணமாக தந்தை சொல்படி நடக்கவேண்டும் என்பது மகனுக்கு கடமையாகிறது.
          பிரகலாதனோ தந்தை சொற்படி நடக்கவில்லை.ஸ்ரீ ராமனை தெய்வமாக கருதிய விபிஷணன் அண்ணனை துறந்தான்.பரதன் தன் அன்னை சொற்படி கேட்கவில்லை.மகாராஜா பலி தன் குருவையும் அலட்சியபடுதினான்.
         பக்தன் என்பவன் மனம்,வாக்கு,காயம்,ஆகியவற்றால் எதை செய்தாலும் அதை ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்துவிடுவான்.அவனது ஒவ்வொரு செயலும் ஆண்டவன் பிரீதிக்காகவே இருக்கும்.தனக்கு இன்பம் தரும் ஆசையின் அடிப்படையில் எந்த செயலும் செய்யமாட்டான்.ஏனெனில் அந்த செயல்கள் அவனை ஆண்டவன் சன்னதியில் கொண்டு போய் சேர்க்காது.வேத சாஸ்திரங்கள் தடை போட்ட, கூடாத செயல்கள் அனைத்தும் பாவ செயல்கள்.அவற்றில் பக்தன் ஒரு போதும் ஈடுபடமாட்டான்.  சுய நலத்தை கருதி செய்யும் செயல்கள் பெரும்பாலும் பாவச் செயல்களாகவே நிகழ்ந்து விடுகின்றன.
"பவது நிச்சய தார்ட்யா தூர்வம் சாஸ்த்ர ரக்ஷணம் "
          நாரதர் இதை கவனத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்.பிரேமை பக்தியில் பக்தன் லயித்து போயிருந்தாலும் தன் கடமைகளை சாஸ்திர முறைப்படி செய்வதை தவற விட கூடாது.
         " எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக்கைமாறு எனது ஆவி
தந் தொழிந்தேன், இனி மீள்வது என்பது உண்டோ எனது ஆவி ஆவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் , எனது ஆவி யார் யார் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே "
          ஆழ்வார் பாடிய இந்த பாட்டு பரவச நிலையின் உச்சகட்டத்தை எட்டுகிறது.இந்த உச்ச நிலைக்கு போன பின் கடமைகள் சம்பிரதாயங்கள் என்ற கட்டுக்கள் தாமாகவே சுழன்று விடுகின்றன.ஆனால் அது வரை சாஸ்திர விதிப்படி கடமைகளை செய்து கொண்டு தான் இருக்க வேண்டும்.
"அன்யதா பாதித்யாசங்கயா"
         தமக்குரிய கடமைகளை செய்யாமல் இருந்தால் பாவ தோஷங்கள் வந்து சேரும்.அவன் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் துரோகம் செய்தவன் ஆவான்.பக்தி என்ற போர்வையில் கடமைகளை துறந்து வாழ்வியலில் மேம்பட்டு இருக்க முடியாது.
"லோகோபி தாவதேவ கிந்து போஜனாதிவ்யாபாரஸ் தவாச ரீர தாரணாவதி" 
லௌகீக இன்ப துன்பங்கள் கோபம்,சோகம்,ஆகியவற்றால் பக்தியில் திளைப்பவன் பாதிக்கப்பட மாட்டான்.உயிர் வாழ்வதற்கு பயன்படும் அனைத்து செயல்களை பற்றற்று செய்து கொண்டு உயிர் வாழும் ஒவ்வொரு துளியிலும் பரமனை நினைத்து எல்லாவற்றிலும் அவனையே காண்பான்.
          உலகில் ஒவ்வொரு உயிருக்கும் வாழ வழி வகுத்து உணவளிக்கும் இறைவன் பக்தர்களுக்கு உணவளிக்க தவறுவானா?சரீரம் தரிக்க எப்படி வாழ வேண்டுமோ அதற்க்கெல்லாம் வழி வகுத்து தருவான்.அதனால் பக்தர்கள் அதை பற்றி கவலை பட மாட்டார்கள்.அவை தாமாக எல்லாம் நடக்கும்.அதாவது இதுவரை இருந்த உலகியல் விசயங்களில் மிகுந்த ஈடுபாடு படிப்படியாக குறைந்து வரும்.உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, உடை,எல்லாம் சரீரம் உள்ள வரை இறைவன் அருளால் தாமாக நடக்கும் என்று கூறுகிறார்கள். (தொடரும்)

Tuesday 22 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 11

கோபிகா பெண்கள் கூறுகிறார்கள்:
          கண்ணா உன்னை நினைத்தவுடன் எல்லாம் மறந்து விடுகிறோம்.வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை.கால்கள் நீ இருக்குமிடம் நோக்கி தாமாகவே நடக்கின்றன.
"தஸ்மின்னனன் யாதத்விரோதி ஷூ தாஸி னதா"
வேறு இடத்தில வைக்கபடாத பிரேமை பக்தி செய்யும் பக்தன் எதை செய்தாலும் பகவானுக்கே செய்வான்.மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டன்.உலகில் மேன்மையுடன் வாழ எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அவற்றில் அவனுக்கு ஆர்வம் ஏற்படாது.
" அன்யாச் ரயாணாம் த்யாகோ அனன்யதா" 
தன் நாயகன் சம்பந்தபடாததை எல்லாம் துறந்து விடுவதே அனன்யதா எனப்படுகிறது.
            எள் கல்  தந்த எந்தாய் உன்னை எங்கனம் விடுகிறேன் என்று பாடுகிறார் ஆல்வார்.
          எள் கல் :உலகபோருள்கள் மேல் உள்ள ஆசையை நீக்கும் திறமை மற்ற பொருள்களை இகழ்ந்து தள்ளும் சக்தியை தந்தாய்.கோபியர்கள் எதிலும் எங்கும் கண்ணனையே கண்டார்கள்.
          சிவபெருமான் மேல் பக்தி கொண்ட பார்வதி தேவியாரின் மனதை சோதிப்பதற்காக சிவனை நோக்கி தவம் செய்வதை நிறுத்தி விடுமாறு சப்தரிஷிகள் கூறுகிறார்கள்.சிவன் ஒரு பித்தன் என்று பல வகையில் குற்ற பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் பரமன் மீது மாறாத பக்தி கொண்ட பார்வதி மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.நீரை துறந்த மீன்கள் கணப்பொழுதும் உயிர்வாழ்வதில்லை.அது போல அனன்ய பக்தி கொண்டவர்கள் கணப்பொழுதும் ஆண்டவன் நினைவை விட்டு நீங்கி உயிர் வாழ மாட்டார்கள்.
          சாதக பட்சி மழைநீர் மட்டும் அருந்தும். மதுசூதனா உன் அருளை நான் பெறுவதற்கு தடையாக நிற்கும் சத்ருக்கள் போன்ற தடைகளை எல்லாம் அழித்து விட்டவனே என்று ஆல்வார் பாடுகிறார்.
          வள்ளலே மதுசூதனா ,என் மரகதமலையே உனை நினைந்து வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிபாடி களித்து உகந்து உகந்து உள்ள நோய்களை எல்லாம் துரந்து உயந்து போந்திருந்தே (தொடரும் )



