Friday 13 April 2012

ஜடபரதன் தொடர்ச்சி 1

அனைத்துயிர்களிலும் பகவானை காணும் மகா புருசர்கள் என்றும் பகையும் பற்றும் துறந்து விட்டவர்கள் , அவர்களை பகவானே பல சக்தி வடிவங்கள் கொண்டு எப்போதும் காத்துக்கொண்டு இருப்பார்.
            சிந்து சௌவீர தேசாதிபதி ரஹுகணன் என்ற அரசன் ஞானோபதேசம் பெறுவதற்காக இட்சுமதி நதிக்கரையோரம் பல்லக்கில் சென்று கொண்டிருந்தபோது பல்லக்கு தூக்குபவர்களுக்கு மேலும் ஒரு ஆள் தேவைப்பட்டது. அச்சமயம் ஓர் இடத்தில் வேலை ஏதும் செய்யாமல் பேசாமல் அமர்ந்திருக்கும் பரதனை அவர்கள் கண்டார்கள்.இவன் நல்ல திடகாத்திரமாக வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான்.என்று பல்லக்கு தூக்குபவர்கள் அவரை அழைத்து வந்து ஒருபக்கம் பல்லக்கு தூக்க சொன்னார்கள்.அவரும் அந்த ஆட்களோடு சேர்ந்து பல்லக்கை தூக்கிக்கொண்டு நடந்தார்.அப்போது அவர் இரண்டு அடி முன்னால் ஏதாவது பூச்சி எறும்பு முதலிய உயிர்கள் நடுவில் வந்து கால்களில் மிதிபடாமல் இருக்க பார்த்துக்கொண்டே நடந்தார்.அதனால் பல்லக்கு தூக்கும் மற்றவர்களோடு சேர்ந்து நடக்க முடியவில்லை. பல்லக்கு ஆட்டம் கண்டது.
            பல்லக்கு ஆடுகிறதே,ஏன் சீராக போகவில்லை?என்று பல்லக்கு தூக்குபவர்களை அரசன் வினவினான்.அதற்க்கு அவர்கள் புதிதாக வந்தவன் எங்களுடன் சேர்ந்து வரவில்லை.அதனால் பல்லக்கு ஆடுகிறது என்றார்கள்.
அரசன் பரதனை நோக்கி ஏன் அப்பா பல்லக்கு தூக்கி, அதற்குள் தளர்ந்து விட்டாய்?உடல் நலிந்து மெலிந்து இருக்கிறாய்.பாவம் வயதாகிவிட்ட உன்னை பல்லக்கு தூக்க வைத்து விட்டார்களோ?என்று கிண்டலாக பேசினான்.பரதன் மேலும் அதே போல பல்லக்கை சீராக தூக்காமல் ஆட்டிக்கொண்டே தூக்கி சென்றார்.இதனால் மிகுந்த கோபம் அடைந்த அரசன் என்ன தைரியம் இருந்தால் என்னை அவமதித்து இப்படி செய்வாய்.? உனக்கு தக்க தண்டனை தரவேண்டும் என்றார்.
           பரதனுக்கு நான் என்ற அகந்தை விட்டுப்போனதால் அரசனின் அதிகார பேச்சுக்குரலால் எந்த வகையிலும் அவர் பாதிக்க வில்லை.தன்னை போல அனைவரையும் நினைத்த பரதன் பிரியமாக பேசினார்.அரசே நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.எல்லாம் நிலையற்றவை என்றிருக்கும்போது பாரமாக இருந்தால் தானே அதை சுமப்பது கஷ்டம் என்று சொல்ல முடியும்?. திடகாத்திரமாக இருப்பது சரீரம் தான்.ஆத்மா என்றும் மாறாதது.குண்டாக இருப்பதுசரீரம்மெலிந்துஇருப்பது,வியாதி,மனக்கவலை,பசி,தாகம்,பயம்,கலகம்,ஆசை,கிழப்பருவம்,நித்திரை,பிரேமை,குரோதம்,கர்வம்,சோகம் இவையெல்லாம் சேர்ந்தது தான் தேகம்.அந்த தேகத்தை எனது என்று நினைப்பவர்களுக்கே இன்பமும் துன்பமும் வருகிறது.எனக்கோ தேகத்தில் பற்று இல்லை.உயிரோடு இருக்கிறவரை தான் உணர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.நீங்கள் அரசன்,நான் சேவகன் என்று நினைப்பது தற்காலிகமானது.அனைவருக்குள் இருக்கும் ஆத்மாவோ என்றும் அழியாதது.இருப்பினும் தங்கள் ஆணைப்படி நடக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.நானோ அனைத்தையும் கடந்த நிலையில் ஜடமாக இருக்கிறேன்.என்னை தண்டித்து என்ன பிரயோஜனம்.அது அரைத்த மாவையே அரைக்கும் போலாகிவிடாதா?என்றார்.
            ஜடமாக இருந்த பரதன் இவ்வாறு கூறி முடித்து தேகத்தில் பற்று வைக்காத சாந்த மூர்த்தி, வினைப்பயன்களை போக்க மீண்டும் பல்லக்கை தூக்க முயன்றார்.அச்சமயம் சிந்து சௌவீர மன்னன் அவர் பேச்சு தத்துவங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்து பல்லக்கை விட்டு கீழே இறங்கினான்.சிந்து சௌவீர மன்னன் தத்துவ ஞானம் அறிவதில் மிக ஆவலாக இருந்தான்.பல யோக சாஸ்த்திரங்கள் படித்திருந்தான்.பரமாத்ம ஞானத்தை பற்றி பரதன் பேசியதை கேட்டு அகந்தையை விட்டொழித்து பரதன் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து கூறினான்.தெய்வ சொரூபமாக என்னிடம் வந்து தத்துவ ஞானம் பேசினீர்கள்.பூணூல் தரித்து பிரம்ம தேஜஸ் மறைக்கப்பட்டு நீறு பூத்த நெருப்பு போலிருக்கும் தாங்கள் யார்?நீங்கள் பித்தர் போல திரியும் அவ தூதர் தத்தாத்ரேயர் தானா? அல்லது நான் தேடிக்கொண்டிருக்கும் கபில முனிவரா?இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள்?யாருக்கு மகனாக எங்கு பிறந்தீர்கள்?நான் இந்திரன் வஜ்ராயுதத்தை அல்லது சிவபெருமானின் திரிசூலத்தையும் கண்டு பயப்பட மாட்டேன்.அல்லது தேவர்களின் ஆயுதங்களாலும் எனக்கு பயமில்லை.ஆனால் தங்களை போன்ற இறைவன் அருள் பெற்ற பிராமணரை அவமதித்த பாவத்தை நினைத்து பயப்படுகிறேன்.என்னை மன்னிக்க வேண்டும்.பிரம்ம ஞானத்தை விளக்கும் தாங்கள் கூறும் தத்துவங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்போன்ற சுக போகங்களில் திளைத்து இருப்பவனுக்கு யோகேஸ்வரர்களின் பேச்சும் செயலும் எங்கே புரியப்போகிறது?
