Wednesday 7 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 25

திருநாவுக்கரசர் முன் அலங்காரமாக வந்து நின்றார்கள்.வில் போன்ற நெற்றி விளைநதிழுக்க கான அமுதம் பொங்கும் கொல்வய் கனிவாய் ஒளிவீச கவர்ந்திழுக்கும் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினார்கள்.கற்பக பூந்தளிர் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவர்கள் நடனமாடவும் தொடங்கினார்கள்.அப்சரசுகள் அப்பரின் முன் நடனமாடி பூமாரியை அவர் மீது அள்ளி பொழிந்தார்கள்.அரம்பையர்கள் பலவிததாலும் அப்பரின் மனநிலையை கவர்ந்திழுக்கவும் குலைக்கவும் முயன்றார்கள்.ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந்துரவியாரான அப்பரோ அந்த பேரின்ப நிலையிலேயே நினைவெல்லாம் நிலைத்திருக்க தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருதொன்டிலேயே நிலையாக நின்றார்.அவருக்கு மங்கையரும் சிவமாகவே தென்பட்டார்கள்.

          மனதில் வேறு ஆசைகளை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு கோவிலுக்கு சென்று பக்தி கொள்வது போல இருப்பது வெளிவேசமாகும்.பகவான் மீது அன்பு இதயத்தில் இருந்து வரவேண்டும்.உள்ளம் உருகி பாட வேண்டும்.உலக விசயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவன் பக்தியார் உருவாகும் பரமானந்தத்தை அறிய மாட்டார்கள்.அது போல இறைவன் பக்தி என்ற தேனை குடித்த பக்தர்கள் உலகியல் விஷயங்கள் என்ற கரும்பு சாற்றை நோக்கி போக மாட்டார்கள்.
         "அவ்யாவ்ருத பஜனாத் "
          பக்தி பகவத் பிரேமையினால் வருகிறது என்பது உண்மை தான்.அது மாறாத பக்தியாக உருவாக வேண்டுமானால் அகண்ட பஜனை அதாவது இடைவிடாத பஜனை செய்ய வேண்டும்.
          இந்த மனம் மிக மோசமானது.இதில் மிருககுணமும் உண்டு.தேவ குணமும் உண்டு.இதை இழுத்து பிடித்து பகவான் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.இல்லையேல் நொடியில் அது வேறு விசயங்களை நோக்கி ஓடி விடும்.அதற்க்கு மனம் வைராக்கியம் அடைந்து பக்குவப்படவேண்டும்.
         தியானம்,பஜனை இன்று செய்தோம்,நாளை செய்யவில்லை என்று இருக்ககூடாது.அது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
         கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இதையே கூறுகிறார்.
        அனன்ய பக்தி கொண்டு என்னை என்றும் நினைப்பவர்களுக்கு நான் சுலபமாகிவிடுகிறேன்.ஏனெனில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
இறைவனை நினைத்து நினைத்து அகண்ட பஜனை செய்வார்கள்.
         அன்றாட வேலைகள் செய்யும் போதும் (ஸ்நானம்,போஜனம்)வேறு பல கடமைகள் செய்யும் போதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்.உயிர் மூச்சில் நாம ஜபம் கலந்து விடும்.(தொடரும்)

