Saturday, 17 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 36

"யோ விவிக்த ஸ்தானம் ஸேவதே யோ லோக பந்தமுன்மூலயாதி நிஸ்த்ரைகுன்யோ பவதி யோக க்ஷேமம் த்யஜதி "
          இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் மாயையை கடக்க மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன.இந்த சூத்திரத்தில் ஐந்து உபாயங்களை கூறுகிறார்கள்.
           நான் எனது,என்ற பற்று சொத்து சுகங்கள் நடுவில் இருந்தால் வைராக்கியம் உண்டாகாது.மேலும் பற்று தான் உண்டாகும்.ஆதலால் பகவத் விஷயங்கள் அல்லாதவற்றில் நெருக்கம் கொள்ளாமல் தனித்து வாழ வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.பகவத்கீதையிலும் பகவான் அதையே கூறுகிறார்.
"விவிக்ததேசஸேவித்வமரரதிர் ஜனஸம்ஸதி "   
உலகியல் விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனக்கூட்டத்தில் இருந்து விலகி தனித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை பகவத் தியானத்திற்கு உகந்தது.
எவ்வளவு தான் பகவான் மீது ஈடுபாடாக இருந்தாலும் அதற்க்கு தக்க சூழ்நிலை இல்லாவிடில் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது.பகவானின் பிரேமையில் கட்டுப்பட வேண்டுமானால் உலகியல் பந்தங்கள் என்ற கட்டுக்களை அறுக்க வேண்டும்.உலகியல் விவகாரங்களில் எவ்வளவு துன்பம் இருக்கின்றன.பகவானை நோக்கி போகும் பக்தி வழி எவ்வளவு நிம்மதியும் ஆனந்தமும் இருக்கின்றதென ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.இதனால் தாமாக பந்த பாசங்கள் கழன்று விடும்.
          முக்குணங்களில் உருவானதே இந்த உலகம். உலகப்பற்றை அறுக்க வேண்டுமானால் முக்குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.சாத்வீக,ராஜச,தாமச குணங்களை ஜெயிக்க வேண்டும். இல்லையேல் அவை உலக விவகாரங்களில் நம்மை அமிழ்த்திவிடும்.
         சாத்வீகம் என்பது அதிக அன்பும் பாசமும் அதிக இரக்கமும் கொள்வது.அதிக அன்பாலும் அதிக இரக்கத்தாலும் ஒருதலை பட்சமாகிவிடும் நிலையில் ஒருவருக்கு பரிந்து, ஒருவரை பகைத்து கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.அல்லது பிறரை இம்சிக்கும் குணம் தலை தூக்கும்.
         ராஜசம் என்பது கோபம் வேகம் பிறரை இம்சிக்கும் குணம் ஆகியன.தாமசம் சோம்பல்,செயல்படாமல் தூங்கிகொண்டிருப்பது,மயக்கம் முதலியன.இவை மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.
        கிடைக்காதது,கிடைப்பது-யோகம் எனப்படுகிறது.
         கிடைத்ததை காத்துக்கொள்வது க்ஷேமம்.க்ஷேமம் என்றால் நலன்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.இதில் உலகியலில் கிடைக்காத சுக போகங்கள் கிடைப்பதை யோகமும் கிடைத்த நலன்களை காத்துக்கொள்வதை க்ஷேமம் என்றும் கூறலாம்.இந்த உலகியல் யோக க்ஷேமங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க வேண்டும்.கிடைத்தாலும் விலகி கொள்ள வேண்டும்.
         மற்றொரு யோக க்ஷேமம் -- கடவுள் விசயத்தில் யோகமேன்பது கடவுளை அடைவது அல்லது கடவுளை அடையும் உபாயத்தை ,வழியை அடைவது. க்ஷேமம் என்றால் பகவானை அடையும் வழியை அறிந்து அதிலுருந்து பிறழாமல் சாதனை செய்வது.
         இரண்டுவித யோக க்ஷேமங்களை பற்றி கொண்டு கவலை பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் முழு பொறுப்பையும் பகவானிடம் அர்ப்பணித்து விட்டு பகவானை வழிபடுதளிலேயே குறியாக இருக்க வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.என்னை மட்டும் உபாசிக்கும் பக்தர்கள் என்னை மட்டும் நம்பி இருப்பார்கள்.அவர்களின் யோக க்ஷேமங்களை நானே பொறுப்பேற்று சுமந்து கொண்டு இருக்கிறேன்.
"போஜனாச்சாதனே.சிந்தா வ்ருதா குர்வந்தி வைஷ்ணவா
யோ அசௌல விச்வம்பரோ தேவ ஸ கிம் தாஸானு பேக்ஷதே "
வைஷ்ணவர்கள் உணவு உடை பற்றி ஏன் வீணாக கவலை பட வேண்டும்? அகில விசுவத்திர்க்கும் உணவளிப்பவன் தன பக்தர்களை மறந்து விடுவானா?
                                                                                                                    (தொடரும்)

