Saturday, 21 January 2012

ஸ்ரீ பாகவத் கதைகள்

பக்தியை பிரதானமாக கொண்ட பாகவத புராணத்தில் பக்தியை வளர்க்கும் பல கதைகள் உள்ளன.அவை வாழ்க்கை கல்வியை போதித்து மனிதனுள் நற்குணங்களை பெருக்ககூடியவை.தன்னை மேம்படுத்திக்கொள்ள இந்த கதைகளை அவசியம் படிக்க வேண்டும்.மேலும் இந்த கதைகளை படிக்கும் போது பகவான் மீது பக்தி ஏற்பட்டு உலக துன்பங்களில் இருந்து விடுபட்டு மனஓய்வு கிடைக்கும்.பாகவத புராணம் என்பது அது ரிஷியின் வாக்கு.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழச்சிகளை புராணத்தில் கதைகளாக கூறப்பட்டுள்ளன.ரிஷி வாக்கு சத்திய வாக்கு என்பதால் எக்காலத்திலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன.ஆறு அறிவு இல்லாத எறும்புக்கு அதன் உலகம் மட்டும் தான் தெரியும்.மற்ற விஷயங்கள் அதன் அறிவுக்கு எட்டாதவை.ஆனால் அறிவுக்கு எட்டாத விசயங்களை பொய் என்று கருத முடியாது.அது போல சிறிய அறிவு படைத்த மனிதன் அறிவுக்கு எட்டாத விஷயங்கள்,எல்லை கடந்த விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.விஞ்ஞானத்திற்கும் எட்டாத விஷயங்கள் பல உள்ளன.ஆதலால் இந்த கதைகளை முழுமையாக நம்பி கதைகளில் காட்டி உள்ள வாழ்க்கை கல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
                                                             சுலோச்சனா பத்மநாபன்.