Tuesday 6 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 24

ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஆனந்த ரூபமானது.அது அன்பு மயமானது.ஏனெனில் ஆத்மா,பரமாத்மா இறைவனின் அம்சம் தான்.இறைவன் பரமானந்த சொரூபமானவர்.பரம பிரேமை என்ற அன்புமயமானவர்.
         ஜீவனில் சித்தம் ஆசை,துக்கம்,கிலேசம் முதலிய வற்றை பற்றிக்கொள்ளும் போது அது கலங்கி போகிறது.அதில் தெளிவு ஏற்படாது.ஆதலால் துக்கத்தை தரும் ஆசைக்கு அடிமையாகி விடுகிறது.ஆதலால் சித்தத்தில் பரமாத்மனின் தெய்வீக சொரூபத்தின் ஒளி பிரதிபலிக்காமல் இருக்கிறது.அந்த ஆத்ம ஜோதி தெரிய வேண்டுமென்றால் விசயங்களை நோக்கி ஓடும் எண்ணங்களை இறைவன் பால் திருப்ப வேண்டும்.அதற்க்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன.மற்ற உலக விஷய ஆசைகளை துறக்க வேண்டும்.உலக விஷய சுகங்களில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி செலுத்த முடியாது.பற்றில்லாமல் உலகில் கடமைகளை செய்துகொண்டு பக்தி செய்ய  முடியும். ஏனெனில் இறைவன் ஒருவரே அன்புக்கும் ஆசைக்கும் உரியவர்.அவரிடம் மட்டும் பிரியம் வைக்க வேண்டும்.ஏனெனில் நான்,எனது என்று நினைக்கும் போது தான் அங்கு ஆசை உண்டாகிறது.பகவானின் பக்திக்கு முன் நான் என்பது எங்கே வரும்?நான் பகவானுக்கு சொந்தமாகிவிட்டேன் அல்லவா,எனது என்பதும் இல்லை,ஏனெனில் எனது என்பது உலகில் எதுவும் இல்லை.எனக்கு சொந்தமானது அனைத்தையும் அவர்க்கு அர்ப்பணித்து விட்டேன் அல்லவா.
          புலன் வழி சுகங்களில் மனதை செலுத்தினால் அவற்றில் மனம் சிக்கிக்கொள்ளும்.விசயதியாகம் என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது.பகவான் சம்பந்தமான விசயங்களை நாம சங்கீர்த்தன பஜனை வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரான விஷயங்கள்.
         மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணிப்பார்க்கும்போது மனதை பிரவிபெருங்கடலில் வீழ்த்திவிடும். ஆதலால் சான்றோர்களை சேவிக்கவேண்டும்.பக்தர்களோடும் நல்லவர்களோடும் நட்பு கொண்டு வாழவேண்டும்.முடிந்தவரை இது பகவானின் கட்டளை என்று நினைத்து பலனை கருதாமல் கடமைகளை செய்யலாம், அது தியாக வாழ்க்கைக்கு சமமாகும்.
            ஒரு சமயம் திருநாவுக்கரசர் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம் ராமேஸ்வரம்,திருநெல்வேலி, திருகாளாப்பெர் முதலிய திருப்பதிகளை கண்டு வணங்கி ஆங்காங்கே திருப்பதிகங்களை பாடித்தந்து பாண்டியநாட்டை விட்டு சோழநாட்டை அடைந்து திருப்புகலூர்க்கு வந்து சேர்ந்தார்.. அங்கேயே தங்கி இருந்து பல திருப்பதிகங்களை பாடியவண்ணம் வழிபாடு செய்தார்.
          அவருடைய பற்றற்ற நிலையினை உலகுக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினார்.அதனால் திருநாவுக்கரசர் உலவாரதிருப்பணி செய்யும் இடங்களில் எல்லாம் பரர்கற்களோடு   செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தார்.அப்பர் அவற்றை எல்லாம் பருக்கை கற்களோடு சேர்த்து கூட்டி உலவாரத்தில் ஏந்தி தடாகத்தில் வீசி எறிவார்.புல்லுக்கும்,கல்லுக்கும், பொன்னுக்கும் மணிக்கும் சொல்லை தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றுஅற்று நிலையில் இருந்தார்.அப்பரின் இந்த தூய துறவு நிலையை மென்மேலும் விளங்கசெய்ய பூம்புகலூர் புண்ணியனார் விரும்பினார்.
          அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானகத்தில் இருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல மன்னுலகத்திர்க்கு   வந்தார்கள்.
                                                                                                               (தொடரும்)
                                                                