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 35

"தரங்காயிதா அபீமே ஸங்காத் ஸமுத்ராயந்தி "
காமமும் (உலகில் இருக்கும் அனைத்து வித ஆசைகள்)குரோதமும் அலைகள் போல எழுந்து எழுந்து பெரும் அலைகடலாக பெருகி விடுகின்றன.மேற்சொன்னது போல தீயவர் சேர்கையால் அல்லது தீமைகளை தன்னில் வளர்த்து கொள்வதால் பெரிய அளவில் பெருகி விடுகின்றன.
          தீமைகளை வேருடன் களைய வேண்டும்.சிறிதளவு தேங்கி விட்டால் கூட அவை படிப்படியாக வளர்ந்து ஆபத்தை விளைவிக்கும்.தீயின் சிறு பொறியை விட்டு வைத்தாலும் அது பெரிய நெருப்பாக மாறி எல்லாவற்றையும் சாம்பலாகி விடும்.
         ஆரம்பத்தில் காமகுரோதாதிகள் சிறு அலை போல தோன்றினாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெருகி கடல் போல ஆகி விடும்.என்று கூறுகிறார்கள்.நல்ல எண்ணங்களை விரட்டிவிடும்.நம்மனதில் நல்ல குணங்கள் அதிகமாகவும் தீய எண்ணங்கள் குறைவாகவும் இருக்கின்றன என்று நினைத்து கொள்ள கூடாது.இந்த மனதை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.இந்த மனமானது கீழான விசயங்களை நோக்கி விரைந்து பாயக்கூடியது. மாயையை எவராலும் வெல்ல முடியும்.என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
"கஸ்தரதி கஸ்தரதி மாயம்? ய : ஸங்கான் ஸத்யஜதியோ மஹானுபாவம் ஸேவதே, நிர்மமோ பவதி " 
மாயையை வென்று எவன் கரை சேருகிறான்?ஜனன மரணத்தை விட்டு எவன் கடைத்தேருகிறான்? என்ற கேள்வி எழும் போது தேவைக்கு அதிகமாக இருக்கும் (ஏனெனில் உலகில் வாழ்வதற்கான சில விஷயங்கள் இன்றியமையாதவை)உலகியல் விசயங்களை துண்டித்து துறந்து விட்டவன் பக்தர் அல்லாதவர்களுடன் அதிக தொடர்பு கொள்ளாமல் தீயவர்களோடு சுத்தமாக தொடர்பை அறுத்து கொண்டவன் கடைதேருவான்.மகான்களோடு தொடர்பு கொள்பவன் பற்றற்று வாழ்க்கை வாழ்ந்து நான் என்ற அகந்தையை விட்டோழிப்பான். 
         நதியில் நீந்த வேண்டுமானால் கைகளாலும் கால்களாலும் நீரை அடித்து விலக்கிக்கொண்டே போனால் மூழ்காமல் இருக்கலாம்.அது போலவே மகா பயங்கரமான மாயை என்ற நதியை நீந்தி கடக்கவேண்டுமேன்றால் இருகைகளாலும் அகங்காரத்தையும் விசயபற்றையும் விலக்கிக்கொண்டே போக வேண்டும்.இல்லையேல் முடிவில்லா பிறவி பெருங்கடலில் மூழ்கி விட வேண்டியது தான்.
         மாயை சம்ஸாரக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும் போது கைகால்கள் சோர்ந்து விடும்போது ஒரு படகு போல மகான்களின் திருவடிகளை பற்றிக்கொள்ளவேண்டும்.பாகவதபுராணம் கூறுகிறது.மிகுந்த குளிர் பிரதேசத்தில் தீயை மூட்டி பக்கத்தில் குளிர் காய்வார்கள்.அதனால் குளிரும் விலங்குகளில் இருந்து பயமும் நீங்கி இருளும் அகன்று சுகம் கிடைக்கும்.அதுபோல மகான்களின் நிழலில் இருந்து கொண்டால் பாவங்கள் ஜெனனமரண பயம் அஞ்ஞான இருள் இவை மூன்றும் விலகி சென்றவுடன் நமக்கு அலாதியான அமைதி கிடைக்கும்.
          தந்தை இரண்யன்,மகன் பிரகலாதனை நோக்கி கேட்கிறான்."உனக்கு இந்த மதி எப்படி வந்தது?விடாப்படியாக எப்படி ஹரியை பற்றிக்கொண்டு இருக்கிறாய்?
          பிரகலாதன் அதற்க்கு பதில் அளிக்கிறான்."தந்தையே இறைவனை நோக்கி பக்தி கொள்ளும் மதி எவருக்கு எப்படி வரும் என்று கூறுகிறேன்.-பற்றற்ற சாதுக்களான மகான்களின் பாத தூசி தன் தலை மீது பட்டவுடன் எல்லா அனர்த்தங்களையும் அது விரட்டி அடிக்கும்.அப்போது ஸ்ரீ ஹரியின் பாத கமலங்களை பற்றிக்கொள்ளும் மதி ஏற்படுகிறது.
         ஜட பரதன் ரஹூகணன் என்ற மன்னனிடம் கூறுகிறார்:கிடைப்பதற்கரிய பகவானின் பேரருள் பகவத் தத்துவ ஞானம், பிரேமை எல்லாம், தவம்,யக்ஞம்,கிரஹச்தாசிரம கடமைகள் வேத அத்யாயனம், தீர்த்தாடனம், அக்னி உபாசனை, சூரிய உபாசனை யாவற்றாலும் கிடைக்ககூடியவை அல்ல. ஆனால் மகா புருஷர்களை அண்டி சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து அவர்கள் பாத தூசி மேனியில் பட்டு விட்டால் மட்டும் கிடைத்து விடும்.
                                                                                    (தொடரும்)