Sunday, 15 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 56

வாத்ஸல்யா ஸக்தி பக்தர்கள்:அதிதி,கச்யபர்,தசரதர்,கௌசல்யா,நந்தன்-யசோதா,வாசுதேவன்-தேவகி.
ஆத்ம நிவேதனா ஸக்தி பக்தர்கள்:   ஸ்ரீ ஹனுமான்,ராஜா அம்பரீஷன்,மகாராஜா பலி,விபீசனர்,சிபி மகாராஜா.
தன்மயதாஸக்தி பக்தர்கள்: யாக்ஞ்யவல்கியர்,சுகர்,சனாகதி முனிவர்கள்,ஞானிகள்,கெள்ண்டின்யர்,சுதீக்ஷனர், தண்டகாருன்ய முனிவர்கள்.
பரம விரஹா ஸக்தி பக்தர்கள்:  உதவார்,அர்ச்சுனன்,கோபிகை பெண்கள்.
          அனைத்து பக்தர்களிடமும் எல்லாவித பக்திகளும் இருந்தன.இருந்தாலும் மேற் கூறப்பட்டுள்ள பக்தர்களில் அந்த அந்த பக்திகள் பிரதானமாக இருந்தன என்பதை குறிப்பிடுவதற்காக அவர்கள் பெயரை கூறியிருக்கிறார்கள்.
"இத்யேவம் வதந்தி ஜனஜல்ப நிர்பயா: ஏகமதா:குமாரல்யாஸ சுக சாண்டில்ய கர்கவிஷ்ணு கௌண்டின்ய சேஷோத்த வாருணீ பலி ஹனுமத் விபிஷனாதையோ பக்த்யாசார்யா:"
சனத் குமாரர்,மகா முனிவர்கள்,வேத வியாசர்,சுக தேவர்,சாண்டில்யர்,கர்கர்,விஷ்ணு,ஆதிசேசன்,உத்தவர்,ஆருணி,பலி,ஹனுமான்,விபீசனர் ஆகிய பெரியோர் அனைவரும்,உலக மக்கள் என்ன சொல்வார்களோ பாராட்டுவார்களா அல்லது அவச்சொர்களால் அவமதிப்பார்களா என்று எதையும் பொருட்படுத்தாமல் பக்தியே சிறந்தது என்று ஒரு மனதாக கூறுகிறார்கள்.
          தேவரிஷி நாரதர் இங்கு அற நூல்களை எழுதி அதில் முதலிடம் பெற்ற ஆச்சாரியர்கள் பெயர்களை கூறி இருக்கிறார்கள்.இந்த மகா புருசர்கள் பக்தி தத்துவத்தை அறிந்தவர்கள்.சனத் குமாரர்கள் பகவான் பூலோகத்தில் அவதாரமெடுக்க காரணமானவர்கள்.
          ஒரு சமயம் இந்த பக்தர்களுக்கு பரிந்து பகவான் தன் துவார பாலகர்களையே அசுரர்களாக பிறக்கும்படி சபித்து விட்டார்.
          ஸ்ரீ வேத வியாசர் 18  புராணங்களையும் இயற்றி உள்ளார்.ஸ்ரீ சுகதேவர் பக்தி ரசத்தின் அமிர்தக்கடலான பாகவத புராணத்தில் கூறியிருக்கிறார்.
          சாண்டில்ய மகரிஷி பக்தி தத்துவத்தை வைத்து பக்தி சூத்திரங்களை இயற்றி இருக்கிறார்.மகரிஷி கர்கரும் கர்கசம்ஹிதை என்ற பக்தி நூலை எழுதி இருக்கிறார்.
          மகரிஷி விஷ்ணு என்பவர் விஷ்ணு ஸ்மிருதியை எழுதியிருக்கிறார்.கௌண்டின்யர் பக்தி மார்க்கத்தை பின்பற்றி சித்தி பெற்றவர்.
          ஆதிசேஷன் பற்றி சொல்லவே வேண்டாம்.பகவானுக்கு சேவை செய்ய லக்ஷ்மணராக பிறந்தவர்.எப்போதும் ஆயிரம் திருவாய்களால் பகவான் புகழை பாடிக்கொண்டு இருக்கிறார்.
         உத்தவர் பகவானிடம் நட்பு கொண்டு நண்பனாக இருந்தவர்.
          ஆருணீ என்ற நிம்பார்க்க மகரிஷி ராத கிருஷ்ண தத்துவத்தை உபதேசித்தவர்.
          பலி மகாராஜா தன் ஆட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சாம்ராஜ்யங்களையும் வாமன பகவானுக்கு தாரை வார்த்து தந்து இறுதியில் தன்னையும் அர்ப்பணம் செய்தவர்.இவர் மீது பகவான் மகிழ்ந்து பாதாள லோகத்தில் இன்றும் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
          ஸ்ரீ ஹனுமானின் தாச பாவம் அனைவருக்கும் தெரிந்தது தான்.விபீசனரின் சரணாகதியும் ஸ்ரீ ராமரிடம் நட்பு கொண்ட பக்தியும் எல்லோரும் அறிந்த விஷயம்.
         இவர்கள் அனைவரும் யார் எது சொன்னாலும் கவலைப்படாமல் பக்தியே சிறந்தது என்று பக்தியோகத்தை பின்பற்றினார்கள்.ஸ்ரீ நாரதரோ பக்தி சூத்திரங்களை எழுதி பக்தி பிரசாரமே செய்கிறார்.
        "  ய இதம் நாரதப்ரேக்தம் சிவானுசாசனம் விச்வஸிதி ச்ரத்தத்தே ஸ ப்ரேஷ்டம் லபதே ஸ ப்ரேஷ்டம் லபதே "
பக்தி சாஸ்திரத்தை இயற்றி விட்டு அதற்க்கு நிறைவாக  ஸ்ரீ நாரதர் கூறுகிறார்.
எல்லா விதத்திலும் நன்மை தரும் பக்தியோகத்தை இங்கு உபதேசித்து இருக்கிறேன்.இது மங்களகரமானது.சிவம் என்றால் மங்களம்,சுபம் என்று அர்த்தம் கொள்ளலாம்.அல்லது பக்தி தத்துவத்தின் ஆதி ஆசான் சாட்சாத் சிவபெருமானே ஆவார்.மேலே கூறப்பட்ட உபதேசத்தில் நம்பிக்கையும் சிரத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிலும் சித்தத்திலும் இதை பதிய வைக்க வேண்டும்.வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.(சிரத்தை என்றால் நம்பிக்கை)நோய் தீர நம்பிக்கையுடன் மருந்து உண்பது போல நமது பக்தியின் பலனில் சந்தேகம் கொள்ளாமல் நாம் செய்யும் பக்தி உயர்வையும் எல்லா நலன்களையும் தரக்கூடியது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.அன்பான பக்தியை ஏற்றுக்கொண்டாலோ பகவானுக்கு அன்பனாகலாம்.நிச்சயம் அன்பனாகலாம்.
          சாதாரண மனிதர்களால் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போக முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது அன்பொழுக பிரார்த்தனை செய்ய வேண்டும்.கஷ்டத்தில் வீழ்ந்து விட்டால் இறைவனை அழைக்க வேண்டும்.அழைத்தால் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து உதவி செய்வார்.அவரை அடைய முயற்சி செய்தாலும் கூட நம்மை கடைத்தேற்றுவார்.
                                        ஸ்ரீ சிவார்ப்பணம்  
                                        சுபம் 
          இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Sunday, 8 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 55