            யுத்தம் போன்ற காரியத்தில் ஈடுபடும்போது சிரமமும் தேகத்தில் வலியும் ஏற்படுகிறது.தங்களுக்கும் சுமை தூக்கும்போது சிரமம் உண்டாகுமே?ஆனால் தாங்கள் தனக்கும் தேகத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.மேலும் அடுப்பில் வைத்த நீர் நிறைந்த பாத்திரம் சூடாகிறது.அதில் போட்ட அரிசி வெந்து போகிறது.இந்த நிலை எப்படி பொய்யாகும்.அதாவது தேகம்,மனம்,புலன்கள்,பிராணம் ஆகியவை பாதிக்கப்படும் போது ஆத்மாவும் பாதிக்கப்படும். அது தொடர்பில்லாமல் எப்படி இருக்க முடியும்?அரசன் என்ற அகந்தையால் தங்களை அவமதித்து விட்டேன்.தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.எனக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டுகிறேன்.அரசன் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பரதன் இவ்வுலகில் பிறந்த பயனை அடைவதற்காக ஏற்பட்டிருக்கும் பிறவாமை என்ற மோட்ச வழிகளை கூறி ஆத்ம ஞானோபதேசம் செய்தார்.
            மனிதன் ஞானம் பெற்று மாயையை வெல்ல வேண்டும்.மனதிற்கும் ஆத்மாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மனத்தால் சுக துக்கங்களை அனுபவிப்பதனால் கர்மபலங்கள் மனிதனை பின்தொடர்கின்றன.அதனால் அவன் பாவ புண்ணிய கர்மங்களை செய்கிறான்.அதன் ஜனன மரண சுழற்ச்சியில் சிக்கிக்கொள்கிறான்.இந்த உலக இயக்கம் உண்மை போல தோற்றமளித்தாலும் அவை நிலையற்றவை.அதனால் அதை பொய் என்று கூறுகிறோம்.பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேரவேண்டுமானால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, இறைவனடி சேர வேண்டுமானால் எல்லாம் வல்ல ஈசனை சரணடைய வேண்டும்.அடியார்களை தொழுது அவர்களிடம் உபதேசம் பெற்று பற்றற்ற வாழ்க்கை நடத்த வேண்டும்.தான், தனது என்று எதையும் கருதாமல் பகவானுக்கே அர்ப்பணம் செய்து கடமைகளை செய்ய வேண்டும்.பரமாத்மாவின் அம்சமாக தன்னுள் உரையும் ஆத்மாவை உணர வேண்டும்.பரதன் இவ்வாறு மேலும் பல ஆத்ம தத்துவ உபதேசங்களை செய்து முடிவில் கூறினார்.
              அரசே நானும் பூர்வ ஜன்மத்தில் உங்களை போல் ஓர் அரசனாக இருந்தவன் தான்.அரச போகங்களையும், பரலோக மேன்மைகளையும்,  இகலோக விசயங்களையும் துறந்துவிட்டு தபோவனம் சென்று தவமியற்றி கொண்டிருந்தேன்.என் தவ வாழ்க்கையில் ஒரு விபத்து போல ஒரு மான்குட்டி மேல் பிரியம் வைத்து விட்டேன்.அதனால் மோட்சம் அளிக்கும் தவயோகத்திலிருந்து வழி தவறி போய்விட்டேன்.மான் பிறவி எடுத்து போன பிறவி நினைவுகள் தப்பாமல் காலத்தை கடத்தினேன்.அதனால் தான் இந்த ஜென்மத்தில் எவரிடமும் தொடர்புகொள்ளாமல் பற்றற்று இருக்கிறேன்.பகவானின் சிந்தனைகளிலேயே காலத்தை கழிக்கிறேன்.என்று கூறினார்.
            ஞானம்,யோகம் முதலிய பல ஆத்மீக விசயங்களை கேட்டபின் தெளிவு பெற்று அரசன் கூறினான்.சுவாமி இன்று நான் தங்களை தரிசித்து பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டேன்.பிரம்ம ஞானத்தை உபதேசித்து என்னை கடைத்தேற்றி விட்டீர்கள்.தங்களை சேவித்து நான் பாக்கியவானாகிவிட்டேன்.தங்களை போன்று மறைந்து வாழும் பிரம்ம ஞானிகளை நமஸ்காரம் செய்கிறேன்.தங்களை போன்ற பிரம்ம ஞானிகள் முதியவர்களாகவோ,இளம்வயதினராகவோ, அல்லது பாலகர்களாகவோ கூட இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.ரஹுகணன் இவ்வாறு தெளிவு பெற்று மன நிறைவுடன் புறப்பட்டான்.ராஜரிஷி பரதனை பற்றி சான்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள்.ஊர் குருவிகள் கருடனொடு போட்டியிட்டு பறக்க முடியாது.அதுபோல பூமியில் இருக்கும் அரசர்கள் எவராலும் பரதனின் பெருமையை அடையமுடியாது.ஸ்ரீ ஹரியின் மீது அளவற்ற அன்பு கொண்டு பரதன் மனைவி,மக்கள்,மற்றும் அரச போகங்களை துறந்து காட்டிற்கு சென்றார்.
            அளவற்ற செல்வங்கள் ராஜ போகங்கள், ஆட்சியின் அதிகாரம்,உயர்ந்த பதவி, பெயர்,புகழ் ஆகியவற்றை தேவர்களும் விரும்புவார்கள்.அந்த மேன்மையின் லக்ஷ்மி கடாட்சம் நம் மீது விழாதா என்று ஏங்குவார்கள்.மாமன்னர் பரதனோ பகவானின் பாதார விந்தங்களில் மனம் லயித்து விட்டதனால் அந்த லக்ஷ்மி செல்வங்களை துச்சமாக நினைத்தார்.மான் சரீரத்தை துறக்கும் போது அவர் உரக்க கூறினார்.யோக சாதனையால் தேட வேண்டியவர், தர்மத்தை காப்பவர்,பிரகிருதி சக்தியின் ஈஸ்வரர்,சர்வாந்தராத்மாவாக விளங்குபவரான யக்ஞா மூர்த்தி நாராயணரை வணங்குகிறேன்.
            மனிதன் பரத மன்னரின் தூய வரலாற்றினை பாராயணம் செய்தால் பாரில் கீர்த்தியும் ஆயுளும் பெற்று மோட்சம் அடைவான்.இந்த கதையை படிப்பவன், பிறருக்கு படித்து சொல்பவன் விரும்பியவை அனைத்தையும் அடைவான்.பிறரிடம் கையேந்தி நிற்க மாட்டான்.