Monday 21 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 10

"நிரோதஸ்து லோகவேதவ்யாபாரன் யாஸ:"
பிரேமை பக்திக்கு அடிமையானவர்கள் செய்ய வேண்டிய தன் கடமைகளை துறந்து விடுவார்கள்.சிவபெருமானின் திருதொண்டரான குங் குலியகலயனாரை  
இதற்க்கு உதாரனமாக கூறலாம்.சிவபெருமானுக்கு குங்குலிய தூபமிடும் திருத்தொண்டை தவறாமல் நடத்திக்கொண்டு வருகையில் அவருடைய வறுமை மேலும் மேலும் அதிகரித்தது.அவர் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனியாமல் தன் நிலங்களையும் சொத்துக்களையும் விற்று குங்குலியம் வாங்கி சிவபெருமானுக்கு தூபமிட்டு வனங்கினார். மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் முழுப்பட்டினி கிடக்க நேரிட்டது.அவரது அன்பு மனைவி மனம் நொந்து ஒருநாள் தன் பொன் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்து அதை விற்று நெல் வாங்கிவர சொன்னார்.தாலியை எடுத்துக்கொண்டு கலயனார் நெல் வாங்குவதற்காக கடைதெரு வீதிவழியாக சென்றார்.
          அப்போது வணிகன் ஒருவன் குங்குலிய பொதி ஒன்றை சுமந்து கொண்டு அவருக்கு எதிரே வந்தான்.அதை பார்த்த கலயனாரின் முகம் மலர்ந்தது.செஞ்சடைபெருமான் பூசைக்கேற்ற நறுமணம் பொருந்திய குங்குலியம் இது என்றால் நான் பெரும் பேற்றை இன்றே பெற்றேன்.இதை வாங்கி செல்வதை விட நல்ல பேரு வேறு உள்ளதோ?என்று பொங்கி எழும் விருப்பம் மிக கொண்டு தன் கையில் இருந்த பொன் தாலியை வணிகனிடம் கொடுத்தார்.வணிகன் குங்குலிய பொதியை அவரிடம் கொடுத்தான்.கலயனார் மனமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சி கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் விரைந்து சென்று வீரட்டான திரு கோவிலை அடைந்தார்.அங்கு எம்பெருமானுடைய வழிபாட்டிற்கு வைத்திருக்கும் பண்டக சாலையிலேயே எல்லா குங்குலியத்தையும் சேமித்து வைத்தார்.
         அதன் பிறகு தம் மனைவி மக்களின் பசி,வறுமை, துன்பம் எல்லாவற்றையும் மறந்து சிவதொண்டில் பேரன்பு பொங்க சிவபெருமானின் திருவடிகளை போற்றி தொழுது கொண்டு குங்குலிய பணி புரிந்து கொண்டு அங்கேயே இருந்தார்.
          கருணைக்கடலான சிவபெருமான் திருவருளை முன்னிட்டு அவர் மனைவி மக்கள் வாழ்ந்த வீட்டில் திடீரென ஒரே இரவில் குபேர செல்வம் நிறைந்து விட்டது.தேவர்களை வழிபடுதலும், பித்ருக்களை வழிபடுதலும்,  நித்ய நைமித்திய கர்மங்கள் எல்லாவற்றையும் அவன் மறந்து விடுகிறான்.
                                                                                    (தொடரும்)  

Saturday 19 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 9

"ஸா ந காமயானா நிரோத ரூபத்வாத் "  
          பிரேமை பக்தி எப்படிபட்டது? என்பதை கூறுகிறார்கள்.ஓளி வாங்கி கண்ணாடி ஒளியை வேறுபக்கம் சிதறடிக்காமல் ஒரே இடத்தில குவிக்கிறது.அதனால் அந்த ஒளிக்கு ஆற்றல் அதிகமாகிறது.அதுபோல உண்மையான பக்தி வேறு இடத்திற்கு போகாது. அதை அனன்ய பக்தி என்று கூறுவார்கள்.
          பிரேமை பக்தி வேறு ஆசையை வைத்து உருவாகாது. கோவிலுக்கு போகும் பக்தர்கள் இறைவனை பாடி துதித்து உலகில் தமக்கு புகழ் சேரவேண்டும்,நோயன்றி சுகமாக வாழ வேண்டும், அளவற்ற செல்வம் வேண்டும்,சத்ருக்களை ஜெயிக்கவேண்டும் என்று வேண்டி கொள்வார்கள்.நிச்சயமாக இதுவும் ஒரு பக்தியின் ஒரு நிலைப்பாடு தான்.கோரிக்கைகள் நிறைவேறாமல் போனால் சில பக்தர்களுக்கு முன்பு போல பக்தியின் தீவிரம் இருக்காது அல்லது கடவுளின் மீது கோபம் வரும்.
          அனன்ய பக்தி என்பது நீ எனக்கு இன்னல்களை கொடுத்தாலும் சோதித்தாலும் நெருப்பிலிட்ட தங்கம் போல நான் மின்னுவேன் என்ற மனபக்குவதுடன் இருப்பது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தார்கள் இருந்தும் இறைவன் பால் மாறாத பக்தி கொண்டார்கள். ஐந்து வகை முக்திகளையும் சிறந்த பக்தர்கள் விரும்ப மாட்டார்கள்.