உலகில் இருக்கப்படும் அனைத்து விசயங்களும் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு உண்டாகிவிடும்.பகவானின் தெய்வீக உருவமும், கதைகளும் தெவிட்டாத தேன் அமுதம், அதை அனுபவ பூர்வமாக
உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். பகவானின் திருஉருவ அழகில் பிரேமையும் பக்தியும் கலப்பதால் சுவையும் இன்பமும் கூடிக்கொண்டே போகும். ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாக தோன்றும்.மனதை பறி கொடுக்கும் இனிமையில் முற்றும் துறந்த முனிவர்களும் கரைந்து போவார்கள்.தெய்வீக சச்சிதானந்த அனுபவத்தில் தளைப்பார்கள். அந்த பேரின்பத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
"த்ரி சத்யஸ்ய பக்திரேவ கரீயஸீ பக்திரேவ கரீயஸீ "
மனம்,வாக்கு,காயம்-இந்த மூன்று வித சத்தியமான அனுபவத்தால் பக்தியே சிறந்தது என்று நாரதர் கூறுகிறார்.இதை அவரே அனுபவித்து இருக்கிறார்.
          மூன்று வித சத்தியம் என்றால் மூக்காலங்களின் சத்தியமான அனுபவத்தால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.பக்தியே சிறந்தது என்று கூறுகிறார்.
          பகவானின் அவதாரமான கபில முனிவரின் தாயிடம் கூறுகிறார்.
சகல ஜீவராசிக்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பகவானிடம் பக்தி செலுத்துவதை தவிர வேறு எந்த வழியும் சிறந்தது இல்லை.அது மிகவும் பாதுகாப்பான வழி என்றும் பரம்பொருளை தன்னுள் உணர்ந்து சித்தி பெற்ற யோகிகளும் கூறுகிறார்கள்.வேறு விசயங்களில் பற்றும் பாசமும் வைத்தால் அது பிறப்பு, இறப்பு சுழற்சியில் தள்ளி விடும்.அதே சமயம் பகவத் பக்தர்களிடம் தொடர்பு கொண்டால் நமக்கு மோட்சம் அடையும் வழி தெரியும்.
          பக்திக்கு முயற்சி செய்யும் பக்தனையும் பகவான் கைவிட மாட்டார்.சிறிதளவு கூட பக்தி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் பகவான் கடைத்தேற்றி விடுவார்.அதனால் பக்தியை விட சிறந்தது எதுவும் இல்லை.
          நச்சுப்பால் கொடுத்த பூதனையும் ஒரு கணம் அவர் திரு உருவில் மயங்கினாள். அவளுக்கே மோட்ச சாம்ராஜ்யத்தை அளித்த கடவுள் அவரை தன் உயிராக உற்ற உறவாக அன்பனாக நினைத்த கோபிகை பெண்களுக்கும் யசோதைக்கும் என்ன கொடுக்க போகிறாய் கண்ணா! என்று கூறுவார்கள்.
"குண மா ஹாத்ம்யாஸக்தி ரூபாஸக்தி பூஜாஸக்தி ஸ்மரணா ஸக்தி,தாஸ்யா
ஸக்திஸக்யா  ஸக்தி ,காந்தா ஸக்தி,வாத்ஸல்யாஸக்தி,ஆத்மநிவேதனா ஸக்தி,தன்மயா ஸக்தி,பரமவிரஹா ஸக்தி ரூபா ஏகதாப்யேகாதசதா பவதி "
பிரேமை பக்தி ஒன்றாக இருந்தாலும் பக்தர்களின் சுபாவத்தை அடிப்படையாக கொண்டு பலவாக மாறுகிறது.ஆனால் இதில் ஏற்றதாழ்வுகள் இல்லை என்று கூறுகிறார்கள்.முக்கியமாக இதை 11 வகைகளாக பிரித்து இருக்கிறார்கள்.
 குண மா ஹாத்ம்யா ஸக்தி பக்தர்கள்: தேவரிஷி நாரத மகரிஷி பகவான் வேத வியாசர்,சுகதேவர்,ஆதி சேஷன்,பீஷ்மர்,அர்ச்சுனன்,பரீட்சீத்,அறுபத்துமூன்று நாயன்மார்கள் இதில் அடங்குவர்.
ரூபாஸக்தி பக்தர்கள்:தண்ட காருண்யா ரிஷிகள், கோபிகை பெண்கள் இதில் அடங்குவர்.
பூஜாஸக்தி பக்தர்கள்: அம்பரீஷன்,பரதன்,லக்ஷ்மி தேவி இதில் அடங்குவர்.
ஸ்மரணா ஸக்தி பக்தர்கள்: பிரகலாதன்,துருவன்,சூர்தாசர்,துளசிதாசர் இதில் அடங்குவர்.
தாஸ்யா ஸக்தி பக்தர்கள்:ஸ்ரீ ஹனுமான்,விதுரர்,மீரா,அக்ரூரர்,ஆழ்வார்கள் இதில் அடங்குவர்.
ஸக்யா  ஸக்தி பக்தர்கள்:அர்ச்சுனன்,உத்தவர்,சஞ்சயன்,ஸ்ரீ தாமன்,சுதாமன் ஆகியோர் இதில் அடங்குவர்.
காந்தா ஸக்தி பக்தர்கள்: பகவானின் 8 பட்ட ரிஷிகள்.(தொடரும்)