Friday 6 April 2012

ஜடபரதன் தொடர்ச்சி

யோகனுஷ்டானம் செய்து மோட்சம் கிடைக்கும் தருவாயில் இப்படி ஒரு தடை வந்ததை அவர் உணரவில்லை.மாபெரும் சாம்ராஜ்யம், அரண்மனை,மனைவி,மக்களையும் துறந்து மோட்சம் அடைந்து இறைவனடி சேர யோக தவம் செய்வதற்காக அல்லவா காட்டிற்கு வந்தார்.வேறு ஜாதியில் பிறந்த இந்த மான்குட்டி பாசத்தில் ஏன் சிக்கவேண்டும்.இதை வினைப்பயன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?தவிர்க்க முடியாத மரண காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.வியாதியும் மரணமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.சர்பம், எலி வலைக்குள் நுழைவது போல அது எங்கும் வந்து விடும்.அந்த மரணத்தருவாயில் பரதன் படுத்துக்கிடந்தார்.அந்த மான், தான் பெற்ற மகன் போல பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தது.பரதன் பாசத்துடன்அந்த மானை  பார்த்துக்கொண்டேஉயிர் துறந்தார்.
            அந்திம காலத்தில் வரும் நினைவுகளின் பலனால் அடுத்த ஜென்மத்தில் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் கதி போல மானாகவே பிறந்தார்.ஆனால் தான் செய்த தவப்பயனால் அவருக்கு போன ஜென்மத்தின் நினைவுகள் மறையவில்லை.அவர் மிகவும் வருந்தினார்.மனதையும் புலன்களையும் தன் வசம் கட்டுப்படுத்திய மகான்களின் பாதையில் போய் கொண்டு இருந்தேன்.ஆசைகளை துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டேன்.சகல உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பரம்பொருளை நோக்கி எனது மனம் அறிவு புலன்கள் அனைத்தயும் செலுத்தினேன்.அதில் உறுதியாக நின்று தவமியற்றி கொண்டிருந்த நேரத்தில் திடீரென என் மனம் ஒரு மான்குட்டியை நோக்கிச்சென்று பாதை மாறிப்போய்விட்டது.என்று நினைத்து வருந்தினார்.
மானாக பிறந்தவுடன் தன் தாயை விட்டு பிரிந்து முன்பு இருந்த அதே புலஹாசிரமத்திற்க்கு வந்தார்.சாலக்கிராம நதி தீர்த்தக்கரையில் சிலகாலம் காய்ந்த புல்,இலை சருகுகளை உண்டு விதிவசத்தால் வரும் மரணத்தை நோக்கி காத்திருந்தார்.இனி எதிலும் பற்று வைக்ககூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இருந்தார்.பின்பு எதையும் உண்ணாமல் கண்டகி நதியில் பாதி தேகம் வரை மூழ்கி இருந்தார்.சிலநாட்களுக்கு பின் முழுவதும் மூழ்கி மான்தேகத்தை துறந்தார்.
            ஆங்கிரஸ கோத்திரத்தில் ஒரு பிராமணர் வேதங்களை கற்றுணர்ந்து தவமும் ஒழுக்கமும்,நற்குணங்களும் நிறைந்து இருந்தார்.அவரது மனைவி ஒரு பெண்ணையும், ஒரு ஆண் குழந்தையையும் இரட்டையர்களாக பெற்றாள். அந்த ஆண்குழந்தை தான் பரதன் என்று ஞானிகள் கூறினார்கள்.பரதன் செய்த தவப்பலனால் முன் ஜன்ம நினைவுகள் மறையாமல் இருந்தது.இந்த ஜன்மத்தில் எந்த பற்றிலும் சிக்கிக்கொள்ளகூடாது என்று நினைத்து பரதன் எவர் குணங்களை தியானித்து துதி செய்தால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்குமோ அந்த பகவானின் திருவடிகளை மனதில் பதிய வைத்து எப்போதும் திக் பிரமை பிடித்தது போல தனித்து இருப்பார்.
            அவர் தந்தை மகனுக்கு வேதங்களை கற்பித்து அவரை வித்தகனாக ஆக்க வேண்டும் என்று பெரிதும் முயன்றார்.ஆனால் அவர் அறிவில்லா மந்த புத்தி உள்ளவர் போல காட்டிக்கொள்வார்.எதையும் மனப்பாடம் பண்ண முடியாதவர் போல கல்வியில் நாட்டம் இல்லாதவர் போல இருந்தார்.தன்மகனை நல்ல கல்விமானாக்க விரும்பிய தந்தை காலப்போக்கில் தான் விரும்பியது நிறைவேறாமல் மரணமடைந்து விட்டார்.இனி பாடங்களை படி என்று எவரும் சொல்லவில்லை.சுற்றத்தாரும் அவர் மூத்த அண்ணன் மார்களும் ஞானமார்கத்தை அறியாத காரணத்தால் இவரை புத்திசுவாதீனம் இல்லாதவர்,காது கேட்காதவர் என்று ஒதுக்கினார்கள்.
            பயிர் செய்யும் நிலத்தின் சொந்தக்காரர்கள் இவரை அழைத்து வயலில் வேலைசெய்யச்சொன்னார்கள். அதற்க்கு கூலியாக உணவு அளித்தார்கள்.எவர்
எப்படிப்பட்ட உணவை கொடுத்தாலும் ருசி பார்க்காமல் பரதன் சாப்பிட்டு விடுவார்.இதை பார்த்து அண்ணன் மார்கள் தன் சொந்த வயலில் ஜடமாக தோற்றமளித்த ஞானி பரதனை அழைத்து வேலை செய்ய சொன்னார்கள்.அவர் கண்மூடித்தனமாக வேலை செய்தார்.வெயிலோ மழையோ எந்த இடத்திலும் படுத்து உறங்குவார்.
            ஒரு சமயம் கொள்ளைகாரர்கள் தலைவன் தமக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு காளி தேவி கோவிலுக்கு சென்று நரபலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டான்.பலி கொடுப்பதற்காக ஒரு மனிதனை பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.அந்த பலியிடவேண்டிய மனிதன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எப்படியோ தப்பி ஓடி விட்டான்.தலைவனின் சேவகர்கள் அவனை தேடினார்கள்.அவன் எங்கும் கிடைக்காமல் போகவே அவர்கள் கண்களில் பரதன் தென்பட்டார்.அவரை மான்கள்,காட்டுப்பன்றிகள் முதலிய மிருகங்கள் வராமல் இருக்க காவலுக்கு வைத்தார்கள்.அவர் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தார்.கொள்ளையர்கள் நீர் பிராமணரா?என்று எதையும் விசாரிக்காமல் நரபலிக்கு ஏற்ற சர்வ லக்ஷணங்களும் பொருந்திய ஒரு மனிதன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து அவரை பிடித்துக்கொண்டு வந்தனர்.
            அவர்கள் நரபலி கொடுக்கும் முறைப்படி பரதனை மஞ்சள் நீராட்டி சந்தனம்,மாலை,புதுவஸ்திரம்,தூபதீபங்கள் காட்டி,தாரை,தப்பட்டைகள் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.பரதனை பலிபீடத்தில் கிடத்தி காளியம்மனை துதித்து ரத்தத்தால் திருப்திப்படுத்த மந்திரம் ஜபித்து பூசாரி கூறிய அரிவாள் எடுத்து வெட்டப்போனார்.தெய்வங்களுக்கு பிராமணரை பலியிடுவதை சாஸ்த்திரங்கள் தடைவிதிக்கின்றன.சாதாரணமாக ஆபத்து காலத்திலும் பிராமணர்களை கொலை செய்வது பெரும்பாவம் என்று இருக்கும்போது போனஜன்மத்திளிருந்தே தவமும் யோகமும் செய்து பரமாத்மாவுடன் ஒன்றிய நிலை அடைந்தவர் பரதன்.எந்த பாவமும் அறியாத நல்லவர்.இந்த ஜென்மத்தில் பிராமணராக பிறந்து பகவத் சிந்தனையில் மூழ்கி இருப்பவர்.அப்படிப்பட்டவரை பலியிட போகும்போது காளிதேவிக்கு திருமேனிஎங்கும் நெருப்பு பட்டு பற்றிஎரிவது போல இருந்தது.அந்த பிரம்ம தேஜசை பொறுக்காமல் விக்கிரகத்தை உடைத்து காளிதேவி ஆத்திரம் கொண்டு வெளிப்பட்டாள். கோபத்தில் கண்கள் சிவந்து தாடை பற்கள் தெரிய பயங்கரமாக இருந்தாள்.




 மேலும் தன் கணங்களோடு பாய்ந்து வர உலகையே சம்ஹாரம் செய்யப்போவது போல வந்தாள். அட்டகாசமாக சிரித்து குதித்தாள்.வெட்டப்போன அரிவாளை பிடுங்கி அந்த அரிவாளை கொண்டு அங்கு கூடியிருந்த கொள்ளையர்கள் தலைகளை தன் கணங்களோடு சேர்ந்து வேட்டித்தள்ளினாள்.காளிதேவியும் கணங்களும் சேர்ந்து தலைகளை பந்தாடினார்கள்.அவர்கள் ரத்தத்தை குடித்தார்கள்.(தொடரும்)