Monday 5 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி23

          இவர்கள் பக்திக்கு இருப்பிடமான இறைவனுடன் இரண்டற கலந்து விடுகிறார்கள்.மற்ற ஞானம் முதலிய விஷயங்கள் முக்கியமில்லாமல் போய்விடுகின்றன என்று நாரதர் கூறுகிறார்.
        "ஸ்வயம் பலரூபதேதி ப்ரஹ்ம குமாரா:"  
          சனகாதி முனிவர்களும் ஸ்ரீ தேவரிஷி நாரதரும் பக்தியால் தான் பக்தியின் உயர்ந்த நிலைக்கு போக முடியும் என்கிறார்கள்.பக்தியே சிறந்த பக்தி என்ற பலனை தருகிறது.ஆதலால் (அதுவே)பக்தி தாமே பலனாக இருக்கிறது.பக்தர்கள் பக்தியை வளைக்கவே மேலும் பக்தி செய்கிறார்கள்.அதாவது இறைவனை நேசிக்கிறார்கள்.பக்தி இயற்கையாகவே தாமாக வருகிறது.அதை விட சிறந்தது எதுவும் இல்லை.அது ஆண்டவனையும் வசப்படுத்தி விடுகிறது.
       "  ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் 
ந தேன ராஜ பரிதோஷ: க்ஷ்தாசாந்திர்வா "
          அரசனின் அரண்மனையும் ராஜ போக உணவும் நன்கு அறிந்து கொள்ளும் போது அதை பற்றி முழு ஞானம் தான் ஏற்படுகிறது.ஆனால் அனுபவ பூர்வமாக உணர முடியாது.அதாவது அரசனின் அரண்மனை பற்றியும் அரசனை பற்றியும் அறிந்து கொண்டால் அரசனை மகிழ்விக்க முடியுமா?
          அரசன் அறங்காவலன் மிகுந்த படை பலம் பெற்று வலிமையானவன்.குடிமக்களுக்கு நன்மை செய்பவன் என்று தெரிந்து கொண்டால் அரசனிடம் நட்பு கொண்டாட முடியாது, அல்லது அரச போக உணவை அறிந்து கொண்டால் பசி தீராது.அது போல வேத சாஸ்திரங்களை படித்து இறைவனை தத்துவார்த்தமாக அறிந்து ஞானம் பெற்றாலும் அந்த இறை அனுபவம் கிட்டாது. இறை அனுபவம் தியானத்தாலும் யோகத்தாலும் மட்டுமே கைகூடும்.இறைவனை தியானித்துக்கொண்டு இருந்தால் பிரேமை பக்தி முற்றிய நிலை அடையும்.அதனால் உள்ளம் கரைந்து இறை அனுபவம் உண்டாகும்.
         பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
பக்தி மிக கொண்டு என்னை தொழுதால் நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பேன்.அவர்களும் என்னுள் இருப்பார்கள்.
 "தஸ் மாத் சை(सै )வ க்ராஹ்யா முமு க்ஷூ பி " 
          பிறப்பு இறப்புகளில் இருந்து பற்று என்ற பந்தத்திலிருந்து விடுபட் வேண்டுமானால் பக்தியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
         பிரேமை பக்தியோடு தன வாழ்க்கை யை இணைத்து கொண்டால் பகவானின் தெய்வீகத்தை பிரத்யட்சமாக உணரலாம்.மேலான பக்தியில் ஈடுபட தியாகராஜ சுவாமிகளும் புரந்தர தாசரும் ஆண்டவனை பிரத்யட்சமாக கண்டார்கள்.அவர் அருளை பெற்று சித்தி அடைந்தார்கள்.யோகிகளும் முனிவர்களும் சிரமப்பட்டு கிடைக்கும் முக்தி பக்தர்கள் முன் அடிமை போல வந்து விடுகிறது.ஆனால் பக்தர்களோ முக்தியை விரும்ப மாட்டார்கள்.பகவானை தான் விரும்புவார்கள்.இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
      "தஸ்யா ஸாதனானி காயன்த்யா சார்யா:"  
கர்மயோகத்தையும் ஞானத்தையும் விட பக்தியே சிறந்தது என்று கூறிவிட்டு பக்தி யோகத்தை கூறும் நாரதர் பக்தி மார்க்கத்தை பின் பற்றும் ஆச்சாரியர்கள் உபதேசிக்கும் உபாயங்களை கூறுகிறார்.
       " தத்து விஷயத்யாகாத் ஸ ங்கத்யாகாச்ச"
பக்தியோக வழியில் செல்ல வேண்டுமானால் ஆசைகளை தூண்டும் விசயங்களை துறக்க வேண்டும்.அந்த இன்பம் என்று கருதப்படும் விசயங்களில் ஒட்டுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.(தொடரும்)