  1. சாலோக்யம் : வைகுண்டம், கைலாசம் முதலிய லோகங்களுக்கு சென்று இறையவன் திருவடியை விட்டு பிரியாமல் இருப்பது.
  2. சார்ஷ்டி : வைகுண்டம் முதலிய லோகங்களில் கடவுளுக்கு சமமாக ஐஸ்வர்யம் பெற்றிருப்பது.
  3. சாமீப்யம்: வைகுண்டம்,கைலாசம் முதலிய லோகங்களில் இறைவனை விட்டு பிரியாமல் பக்கத்திலேயே இருப்பது.
  4. சாரூப்யம்: வைகுண்ட லோகங்களில் இறைவன் போலவே உருவெடுத்து வாழ்வது. அதாவது விஷ்ணு என்றால் சங்கு சக்கரங்கள் வைத்திருப்பது.சிவன் என்றால் சூலம்,டமரூகம்,சர்ப்பம் இவற்றுடன் அவரை போலவே உருவம் பெற்றிருப்பது.
  5. சாயுஜ்யம்:இறைவனிடம் இரண்டற கலப்பது.இந்த முக்திகளை கபில முனிவர் பாகவத புராணத்தில் கூறுகிறார்.(தொடரும்)

Friday 18 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 8

          மோட்ச பதவியை கூட விரும்பாதவன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் மீது பிரேமை பெருகி கொண்டே இருக்கவேண்டும்.உன்னை மறவா வரம் வேண்டும் என்றே கேட்பான். ஆதலால் அவன் எவரிடமும் துவேஷம் கொள்வதில்லை.இறைவனை நினைத்து நினைத்து ஒவ்வொரு கணமும் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
          கோபிகா பெண்கள் கண்ணனை உள்ளங்கவர்ந்த கள்வன் என்று கூறினார்கள்.மற்றொரு பொருளோ மற்றொருவனோ எப்படி இறைவனுக்கு அடிமையான மனதை சொந்தம் கொண்டாட முடியும்?அவர்கள் மனதில் எவராலும் நுழைய முடியாது.
          ஸ்ரீஹரி உள்ளமெங்கும் நிறைந்து விட்டபின் மனம் வேறு சுகத்தை தேடி போகுமோ?
          பகவத்கீதை கூறுகிறது:-எதை கண்டும் ஆனந்தபடதவன்,துவேஷம் கொள்ளாதவன்,வருந்ததவன்,நிச்சயம் என் வலையில் விழுந்து இருப்பான்.
         " யஜ்க்ஞாத்வா மத்தோ பவதி ஸ்தப்தோ பவதி 
அத்மாராமோ பவதி"    
          பிரேமை பக்தி நிலை எட்டியவன் போதை வஸ்து உண்டவன் போல பித்தன் போல இருப்பான்.தியானத்தின் பரவச நிலை அமைந்து இருப்பான்.தன்னில் இறையருளை உணர்ந்து ஆனந்தத்தில் திளைப்பன்.
          பக்தியின் உச்சகட்ட நிலை வந்ததும் ஆண்டாள் போல பைத்தியமாகிவிடுவான்.ஸ்ரீ ஹரியின் திருவிளையாடல் கதையை மட்டும் கேட்பான்.வெட்கத்தை விட்டு அவன் திருநாமங்களை உரக்க பாடுவான்.
"பக்தி கொண்ட பிரகலாதன் மற்ற நண்பர்களுடன் ஒட்டாமல் தனித்து அமர்ந்திருந்தான்.இறைவனை நினைத்து பரவச நிலையில் திடீரென
சிரிப்பானாம்.கண்களில் நீர் பெருக அவரை நினைத்து பாடி ஆடி மகிழ்வான்."
என்று ஸ்ரீ பாகவதபுராணம் கூறுகிறது.இறைவனை நினைத்து பாடி தியானநிலை அடைந்து சித்தமும் சரீர உணர்வும் இல்லாமல் ஆத்மாவாக இருக்கும் இறைவனோடு ஒன்றி போய்ஆனந்தத்தில் திளைத்தார்.இது பிரேமாத்துவைத நிலையாகும்.
                                                                                             (தொடரும்)