Friday, 6 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 54

"ஸர்வதா ஸர்வபாவனே நிச்சிந்திதைர் பகவானேவ பஜனீய:" 
காலம் நேரம் பார்க்காமல் எப்போதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சிந்தனை எல்லாம் இறைவன் பால் திருப்பிவிட்டு பஜனை செய்ய வேண்டும்.
          ஸர்வபாவென என்றால் பகவானின் அருளையும் ஆற்றலையும் உண்மையாக அறிந்து கொண்டு அல்லது சான்றோர் சொல்வதை கேட்டு மனம்,வாக்கு, சரீரத்தால் வழிபடுவதை கூறியிருக்கிறார்கள்.
          மகா மகிமை பொருந்திய இறைவன் அனைவருக்கும் அன்பன்,நண்பன். அவர் நம்மை அரவணைப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.இதை நன்கு அறிந்துகொண்டவன்,உலகியல் செல்வங்களை விரும்புகிறவனும் மோட்சம் விரும்பும் சித்தனும்,பகவானை மட்டும் விரும்பும் பக்தனும் அரை நொடியும் அவர் சிந்தனையை விட்டு விலக மாட்டான்.அவ்வாறு நெருங்காதவன் பகவானிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அர்த்தம்.
          பகவத் கீதையில் பகவானே சத்தியம் செய்கிறார்.என் திருவடிகளை பற்றிக்கொண்டவனை என்றும் நான் கைவிட மாட்டேன்.
          என் மீது பிரேமை பக்தி கொண்டவனாக என்னையே சிந்தித்து என்னை வணங்குபவனாக இரு. என்னையே நீ அடைவாய்.என்று சத்தியம் செய்கிறேன்.ஏனெனில் நீ எனக்கு பிரியமானவன்.
          எந்த விவகாரங்களிலும் சிக்காமல் எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னையே நீ சரண் அடைந்து விடு.நான் எல்லா பாவங்களில் இருந்தும் உன்னை விடுவிப்பேன்.கவலைப்படாதே,வருந்தவும் வேண்டாம்.
          இவ்வாறு பகவானே உறுதியாக கூறும்போது அவரை தொழாமல் இருந்தால் நிச்சயம் துன்பத்தில் விழுந்து சாவோம்.
"ஸ கீர்த்தியமான சீக்ரமேவாவிர் பவதி அனுபாவயதி ச பக்தான்"
பகவானை பிரியமாக கீர்த்தனை செய்த பின் அவர் வெகு சீக்கிரமே பிரகடனமாகி விடுவார்.தன் தெய்வீகத்தை அனுபவிக்கச்செய்வார்.
          பிரகடனமாகிறார் என்றால் உவமையில்லா சௌந்தர்யத்துடன் தாபத்தை தணிக்கும் எல்லையில்லா ஆனந்தம் தரும் தன் இனிய சொரூபத்தை காண்பிக்கிறார்.
          பகவானின் திருமேனி மனிதருக்கோ அல்லது பிற உயிருக்கோ இருப்பது போல ரத்தமும் சதையும் சேர்ந்து உருவான தேகமல்ல.அது ஒளிமயமான தெய்வீக திரு உருவம்.கீதையில் கோடி சூரிய பிரகாசம் கொண்டது என்று சரியாக சொல்ல முடியாது என்று அர்ச்சுனன் கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பிருந்தாவனத்தில் இருந்து கம்சனை சந்திக்க மதுராபுரி வந்தடைந்தனர்.தன் தெய்வீக திருமேனியிலிருந்து ஜோதி வெள்ளம் எங்கும் பரவ இருவரும் மதுரா வீதிகளில் நடந்து வந்தனர்.கண்கள் பெற்ற பாக்கியத்தை முழுமையாக அடையவேண்டுமென்று மக்கள் வைத்த கண் வாங்காமல் அந்த அழகை பருகினர்.அவர்களில் சிலர் புசித்துக்கொண்டிருந்த உணவை துறந்து கிருஷ்ண பலராமர் அழகில் மயங்கி நின்றனர்.நீராடிக்கொண்டிருந்தவர்கள், தூங்கிகொண்டிருந்தவர்கள், குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய் மார்கள் ஓடி வந்து கிருஷ்ண பாலராமர்களை கண்டு தன்னையும் தன் கடமைகளையும் மறந்து அவர்கள் அழகில் சொக்கி போய் சிலையானார்கள்.இவை கடவுளின் திருமேனி பற்றி விளக்கப்பட்டவை. கடவுள் திருமேனியின் அருள் ஒளி பிரகாசமாக தோன்றுவதால் தேவர்களும் ஆத்மா ஞான முனிவர்களும் கூட தன்னை மறந்து பரவசமாகிறார்கள்.பகவானின் உருவம், மணம்,ஒளி,ஸ்பரிசம்,இனிய நாத ஒலி இவற்றால் உணர்வுகளை மறந்து சமாதி இன்பத்தை அடைகிறார்கள்.
(தொடரும்)