Friday, 16 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 34

தீயவர்களின் சேர்க்கையில் இருந்து தப்பித்து இருக்க வேண்டும்.நல்லவர்களின் சேர்க்கையின் அவசியத்தை கூறிவிட்டு தீயவர்களை தவிர்க்க வேண்டும்.என்று கூறுகிறார்கள்.நல்லவர்களின் சேர்கையால் பகவானின் கதை கேட்பதும் பஜனையும் நாமஜபமும் செய்தால் பகவான் மீது பிரேமை வளரும்.நல்லொழுக்கம் நிலைத்து இருக்கும்.சாஸ்திர ஞானமும் வைராக்கியமும் உண்டாகும்.அப்யாசம் பலப்படும்.பெரியோர்கள் மகான்கள் சேவை தொடரும்.நேர்மை இருக்கும்.
          மேற்சொன்ன விசயங்களுக்கு எதிராக தீயவர்களின் நட்பால் தீய விஷயங்கள் மனதில் குடி புகும்.புலன் விசயங்களுக்கு அடிமையாகி விடுவது,பிறரை துவேசிப்பது,தன சொந்த சுகத்தை நாடி போவது,.ஒழுக்கம் கேட்டு திரிவது,பெரியோருக்கு கீழ் படியாமல் இருப்பது,தன்னுடைய சந்தோசமே பெரிது என்று நினைப்பது, தீய விசயங்களை பற்றி கொள்வது,சுய கௌரவம் கருதுவது,கோபம் கர்வம்,பொறுமையின்மை அகத்தூய்மை புறத்தூய்மை இல்லாமல் இருப்பது, இரக்கமின்மை,அசாத்தியமாக இருப்பது,அமைதி இல்லாமல் அலைவது, இவற்றுடன் உயிர் வாழ்ந்தால் தன் ஆத்மாவை அதொகதிக்கு தள்ளிவிட்டவன் ஆவான் மனிதன்.அசுர சம்பத்து படைத்த அனைத்து குணங்களும் குடியேறி விடும்.
          பாகவத புராணத்தில் கபில முனிவர் தன் தாயிடம் கூறுகிறார்:
நல்லவர் நலபை துறந்து மீண்டும் ஏன் பாவகுழியில் விழவேண்டும்? பெண் பித்து பிடித்தவர்களோடு சேர்ந்தால் அவர்கள் மனதில் இருள் சூழும்.மேலும் சத்தியம்,தூய்மை, தயை,நல்லறிவு,திரு,மானம்,புகழ், சாந்தி எல்லாம் பறந்தோடி விடும்.இவர்கள் எதிர்காலம் சிதறுண்டு போகும்.ஆதலால் புலன் இன்பங்களை பெரிதாக நினைக்கும் கீழ் பிறவி அடைந்த மனிதர்களோடு தொடர்பு கொள்ள கூடாது.துளசிதாசர் ராமாயணத்தில் கூறுகிறார்.நரகம் மிக மோசமானது.தீயவர்களின் சேர்கை அதனினும் கீழானது.தீயவர்களின் சேர்கை இல்லாதபோதும் மனம் வேறு விசயங்களை பற்றி சிந்தித்து தடுமாறினால் உடனே பகவானை சரணடைய வேண்டும்.தன்னுடைய முயற்சியிலும் வெற்றி காண வேண்டும்.நாம் வாழும் வாழ்க்கை முறை தீமைகள் இருக்கின்றனவா என்று எப்போதும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
" காமக்க்ரோத மோஹஸ்ம்ருதிப்ப்ரம் ச புத்திநாச ஸர்வநாச காரணத்வாத்"
தீயவர்களின் சேர்கையால் காம குரோத மதி மயக்கங்களால் நினைவாற்றல் அழிந்து அறிவும் நாசமாகி இறுதியில் சர்வ நாசமும் ஆகிவிடும்.
          பகவான் சம்பந்தப்பட்ட தத்துவங்களையும் நாம ஜெபம் பஜனைகளும் விட்டு விட்டு புலன்களுக்கு இன்பம் தரும் உலகியல் விசயங்களில் கவனம் செலுத்துவதே தகாத விஷயம்.சர்வ நாசத்திற்க்கும் இதுவே மூலகாரணம்.
சித்தம் ஓயாது எதை சிந்திக்கிறதோ அதில் பற்று ஏற்படுகிறது.தீயவர்கள் அல்லது தீமை விளைவிக்கும் விசயங்களோடு தொடர்பு கொள்வதால் மனிதனின் சரீரம், வாக்கு,மனம் யாவும் அடங்காத ஆசைகளோடு அடிமையாகின்றன.ஆசைக்கு அடிமையாகிவிடும்போது பேராசை மேலும் பெருகுகிறது.ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வருகிறது.கோபத்தால் மதி மயக்கமும் நினைவாற்றலும் அழிகிறது.அறிவு நாசத்தால் இகலோக பரலோக நலன்கள் அழிகின்றன.பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.ராஜச குணத்தால் உண்டாகும் காமமும் (சகலவித ஆசைகளும் காமத்தில் அடங்குகின்றன)குரோதமும் தான் மனிதனை பாவக்குழியில் தள்ளுகின்றன.எல்லா நன்மைகளையும் இவை அழித்து விடுகின்றன.அர்ஜுன இவை இரண்டையும் நீ பரம வைரிகளாக நினைப்பாயாக.(தொடரும்) 