Thursday 17 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 7

 "யல்லப்த்வா புமான் ஸித்தோ பவதி 
          அம்ருதோ பவதி த்ருப்தோ   பவதி"
பகவானின் பக்தி பிரேமாமிர்த்ததை ஒரு முறை பருகி விட்டால்  அவன் பெரும் பேரு பெற்றுவிட்டான்,நிறைவடைந்துவிட்டான் என்று அறிய வேண்டும்.இனிமேல் அவன் எதுவும் சிரமப்பட்டு அடையவேண்டிய தேவையில்லை.அவன் சித்தன் ஆகிவிடுவான் .உபநிஷதங்கள் கூறுவது போல ஆத்மாவை உணர்ந்துகொண்டவன் அமுததன்மை அடைவான்.பிறவியில் வரும் துன்பங்களை வென்று விடுவான்.ஏனெனில் இறைவன் மீது மட்டும் அவனுக்கு பற்று உண்டாகிறது.அணிமா முதலிய சித்திகளை துச்சமாக நினைப்பான். சித்திகளே இவனை தேடி வருமாம். 
           பாகவத புராணம் கூறுகிறது:
               என் மீது சித்தத்தில் பிரேமை பக்தி கொண்டவர்கள் தன ஆத்மாவை என்னிடமே அர்ப்பணம் செய்தவர்கள் பிரம்ம பதவியையும் இந்திர லோக பதவியையும் விரும்ப மாட்டார்கள்.பூலோகத்தையும் ஆளும் பேரரசு பதவியும் அவர்களுக்கு துச்சமாக இருக்கும்.
          அறுபது மூன்று நாயன்மார்களும் தேவாரம் திருவாசகம் பாடியவர்களும் புளகாங்கிதம் அடைந்து கண்களில் கண்ணீர் பெருக ஆண்டவை நினைத்து எல்லாவற்றையும் மறந்தனர்.சாயுஜ்யம் முதலிய நான்கு வித முக்திகளும் சித்திகளும் அவர்கள் முன் கைகட்டி நிற்கும்.
          இதில் தான் நிரந்தர சுகம் கிடைக்கும் என்று மனிதன் வேறு வேறு ஆசைகளுக்கு அடிமையானதால் தான் வினைபயன்கள் தொடர்ந்து பல பிறவிகள் எடுக்க அவசியமாகிறது.ஆனால் பரமனான இறைவனில் தன்னிறைவு கண்டு விட்டால் துன்பமில்லை பயமில்லை.பிறவியும் இல்லை .மரணத்தை நினைத்து அஞ்சவும் வேண்டாம்.
        "  யத் ப்ராப்ய ந கிஞ்சித்வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே  நோத்ஸாஹி பவதி"
          மனதில் பரமனிடம் அன்பு பெருக்கு ஏற்பட்டு பக்தி உருவாகிவிட்டால், மற்ற சுகங்கலயடைய வேறுபக்கம் திரும்பமாட்டான். ஜகத்தினில் பற்று,இஸ்வர்யம் ,சௌந்தர்யம், பலம்,புகழ்,ஞானம்,வைராக்யம்,ஆகியவை சுக வாழ்விற்கும் தியாகத்திற்கும் தேவைபடுபவை என்று அனைவரும் விரும்பி அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.ஆனால் உலகில் நிரம்பி வழியும் அனைத்து சந்தோசங்களும் ஆண்டவனின் பிரேமை பக்தி கடலின் சிறு துளிக்கும் ஈடாகதவை. பகவான் காந்தம் போல தன்னில் இழுத்து ஆட்கொண்டுவிட்டால் அதை சுகதேவ முனிவரை போல கூறுவார்கள்.
          மோட்சத்திற்கு ஈசனான பகவானின் பக்திக்கு வசமாகிவிட்டால் அவன் அமிர்த கடலில் மூழ்கி விடுவான். அதன் பின் குட்டையில் தேங்கிய நீரை நோக்கி போக மாட்டான்.பக்தியை பற்றிகொள்பவனுக்கு ஏன் மற்ற விஷயங்கள் பிடிக்காமல் போகின்றன.?மற்ற விசயங்களில் சோகங்கள் மறைந்து உள்ளன.சுகங்கள் எல்லாம் அவனுக்கு துன்பமாக தெரிகின்றன.சுகமும் சந்தோசமும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கின்றன.ஆதலால் சுக சந்தோசங்கள் அவனிடம் வந்தாலும் அவனை விட்டு பிரிந்தாலும் அவனுக்கு கவலையில்லை.(தொடரும்)

Wednesday 16 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 6

          முதலில் அந்த பக்தியை பற்றி கூறுகிறார்கள்.
      "அதாதோ பக்திம் வ்யாக்யாஸ் யாம: "
இந்த சூத்திரத்தில் அத,அத: இந்த இரு சொற்களும் தேவரிஷி நாரதர் முன்பே பல சித்தாந்தங்களை கூறிவிட்டார் என்பதை உணர்த்துகின்றன.அதன் பின் தயநிதியான ஸ்ரீ நாரதர் பக்தி மார்கத்தின் ஆச்சரியார் பக்தியின் சொருபத்தையும் அதன் சாதனங்களையும் இனி விளக்க போகிறோம் என்று கூறுகிறார்கள்.
       "ஸா த்வஸ்மின் பரமப்பிரேமரூபா"
          அந்த பக்தி இறைவன் பால் பிரேமை ரூபமாக அதாவது காதலாக உருவெடுக்கிறது.
          பக்தியின் பொருள் பல இடங்களில் பல சூழலில் வேறு வேறு விதமாக மாறுவதும் உண்டு. பக்தி என்றால் விசுவாசம்,பயம் கலந்த பணிவு, சிரத்தையின் வெளிப்பாடு, அல்லது தன்னைவிட மேல்நிலையில் இருப்பவரிடம் செலுத்தப்படும் மரியாதை என்று பல அர்த்தங்களை கூறலாம். ஆனால் இங்கு நாரதர் குறிப்பிடுவது அன்பின் எல்லையே பக்தி, அது இறைவனிடம் மட்டும் செலுத்தக்கூடிய பக்தி, ஞானமோ கர்மமோ எந்த காரணத்தினாலும் உருவாகாத ஆசை சுயநலம் இல்லாத பக்தி.
           அந்த தூய பக்தி இறைவனிடம் மட்டும் உருவாகி விட்டால் அது ஜகத்தில் எந்த பொருளையும் சுகத்தையும் சார்ந்து இருக்காது.புண்ணியங்களால் கிடைக்கும் பரலோக இன்பங்களையும் மோட்சபதவியையும் விரும்ப மாட்டார்கள்.இதை அனன்ய பக்தி என்று கூறுவார்கள்.
          "அம்ருதஸ்வரூபா ச"
            அந்த பிரேமை பக்தி அமுத மயமானது.இனிமையானது.
 பல பிறவிகளில் இருந்து தொடர்ந்து வரும் விருப்பு வெறுப்புகளும் கர்ம பலன்களும் சித்தத்தில் வாசனைகளாக படிந்திருப்பதால் ஜனன மரணங்கள் தொடர்ந்து கொண்டே போகும்.இறைவனிடம் மட்டும் பக்தி உருவாகிவிட்டால் ஜனன மரணம் இல்லாமல் அமுத நிலை அடைந்து விடலாம்.
          பக்தனின் சித்தத்தில் பகவானிடம் வைத்திருக்கப்பட்ட பிரேமை பக்தி என்றென்றும் நூதனமாக அதாவது சலிக்காத தூய சாத்வீக குணங்களுடன் பதிந்து விடும்.அது மற்ற வாசனைகளை அழித்து விடும்.பக்தன் எப்போதும் பிரேமை பக்தியில் திளைத்து பகவானை விட்டு பிரியாமல் இருப்பான். பகவானும் அவனை எந்த சூழலிலும் கைவிட மாட்டார்.(தொடரும்)