Wednesday, 4 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 53

கூடுமானவரை பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.கூட்டாக சேர்ந்து பஜனை செய்யலாம்.அதை தன் வீட்டில் செய்தால் மிகவும் நல்லது.சிராத்த கர்மங்களை தவறாமல் செய்ய வேண்டும்.தாய் தந்தையர்கள் சேவையை மறக்காமல் செய்ய வேண்டும்.
அகத்தூய்மை:கர்வம்,பற்று,பொறாமை,துவேசம்,சோகம்,பாவம் செய்வதை நினைப்பது,காமசிந்தனை இவற்றை எல்லாம் பகவானை சரணடைந்து விரட்ட வேண்டும்.இதற்க்கு பதிலாக நேர்மை,பிரேமை,பணிவு,வைராக்கியம்,சந்தோசம்,நிறைவு,பகவத் சிந்தனை,இவற்றை எல்லாம் உள்ளத்தில் புகுத்த வேண்டும்.
தயா:பிறர் துன்பப்படுவதை கண்டு அந்த துன்பத்தை போக்க முயற்சிக்க வேண்டும்.மித்ரனாக இருந்தாலும் சத்ரூவாக இருந்தாலும் பெரிய மனம் படைத்தது உதவ வேண்டும்.பிற உயிர்களை எப்போதும் கொல்லக்கூடாது. பிராணிகள் மீதும் விலங்குகள் மீதும் இரக்கம் கொள்ள வேண்டும்.சிறு புழு பூச்சியாக இருந்தாலும் உயிருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
          ஆறறிவு இல்லாத உயிரினங்களும் மரம் முதலிய தாவரங்களும் அழிவதை கவலைப்படாமல் தன் சுயநலத்திற்க்காக ஆதாயம் தேடுவது நல்லதல்ல.
கடவுள் நம்பிக்கை:வேதங்களையும் புராணங்களையும் நம்ப வேண்டும்.பரலோகம்,புனர்ஜென்மம் ஆகியவற்றை நம்பினால் தான் பாவம் செய்யாமல் வாழ முடியும்.இல்லையெனில் கண்டதே காட்சி,கொண்டதே கோலம் இருக்கிறவரை அனுபவித்து சாவோம். பிறர் எப்படி போனால் நமக்கு என்ன?என்று வாழ்ந்தால் அதில் பாவமே மிஞ்சும்.இதை விட சூது இல்லாத விலங்குகளும் பூச்சி புழுக்களும் மேலானவையே.
          எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இருக்கிறான்.அவன் ஆற்றல் விசுவமெங்கும் பரவி இருக்கிறது.காரணமில்லாமல் காரியம் இல்லை, என்பதை உலகில் கண்கூடாக காண்கிறோம்.அவன் சர்வேஸ்வரன், சர்வக்ஞன், கருணைக்கடல். ஆத்மாவாக அனைவருக்கும் அன்பனாக இருக்கிறான்.பக்த வத்சலன்,ஏழைப்பங்காளன் என்று அறிந்து கொண்டால் வாழ்வில் அவனை துணையாக்கிக்கொள்ளலாம்.அவன் ஞானமும் வைராக்யமும் ,பக்தியும், பிரேமையும்,சந்தோசமும் தரக்காத்திருக்கிறான்.தனச்செல்வம் கேட்டால் அதையும் தருவான்.ஜகத்தின் எல்லா செல்வங்களுக்கும் தலைவியான லக்ஷ்மிதேவியை வைத்திருக்கிறான்.புகழ் வேண்டுமென்றால் நம்மை புகழின் உச்சிக்கே கொண்டு செல்வான்.உலகில் இருக்கும் சௌந்தர்யங்களும் இனிமையும்,பிரேமையும் ஞானமும் தனங்களும்,சுகபோகங்களும் புகழும் எல்லாம் சேர்ந்து அவனது மகாமஹிமையின் முன் தூசிக்கு சமம் கூட இல்லை.