Thursday, 15 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 33

துஸ்ஸங்க: ஸர்வதைவ த்யாஜ்ய :"


பாண்டிய மன்னன் தீயவர்களான சமணர்களோடு இணைந்து நட்பு கொண்டதால் இறைவன் அருளை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானான்.அந்த நாட்களில் பாண்டிய நாட்டில் சமண மதம் பெருகி சைவ மதம் குன்றி இருந்தது.பரம்பரை பரம்பரையாக சைவ நெறியில் நின்ற பாண்டியமன்னன் முந்தய பிறவியில் செய்த தீவினையின் பயனாக சைவ சமயத்தை நீக்கி சமண சமய நெறியின் சார்பையே நல்லறம் எனகருதியிருந்தான்.
          இந்நிலையில் பாண்டிய மன்னனின் பட்டத்து மஹா ராணியார் மங்கையர்க்கரசி மந்திரியாரையும் வீரர்களையும் அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வர செய்தார்.இதற்கிடையில் சமணர்கள் தவ வேடத்தில் தங்களை மறைத்துக்கொண்டு திருஞானசம்பந்தர் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள்.அங்கு தீ மூட்ட மந்திரம் ஜெபித்தார்கள். மந்திரத்தால் மடத்திற்கு தீ மூட்ட முனைந்தார்கள்.ஆனால் அவர்கள் மந்திரம் ஜெபித்தும் தீபற்றவில்லை.இதனால் மனம் தளர்ந்து ஒன்று கூடி அச்சம் பெருகிடக்க ஆலோசித்தார்கள்.பிறகு அரசன் இதை அறிந்ததால் நமது மேன்மையை மதிக்கமாட்டான் நமது பிழைப்பையும் கெடுப்பான் என்று எண்ணி அவர்கள் தம் கையால் தீக்கோல் எடுத்து சென்று சிவனடியார்களின் மடத்திற்கு தீயிட்டார்கள்.
         மடத்தின் வெளிப்புறத்தில் பற்றிய தீயை கண்ட சிவனடியார்கள் மனம் கலங்கி அதை தணித்தார்கள். சமணர்கள் செய்த பாவ காரியங்களால் அந்த வினைப்பயன் வீண் போகவில்லை.அவர்கள் மூட்டிய தீ பாண்டியமன்னனிடம் வெப்ப நோயாக வந்து சேர்ந்தது பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது.எரியும் நெருப்பை போன்ற சூடு கணகண வென்று அவன் உடம்பெல்லாம் பரவியது.மன்னன் சமணர்களை பார்த்து "நீங்களும் சிவனடியாரான ஞானசம்பந்த பிள்ளையாரும் என் நோயை தீர்த்து உங்கள் தெய்வத்தன்மையை நிலை நிறுத்தி கொள்ளுங்கள் "என்றான்.
        பாண்டியன் தன்னை சூழ்ந்து ஓலமிடும் சமணர்களையும் அருளுடைய ஞானசம்பந்தரையும் நோக்கி "எனக்குள்ள அந்த வெப்பு நோயை நீங்கள் தனித்தனியாக வெவ்வேறு  விதமாக விரைவில் தீர்த்து வையுங்கள்.அதை தீர்த்து வைபவர்களே வாதில் வெற்றிபெற்றவர்கலாவர் "என்று மன்னன் சொன்னான்.