Tuesday 15 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 4

         மஹாமுனிவரே என்னுடைய(நாரதர்) வரலாற்றினை கூறுகிறேன் கேளுங்கள்.--முன் ஜென்மத்தில் நான் ஒரு தபோவனத்தில் முனிவர்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரிக்கு மகனாக இருந்தேன். என் தாயுடன் சேர்ந்து குரு குலத்தில் தவம் செய்யும் முனிவர்கள் ஆசிரமத்தில் அவர்கள் இட்ட பணிகளை பணிவுடன் செய்து வந்தேன். ஒரு சமயம் மழைகாலத்தில் தீர்த்த யாத்திரை செய்யும் தவசி மகாத்மாக்கள் அந்த தபோ வனத்தில் தங்க வந்தார்கள். நான் அவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பணிவிடை செய்தேன். வேலை நேரம் போக அவர்கள் மற்ற சிஷ்யர்களுக்கு சொற்பொழிவாற்றியதை கேட்டேன்.அச்சமயம் இறைவன் பால் ஈர்க்கப்பட்டேன்.அவர்கள் எனது பணிவான சேவைகளையும் அமைதியான குணத்தையும் விளையாடும் அந்த வயதில் இறைவனிடம் இருக்கும் பக்தியையும் கண்டு மகிழ்ந்தனர்.மழைக்காலம் முடிந்து அங்கிருந்து செல்லும்போது என்னை அன்புடன் அழைத்து எனக்கு ஞான உபதேசம் செய்தனர். 
          அவர்கள் சென்றவுடன் என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டது.பரமனை நினைத்து அவன் அன்பில் கரைந்தேன்.முனிவர்களுக்கு சேவை செய்யும் பணிகளை தொடர்ந்தேன்.ஒரு நாள் விடியலில் என் தாய், பசு மடியிலிருந்து பால் கறந்து கொண்டு இருந்தபோது ஒரு கருநாகம் அவளை தீண்டி விட்டது.
என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்த எனது தாய் இறந்து விட்டாள். 
தாயை இழந்த நான் அந்த தபோவனத்தை விட்டு வடதிசை நோக்கி கால் போன போக்கில் நடந்தேன். ஓர் அடந்த காட்டை அடைந்தேன்.
          ஒரு காட்டாற்றில் தாகத்தை தீர்த்துக்கொண்டு ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அந்த மகான்கள் கூறியது போல தியானம் செய்தேன். உடனே என் மனம் ஒருநிலைபட்டது. பக்தியுடன் இறைவன் பாத கமலங்களை நினைத்தேன்.அந்த தியான நிலையில் ஸ்ரீ ஹரியின் பிரேமை மிகுதியால் கசிந்துருகி கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஒரு பரவச நிலை கிட்டியது. என் மனக்கண் முன் பேரொளியுடன் பிரகாசித்து மனதை கொள்ளைகொள்ளும் திருமேனி அழகுடன் பாவங்களை போக்கும் ஸ்ரீ ஹரி தோன்றினார். அதை கண்டு அந்த பரமானந்த அமுத வெள்ளத்தில் மூழ்கிவிட்டவன் அதை தாங்காமல் மனம் பதற்றமடைந்து நடுங்கி விழுந்து தன்னையே மறந்தேன்.அந்த அற்புத காட்சியால் சகல தேகமும் புல்லரித்து சொல்லிலடங்காத ஒரு பேரின்ப நிலையை அடைந்தேன்.திடீரென மின்னல் போல அந்த காட்சி மறைந்தது.
          நான் மீண்டும் மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு வேட்கை தனியாதவன்  போல அந்த காட்சியை காண யதனித்தேன்.அச்சமயம் என் துக்கத்தையும் ஏக்கத்தையும்  தணிக்கும் வகையில் கம்பீரமான குரலில் ஒரு அசரிரி கேட்டது."அப்பனே இந்த ஜென்மத்தில் என் தரிசனம் உனக்கு கிட்டாது. பக்தியால் பக்குவம் அடையாதவர்கள் என்னை காண முடியாது.என்னை காணும் ஆசை தூண்டுவதற்காகவே சிறிதளவு தெய்வீக உருவத்தை காண்பித்தேன்.என் மீது கொண்ட ஆசையே எல்லா பற்றுகளையும் அறுக்க வல்லது.மகான்களின் சேவையினால் உன் மதி தூய்மை அடைந்து என் பால் ஈர்க்கப்பட்டது. இந்த பிறவியை துறந்து நீ பக்தியோகத்தில் தேர்ந்து பக்தர்களில் பிரதானமாக கருதப்படுவாய்" இதை கேட்டதும் நான் சமாதனம் அடைத்தேன்.
                                 (தொடரும்)      