உண்மையில் பிரகலாதனின் கடவுள் நம்பிக்கை மிகவும் மேம்பட்டு இருந்தது.இதை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.பாகவத புராணம் கூறுகிறது.ஹிரண்ய கசிபு தன் மகனை நோக்கி கூறுகிறான்.
மகனே பிரகலாதா இது நாள் வரை குருவிடம் கற்ற பாடத்தில் எதை சிறப்பாக கருதுகிறாயோ அதை கூறுவாய் என்றார். அதற்கு பிரகலாதன் தந்தையே விஷ்ணு பகவானின் பக்தியே மிக மென்மையாக கருதுகிறேன்.அது ஒன்பது வகையானது.பகவானின் திருவிளையாடல்களையும் பிறர் பாடும் திருநாமங்களையும் கேட்பது,பகவானின் பாத சேவை,பூஜை தொண்டு செய்தல்,தன்னையே அர்ப்பணம் செய்தல்,தாச பாவம் அல்லது தோழமை கொள்வது,அடியவர்களை வணங்குதல் ஆகியவை பக்தியின் அங்கங்கள்.இதை கேட்டு ஹிரண்யனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
ஹிரண்யன் பிரகலாதனுக்கு கல்வி புகட்டிய குருவை கடிந்த பின்பு கூறினான். உனக்கு இந்த புத்தி எங்கிருந்து வருகிறது? அதற்கு பிரகலாதன் பதிலளித்தான்.எவருடைய அறிவும் மனமும் பகவானின் பாத கமலங்களை தொடுகிறதோ அவரை பகவானே தன் வசம் இழுத்துக்கொள்கிறார்.உலக விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்கள் மேலான பெரும் பேற்றினை அறிய மாட்டார்கள்.
          ஹிரண்ய கசிபு பிரகலாதனை கொல்வதற்காக அரக்கர்களுக்கு ஆணையிட்டான்.கோரை பற்கள் கொண்டு கொடூர குணம் படைத்த அரக்கர்கள் பயங்கரமாக கத்திக்கொண்டு சூலத்தால் தாக்க முற்ப்பட்டார்கள்.பிரகலாதனோ தன்னை பகவானிடம் முழுவதுமாக அர்ப்பணித்து விட்டு மனம் வாக்கு புலன்களுக்கு எட்டாத சர்வாத்மாவாக சகல சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் பர பிரம்மமாக விளங்கும் பரமாத்மாவிடம் மனதை லயிக்கச்செய்து விட்டதால் அரக்கர்களின் தாக்குதல்கள் அவனை ஒன்றும் செய்ய வில்லை.ஹிரண்ய கசிபு மிகவும் ஆத்திரம் அடைந்து கூறுகிறான்.எமக்கு கீழ் படியாத அதிகப் பிரசிங்கியே, அசுர குலத்தை களங்கப்படுதுபவனே எனது கோபக்கண் அசைவினால் மூவுலகங்களும் நடுங்குமே , யாரை துணை கொண்டு அல்லது பலத்தினால்,தைரியத்தினால் நீ பயப்படாமல் இருக்கிறாய்? அதற்கு பிரகலாதன் பதிலளிக்கிறான்.உங்களுக்கும் எனக்கும் சக்தி அளிப்பவர் அந்த பரம புருஷனே ஆவார்.அவர் பலசாலிகளுக்கும் பலசாலி மட்டுமல்ல.தாவர ஜங்கமங்களுக்கெல்லாம் ஈசன்.தேவர்களுக்கெல்லாம் தலைவர்.காலத்தின் கடவுள்.அவரே தேஜஸாக இருக்கிறார்.அவரே புலன்களுக்கும் தேகத்திற்கும் சக்தி அளிப்பவர்.அவரே உயிர்களுக்கெல்லாம் ஆத்மாவாக இருக்கிறார்.என்று திட நம்பிக்கையோடு கூறினான்.(தொடரும்)  