Thursday 5 April 2012

ஜடபரதன்

ரிஷபதேவரின் மகன் பரதன் கடல் சூழ்ந்த பூமியை நல்லாட்சி புரிந்து வந்தார் .பல வருஷங்களாக அஜநாபவர்ஷம் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட தேசம் பரதன் நெடுங்காலம் அறம் தவறாது மக்களை தன் மக்கள் போல பாவித்து ஆட்சி புரிந்ததால் பாரத வர்ஷம் என்று அழைக்கப்பட்டது.
            பல தக்ஷிணைகள் கொண்ட பற்பல யாகங்களை நடத்தும்போது அத்வர்யு பிராமணர்கள் நெருப்பில் ஆஹுதி இடுவதற்கு ஹவிசை கையில் எடுக்கும்போது (யாகத்தில் இடப்படும் நெய் முதலிய சாமக்கிரிகள் ) யாகத்தின் யஜமானத்தலைவன் பரதன் யாகத்தின் புண்ணிய பலன் அனைத்தையும் தனக்கென்று கருதாமல் பகவானுக்கே சமர்ப்பணம் செய்து வந்தார்.இதயத்தில் இருக்கும் பற்று பகைகளை துடைத்தெறிந்துவிட்டு இந்திரன்,சூரியன் முதலிய தேவர்களை தனித்து வழிபடாமல் அவர்களை விசுவரூபமாக விளங்கும் பகவானின் அங்கங்களில் தியானம் செய்து மகிழ்வார்.
            இவ்வாறு பல வருட காலம் ஆட்சி செய்த பின் உலக விஷயங்களில் இருந்து விடுபட நினைத்தார்.தன்னுடைய ஐந்து புதல்வர்களுக்கும் ராஜ்யத்தை பிரித்துக்கொடுத்துவிட்டு புலஹாசிரமம் நோக்கி தவ வாழ்க்கையை ஏற்று தவம் செய்ய புறப்பட்டார்.புலஹாசிரமம் நைமிஷாரன்யத்தில் இருந்தது.அங்கு சக்கர நதி என்று பிரசித்தி பெற்ற கண்டகி நதியில் சாலகிராம கற்கள் நிறைந்து ரிஷிகளின் ஆசிரமங்கள் அருகில் பிரவகித்துக்கொண்டு இருந்தது.சாளக்கிராமக்கற்களில் சக்கர சின்னம் இருப்பதால் அது சக்கர நதி என்று பெயர் பெற்றிருந்தது.
            புலஹாசிரம தபோவனத்தில் ஒரு ஏகாந்த ஸ்தானமாக தேர்ந்தெடுத்து மலர்கள், துளசி,இலை, காய்கனிகள் ஆகியவற்றை கொண்டு பகவானை அர்சித்துக்கொண்டு தவம் இருந்தார்.மனதில் இருந்த எல்லாவித ஆசைகளையும் விட்டொழித்து நியமங்கள் தவறாது பூஜை,அர்ச்சனை செய்துகொண்டிருக்கையில் பக்தியின் பரவச நிலை அடைந்து விடுவார்.பிரேமையின் உச்சக்கட்ட நிலையில் மனமுருகி ரோமஞ்சிதமடைந்து பேரின்பத்தில் திளைப்பார்.அப்போது அவர் கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கும்.வெளியில் எதுவும் புலப்படாமல் அகக் கண்களில் ஸ்ரீ ஹரியின் செந்தாமரை திருவடிகள் மட்டும் தெரியும்.அவற்றில் மனம் லயித்து பரமானந்தத்தில் மூழ்கிவிட்ட காரணத்தால் வெளிஉலக தொடர்பற்று பூஜா விதி முறைகளையும் மறந்து போவார்.
            ஒரு நாள் கண்டகி நதியில் ஸ்நானம் செய்து விட்டு சூரிய பகவானை பூஜித்து அன்றாட வழிபாடுகளை முடித்து நதிக்கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.அச்சமயம் கருவுற்றிருந்த ஒரு பெண் மான் அங்கு வந்து நீர் அருந்திக்கொண்டு இருந்தது.அச்சமயம் அந்தக்காடே அதிரும்படி சிங்க கர்ஜனை கேட்டது.அந்த பயங்கர சப்தத்தால் பீதியடைந்த மான் தண்ணீர் குடிப்பதை விட்டு விட்டு குழப்பத்தில் எங்கே ஓடுவது என்று தெரியாமல் நீருக்குள் குதித்து நதியை கடக்க ஓடியது.மிகவும் பயந்த அதிர்ச்சியில் கர்பத்தில் இருந்த மான் குட்டி தண்ணீரில் வந்து விழுந்து நீர் பிரவாகத்தில் அடித்து சென்றது.தாய், மான்குட்டியை ஈன்றதும் பயத்தில் நடுங்கி சோர்வுற்று கரையில் வந்து விழுந்து இறந்தது.இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பரதன் இரக்கம் மேலிட்டு உள்ளம் உருகி நீரில் அடித்துச்சென்றுகொண்டிருந்த மான் குட்டியை தூக்கிக்கொண்டு வந்தார்.தாயில்லா குழந்தை பாவம் சொந்த பந்தங்களில் இருந்து பிரிந்து அனாதையாகிவிட்டது என்று கூறி அதை தன் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்.அது உயிர் பிழைக்க ஆவன செய்தார்.
            அது பிழைத்து வாழ குடிப்பதற்கு பால் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை  செய்தார்.தாயில்லா மான்குட்டி மீது நாளுக்கு நாள் பாசம் பொங்கி வந்தது.
ஆசிரமத்தில் சிங்கம்,புலி முதலிய பிராணிகள் வந்து விடுமோ என்று கண்ணும் கருத்தும் ஒன்றி போய் பாதுகாத்து வந்தார்.மான்குட்டியுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.அவரது  தவம் ,பூஜைகள், யமநியமங்கள் எல்லாம் சிறிது சிறிதாக அவரிடம் இருந்து விடைபெற்று விட்டன.அவர் இவ்வாறு நினைப்பார்:



மான்குட்டி பாவம் என்னையே நம்பி என்னிடம் வந்து விட்டது.தன் கூட்டத்தை விட்டு விட்டு என்னையே தாய் தந்தையாக உற்ற பந்துவாக, தோழனாக நினைக்கிறது.என்னை தவிர எவரையும் அறியாத மான்குட்டியை நான் தான் காப்பாற்ற வேண்டும்.சரண் அடைந்தவர்களை காப்பாற்றுவது பெரியோர்களின் கடமை அன்றோ!
            தர்பை, சமித்துக்கள், மலர்கள்,பழங்கள் ஆகியவற்றை சேகரிக்க காட்டிற்குள் செல்வதானால் புலி, ஓநாய்களிடம் இருந்து காப்பாற்ற மான் குட்டியை அழைத்துக்கொண்டு போவார்.காட்டில் பசும்புல்லை தின்பதற்கு இவர் கூடவராமல் இருக்கும்போது மிகவும் பிரியமாக அதை தோளில் சுமந்து செல்வார்.அதனை நெஞ்சோடு அனைத்துக்கொள்வார். தியானம்,பூஜைகள் செய்து கொண்டிருக்கும்போது நடுநடுவில் எழுந்து சென்று மான்குட்டியை பார்த்து விட்டு வந்தால் தான் நிம்மதி அடைவார்.
            மான்குட்டி புல்,இலை,செடிகளை நோக்கி வெகுதூரம் சென்று விட்டாலோ காணாமல் போன பணப்பையை நினைத்து மனிதன் வருந்துவது போல வருந்தி தவிப்பார்.என் செல்வத்தை காணவில்லையே எங்கு சென்றுவிட்டதோ?என்று புலம்புவார்.நான் செய்த குற்றம் என்னவோ?நான் செய்த குற்றத்தை மறந்து என்னிடம் ஓடி வருமா?அல்லது பசும்புல் மேய்ந்து கொண்டு வெகு தொலைவில் சென்று விட்டதே!ஓநாய்,புலி,காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்கள் தனியாக திரிந்துகொண்டிருக்கும் மான்குட்டியை சூழ்ந்து கொண்டதோ?ஐயோ என்ன செய்வேன்!சூரிய அஸ்தமனமாகிவிட்டதே இன்னமும் மான்குட்டி வர வில்லையே என்று புலம்புவார்.
            நான் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துகொண்டிருக்கையில் உன் பிஞ்சு கொம்புகளை கொண்டு என் மீது தேய்த்து என் தியானத்தை கலைப்பாய்.உன் சுட்டித்தனத்தை கண்டு நான் மகிழ்ந்து போவேன்.மேலும் பகவானுக்கு நிவேதனம் செய்வதற்காக தர்பையில் ஹவிசை வைத்திருக்கும்போது நீ அதை வாயால் கடித்து இழுப்பாய். அச்சமயம் நான் உன்னை கடிந்து கொள்வேன்.அதனால் பயந்து பரம சாது போல சேஷ்டைகளை விட்டு விட்டு ஓர் இடத்தில் உட்கார்ந்து விடுவாய்.குட்டி மானே நீ எங்கு சென்றாய்.என்று புலம்பிவிட்டு மான் குட்டி கால் பதித்த சின்னத்தை பூமியில் கண்டு தேடிக்கொண்டு போவார்.கடந்த ஜன்ம கர்மபலன் மான்குட்டி ரூபமாக வந்து மோட்ச மார்க்கத்தில் தடையாக வந்து விட்ட காரணத்தால் யோக சாதனையில் இருந்து தவறி விட்டார்.(தொடரும்)