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 5

         அகந்தை முதலிய துர்குணங்களை வென்ற நான் ஸ்ரீஹரியை பாடி புகழ்ந்து காலத்தை கடத்தினேன். அப்பிறவி கழிந்த பின் நான் பிரம்மதேவரின் புதல்வனாக நாரத மாமுனியாக வந்தேன். "சிருஷ்டியின் கல்ப காலம் முடிந்து பிரளயம் ஏற்பட்ட பின் அடுத்த கல்பகால துவக்கத்தில் யுகங்கள் ஆரம்பிக்குமுன் பிரபஞ்சத்தில் உயிர்கள் பிறந்து வாழ முதன் முதலில் ரிஷிகளை சிருஷ்டித்தார் பிரமமா. அந்த தெய்வ ரிஷிகளோடு ரிஷியாக நானும் பிறந்தேன். நாரதர் என்று பெயர் பெற்றேன்.பக்தர்களுக்கு எல்லாம் முதல்வனனேன்."
            "பிரம்மச்சாரியாகவே இருந்து நாத பிரம்மத்தை ஒலிக்கும் தம்பூராவை மீட்டிக்கொண்டு ஸ்ரீ ஹரியின் குணா நாமங்களை பாடிகொண்டே மூவுலகிலும் தடையின்றி சஞ்சரிகின்றேன்.நாரதரான பின் பிரேமையில் பரவசமாகி நான் பாடி பகவானை அழைத்தால் மருக்ஷணம் என் முன் கோடி இன்பம் தரும் தன் ஒளிமயமான திருமேனி தரிசனம் தந்து என்னை ஆட்கொள்கிறார்.எல்லையற்ற கருணைக்கடலான பிரபு".
            " அன்றிலிருந்து அல்லல்படும் மாந்தர்கள் துயர் தீர எங்கும் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறேன்" இதை கேட்ட பின் வியாச பகவான் பக்தியை பிரதானமாக கொண்டு ஆத்ம தத்துவங்களை விளக்க கூடிய ஒரு மாபெரும் நூலை எழுதினார் . அதுவே ஸ்ரீமத் பாகவத புராணம் என்று புகழ் பெற்றது.
            பாகவத புராணம் என்ற குளிர்ந்த கங்கை நீரில் மூழ்கி இருப்பவர்கள் உலகியல் துன்பங்கள் என்ற வெப்பத்தை உணர மாட்டார்கள்.மேலும் நாரதரை பற்றி அறிய வேண்டுமானால் அவர் எப்படி பட்டவர் என்று ஸ்ரீ மகாபாரதம் கூறுகிறது.
         நற்குணசீலர் நாரதர் தேவர்களாலும் பூஜிக்கபடுபவர்.இதிகாச புராணங்களையும் நான்குவேதங்களையும் நன்கு அறிந்தவர். கல்பகாலதிற்கு முன் நடந்த விசயங்களையும் அறிந்தவர்.அறம்,பொருள், இன்பம்,வீடு,பேறு,ஆகிய தத்துவங்களையும் அறிந்தவர்.சங்கீத ஞானி,கவிஞர் ,பிரகஸ்பதிக்கு சமமான அறிவு படைத்தவர்.தன் யோகபலத்தல் வானகம்,வையகம்,கீழுலகம்,ஆகிய மூவுலகங்களிலும் நடப்பதையும் அறிந்து கொண்டவர். காரணமில்லாமல் மக்களிடம் அன்பு கொண்டவர்.இறைவன்பால் கொண்ட அவரது அன்பான பக்தி உன்னதமானது.அவர் பாதங்களை வணங்கி அவர் இயற்றிய பக்தி சூத்திரங்களுக்கு விளக்கம் தருகிறோம்.அவர் காட்டிய பக்தி மார்கத்தில் சென்று அவர் உபதேசம் செய்த பிரகாரம் வாழ முயற்சிப்போம்.
          இறைவன் மீது பக்தி எப்படி வருகிறது என்று மதுசூதன ஆச்சரியார் சரஸ்வதி பக்தி ரஸாயன நூலில் கூறுகிறார்.
* மஹா புருஷர்களுக்கு சேவை செய்தல்.
*அவர்கள் காட்டிய வழியில் நம்பிக்கை.
*அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெறுதல்.
*சிரத்தையுடன் இறைவனின் கல்யாண குணங்களை கேட்டு பரவசமாவது.
*இறைவனை பற்றி கேட்டறிந்த பின் அவன் மீது அன்பு பெருகி பக்தி உருவாவது.
*பிரேமை பக்தியால் பரமாத்மா சொருபத்தை அறிதல்.
*பாகவத குணங்களை பெறுதல்.
*தன்னையே அற்பணிதுவிட்டு தொண்டு செய்தல் 

.                                                          (  தொடரும் )

Monday 14 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 3

உலகிலேயே மிகபெரிய காவியமாக கருதப்படும் மகாபாரதத்தை இயற்றிய பின்னும் வியாச முனிவர் தன்னிறைவு அடையவில்லை. அவர் அமைதியின்றி தவித்தார். எதோ விட்டுப்போனது போல உணர்ந்தார். ஒரு வேதத்தை நான்கு வேதங்களாக பிரித்தார்.18 புராணங்களையும் எழுதினார். ஆனாலும் அவர் மனம் நிறைவடையவில்லை.
          ஒரு சமயம் சரஸ்வதி நதிகரையில் அவர் கவலையுடன் அமர்ந்து இருந்தபோது நாரதர் அவரை காண வந்தார். வியாசமுனிவர் அவரை உபசரித்த பின் தன மனக்குறையை கூறினார்.மக்கள் அனைவரும் மோட்சம் அடைய நல்வழி காட்டும்புராணங்களை எழுதினேன். மனிதருக்கு உண்டான கடமைகளையும் மனித தர்மத்தையும் கூறி இறுதி நிலையான மோட்சம் அடைய ஞானத்தை பற்றியும் மகாபாரதத்தில் கூறியிருக்கிறேன். ஆயினும் ஒரு குறை என் மனதில் நெருடுவதை உணருகிறேன். இதற்கு நாரதர் கூறினார் . மகாமுனிவரே தாங்கள் அறநூல்களை எழுதி மகத்தான சாதனை படைத்து இருக்கிறீர்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அனால் இறைவன் பால்செலுத்தவேண்டிய அன்பு என்ற பக்தியோகத்தை விசேசமாக கூற மறந்து விட்டிர்கள். பக்தியோகத்தை பிரதானமாக வைத்து ஒரு கிரந்தத்தை எழுதுங்கள்.அதில் ஸ்ரீஹரியின் லீலை அடங்கி யிருக்க வேண்டும். அதை படித்து மக்கள் உய்வடைவார்கள். மனிதர்களின் கடமை, தவம்,கர்மபலன், உயர்ந்த சிந்தனை, லட்சியம், எல்லாம் தன் ஆத்மாவை மேம்படுதுவதர்கவே  அடிபடையாக அமைந்து இருக்க வேண்டும்.அந்த ஆத்மாவின் உயர்வு பக்தி பக்தி யோகத்தால் மிக சுலபமாக கிடைக்கும். 
          உலகியலில் மற்ற நூல்களில் அறம், பொருள்,இன்பம்,வீடுபேறு,எல்லாம் கூறப்பட்டுதான் இருக்கின்றன. அதில் அதிக பெருமை இருக்க வேண்டுமானால் ஆண்டவனின் திருபுகழ் இருக்க வேண்டும்.
          அகில ஜகத்தையும் தூய்மைபடுத்தும் ஸ்ரீஹரியின் மகிமையும் ,கீர்த்தியும்
எந்த கவிதையில் அல்லது நூலில் எழுதபடவில்லையோ அது மிக இனிமையாக இருந்தும் என்ன பயன்?பாடல் வரிசைகள் சரியாக பொருந்தி இலக்கண சுத்தத்துடன் உவமை முதலிய அலங்காரத்துடன் இருந்தும் என்ன பயன்?எச்சில் இலையை உண்ணும் காக்கைகளுக்கு சமமாக விஷய சுகங்களை பெரியதாக மதிக்கும் மனிதர்களே அதை புகழ்வார்கள்.அதற்கு மாறாக இலக்கண பிழையுடன் பாடல் நியதியை விட்டு அலங்கார சொற்கள் போடாமல் புனையப்பட்ட கவிதையில் இறைவன் புகழ் பாடப்பட்டு இருந்தால் அது பாவங்களை அழிக்ககூடியது. மாந்தர்களை தூய்மை படுத்தும்.தூய மானசஏரியில் நீந்தும் அன்னபறவைகள் போலிருக்கும், ஆன்றோர்கள் அதை ஏற்றுகொள்வார்கள். அதை பாடி சாது மகாத்மாக்கள் மகிழ்ந்து போவர்கள்.
                                                                                                              (தொடரும் )