Sunday 4 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 22

அந்த அம்மையாருக்கு ஓர் உபாயம் தோன்றியது.உடனே அவர் தம் கணவரை நோக்கி" நம் வறுமை நீங்குவதற்காக இன்று பகல் பொழுதெல்லாம் வயலில் செந்நெல் விதைத்தோமே அவவிதைகள் இப்போது சேற்றில் ஊறி முளை விட்டிருக்கும் அவற்றை ஒரு கூடையில் அள்ளிக்கொண்டு வந்தால் அவற்றை கொண்டு கூடியவரை சோறு சமைக்கலாம்.இதை தவிர வேறு வழி எனக்கு தோன்றவில்லை".என்றார்.
          தம் மனைவி கூறிய வார்த்தைகளை கேட்டதும் நாயனாருக்கு பெருஞ்செல்வம் பெற்றது போன்றதொரு பெரு மகிழ்ச்சி போங்க வயலில் விதைத்த செந்நெல்லை தோண்டி எடுத்துவர புறப்பட்டார்.
        (விதை நெல்லை விதைக்கே வேளாளர்கள் பயன் படுத்துவார்களே தவிர விதையை குத்தி சாப்பிடும் வழக்கம் இல்லை)
         வானம் பெருகி பெருமழை பொழிந்து கொண்டிருந்த அந்த நள்ளிரவில் எங்கும் ஒரே இருள் சூழ்ந்திருந்தது.வழி திசை கண் மண் எதுவும் தெரியாத கும்மிருட்டு சூழ்ந்த உலகத்தவர் அஞ்சி நடுங்கும் படியான அந்த நடு சாமத்தில் மாறனாரோ உள்ளூர சிவனடியார் அன்பு ஊக்க தூண்டுவதால் ஓர் கூடையை தமது தலையில் கவிழ்த்திக்கொண்டு வயலை நோக்கி நடந்தார்.திசை தெரியாத கருமிருள் படலதினூடே மாறனார் தமக்கு பழக்கமான வழித்தடத்தை குறிப்பால் உணர்ந்து காலினால் தட்டி தடவியவாறு வயலை அடைந்தார்.அங்கு வயலில் மலை நீரில் மிதக்கும் செந்நெல் முளைகளை தம் கையினால் சேகரித்து அள்ளி அள்ளி தம் கூடை நிறைய நிரப்பினார்.பிறகு அந்த பெருங்கூடையை தம் தலை மீது தூக்கி சுமந்து கொண்டு வீடு நோக்கி வேகமாக திரும்பி வந்தார்.
         அவர் வருகையை பேராவலுடன் எதிர்பார்த்து அவர் மனைவியார் தம் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்.நாயனார் வந்ததும் அவரது தலையிலுள்ள கூடையை அன்புடன் வாங்கிகொண்டார்.நெல் முளைகளில் படிந்திருந்த சேறு போகும்படி அவற்றை நன்றாக நீரில் கழுவி ஊற்றினார்.நாயனாரை நோக்கி அடுப்பில் தீ மூட்ட விறகு இல்லையே என்றார்.மாறனாரோ தம் வீட்டின் கூரையோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கிலமான வரிச்சு கொம்புளை வெட்டி அடுப்பில் தீ மூட்ட கொடுத்தார்.அதன் பின் தம் வீட்டு விருந்துக்கு வந்திருக்கும் சிவனடியார் வழி நடந்த இளைப்போடும் வருந்தும் பசியோடும் துன்புருவாரே என்று நினைத்து அன்புடன் தன் வீட்டு கொல்லை புறத்திற்கு சென்று அங்கு குழிகளில் முளைத்திருக்கும் சிறு கீரைகளையும் பூசணி முதலியவற்றின் புன்செய் குரும்பயிர்களையும் கையினால் தடவி வேரோடு பறித்துக்கொண்டு வந்து மன மகிழ்வோடு மனைவியாரிடம் தந்தார்.அவர் சுத்தமான நீர் விட்டு கழுவி புனிதமான பாத்திரத்தில் வைத்து தன் கைதிறமையினால் வகையாக கறி சமைத்தார். இனி சிவனடியாருக்கு இங்கே விருந்து பரிமாறி திருப்தியாக அமுது செய்விப்போம் என்றார்.
           சிவனடியாரோ ஒருபுறம் உறங்குபவர் போல படுத்திருந்தார்.எவராலும் உணர முடியாத ஒருவரான அப்பெருமானுக்கு விருந்து தயாராகிவிட்டதை உணர்த்த விரும்பி மாற நாயனார் அடியாரின் முன்னே சென்று துயிலை நீக்கினார்.
         பெரியவரே எழுந்தருள்க மாயை இருளில் அழுத்திக்கிடக்கும் அடியேன் உய்யும் படி எழுந்தருளி இங்கு திருவமுது செய்ய அருள்க என்று மாற நாயனார் அன்புடன் அழைத்தார்.உடனே சிவனடியார் வேடந்தாங்கிவந்த சிவபெருமான் சோதி வடிவமாய் எழுந்தருளினார். அந்த சோதி வடிவமான காட்சியை கண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் திகைத்து மயங்கி குழம்பினார்கள்.சிவபெருமான் மனம் மகிழ்ந்து ரிஷப வாஹனத்தில் உமாதேவியாருடன் அவர்களுக்கு காட்சி தந்தருளினார்.(தொடரும்)