Sunday 1 April 2012

பக்தன் அம்பரீஷ மன்னன் தொடர்ச்சி

பிரம்மதேவர் தம்மால் ஏதும் செய்ய முடியாது என்று கூறியதும் சுதர்சன சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் கயிலாயத்தை நோக்கி ஓடினார்.அங்கு வீற்று இருந்த சிவபெருமானை சரண் அடைந்தார்.தன்னை காக்கும்படி வேண்டினார்.சிவபெருமான் கூறினார்:-- முனிவரே முடிவில்லா அனந்தன் பரம்பொருள் அவரிடத்து இந்த அண்டங்களும் அண்டவெளியும் தோன்றுகிறது.அழிவுக்காலம் வரும்போது எல்லாம் காணாமல் போய் விடுகின்றன.நான்,சனத் குமாரர்கள்,நாரதர்,பிரம்ம தேவர்,கபிலமுனிவர்,அபாந்தரதமர், தேவலர்,மரீசி ஆகிய சித்தேஸ்வரர்கள் விஷ்ணு பகவானின் மாயையை அறியாதவர்கள்.நாங்கள் அனைவரும் ஒரு வட்டத்திற்குள் தான் கட்டுண்டு இருக்கிறோம்.அவ்வாறு இருக்க விஷ்வேச்வரரின் சக்கரத்தை எங்களால் என்ன செய்ய முடியும்?நீங்கள் அந்த விஷ்ணுவிடமே சரண் அடையுங்கள். அவரால் உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.சிவபெருமான் தன்னால் உதவி செய்ய முடியாது என்று கூறிய பின் சுதர்சன ஜுவாலையின்வெப்பத்தை தாங்க முடியாமல் விஷ்ணு பகவானிடம் சென்று புலம்பினார்.--- "பகவானே அச்சுதா அகில விசுவத்தையும் காக்கும் கடவுளே நான் தவறு செய்து விட்டேன்.என்னை ரட்சியுங்கள்.சான்றோர் போற்றும் தெய்வமே தங்கள் மகிமை அறியாத நான் தங்களுக்கு பிரியமான பக்தனுக்கு குற்றமிழைத்து விட்டேன்.தங்கள் திருநாமத்தை உச்சரித்தாலே போதுமே ஓடி வந்து ரட்சிப்பீர்களே" என்றார்.
ஸ்ரீ விஷ்ணு பகவான் கூறினார்-- " துர்வாசமுனிவரே நான் என்றென்றும் பக்தர்களுக்கு கட்டுப்பட்டவன்.சூதும் தீயதும் அறியாது என்மீது பிரேமை கொண்ட பக்தர்களின் அடிமை நான்.ஏனெனில் என் மனதை கொள்ளை கொண்டு விட்டவர்கள். என்னை தவிர எவரையும் அறியாதவர்கள்.நானும் அவர்களை தவிர எவரையும் விரும்ப மாட்டேன்.அவ்வளவு ஏன்? எனக்கு லக்ஷ்மி தேவி கூட எனக்கு அவ்வளவு பிரியமில்லை.எனது பக்தர்கள், மனைவி,மக்கள்,வீடு,சொத்து,குரு,பெரியோர்கள்,செல்வம்,இகலோக பரலோக மேன்மைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னிடம் வந்தவர்கள் தன் உயிர்மீதும் ஆசை இல்லாது என் மீது ஆசை வைத்து எனது சாலோக்ய,சாயுஜ்ய முதலிய வைகுண்ட பதவிகளை விரும்பாதவர்கள்.நானே அவர்கள் இதயமாக இருக்கிறேன்.அவர்களே என் இதயமாக இருக்கிறார்கள்.
           துர்வாசரே உங்கள் கஷ்டம் தீர ஒரு வழி சொல்கிறேன்.கேளுங்கள்.எந்த பக்தரை நீங்கள் வீழ்த்த நினைத்தீரோ அவரிடமே செல்லுங்கள்.ஏனெனில் நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் அந்த தீய பலன் அவர்களிடமே வந்து சேரும்.இதையும் கேட்டுக்கொள்ளுங்கள்.பிராமணர்களுக்காக தவமும் கல்வியும் வித்தையும் ஏற்பட்டவை.அவர்களே அவற்றில் முழு உரிமை பெற்றவர்கள்.ஆனால் அவற்றை துஷ்பிரயோகம் செய்து அநியாயம் செய்தால் அந்த தவமும் கல்வியும் அவர்களையே நாசம் செய்து விடும்.நீங்கள் அம்பரீச மன்னனிடமே மன்னிப்பு கேளுங்கள்.பகவான் இவ்வாறும் கூறியதும் அவரை வணங்கி விட்டு துர்வாசர் அங்கிருந்து விரைந்து சென்று அம்பரீஷன் பாதங்களில் விழுந்தார்.அம்பரீஷன் தன் பாதங்களில் விழுந்து வணங்குவதை தர்ம சங்கடத்துடன் தடுத்தான்.சுவாமி என் காலில் விழுந்து என்னை சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்.என்று கூறி சுதர்சன சக்கரம் தணிந்து போக வேண்டும் என்று துதி செய்தான்.---"சுதர்சன பகவானே தீமைகளை வீழ்த்தி சகல லோகங்களையும் காப்பவரே, அசுர படைகளுக்குள் நுழைந்தால் அவர்களை வெட்டி வீழ்த்தி சம்ஹாரம் செய்யாமல் திரும்ப மாட்டீர்கள்.எங்கள் குலத்தின் க்ஷேமத்திற்காக துர்வாசருக்கு நன்மை உண்டாகட்டும்.நான் தான தர்மங்களும், யாகங்களும் பிழையின்றி செய்திருந்தால் சுதர்சன பகவானே துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாகட்டும்.என் வம்சத்தவர் பிராமணர்களையும் விஷ்ணு பகவானையும் ஆராதித்திருந்தால் துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாக வேண்டும்.நான் அனைத்து பிராணிகளிலும் பரம புருஷனை காண்பது 
உண்மையானால் துர்வாசர் வெப்பம் தணிந்து நலமாக வேண்டும்.இவ்வாறு சுதர்சன சக்கரத்தை வேண்டிக்கொண்டதும் சக்கரம் வெப்பம் தணிந்து மறைந்தது.துர்வாசர் தகிக்கும் வெப்பத்திலுருந்து விடுபட்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து நலம் பெற்றார்.அம்பரீஷன் பக்தியை கண்டு வியந்தார்.அவனை ஆசிர்வதித்து புகழ்ந்து பேசினார்.நான் தன்யனானேன்.இன்று பகவானின் பிரிய பக்தனின் மகிமையை கண்டேன்.மன்னரே உமக்கு தீங்கு செய்ததை மறந்து நான்,நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டீர்.உங்கள் பரந்த மனம் யாருக்கு கிடைக்கும்?ஹரியின் பக்த வத்சலன் நீங்கள் கொண்ட பக்தி ஈடு இணையில்லாதது.அதை புரிந்து கொள்ளாமல் தவறு செய்து விட்டேன்.இப்படிப்பட்ட பக்தர்கள் எதை தான் தியாகம் செய்ய மாட்டார்கள்?
          அம்பரீஷன் துர்வாசரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து போஜனம் செய்யுமாறு வேண்டிக்கொண்டான்.விதவிதமான அறுசுவை விருந்து படைத்தான்.திருப்தியுடன் போஜனம் செய்த துர்வாசர் மன்னனையும் போஜனம் செய்ய சொன்னார்.அது வரை மன்னனும் உண்ணாமல் இருந்தார்.துர்வாசர் கூறினார்.---பகவானின் ஒப்பற்ற பிரியமான பக்தர் நீங்கள் உங்கள் தரிசன ஸ்பரிசத்தால் பேச்சுவர்த்தைகளால் , விருந்தோம்பல் உபசரிப்பால் பகவான் மீது எனக்கு அன்பு மேலும் பெருகுகிறது.உங்களால் மேலும் பெருமையடைகிறேன்.பெரும் பேரும்பெற்றேன்.சொர்கத்தில் தேவ மாதர்கள் உங்கள் புகழ் பாடுவார்கள்.மேதினி எங்கும் உமது தூய புகழ் பரவட்டும்.என்று ஆசிர்வதித்து சென்றார்.
            துர்வாசர் சக்கராயுதத்தால் துன்புற்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தபோது அவர் திரும்பி வரும் வரை போஜனம் செய்யாமல் நீரை மட்டும் மன்னன் பருகிக்கொண்டிருந்தான்.இறுதியில் துர்வாசர் போஜனம் செய்த பின்பே மன்னனும் போஜனம் செய்தான்.