Sunday 13 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 2

 விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் தகவல் தொடர்பிலும் வாகன வசதிகளும், வாழும் வீட்டு வசதிகளும் செய்துகொண்டு கம்ப்யூட்டர் முதலிய அரிய கண்டுபிடிப்புகளையும் அற்புதங்களையும் செய்துவிட்ட மனிதர்கள் பெருமை பீற்றிகொள்வார்கள். முன்னேற்றத்தின் சிகரத்தை தொட்டுவிட்டோம் என்பார்கள்.அவற்றின் மறுபக்கம் எப்படி இருக்கிறது. மனிதன் இன்னமும் ஆசைகளையும் பகைமையும் பொறாமையும் தூக்கி எறியவில்லை. இவற்றின் விளைவால் எப்படிப்பட்ட தீமைகள் உருவாகின்றன என்பதை சொல்லவே வேண்டாம். உலகத்தை வென்றுவிட்ட கர்வம் படைத்த மனிதன் கோபம் பகை வன்செயல் ஆகிய தீமைகளுக்கு அடிமையாகி கிடக்கிறான்.
          பாகவத புராணம் பக்தியில்லாத மனிதனை விலங்குடன் ஒப்பிட்டு கூறுகிறது. - பாலைவனத்து முட்செடியை ஒட்டகம் வாயில் குத்தி ரத்தம் வந்தாலும் மிகபிரியமாக தின்கிறது. அதுபோல மனிதன் துன்பத்தில் முடியும் விஷய சுகங்களை மிக இன்பமாக ஏற்று அனுபவிக்கிறான். உலகில் நாய்போல அவமானங்களை தாங்கிக்கொண்டு வாழவே விரும்புகிறான். கழுதை போல குடும்ப கஷ்டங்களை சுமக்கிறான். அதில் வைராக்யமடைந்து இறைவன் பால் தன மனதை செலுத்த மறுக்கிறான். இறைவன் திருபுகழை படாத நாவு தவளை நாவு. அது வீணாக சத்தத்தை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இறைவன் திருபுகழை கேட்காத காது பாம்பு புற்றுக்கு சமம் . ஏனெனில் பாம்பு போல தீய விசயங்களை மட்டும் கிரகித்து கொண்டுஇருக்கிறது. இறைவனை வணங்காத தலையும் ஒரு சுமை தான். இறைவன் திரு புகழை கேட்டு உருகாத இதயம் அது கல்லால் ஆனது. கோவிலை நோக்கி போகாத கால்கள் எதற்கு? பக்தர்களை தரிசிக்காத அவன் திருநாமங்கள் ஜபித்து கண்ணீர் மல்காத கண்கள் இருந்தும் இல்லாததற்கு சமமாகின்றன. 
          மேலும் பாகவதம் கூறுகிறது:
உலகில் தனசெல்வங்களை இழக்கும் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள்,ஆகியோரின் பற்று, பாசம்,பகை,சோகம், ஆசை, தோல்வி,நான்,எனது என்ற பற்று,இவை துக்கத்திற்கு மூல காரணங்கள். 
இவையெல்லாம் எதுவரை தொடர்கின்றன? ஆண்டவனே உன் திருவடிகளை பற்றினேன் அபயம் தர வேண்டும் என்னை உன்னுடயவனாக்கி  கொள் என்று கூறும் வரை தான்.
          தேவரிஷி நாரதர் பெரும் பேரு பெற்றவர் சாரங்கபாணி நாராயனரின் புகழை தம்பூராவை மீட்டிக்கொண்டு , பாடிக்கொண்டு அல்லல் படும் உலக மக்களை ஆனந்தகடலில் அமிழ்துகிறார். 
          சில மகான்கள் கடவுள் அம்சமாக அவதரிக்கிறார்கள். தனக்கென்று அவர்களுக்கு சாதிக்க எதுவும் இருக்காது. மக்களை கடைதேற்றவே அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு துணையாகவும் பலர் ஜென்மமெடுக்கிரர்கள். அவதாரங்களின் திருவிளையாடல்களில் பங்குகொள்கிறார்கள். தேவரிஷி நாரதர் முக்திநிலையை விரும்பாமல் மக்களுக்காகவே வாழ்ந்தார். மக்களை இறைவனடி சேர்பதற்காகவே வாழ்ந்தார். எல்லா யுகங்களிலும் எல்லா புராண சாஸ்திரங்களிலும் எல்லா லோகங்களிலும் நாரதர் பெரும் பங்கு வகிக்கிறார். தன் யோகபலத்தல் சித்தியால் எங்கும் தடையின்றி செல்கிறார். அனைவரையும் நல்வழிப்ப்டுதுகிறார். ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர், பிரகலாதன்,சுகதேவர்,துருவன்,இவர்கள் அனைவரும் இவரிடம் மந்த்ரோபதேசம் பெற்று சித்தி அடைந்தவர்கள். 
               