Saturday 3 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 21

இதற்க்கு உதாரணமாக அரிவாட்டாய நாயனார் கதையும் இளையான்குடி மாற நாயனார் கதையும் கூறலாம்.உளவு தொழில் புரியும் வேளாளர் குலத்தில்,அக்குலத்தினர்  செய்த தவத்தினால் மாறனார் என்னும் பெயருடன் ஒருவர் சிறந்து விளங்கினார்.மாறனார் படிப்பறிவும் ஞானமும் இல்லாதவர்.பக்தியால் மட்டும்இவருக்கு  இறைவனருள் எப்படி கிடைத்தது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

                                            

          மாற நாயனார் தம் இல்லத்திற்கு எந்த நேரத்தில் சிவனடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுப்பதையே பெருந்தொண்டாகவும் தம் பிறவி பயனாகவும் கருதி வாழ்ந்து வந்தார்.இவ்வாறு அவர் வாழும் நாளில் சிவபெருமான் ஓர் எண்ணம் கொண்டார்.சிவனடியாருக்கு உணவிடும் திருத்தொண்டை மாறனார் செல்வம் மிகுந்திருக்கும் காலத்தில் செய்வதோடல்லாமல் வறுமை வந்தடைந்து துன்புறுத்தும் காலத்திலும் அத்திருதொண்டை தளராது செய்யும் வல்லமை கொண்டவர் என்பதை உலகுக்கு உணர்த்த கூத்த பெருமான் விரும்பினார்.அதனால் மாறனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல தேய்ந்து மறைந்து போகும்படி திருவுல்லம்  கொண்டார். வளமான செல்வம் நாள் தோறும் மாறி மாறி மறைந்ததும் வாட்டும் வறுமை நிலை மாறனாரை வந்தடைந்தது.ஆயினும் அடியார்களுக்கு சோறிடும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்பும் தளர்ச்சியும் கொள்ளாமல் குறைவற செய்து வந்தார்.நாளுக்கு நாள் வறுமை வளர வளர அவர் தம் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும் பிறகு தம்மையே விற்று கொடுக்கத்தக்க அளவுக்கு கடன்கள் வாங்கியும் சிவனடியார்களுக்கு உணவிடும் திருத்தொண்டை சிறிதும் வழுவாமல் அன்போடு செய்து வந்தார்.
          இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில் மாறனார் திருத்தொண்டின் பெருமை இத்தகையதென இவ்வுலகிற்கு எடுத்து காட்டுவதற்க்காக சிவபெருமான் ஒரு சிவயோகி போல திருவேடம் தாங்கி ஒரு மழை காலத்தில் நள்ளிரவில் மாற நாயனார் வீட்டுக்கதவை தட்டினார்.அச்சமயம் மாறனார் எந்த உதவியும் கிடைக்காததால் உண்ணுவதற்கு கூட உணவில்லாமல் பல நாள் பட்டினி கிடந்தாலும் பெரும் பசியை சமாளித்துக்கொண்டு இரவில் வெகுநேரம் வரை கண் விழித்திருந்தார். 
          தம் இல்லத்திற்கு சிவனடியார் வருகையை உணர்ந்து கதவை திறந்தார்.சிவனடியார் நிற்பதை கண்டு உள்ளம் மகிழ்ந்து வரவேற்று விருந்தினராக அன்போடு உள்ளே அழைத்து சென்றார்.பின்பு மழையால் நனைந்திருக்கும் சிவயோகியாரின் உடம்பிலுள்ள ஈரத்தை துடைத்து நல்லதொரு இடத்தில அடியாரை அமர செய்தார்.
          நாயனார் தம் மனைவியாரிடம் சென்று தம் வீட்டிற்க்கு வந்திருக்கும் சிவனடியார் மிகவும் பசித்திருக்கிறார் என்ன செய்வது? என்று கேட்டார்.நமக்கு உண்ண உணவில்லை என்றாலும் அம்மையப்பருக்கு இனியவரான சிவனடியாருக்கு நாம் இனிமையாக உணவிட வேண்டுமே அதற்க்கு என்ன வழி என்று கேட்டார்.அவரது மனைவியாரோ இன்னும் வருத்ததோடு நம் வீட்டில் எதை வைத்து எப்படி சமைப்பது?விற்பதர்க்கோ வீட்டில் ஒரு பொருளும் இல்லை.அண்டை அயலாரிடம் கடன் வாங்கலாமென்றால் அதற்கும் வழி இல்லை.இனியும் நமக்கு கடன் தருவார் யாரும் இல்லை.பொழுதும் போய் இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்று கூறி திகைத்தார்.  (தொடரும்)
          