Wednesday 28 March 2012

பக்தன் அம்பரீஷ மன்னன்

           எழுதீவுகளும், ஏழு கடல்களும் கொண்ட மேதினியை ஆண்டு வந்த அம்பரீஷ மன்னன் விஷ்ணு பக்தியால் சிறந்து விளங்கினான்.உலகில் உள்ள சுகம் தரும் விசயங்களும் செல்வங்களும் நிலையற்றவை என்று நினைத்து பற்றற்று வாழ்ந்து அரசனுக்குரிய கடமைகளை செய்வான்.சாதுக்களையும் பக்தர்களையும் பெரிதும் மதிப்பான்.பல கோயில்களை எழுப்பி திருப்பணிகளை செய்வான்.தன்னையே ஸ்ரீ விஷ்ணு பகவானின் சேவையில் அர்பணித்து விட்டான்.மனதால் பகவானை தியானிப்பான்.கைகளால் அர்ச்சித்து,காதுகளால் பகவானின் திருவிளையாடல்களை கேட்டு, வாக்கால் அவர் திருநாமத்தை ஜபித்து பகவான் திரு நைவேத்தியத்தை புசித்து,ரசித்து கால்களால் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு நடை பயணம் சென்று வணங்கினான்.
            சரஸ்வதி நதிக்கரையில் புகழ் பெற்ற கௌதமர்,அஸிதர் முதலிய மகரிஷிகளை வைத்து செல்வச்சிறப்புடன் பெரும் தக்ஷனைகள் கொண்ட பல அச்வமேத யாகங்களை செய்தான்.அவனது நல்லாட்சியில் சொர்கத்தையும் விரும்பாத பிரஜைகளும் குறையாத செல்வங்களை பெற்று விஷ்ணு பக்தர்களாக சந்தோசத்துடன் வாழ்ந்தனர்.இவ்வாறு அம்பரீஷ ராஜாபக்தியோகத்துடன் தவ வாழ்கையை மேற்கொண்டு மக்களை காக்கும் அரசனுக்குரிய கடமைகளை செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.
            ஒரு நாள் அரண்மனையில் ஸ்ரீ விஷ்ணு பகவானை அம்பரீஷன் மெய்மறந்து பூஜை செய்துகொண்டிருந்த போது ஸ்ரீ விஷ்ணு பகவான் அவன் மீது பேரன்பு கொண்டு பக்தியில் மகிழ்ந்து தன சுதர்சன சக்கரத்தை பரிசாக அளித்தார்.அது விரோதிகளை வீழ்த்தக்கூடியதாகவும் , பக்தர்களை ரட்சிப்பதர்காகவும் அவனிடம் வந்து  இருந்தது.அதனை பக்தியுடன் பெற்றுக்கொண்ட அரசன் அதை தன அரண்மனை பூஜை மாளிகையில் வைத்து பூஜை செய்து வந்தான்.
           அம்பரீஷன் மனைவியும் அவனை போலவே பக்தியில் சிறந்தவளாக அவனுடன் சேர்ந்து ஸ்ரீ விஷ்ணுபகவானை ஆராதித்து வந்தாள்.தன் மனைவியுடன் ஒரு முறை ஒரு வருடம் வரை பூர்த்தியாகும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான்.விரதம் முடியும் போது அவன் கார்த்திகை மாதம் மூன்று நாள் உபவாசம் இருந்தான்.யமுனையில் நீராடி மது வனத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானுக்கு சந்தன மாலை, ஆபரணம் ஆகிய செல்வங்களுடன் சிறப்பாக அபிஷேகம் செய்து பூஜை செய்தான்.அரசனால் எல்லா செல்வங்களும் பெற்று நிறைவாக வாழ்ந்த பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறுசுவை விருந்து படைத்தான்.பசுக்களை தானம் செய்தான்.ஏகாதேசி விரதத்தை முடிப்பதற்கு பாரணை (புசிப்பதற்கு)செய்ய தயாராகும்போது சாபமும் வரமும் கொடுக்கும் வல்லமை படைத்த மகாரிஷி துர்வாசர் அதிதியாக அங்கு வந்து சேர்ந்தார்.
            துர்வாசர் வருகை தந்தவுடன் அரசன் அம்பரீஷன் அவருக்கு ஆசனமளித்து பாத பூஜை செய்தான்.விலைஉயர்ந்த பொருட்களை கொண்டு பூஜித்தான்.அதன் பின் ஏகாதசி விரதம் முடிக்கும் போஜனம் செய்ய வேண்டினான்.துர்வாசர் அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நதியில் நீராட சென்றார்.துவாதசி நேரம் கழிந்து கொண்டு இருந்தது.அரசன் தர்ம சங்கடத்தில் வீழ்ந்தவன் பிராமண குருமார்களிடம் யோசனை கேட்டான்.--- பிராமணர்களே நான் துவாதசி விரத போஜனம் செய்தால் துர்வாசரை விட்டு விட்டு போஜனம் செய்த பாவியாவேன்.ஆனால் துவாதசி திதியில் விரதத்தை முடித்துக்கொள்ள போஜனம் செய்யாமல் இருந்தால் ஏகாதசி விரதம் இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.இப்போது நான் என்ன செய்வது?அரசன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் கூறினார்கள். அரசே இதற்க்கு ஒரு வழி இருக்கிறது.அதாவது துவாதசி நேரம் கழியும் முன்பு நீங்கள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகுங்கள். அது போஜனம் செய்வதற்கு சமமாகவும் இருக்கும். அல்லது போஜனம் செய்யாமல் இருப்பதற்கும் சமமாகும் வேத சாஸ்த்திரங்கள் இவ்வாறு தான் கூறுகின்றன.
           பிராமணர்கள் இவ்வாறு கூறிய பின் அம்பரீஷன் அவர்கள் சொற்படி தீர்த்தத்தை மட்டும் பருகி துவாதசி பாரணையை முடித்துக்கொண்டான்.துர்வாசமுனிவரை எதிர்பார்த்து காத்திருந்தபோது துர்வாசர் யமுனையில் நீராடிவிட்டு வழிபாட்டு கடமைகளை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.அரசன் கைகள் கூப்பியபடி நின்றான்.துர்வாசர் தன் ஞானதிருஷ்டியால் அரசன் விரதத்தை முடித்துக்கொண்டதை அறிந்து கொண்டார்.மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்த பிராமணர்களை நோக்கி கூறினார். இதோ பார்த்தீர்களா மரியாதை துறந்த அரசன் இவன் செல்வ செருக்கு மிகுதியால் என்னை அவமதித்து நான் வருவதற்குள் போஜனம செய்து விரதத்தை முடித்துக்கொண்டான்.அதிதியாக வந்த என்னை விருந்து சாப்பிட அழைத்து விட்டு நான் உண்ணும் முன் இவன் விரதத்தை முடித்துக்கொண்டான்.இப்போது இவனுக்கு பாடம் புகட்ட போகிறேன் பாருங்கள். என்று கூறி ஆத்திரம் மேலிட்டு தன் ஜடையிலிருந்து ஒன்றை பிடுங்கி பூமியில் போட்டார்.அதிலிருந்து கிருத்யா என்ற பேய் உருவாகியது.அது பிரளய கால அக்னி போல தகித்துக்கொண்டு இருந்தது.நெருப்பே உருவானது போல இருந்தது.கையில் வாள் பிடித்து பூமி நடுங்க ஓடிப்போய் அம்பரீஷனை  தாக்க பாய்ந்தது.தன்னை தாக்க வந்த  கிருத்யா பேயை கண்டதும் தன்னை காத்துக்கொள்ள அம்பரீஷன் சுதர்சன சக்ரத்தை தியானம் செய்தான்.அக்கணமே விஷ்ணு பகவானின் பக்தனை காக்க சுதர்சன சக்கரம் எதிரில் தோன்றியது.மாபெரும் நெருப்பு சர்பத்தை சுட்டு சாம்பலாக்குவது போல தீ ஜுவாலையுடன் சுதர்சனம், கிருத்யா பேயை நொடியில் எரித்து சாம்பலாக்கி விட்டது