Saturday 12 November 2011

நாரத பக்தி சூத்திரம் முன்னுரை



ஷட் தரிசனம் என்று சொல்லப்படும் ஆறு தத்துவ சாஸ்திரங்களில் பக்தியோகம் முக்யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தியானயோகம் (பதஞ்சலி யோகம்),ஞானயோகம் (வேதாந்தம்-உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம் ) ஹட யோகம் , ராஜயோகம் , கர்மயோகம்,(பகவத் கீதை)ஆகிய யோகங்களில் பக்தியோகம் மிக சுலபமானது,எளிமையானது. இந்த பகதியோகமானது மேற் சொன்ன மற்ற அனைத்து யோகங்களில் அங்கம் வகிக்கிறது. ஏனெனில் அனைத்து யோகங்களிலும் பக்தி இல்லாமல் வெற்றி பெறாது. ஆதலால் ஆன்மீக பாதையில் குறிக்கோளை அடைய வேண்டுமானால் பக்தி மிக மிக அவசியம். இங்கு ஸ்ரீ நாரதர் காட்டிய வழியில் அவர் இயற்றிய பக்தி சூத்திரங்களை எழுதி விளக்கமளிதிருக்கிறோம்.
          பக்தி யோகத்தின் ஆசாரியார் ஸ்ரீ நாரதர், இவர் 84 சூத்திரங்கள் மூலமாக பக்தி தத்துவத்தை வியாக்யானம் செய்துள்ளார். பக்திக்கு துணையாக உள்ள சாதனங்கள், பக்தியின் மகிமை, பக்திக்கு குறுக்கே வரும் இடர்கள் ஆகியவற்றை விரிவாக கூறியிருக்கிறார்கள். 
          உருவமுள்ள கடவுளின் (பிரம்மத்தின்) தெய்வீக சொருபத்தில் ஏற்படும் அன்பு தான் பக்தி. இது ஞானத்திற்கு புறம்பானது அல்ல. ஸ்ரீ கிருஷ்ணாஅவதாரத்தில் கோபிகா பெண்கள் பக்தி செய்து ஞானம் பெற்றார்கள்  என்று தேவரிஷி நாரதரே நிருபித்து இருக்கிறார். பரமாத்மாவிடம் அன்பு செலுத்தாமல் ஞானம் வராது. அதே போல பக்தியினால் கர்ம யோகம் சித்தி பெறுகிறது. பக்தி ரசத்தை அந்த ஆனந்தத்தை அனுபவித்தவர்களே அறிவார்கள். 
           பாகவத புராணம் கூறுகிறது:
                      நித்தமும் சூரியன் உதயமாகிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. அதில் உயிர்கள் நித்தமும் பிறக்கின்றன, இறக்கின்றன. இந்த வாழ்வியலில் ஆறு அறிவு இல்லாத விலங்குகளும், பூச்சி புழுக்களும் வாழ்ந்து மடிகின்றன. இவற்றின் வாழ்வு அர்த்தமில்ல்லாமல் போகிறது.ஏனெனில் இறைவன் அருளை உணராத பிறவிகளாக இருப்பவைகள். நித்தமும் எதையும் உண்டு வாழ்கின்றன, இனபெருக்கம் செய்கின்றன, பின்பு மடிந்து விடுகின்றன. ஆனால் மனித உயிர் அப்படி அல்ல. அவன் இந்த கீழான விலங்கினதுடன் சேரகூடாது. அவைகள் போல் உண்டு வாழ்ந்து மடிவதற்கா மனித பிறவி எடுத்து  இருக்கிறான்? இறைவன் அருளை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? பாரதத்தின் தத்துவ சாஸ்திரம் உலக வாழ்வியலே பெரிது என்று சொல்ல வில்லை . அதனினும் மேலானது ஒன்று இருக்கிறது. அதுவே நிலையான பேரின்பமாகும். 
          பிறப்பெடுப்பது உலகியல் வாழ்கையை அனுபவிபபதர்க்காகவே தான் என்று மற்ற தேசத்து கலாசாரங்கள் கூறுகின்றன. மேலை நாட்டு மக்களும் அதையே ஆமோதிகிறார்கள். ஆனால் இந்திய நாட்டு தத்துவ ஞான சாஸ்திரங்கள் அப்படி கூறவில்லை . 
          இந்த பூமியில் ஆனந்தம் காண எவ்வளவோ விஷயங்கள் இருக்க தான் செய்கின்றன. நல்ல சுகமாக, ஆனந்தமாக,வசதியாக,  வாழ பழையகாலத்து இந்தியமக்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தவில்லை. 
          எகிப்து முதலிய நாட்டினர் போல பிணங்களை பாடம் செய்து வைக்கவில்லை. நிலையற்ற பொன்னும் வைரங்களும் அவர்கள் போல சேர்த்து வைக்கவில்லை. அதற்க்கு மாறாக உயிர்களும் மனிதர்களும் பிறவி எடுத்த தேகம் நிலையில்லாதது . அதற்குள் இருக்கும் ஆத்மா அழிவில்லாதது அதை மட்டும் உணர்ந்து கொண்டால் பேரின்பம் அடையலாம் என்று இந்தியர்கள் கருதினார்கள்.
                                                                                                                 (தொடரும் )

நாரத பக்தி சூத்திரம்




பக்தியோகம் மார்க்கம் மிக எளிமையானது. இறைவன்பால் அன்பும் பிரேமையும் மனதில் நிறைந்து இருந்தால் அது மிக சுலபமாக மனிதர்களை இறைவனிடம் சேர்த்துவிடும். இந்த தத்துவத்தை நாரத பக்திசூத்திரம் உணர்த்துகிறது.
          எல்லாம் வல்ல சர்வசக்தி படைத்த இறைவன் ஒருவனே தான், உருவமற்றவன். இந்து மதத்தில் இந்த சித்தாந்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மனிதர்களின் மனபாங்கு வேறுவிதமாக உள்ளது. அதன் காரணத்தால் அவர் அவர்கள் பிரியப்படும் தெய்வங்களை வழிபட இந்துமதம் அனுமதி அளிக்கிறது. நாரத பக்தி சூத்திரம் எந்த தெய்வ வழிபாட்டிற்கும் பொருத்தமானது. அவர் வைணவ சம்பிரதாயத்தை தோற்றுவித்தாலும் அவர் எழுதிய பக்தி சூத்திரங்களை நமக்கு இஷ்டமான எந்த தெய்வத்தையும் வசபடுத்தலாம். 
          மேற்சொன்ன சித்தாந்தத்தை வைத்து நான் சிவனடியாரின் தெயவிககதைகளை மேற்கோள் காட்டியும் ஆல்வார்பாசுரங்களை உதாரணம் காட்டியும் நாரத பக்திசூத்திரதுடன் எழுதியுள்ளேன்.தங்களது மேலான ஆதரவுடன் தங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். இதை ஒரு தொடராக வெளியிடுகிறேன். நன்றிகலந்த வணக்கங்களுடன் 
                                                                                               சுலோச்சனா பத்மநாபன்