Friday 2 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 20

பகவத் பக்தனான பிரகலாதன் கூறுகிறார்:
          தேவரிஷி முனிவர்களாலும் தன் புலமை மிக்க தெய்வீக துதிகள் மூலமாகவும் பகவானை மகிழ்விக்கமுடியவில்லை என்றால் அசுர குணம் படைத்த என்னால் எப்படி பகவானை துதிக்க முடியும்?
         உண்மையில் செல்வம்,உயர்குடியில் பிறப்பு, அழகு,தவம்,கல்வி,மிகுந்த ஆற்றல்,செல்வாக்கு,பலம்,பேரறிவு,பௌருஷம் என்ற ஆண்மை,யோகம் இவை எல்லாம் ஒரு மனிதனிடம் இருந்தாலும் பகவானை ஆராதனை செய்து மகிழ்விக்க முடியாது.பக்தியால் மட்டும் தான் பகவான் மனமிரங்கி வருவார்.அறிவில்லாத கஜேந்திரனுக்கும் கருணையுடன் அவர் அருள் புரிந்தவர் அல்லவா?உண்மையில் பகவான் பற்று பகை அற்றவர். அவருக்கு அனைவரும் சமமானவர்கள்.பாமரர்,படித்தவர் அனைவரையும் கடைதேற்றுபவர்.கல்வியிலும் வலிமையிலும் கர்வம் கொண்ட அசுர குணம் படைத்தவர்களை தண்டித்து தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.எளிய பக்தனுக்கோ சீக்கிரம் அருள் கிடைத்து விடும்.ஏனெனில் நீயே கதி என்று அவன் சரண் அடைந்து விடுகிறான்.அவனுக்காக மகா வல்லவனான இறைவன் தன் மகா மகிமையை விட்டு இறங்கி வந்து சிறுமை அடைந்து பக்தனுக்கு சமமான எளியவனாகி விடுகிறார்.
          இறைவன் முன் பக்தன் கதியில்லாமல் ஏழையாக இரக்கதிற்குரியவனாக நினைத்து அவர் முன் மண்டியிட்டு கதறுகிறான்.அவன் தன்னை பாவியாகவும் இழிவாகவும் நினைத்து பிரார்த்தனை செய்கிறான்.இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்து ஊன் உருக உள்ளம் உருக பக்தி செய்கிறானென்றால் அவனே பரம பக்தன், உண்மையான பக்தனிடம் ஆணவம் இருக்காது.பகவானின் தரிசனம் கிடைக்க வேண்டும என்று ஏங்குபவனிடமே பகவான் நிச்சயம் வருவார்.
         " தஸ்யா க்ஞானமேவ ஸாதன மித்யேகே "  
          பக்தி எப்படி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? உலகில் ஒருவர் மீது காரணமின்றி அன்பு உண்டாகிறது என்று கூறினாலும் அவசியம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.பக்திக்கு ஞானமே காரணமாகிறது என்று சில ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்.இறைவனை பற்றி நன்கு அறிந்து கொள்வதே ஞானம்.அந்த ஞானமே இயக்கம் கருவி என்று கூறுகிறார்கள்.
          என்னுடைய நாதன் அனைத்திற்கும் ஆதாரமாக மகேஸ்வரனாக இருப்பவர்.அருள் நிறைந்தவர்.இந்த ஞானம் உண்டாகும்போது மரியாதையும் பிரேமை பக்தியும் உண்டாகிறது.பிரியம் வரும் போது பக்தி ஏற்படுகிறது என்பதோ உண்மை தான்.
         பக்தி மனதில் ஏற்படுவதற்கு ஞானம் அவசியம் இல்லை. என்று நாரதர் கூறுகிறார்.
         "அன்யோன்யாச்ரயத்வமித்யன்யே"  
வேறு பல ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள்:
          ஞான தத்துவத்தை அறிந்த பின் இறைவன் மீது பக்தி உண்டாகிறது.அதனால் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது.அன்பால் பக்தி பெருக்கெடுத்து வரும் போது ஞானமும் தத்துவமும் அங்கு முக்கியத்துவம் அடைவதில்லை.அவற்றை சிந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது.அன்பால் விளைந்த பக்தி செய்யும் பக்தனும் ஞானியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. (தொடரும்)