உடனே சமணர்கள் அரசே நாங்கள் மந்தரித்து எங்கள் தெய்வ வல்லமையால் உமது உடம்பின் இடது பாகத்திலுள்ள நோயை தீர்ப்போம். என்று சொல்லி அரசனது இடது பாகத்து நோயை தீர்பதற்காக அவர்கள் மன்னவனருகே தங்கள் நாமத்தை முழங்கி மயிர்ப்பீலிக்கற்றயினால்  அரசனது இடப்பாகத்தை தடவினார்கள்.அதனால் வெப்பம் முன்னிலும் அதிகமாக கொதிதெழுந்து பாண்டிய மன்னனை வருத்தி எடுத்தது.மன்னன் அதை பொறுக்கமுடியாதவனாகி ஞானசம்பந்தரை பார்த்தான்.சம்பந்தர் ஆலவாய் சொக்கநாதரை நினைத்து "ஆலவாய் அண்ணலே அரசனின் வலப்பக்கத்து வெப்பு நோயை நீரே மந்திரமாகி, மருந்துமாகி தீர்ப்பீர் என்று வேண்டிக்கொண்டு பெருமானை நினைத்து மந்திரமாவது  நீறு என்னும் திருநீற்று பதிகத்தை பாடி அந்த திருநீற்றை கொண்டே அரசனது வலப்பக்கத்தில் தடவியருளினார்.தடவியதும் வலப்பக்கமிருந்த வெப்புநோய் முழுவதும் நீங்கி பொய்கை போல குளர்ந்தது. ஆனால் அவ்வலப்பக்க நோய் 
இடப்பக்கம் புகுந்து முன்பிருந்த நோயோடு சேர்ந்து இருமடங்காக பெருகலாயிற்று.சமணர்களின் பீலிகள் அந்த நோயின் வெப்பத்தால் எரிந்து கருகின.உடம்பின் இடப்பக்கத்து வெப்பம் தங்களையும் தாக்க ஆரம்பிக்கவே சமணர்கள் நடுங்கி அதை தாங்க முடியாமல் தள்ளி பொய் ஒதுங்கி நின்றார்கள். திருஞானசம்பந்தர் வலப்புறத்து வெப்பு நோயை போக்கியது கண்டு அங்கிருந்த பெரியவர்கள் அதிசயித்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.உலகில் வெப்பமும் தட்பமும் பொருந்தி இருப்பது போல அரசன் உடம்பிலும் ஒரு பக்கம் வெப்பமும் மறுபக்கமும் குளிர்ச்சியும் பொருந்தி இருந்தது.
          மன்னன் கூறினார்.என்னுடல் ஒன்றிலேயே இந்த இருவேறு தன்மைகளின் இயல்பையும் அனுபவித்தேன்.என்னே அதிசயம்.வெப்பமான சமணர்களே நீங்கள் தோற்று விட்டீர்கள்.என்னை விட்டு தூர போய் விடுங்கள்.என்று கூறி ஞானப்பிள்ளையார் சம்பந்தரை நோக்கி என்னை வாழ்விக்க வந்த மறைக்குல வள்ளலாரே என் உடலின் இடப்பக்கத்திலுள்ள வெப்பு நோயும் தீர நீரே அருள் செய்யும் என்று வேண்டினார்.ஞானசம்பந்தர் தமது திரு முகத்தில் கருணை காட்டி திருக்கையில் வெண் திருநீறு காட்டி திருப்பதிகம் நிறைவாக்கிதுதித்து பாண்டியனுடலில் இடது பக்கம் ஒருமுறை தடவ அரசனது இடப்பக்கத்து வெப்பம் அகன்று நோய் முழுவதும் நீங்கியது.பாண்டி மா தேவியாரும் மந்திரி முதலிய பெரியோர்களும் சம்பந்தர் திருவடிகளை தங்கள் தலைகளால் வணங்கி நாங்கள் பெருமை பெற்றோம் மேன்மையுற்றார் எங்கள் மன்னர் என்று கூறி உள்ளம் மகிழ்ந்தனர்.
                                                                                      (தொடரும்) 