.சுதர்சன சக்கரம் அத்துடன் சாந்தமாகாமல் துர்வாசரை நோக்கி பாய்ந்தது.துர்வாசர் தாம் ஏவிவிட்ட பேய் எரிந்து போனதை கண்டார்.மேலும் சுதர்சனம் தன்னை நோக்கி வருவதையும் கண்டார்.அவர் பீதியடைந்து தன் உயிரை காத்துக்கொள்ள ஓடினார்.ஆனால் காட்டு தீ காட்டில் இருக்கும் பாம்புகளையும் மிருகங்களையும் எரிப்பதற்கு வேகமாக ஜுவாலையுடன் வருவது போல சுதர்சனம் தீ ஜுவாலையுடன் துர்வாசரை துரத்த ஆரம்பித்தது..துர்வாசர் தீ ஜுவாலை வெப்பத்தால் சரீரமெல்லாம் தகிக்க தீர்வு காண முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.அவர் இமயமலைக்குகைக்குள் போய் ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் எங்கும் தடையின்றி அவரை பின் தொடர்ந்தது.அவர் பூமியில் மலை காடு முதலிய இடங்களிலும் அதள விதள பாதாள லோகங்களிலும் கடலுக்குள்ளும் ஓடி ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் அவரை விட வில்லை.திசைகளை காக்கும் தெய்வங்களின் சொர்கத்திற்கும் சென்றார்.தேவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை.
            இறுதியில் பிரம்ம லோகத்தில் பிரம்மாவை தன்னை காக்கும்படி சரண் அடைந்தார்.ஆனால் பிரம்மா கூறினார்--எனது ஆயுள் இரண்டு பாரர்த்த காலம் தான்.அதன் பின் கால சொரூபனான பரம்பொருள் ஸ்ரீ விஷ்ணு பகவான் தான் படைத்த சிருஷ்டிகளை அழித்து ஒடுக்கி விடுவார்.அவர் கண் அசைவினால் அகில புவனங்களும் எரிந்து சாம்பலாகி விடும்.பிரளய காலத்தில் உயிர்களை தன்னுள் ஒடுக்கி விடுவார்.அவ்வாறு இருக்க நான்,பூதேஸ்வரன் சிவபெருமான், தேவர்கள் அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டவர்கள்.அவர் விருப்பப்படியே நாங்கள் மூவுலகங்களையும் இயக்குகிறோம்.(தொடரும்)

Tuesday 27 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி 2

அதன் பின் எழு நாட்கள் பத்து அவதார்க்கதைகள் அடங்கிய பாகவத புராண கதையைகூறினார்.அதில் வான் புகழ் கொண்ட புண்ணிய கீர்த்தி படைத்த அரசர்களின் வரலாறுகளும் கூறப்பட்டிருக்கின்றன.
            ஏழு நாட்கள் பாகவத புராணத்தை கூறி முடித்த பின் பரீட்சித் மன்னனை நோக்கி சுக தேவர் மேலும் கூறினார்;"பரீட்சித்மகாராஜா!நான் பாகவத புராணத்தில் எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.ஒவ்வொரு இடத்திலும் ஸ்ரீஹரியின் மகிமைகளும் திருவிளையாடல்களும் நிறைந்து இருக்கின்றன.நான் இறந்துவிடுவேன் அல்லது மீண்டும் பிறப்பெடுப்பேன் என்ற சிந்தனையை நீங்கள் விட்டு விட வேண்டும்.நீங்கள் பரமாத்மா ஜோதியில் கலந்து பிரம்ம சொரூபமாகிவிட்டீர்கள்.
           ஆயிரம் மரணங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்.ஏனென்றால் ஆத்மா அப்பாலுக்கு அப்பாலாக நித்யமாக தன்னோளியுடன் இருக்கிறது.நீங்கள் அதுவாகவே அதாவது ஆத்மா சொரூபகாகிவிட்டால் எத்தனை தக்ஷகன்கள் வந்தால் என்ன எந்த துன்பமும் இருக்காது. சுக தேவர் இவ்வாறு கூறி முடித்தார்.
           பரீட்சித்மன்னன் கூறினான்:"ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான தாங்கள் அகில உலகையும் ஆத்மா ரூபமாக காணும் ஞானியாக இருக்கிறீர்கள்.கருணைக்கடலான நீங்கள் என் மீது அருள் புரிந்து ஆதி அந்தமில்லாத சத்திய சொரூபன் ஸ்ரீ ஹரியின் சொரூபத்தையும் திருவிளையாடல்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டீர்கள்.இனி எனக்கு எந்த பயமும் இல்லை.தாங்கள் செய்த உபதேசத்தால் எனது அறியாமையும்  
அஞானமும் ஒழிந்தன.நான் பரிபூரண ஞானம் பெற்று விட்டேன்.தாங்கள் எனக்கு அனுமதி தர வேண்டும்.எல்லா சிந்தனைகளையும் துறந்து விட்டு என் வாக்கை கட்டுப்படுத்தி பரமாத்ம சொரூபத்தில் ஒன்றி விட போகிறேன்.என்று கூறி மன்னன் புலன்களையும் மனதையும் அடக்கி சமாதியில் ஆழ்ந்தான்.தன் அந்தராத்மாவை பரம் பிரம்மாத்மாவில் நிலை நிறுத்தி இரண்டறக்கலந்து விட்டான்.பிரம்ம சொரூபமாக சமாதியில் ஆழ்ந்த போது முனி குமாரன் சிருங்கியின் சாபத்தின் ஏவல் சக்தியால் தக்ஷகன் வந்து கொண்டிருந்த போது வழியில் மந்திரத்தால் விஷத்தை நீக்கும் விஷ வைத்திய பிராமணனை கண்டான்.அரசனுக்கு வைத்தியம் செய்து பிழைக்க வைக்கும் நோக்கத்துடன் வந்துகொண்டிருந்த அவனுக்கு ரத்தினச்செல்வங்களை கொடுத்து திரும்பி போகச்செய்து விட்டு பிராமண வடிவம் எடுத்து சமாதியில் இருந்த பரீட்சித் மன்னனை விஷ பற்களால் கடித்து விட்டு மாயமாய் மறைந்தான்.ராஜ நாகம் தக்ஷகனின் பயங்கர விஷ அக்னியால் தாக்கப்பட்ட பரீட்சித் மன்னனின் உடல் எரிந்து சாம்பலாகிவிட்டது.
            பூலோகத்தில் ராஜவிசுவாசிகளும்,மகன்களும் மன்னன் உடல் எரிந்து விட்டதை கண்டு ஹா ஹா என்று அழுது ஓலமிட்டனர்.ஆனால் பர லோகத்தில் தேவ அசுரர்கள் பரீட்சித் பரமகதி அடைந்ததை கண்டு வியப்படைந்தனர்.தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இசை பாட அப்சரஸ்கள் நாட்டியமாட தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். பரீட்சித்திர்க்கு நான்கு மகன்கள் ஜனமேஜயன்,சுருதசேணன்,பீமசேனன்,உக்கிரசேனன் என்று பெயர் கொண்டு இருந்தனர்.இவர்களில் மூத்த மகன் ஜனமேஜயன் தக்ஷகனால் தன் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் வருத்தமும் ஆத்திரமும் அடைந்தான்.பிராமணர்களை அழைத்து உடனே சர்ப்ப யாகம் தொடங்கினான்.யாகத்தில் அக்னி குண்டத்தில் தக்ஷகன் தானாக வந்து விழும் வரை யாகத்தை தொடர சொன்னான்.
           மாபெரும் அக்னி குண்டத்தில் பூமியிலும் பூமிக்கடியிலும் திரியும் வித விதமான சர்பங்களும் மலை பாம்புகளும் வந்து அக்னியில் விழுந்து மடிவதை கண்டு தக்ஷகன் பயந்தான்.பல யோசனை தூரம் சர்ப்பங்கள் மடிந்து கருகிய நாற்றம் பரவிக்கொண்டு இருந்தது. பரீட்சித் மகன் ஜனமேஜயன் கூறினான்:"பிராமணர்களே அந்த நீசன் தக்ஷகன் ஏன் இன்னமும் அக்னி குண்டத்தில் விழுந்து சாம்பலாக வில்லை? " அதற்க்கு பிராமணர்கள் கூறினார்கள் "ராஜேந்திரனே இச்சமயம் தக்ஷகன் இந்திரனை சரண் அடைந்து இருக்கிறான்.தேவராஜன் தன் சிம்மாசனத்தில் சுற்றி இருக்கும் தக்ஷகனை ஸ்தம்பிக்க செய்து இருக்கிறான்.அதனால் அவன் இன்னமும் அக்னியில் விழாமல் இருக்கிறான்.இதை கேட்டு ஜனமேஜயன் கூறினான்."அப்படிஎன்றால் பிராமணர்களே இந்திரனோடு சேர்த்து தக்ஷகனை அக்னி குண்டத்தில் விழச் செய்யுங்கள்."ஜனமேஜயன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் இந்திரனை குறித்து ஆகர்ஷன மந்திரத்தை பிரயோகித்து தக்ஷகனை இந்திரனோடு சேர்த்து அக்னியில் விழுவாயாக என்றனர்.சொர்கத்தில் இந்திரன் விமானம் வட்டமிட்டு சுற்றி வர அதில் இந்திரனோடு தக்ஷகனும் வேகமாக வந்தனர்.இதை அறிந்த தேவகுரு பிரகஸ்பதி,"மன்னா யாகத்தை நிறுத்தச்சொல்லுங்கள். எய்தவன் இருக்க அம்பு மேல் ஆத்திரம் கொள்வது சரியல்ல.மேலும் தக்ஷகன் அமுதம் குடித்து சாகா வரம் பெற்றவன்.ராஜா!ஜகத்தில் உயிர்வர்கங்கள் தம்தம் கர்ம வினைப்பயன்களை அனுசரித்து வாழ்ந்து சாகிறார்கள்.இறப்புக்கு பின் அவர்களுக்கு தகுந்தபடி நற்கதி அல்லது துர்கதி கிடைக்கிறது.ஜனமேஜய ராஜா மக்களுக்கு மரணம் பல ரூபத்தில் வருகிறது.சர்ப்பம்,தீ விபத்து,வெள்ளம்,இடி மின்னல்,பசிதாகம், வியாதி,கொள்ளையர் ஆகியவற்றால் மரணம் சம்பவிக்கிறது.பகவானின் மாயையால் நாம் மதியிழந்து விடுகிறோம்.ராஜனே,நீங்கள் நடத்திய சர்ப்ப யாகத்தால் எண்ணிலடங்கா அப்பாவி சர்ப்பங்கள் தீயில் கருகி விட்டன.உயிர் கொலை செய்யும் இந்த  யாகத்தை  நிறுத்துங்கள்.உலகில் அவரவர் செய்யும் கர்மவினைகளை அவர்களே அனுபவிப்பார்கள்.
           பிரகஸ்பதியின் சொல் கேட்ட ஜனமேஜயன் சர்ப்ப யாகத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டான்.தேவரிஷி பிரகஸ்பதியையை முறைப்படி பூஜித்தான்.
            