Thursday 1 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 19

         பக்தி செய்ய எந்த தகுதியும் வேண்டியதில்லை.உதாரணமாக வால்மீகி முனிவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தார்.கண்ணப்பநாயனார் ஒரு வேடுவனாக இருந்தார்.இவர்கள் செய்த பக்தி, தவம் செய்த முனிவர்களையும் மிஞ்சக்கூடியது.துளசிதாசர் செய்த ராம பக்தியை விட,ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை.
        பல காலம் சிரமப்பட்டு ஞானம் பெற வேண்டும்.யாகம் செய்வதற்கோ பொருள் செல்வம் வேண்டும்.கடினமான யோக பயிற்சியில் வெற்றி பெற யோகாசனம், பிரணாயாமம் முதலியவற்றை சரியாக செய்ய வேண்டும்.பக்தி யோகத்தில் இவை எதுவும் தேவை இல்லை.அன்புடன் ஒரு பூவை சாற்றினால் போதும்,அல்லது தமக்கு கிடைத்த உணவை படைத்தாலே போதும்,பிரார்த்தனை செய்தாலே போதும். பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்:
"ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ
நஸ்வாத் யாய ஸ்த பஸ்த்யாகோ யதா பக்திர் மமொர்ஜிதா 
பக்த்யா ஹமேகயா க்ராஹ்ய:ச்ரத்தயாத்ம பிரிய: ஸதாம் பக்தி 
புனாதி மன்னிஷ்டா,ச்வபாகானபி ஸம்பவாத் "
யோகம்,ஞானயோகம்,தர்மம்,ஸ்வாத் யாயம் (வேதங்களை படித்து தத்துவார்த்தமாக பாராயணம் செய்வது)யாகம்,தவம்,தியாகம் ஆகியவற்றால் கூட நான் சீக்கிரம் வசப்பட மாட்டேன்.சான்றோர்களின் பிரிய ஆத்மாவாக இருக்கும் நான் சிரத்தை பிரேமையுடன் அன்பான பக்திக்கு மட்டும் கட்டுப்படுவேன்.பக்தன் அவன் புலயனாக இருந்தாலும் தூய பக்தியால் சித்தி பெற்று விடுவான்.இதற்க்கு உதாரணம்:
   ஸ்ரீ கண்ணப்ப நாயனார் அவர்கள் பன்றிக்கறியை சமைத்து பிரசாதமாக சிவபெருமானுக்கு படைத்தார்.அவர் செய்த பக்தி ஈடு இணையற்றது.
           பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு மட்டுமே  தன் விசுவரூப தரிசனத்தை தரிசிக்க செய்து கூறுகிறார்.:
          அர்ச்சுனா நீ கண்ட எனது விசுவரூபதரிசனம்காணக்கிடைக்காதது.மிகவும் அரிது.வேதங்களை பாடி உணர்ந்து பாராயணம் செய்தாலும் யாகங்கள் பல செய்தாலும் தவத்திலும் தானத்திலும் நீ இப்போது கண்டது போல காண முடியாது.ஆனால் என் மீது அனன்ய பக்தி கொண்டால் தான் இது போல் தரிசனத்தை பெற முடியும்.எனது உண்மை தத்துவத்தை அறிய முடியும்.என்னுள் பிரவேசிக்க முடியும்.
         " பல ரூபத்வாத் "
          பக்தி என்பது முழுமையாக பிரதானமாக இருந்து பலன் தர கூடியது.அதாவது இங்கு பிரேமை பக்தியே முழுமையாக இருக்கிறது.இங்கு பக்தி சாதனமாக இல்லை.
      புனிததலயாத்திரை,ஞானம்,வைராக்கியம்,யோகம்,கடமை,தர்மம்(அறம்)விரதம்,உபாசனை,தானம்,புலனடக்கம்,யம நியமங்கள்,ஜபம்,தபம்,யாகம்,அஹிம்சை, குருசேவை,கல்வி, பணிவு,விவேகம்,புகழ்,வேதங்களை கற்று உணர்தல்,இவை எல்லாம் ஆண்டவனை அடைவதற்காக துணை புரியும் சாதனங்கள். பக்தியை அடிப்படையாக கொண்டு தான் இந்த சாதனங்கள் பலன் தருகின்றன.ஆனால் பக்தி இந்த அனுஷ்டானங்களில் துணையாக இருக்கிறது.பக்தி இல்லாமல் எந்த ஜப தபங்களிலும் வெற்றி அடையாது.அவ்வாறு இருப்பதனால் இங்கு நாரதர் மற்ற சாதனங்களுக்கு முக்கயத்துவம் கொடுக்காமல் பக்திக்காகவே பிரேமை பக்தியை உருவாக்க வலியுறுத்துகிறார்.ஆதலால் இங்கே கூறப்படும் பக்தி எந்த துணை சாதனமும் அல்லாமல் முழுமையான பக்தியாகவே கூறப்படுகிறது.
 "ஈச்வரஸ்யாப்யபிமானத்வேஷித்வாத் தைன்யப்ரியத்வாச்ச"   
          பக்தி எப்படி சிறந்ததாக உருவெடுக்கிறது என்பதை கூறுகிறார்கள்.
         யோக சாதனை செய்யும் சாதகர்கள்,சாதரணமாக கீழ் நிலையில் இருக்கும் மனிதர்களை விட நாம் மேம்பட்டவர்கள் வலிமை உள்ளவர்கள் என்று கர்வப்பட்டு கொள்வார்கள்.ஆனால் பகவான் நாமத்தை பக்தியுடன் பஜனை செய்யும் பக்தர்களோ கர்வமில்லாமல் இருப்பார்கள்.(தொடரும்)