Wednesday, 14 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 32

          ராமாயணத்தில் ராமன் மனம் பரதனிடம் இருந்தது.பரதன் மனம் ராமனிடம் இருந்தது.
         கோபிகை பெண்கள் என் மகிமை பாடி என்னையே பூஜித்து சிரத்தை கொண்டு என்னையே மனதில் வைத்திருந்தார்கள்.நானும் அவர்களை மனதில் வைத்து இருக்கிறேன்.பூஜிக்கிறேன் என்று பகவான் கூறுகிறார்.ஒரு கட்டத்தில் கோபிகை பெண்கள் கண்ணனாகவே மாறி விடுவார்கள்.பகவத் கீதையில் கூறுகிறார்: பக்தர்கள் எப்படி என்னை பூஜிக்கிறார்களோ அப்படியே நான் அவர்களை பூஜிக்கிறேன்.இதுவே உண்மையான மகான்களின் அடையாளம்.
      "  ததேவ ஸாத்யதாம்     ததேவ ஸாத்யதாம்"
ஆதலால் மகான்களை சந்திக்க அவசியம் முயற்சிக்க வேண்டும்.அப்போது
வெகு சீக்கிரமே பகவானின் அருளை பெற்று விடலாம்.
         வெளி தோற்றத்தில் மகான்களை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் நெடுநாள் அவர்கள் கூட இருந்து பழக வேண்டும்.அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று சில காலதிருக்கு பின் அறிந்து கொள்ளமுடியும்.தன்னையும் முழுமையாக அர்ப்பணித்து விட வேண்டும்.
        ஸ்ரீ கிருஷ்ண பகவான் பக்தி யோக தத்துவத்தை நன்கு அறிந்து கொள்ள உத்தவரை கோபிகை பெண்களிடம் அனுப்புகிறார். உத்தவர் பிருந்தாவனதிருக்கு வந்து கோபிகை பெண்களின் உயர்ந்த பிரேமை பக்தியை நேரில் கண்டறிகிறார். அன்பின் உச்சகட்டத்தை தொட்டு விட்ட அவர்களின் வாழ்க்கை முறையை கண்டு மிகவும் வியந்து போகிறார்.இது போலவே மகான்களை நாம் அவசியம் நேரில் காண வேண்டும். அவர்களை தேடி போக வேண்டும்.
          மகான்களும் அனைவரையும் உற்றவராக நினைத்து பகவானின் பக்தியோக ரகசியத்தை உபதேசித்து விட மாட்டார்கள்.அவர்கள் உள் மனதில் தெய்வ சங்கல்பம் அனுமதி தந்தால் தான் ஏற்றுக்கொள்வார்கள்,அவர்களிடம் உண்மையாக நடந்து கொண்ட பின் உலகியல் ஆசைகளை பெரிதாக மதிக்கிறோமோ என்று அறிந்த பின் நம்மை பகவானை நோக்கி திசை திருப்புவார்கள்.அவர்கள் அருளால் (நம்மை சோதித்தபின்)நாம் பகவானின் அன்புக்கு பாத்திரமாகி விடுவோம்.நமது மனமும் அருள் தாகம் எடுத்து பகவானுக்காக எங்கும்,உருகும்.
          பகவானின் பிரேமையில் இரண்டரகலந்த பக்தர்கள் நம்மை என்றும் கை விட மாட்டார்கள்.அவசியம் நம்மை கரை சேர்ப்பார்கள்.இப்படிப்பட்ட மகான்கள் மோட்சத்தையும் விரும்பாதவர்கள்.மக்களை உய்விப்பதர்காகவே ஜென்மமேடுப்பர்கள்.பகவானின் அருளை பெறுவதற்காக அலையும் பக்தர்களை சந்தித்து மிகவும் மகிழ்ந்து ஞானத்தையும் பக்தியையும் உபதேசிப்பார்கள்.அவர்கள் தரிசனமும் ஸ்பரிசமும் பேசுவதும் மிக புண்ணியத்தை தரும்.உலக துன்பங்களில் இருந்து விடுபட அது ஒரு நல்ல வாய்ப்பு என்று நாம் உணர வேண்டும் (தொடரும்)

Tuesday, 13 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 31

"லப்யதே அபி தத்க்ருபயைவ "
          எல்லாம் வல்ல அந்த இறைவனின் திருவருளால் மட்டும் மஹா புருசர்கள் சந்திப்பு நிகழும்.
          பகவான் எவரை தன்னுடயவனாக்கிகொள்ள விரும்புகிறாரோ அவரிடம் தன சொருபமாக விளங்கும் மகானை அனுப்புகிறார்.