Tuesday, 3 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 52

பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்.
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷ மாமனுஸ்மர- என்றென்றும் இடை விடாது என்னை நினைத்துக்கொண்டிருந்தால் இறுதியில் நீ என்னையே அடைவாய்.
பாகவத புராணத்தில் கோகர்ணன் தன் தந்தையிடம் கூறுகிறார்.தந்தையே மாமிசமும் உதிரமும் சேர்ந்திருக்கும் இந்த தேகத்தின் மீது பற்று கொள்வதை விட்டு விடுங்கள்.தன் சொத்து தன் மனைவி மக்கள் என்ற பாச பந்தங்களை அறுத்து விட்டு இறைவனை அடைய சீக்கிரம் வழி தேடுங்கள்.ஏனெனில் இந்த உலகமும் உலக வாழ்க்கையும் நிலையற்றவை என்று புரிந்து கொண்டு வைராக்கியம் அடைய வேண்டும்.
         மீண்டும் கோகர்ணன் கூறுகிறார்:
சாரமில்லா இந்த உலக வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து விடும்.இதில் மனிதன் பணம்,புகழ்,பதவி,சொத்து,சுகம் இவற்றில் அமிழ்ந்து விடுகிறான்.தன் க்ஷேமத்தை பற்றி அரை நொடியாவது அவன் யோசித்தானானால் சுக தேவர் பாடிய ஒப்பற்ற பாகவத கதையை அமுதம் போல் பருகி தன்னை கடைத்தேற்றிக்கொள்வான்.
பணத்தை சிறுக சிறுக சேமிப்பது போல பகவத் பக்தியை சிறுக சிறுக வளர்க்க வேண்டும்.பகவானை நினைக்காத நாள் வீணான நாள்.நாம் பகவானின் பிரேமை பக்தியை நழுவ விட்டு விட்டோம்.அறியாமையால் இருந்து விட்டோம்.நஷ்டப்பட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டும்.
"அஹிம்ஸா ஸத்ய சௌசாதயாஸ்திக்யாதி சாரித்ர்யாணி பரிபாலனியாணி"
பக்தியோக சாதகன் அஹிம்சை,சத்தியம்,தூய்மை,தயை,ஆதிக்கம் முதலிய நல்ல விசயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.இந்த தகுதிகளுடன் இருப்பவனே தெய்வ சம்பத்துள்ள நல்ல பக்தன்.பக்தனாக இருப்பவன் நற்குணங்களுடன் இருக்க தேவையில்லை என்று சொல்வது தவறு.ஏனெனில் பாவியாக இருப்பவன் பக்தனாக முடியாது.பக்தன் புண்ணியவந்தனாகவே இருப்பன்.பெரும்பாலும் உண்மையான பக்தனை வெளித்தோற்றத்தை   வைத்து சோதிக்க முடியாது.அதனால் சூத்திரத்தில் கூறப்பட்ட ஐந்து நல்ல விஷயங்கள் அவசியம் இருக்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.அவை இல்லையென்றால் அவன் பக்தனே இல்லை.
          பகவான் மீது இயற்கையாகவே ஈடுபாடு ஏற்பட்டால் தெயவாம்சதுடன் இருப்பான் பக்தன்.அசுர சம்பத்துக்கள் வளர்ந்தால் பக்திக்கு தகுதியாக இருக்க மாட்டான்.
          சூத்திரத்தில் ஐந்து நற்குணங்களை கூறி இருக்கிறார்கள்.
அகிம்சை: மனம்,வாக்கு,சரீரத்தால் எவருக்கும் துன்பம் தராமல் இருப்பது,அனைவருக்கும் சுகம் தருபவனாக இருக்க வேண்டும்.
சத்தியம்:சத்தியமாக பேசுவது,சத்தியமாக நடப்பது,சத்தியமாக வாழுவது இவற்றை கலியுகத்தில் முற்றிலுமாக கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் சூதை துறந்து பிறரை ஏமாற்றாமல் வாழ்க்கை நடத்த வேண்டும்.
கூடுமானவரை சத்தியமாக பேசினாலும் இனிமையாக பேசவேண்டும்.பிறர் மனம் புண் படும்படி சத்தியம் பேசினாலும் சிலர் கவலைப்படுவதில்லை.பிறருக்கு நன்மை பயக்கும் விதம் சத்தியம் பேசவேண்டும்.
கெளசம்:அகத்துய்மை,புறததுய்மை.
புறத்தூய்மை - நல்ல சாத்வீக உணவு உண்டு தேகத்தை ஆரோக்கியமானதாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.
          அநியாய வழியில் சம்பாதிப்பது பாவப்பட்ட பணம்.தமக்கு உடமையான சொத்தும் அனுபவிக்கும் செல்வமும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.செய்யும் தொழிலிலும் பிறருக்கு துன்பம் தராமல் நியாயமாக இருக்க வேண்டும்.
          தீயவர்கள் மத்தியில் வசிக்க கூடாது.பிறரை இம்சித்து பிற உயிரை கொன்று மாமிச உணவு கூடாது.உண்ணும் உணவும்,அன்னமும்,அனுபவிக்கும் பொருளும் பகவானுக்கு அர்ப்பணித்த பின்பே தமக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்.கள்ளம் கபடம் இல்லாமல் பழக வேண்டும்.(தொடரும்)