         திருஞானசம்பந்தர் என்ற மகானுக்கு நேரடியாக சிவபெருமானின் அருள் கிடைத்து இருந்தது.பிள்ளை பிராயத்தில் இருந்தே சிவபெருமானை நினைத்து உருகிபதிகங்களை பாடிகொண்டே இறைவன் குடிகொண்ட கோயில்களுக்கு சென்ற வண்ணம் இருந்தார்.
         திருநெல்வாயில் அறத்துறையில் மூர்த்தியாக வீற்றிருக்கும் சிவபெருமான் ஞானசம்பந்தர் தம் காலால் நடந்து வந்ததை கண்டு மனமிரங்கினார்.சிவபெருமான் அன்று இரவே அவூரில் உள்ள ஒவ்வொரு அந்தணர் கனவிலும் தோன்றி "ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான் முத்து சிவிகையும், முத்து மணிக்குடையும் நம்மிடம் இருந்து எடுத்து சென்று அவனுக்கு கொடுங்கள் " என்று கூறி மறைந்தார்.வேதியர்கள் எல்லோரும் விழித்து எழுந்தனர்.அவ்வூரில் உள்ள சந்திரசேகர பெருமானின் ஆலயத்திற்கு எல்லோரும் திரண்டு சென்றனர்.ஆலயத்தினுள் இருந்தவரும் அக்கனவு கண்டு எழுந்தார்.அனைவரும் சேர்ந்து ஆச்சர்யம் அடைந்தனர்.திருப்பள்ளி எழுச்சிக்காலம் வந்தது.அன்பர்கள் திருக்காப்பு நீக்கினார்கள்.
         அங்கே சந்திரசேகர பெருமானின் முன்னிலையில் சந்திரனை போல பிரகாசமான ஒரு முத்து சிவிகையும் ஒரு வெண்குடையும் ஊதும் முத்து சின்னமும் காணப்பட்டன.எல்லோரும் அளவில்லா ஆனந்தம் அடைந்து தலை மீது கை குவித்து கும்பிட்டு ஆரவாரம் செய்தார்கள்.
          அங்கு திருஞானசம்பந்தர் அன்று இரவே கனவில் சிவபெருமான் தோன்றி நாம் உனக்கு கொடுத்துள்ள முத்து சிவிகை முதலானவற்றை ஏற்றுக்கொண்டு சிவிகையில் ஏறி எம்மிடம் வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.இவ்வாறு இறைவனை முழுமையாக அறிந்து கொண்ட ஞானசம்பந்தர் சிவபெருமானின் பேரன்பு பொழியும் பக்தராக இருந்தார்.
          உண்மையில் பகவானின் அருளும் மகான்களோடு ஏற்படும் தொடர்பும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும்.
      "  தஸ்மின் ஸ்தஜ்ஜனே பேதா பாவாத் "
பகவானுடன் ஒன்று கலந்து பிரேமையில் திளைத்த பக்தர்களுக்கும் பகவானுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லாததால் மகான்கள் உயர்ந்தவர்கள்.
       "  ப்ரஹ்மவித் ப்ரஹ்மை பவதி " என்ற உபநிசத வாக்கு படி இறைவனை முழுமையாக அறிந்து கொண்டவர்கள் பிரம்மமாகி விடுவார்கள்.அப்படிப்பட்ட மகான்களை சேவித்தால் அது பகவானுக்கே செய்யும் சேவை ஆகிறது.பாகவத புராணத்தில் பகவானே கூறுகிறார்.சாதுக்கள் என் இதயம் ஆவார்கள்.என் இதயம் சாதுக்களிடம் உள்ளது.என்னை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.நானும் அவர்களை விட்டு பிரிய மாட்டேன்.(தொடரும்)
          

Monday, 12 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 30

மகான்களின் அருள் கிட்டுவது மோட்சத்திற்கும் அது ஈடாகாது. பகவானின் பிரேமையில் இரண்டற கலந்த பெரியோர்கள் நாடி வந்தவர்கள் மனதில் பக்தியை வித்திடுவார்கள்.என்று துளசிதாசர் கூறுகிறார்.
          மகா புருஷர்களின் சேர்கையால் சீக்கிரமே நமக்கு இறையருள் கிடைத்துவிடும்.அவ்வளவு குறுகிய காலத்தில் யோகம் செய்தாலும் சாங்கிய யாகம் அறிந்திருந்தாலும் புண்ணியம் செய்தாலும் வேதங்களை படித்தாலும் தவம் தியாகம் யாகங்கள் செய்தாலும் தான தட்சிணைகள் கொடுத்தாலும் யம நியமங்கள் கடைபிடித்து தீர்த்தாடனம் செய்தாலும் விரதங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் வசப்பட மாட்டேன்.என்று பாகவதத்தில் பகவானே கூறுகிறார்.இதற்க்கு காரணம் என்ன வென்றால் மேற்சொன்ன சில சாதனைகள் இகலோக ஆசையின் அடிப்படையில் அல்லது பரலோக ஆசையின் அடிப்படையில் செயாப்படுகின்றன.மேலும் அந்த சாதனைகள் நிஷ்காம பாவமாக (பலனை எதிர்பாராத ) செய்த பின் சித்தம் தூய்மை அடைந்து முக்தி யடைய தகுதி கிடைக்கிறது.ஆனால் மஹா புருசர்களின் சேர்கையால் மிக எளிதாக சுதந்திரமாக மாறாத பிரேமை பக்தி கிடைத்து விடுகிறது.அது அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பேரருளை பொழிவதற்கு மட்டும் கிடைக்கும் மிக அரிதான வாய்ப்பு.
          சூத்திரத்தில் மேலும் கூறப்படுவதாவது:
பூர்வ ஜென்மத்தில் புண்ணியமான பலனால் அல்லது இறைவனை தொழுத பலனால் நேரடியாக பகவானின் சிறிதளவு அருள் கிடைத்தாலும் உய்வடயலாம்.ஆனால் பகவானின் அருளால் தான் மகா புருஷர்களின் சந்திப்பும் கிடைக்க கூடும்.அந்த சந்திப்பு மிக அரிதானது என்று அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
 "மஹத்சங்கஸ்து துர்லபோ அகம்யோ அமோகச்ச "
உலகில் நேரான சுபாவமுள்ள தர்ம சிந்தனை உள்ள நல்லொழுக்க சீலர்களாக இருக்கப்படும் தெய்வ சம்பத்து படைத்த மகான்களை காண்பது அரிது.உபதேசங்கள் சொல்வது சுலபமானது.அதை கடைபிடிக்கும் சாதுக்களோ பரம ஞானிகளோ எளிதில் கிடைக்க மாட்டார்கள்.நாம் உண்மையாக சரண் அடைந்தாலும் பாராமுகமாக இருப்பார்கள்.யோகிகளும் ஞானிகளும் விரும்பும் பிரேமை பக்தி அவர்கள் மூலமாக சாமானியமாக கிடைப்பதும் இல்லை.மேலும் உயர்ந்த ஞானிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது.
          சிலர் எல்லாம் அறிந்தவர்களாக சாஸ்திரம் படைத்தவர்களாக இருப்பார்கள்.கவர்ந்திழுக்கும் பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.பக்தர்கள் போல தத்துவ மேதைகள் போல நடிப்பார்கள்.மனம் உருகுவது கண்ணிற் வடிப்பது,தெய்வம் தன்னில் இறங்கி விட்டது என்று ஆடுவது எல்லாம் புற தோற்றதால் எதையும் நிச்சயமாக நம்ப முடியாது.சிலர் ஆழ்கடல் போல எந்த ஆர்பாட்டமும் அல்லாது இருப்பார்கள்.எதையும் நிச்சயிக்க முடியாது.நான் தான் பெரிய ஞானி என்று எவரும் தன வாயால் சொல்வதில்லை. ஆதலால் உண்மையான மகானை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.அதிஷ்டவசமாக ஒருவர் கிடைத்துவிட்டால் பிறவி எடுத்த பலனை அடைந்துவிடலாம்.அவரிடம் சென்று சரண் அடைந்தது வீண் போகாது.
         சாதரணமாக ஒரு நல்லவரோடு நட்பு கொள்ளும்போது நம் மனதிற்கு இதமாக இருக்கிறது.நமது துன்பங்கள் தீர்ந்துவிட்டது போல அனுபவம் உண்டாகிறது.அதற்கும் மேலாக நமக்கு மகா புருசர்கள் கிடைத்தால் நமது பாக்கியமே பாக்கியம்.அவர்கள் நம் மனதை தூய்மை படுத்தி பகவானை நோக்கி திருப்பி விடுவார்கள்.அவர்கள் தரிசனத்தால் நமக்கு அடிமனதில் பக்தி சுரக்கும்.(தொடரும்)