Monday, 2 January 2012

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 51

"பக்தி சாஸ்த்ராணி மானனீயானி ததுத்போதக கர்மாண்யபி கரணியாணி"
தர்க்க வாதங்களை தவிர்த்து பக்தியை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
பிரேமை பக்தியை அதிகமாக தூண்டும் பகவத் சாஸ்திரங்களை படிக்க வேண்டும்.பக்தியை வளர்க்கும் கர்மங்களை செய்ய வேண்டும்.அதற்காக மற்ற நூல்களை படிக்க கூடாது,அரிய விசயங்களை சொல்லும் புத்தகங்களை படிக்ககூடாது என்பதில்லை. எல்லாவற்றையும் படித்து அறிந்து கொண்டாலும் பக்தி சாஸ்திரங்கள் சொல்லும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும்.பகவானின் புண்ணிய கதைகளை படிக்க வேண்டும்.அவர் குணங்களை வர்ணிக்கும் பாடல்களை பாட வேண்டும்.சான்றோர்கள் எழுதிய நூல்களையும் படிக்க வேண்டும்.அதனால் பிரேமை பக்தியில் நம்பிக்கை ஏற்படும்.
          பக்தியை கண்டனம் செய்யும் நூல்களையும் பக்திக்கு எதிரான புத்தகங்களையும் படிக்க கூடாது.உலகியல் விசயங்களை வர்ணிக்கும் இலக்கியங்களையும் காமக்குரோதாதிகளை தூண்டும் விஷயங்கள் அடங்கிய கதைகளையும் படிக்ககூடாது.அவற்றை புகழ் பெற்ற நூலாசிரியர் எழுதியதாக இருந்தாலும் வாசிக்கக்கூடாது. கீழே கூறப்பட்டுள்ள அறக்கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
          பாவப்படாத தொழில் செய்து இல்லறத்தை நல்லறமாக்கவேண்டும். தன்னை சார்ந்திருக்கும் தாய்,தந்தையர்,மனைவி,மக்கள் ஆகியோரை மரியாதையுடனும்,அன்புடனும் நடத்தி காப்பாற்றவேண்டும்.
          தன்னை நம்பி வந்தவர்களையும் காத்து தர்ம நியாயத்துடன் பொருளீட்டவேண்டும். பூஜை, துதி, நாமஜபம்,தியானம் எல்லாம் செய்ய வேண்டும்.சான்றோர்களை சேவித்து புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்ய வேண்டும்.
          பசுக்களை பராமரிக்க உதவி செய்ய வேண்டும்.வறியவருக்கு உதவி செய்ய வேண்டும்.
          தெய்வ காரியங்களுக்காக பொருளுதவி செய்ய வேண்டும்.இவற்றையெல்லாம் செய்தால் பகவத்பக்தி நிச்சயம் உண்டாகும்.
என்று பாகவத புராணம் கூறுகிறது.
          அதன் பின் பக்தியின் உச்சக்கட்டத்திற்கு போன பின் சாதாரண மனிதர்களை விட வேறுபட்டு போய்விடுவான்.அந்த நிலையில் சப்த பிரம்மத்தை (ஓம்)உபாசித்து சித்தி பெற்ற குருவை தேடி ஞானம் பெறுவதற்காக போக வேண்டும்.குருவிடம் நன்கு சேவை செய்த பின் அனைத்தையும் கற்று தேர்ந்து பகவான் மகிழும்படி பாகவத தர்மங்களை உபதேசிக்க வேண்டும்.மனதில் பற்றை அகற்றி சகல உயிர்களில் நட்பும் இரக்கமும் அன்பும் கொள்ள வேண்டும்.
          தன் ஆத்மாவை புனிதப்படுத்த தூய்மை,தவம்,பொறுமை,மௌனம்,நேர்மை,வேத அத்தியயனம், பிரம்மச்சர்யம்,அகிம்சை,சமத்துவம் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.சகல உயிர்களிடம் இறைவனை காண வேண்டும்.இவ்வாறு இல்லறம் நடத்தலாம்.அல்லது துறந்து தனித்து வாழலாம். துவர் ஆடை,மரப்பட்டை உடுத்தி எது கிடைத்தாலும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
          மனதையும் வாக்கையும் கட்டுப்படுத்தி சத்தியத்தையும் சாந்தத்தையும் கடைபிடித்து கட்டுப்பாடாக வாழ வேண்டும்.ஜென்மம் எடுத்ததே அவனுக்காக எனவும் செய்வதெல்லாம் அவனுக்காகவே என்று எண்ணிகொண்டு இஷ்டமாக இருப்பதையும் தானம் செய்து புண்ணியங்களையும் ஜபம் செய்த பலனையும் மற்றும் தமக்கு பிரியமாக இருக்கப்படும் பொருளையும் மனைவி மக்களையும் வீடுகளையும் தன் உயிரையும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.மகான்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து பக்தர்களுடன் கூட்டு சேர்ந்து பகவானின் புண்ணிய கதைகளையும் தூய புகழையும் பாடி பரஸ்பரம் இன்புற வேண்டும்.அதில் நிறைவும் காண வேண்டும்.அவ்வாறு பக்தி மேலும் உச்சக்கட்டத்தை அடையும் சமயம் பகவானுடன் இரண்டறக்கலந்து புளகாங்கித பரவசநிலையும், பேரின்ப நிலையும் கிடைக்கும்.
"ஸுகதுக்கேச்சாலாபாதித்யக்தே காலே ப்ரதிக்ஷயமானே  க்ஷனார்த்தமபி வ்யர்த்தம் ந நேயம் "
சுகம்,துக்கம் ,ஆசை,லாபம்,முதலியவை தாமாக கழன்று விடைபெற்ற பின் இது தான் நல்ல தருணம் என்று அரை நொடியும் (பஜனை ஜபமில்லாமல்) வீணாக்க கூடாது.
         மேற்சொன்னவாறு எல்லாம் தாமாக தன்னிடமிருந்து விடைபெற்ற பின் பகவானை அடைவதற்கு பல சாதனங்கள் இருக்கும் போது நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்?
         சிலர் வயதான பின் பக்தியில் ஈடுபட்டுக்கொள்ளலாம்.உலகில் பல கடமைகளை ஆற்ற வேண்டி உள்ளது.என்று கூறுவார்கள்.ஆனால் அவர்கள் கூறுவது சரியல்ல.கடமைகளும் தொல்லைகளும் எப்போதுமே ஓயாது.உலகியல் விவகாரங்கள் அலை எப்போதும் ஓயப்போவது இல்லை.நாம் தான் அவற்றில் இருந்து விடுபட வேண்டும்.மேலும் தேகம் நன்கு ஆரோக்யத்துடன் இருக்கும் போதே பகவத் பக்தியில் ஈடுபட வேண்டும்.மரணமும் வியாதியும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.(தொடரும்)