Sunday 18 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி

பரீட்சித்மன்னனை அங்கு கூடி இருந்த ரிஷிகள் அனைவரும் புகழ்ந்தனர்.
           ராஜரிஷிசிரோமணி!பாண்டவ வம்சத்தில் உதித்த நீங்கள் பகவத் சேவையை பெரிதாக கருதி அரச சிம்மாசனத்தை ஒரு நொடியில் துறந்து விட்டீர்கள்.இதில் ஒன்றும் வியப்பு இல்லை.உங்கள் தந்தையும் தாதயர்களும் ஸ்ரீ கிருஷ்ணபகவான் மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர்கள்.நீங்கள் சரீரம் துறந்து மோட்ச கதி அடையும் வரை நாங்கள் இங்கு ஆத்ம தத்துவங்களை பேசிக்கொண்டு கூடவே இருக்கிறோம்.என்றனர்.
           அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.---- அதிரூப அழகு சுந்தரரான பதினாறு வயது நிரம்பிய பரம ஞானி சுக தேவர் அங்கு தோன்றினார்.ஐந்து வயதிலேயே ஞானியாகிவிட்டவர் மகரிஷ்களாலும் தெய்வ ரிஷிகளாலும் வணங்கப்படுபவர். சுக தேவர் வருகை தந்ததை கண்டு மேலும் தன்னை பாக்யவானாக நினைத்த பரீட்சித் அவரை வரவேற்று பூஜை செய்து உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.சாஷ்டாங்கமாக தண்டனிட்டு வணங்கி கூறினார்.
           நட்சத்திர தாரகைகள் நடுவில் சந்திரன் பிரகாசிப்பதை போல மகாரிஷி கணங்களுக்கு மத்தியில் சோபை தரும் பெருமானே குற்றம் புரிந்த க்ஷத்ரிய அரசன் என்னை தேடி என்னிடம் அதிதியாக வந்துள்ளீர்கள்.இது நான் செய்த தவப்பயன் தான்.தங்களை நினைத்த மாத்திரத்தில் மனிதன் தூயவனாகிவிடுவானே அப்படிப்பட்டவர் என்னை காண வந்திருப்பது ஸ்ரீ ஹரியின் கிருபையை தவிர வேறென்ன சொல்ல முடியும்?தாங்கள் பசுவிடம் பால் கறக்கும் நேரம் வரை தான் ஒரு இடத்தில தங்குவீர்கள்.அவ்வாறு இருக்க நான் நற்கதியடைய என் மீது அருளை பொழிவதற்காக எழு நாட்கள் என்னுடன் இருந்து பிறவாமை அருளும் பகவத்கதைகளையும் ஆன்மீக தத்துவங்களையும் உபதேசிக்க வந்துள்ளீர்கள். என்றால் நான் எப்படி தங்களுக்கு நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.
           தங்களிடம் இரண்டு விஷயங்கள் கேட்டுக்கொள்கிறேன்.சுவாமி!யோகியர்களுக்கும் பரம குருவே மரணத்தை நெருங்கும் மனிதன் எதை செய்தால் அவன் நற்கதி யடைய முடியும்?எந்த மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்?எந்த தெய்வத்தை நினைக்க வேண்டும்?இரண்டாவது உலகில் வாழும் போது எந்த கடமைகளை செய்து அவன் தன் ஆத்மாவை மேம்படச்செய்து மோட்சகதியடைவான்? 
           ஸ்ரீ சுகதேவர் கூறினார்.--- மன்னரே இந்த ஏழு நாட்களும் ஆத்ம தத்துவ போதனைகள் கலந்து பக்திரசம் நிறைந்த பகவத் கதைகளை கூறுகிறேன்.அது பிற்காலத்தில் பாகவத புராணம் என்று பெயரிட்டு ஞானிகள் குறிப்பிடுவார்கள்.உன் கேள்விகளுக்கு விடை அதிலிருக்கும்.வேதத்திற்கு நிகரான இந்த பாகவத புராணம் என் தந்தை வேத வியாசரால் எனக்கு அருளப்பட்டது.ராஜேந்திரனே மனிதன் உலகில் ஆரோக்யமாக வாழும்போதே பெரியவர்களை சேவித்து பகவான் நாம ஜபம் செய்து பகவானை நினைத்துக்கொண்டே அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து தன்னலமற்று கடமைகளை செய்ய வேண்டும்.ஆனால் மனிதர்கள் மனதில் நினைக்காமல் தன் குடும்பத்தில் பற்று கொண்டு வேலைகள் செய்கிறார்கள்.மனைவி மக்கள் மீது அதீத பாசம் கொண்டு பாடுபட்டு உழைத்து உழைத்து அவனது நீண்ட ஆயுள் நொடியில் கழிந்து விடுகிறது.பரீட்சித்மன்னரே அபயமளிக்கும் பரமபதம் அடைய விரும்புகிறவன் சர்வாத்மாவாக,சர்வசக்திமானாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் தெய்வீக கதைகளை கேட்டு அவர் திருநாம பஜனை செய்து பூஜனை செய்ய வேண்டும்.மரணம் நெருங்கும்போது பகவானின் நினைவு அவசியம் வர வேண்டும்.அதற்க்கு தகுந்தபடி ஞானம்,பக்தி,தர்மம்,ஆகியவற்றை வாழ்க்கையில் என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்.இதுவே ஜன்மம் எடுத்ததற்கு பலன் என்று கருதப்படுகிறது.
           பரீட்சித் மகாராஜா மோட்சம் அடையும் வழியை பற்றி சிந்திக்காமல் மனிதன் தன் ஆயுளை வீணாக கழித்து விடுகிறான்.பகவானின் சிந்தனையில் ஒரு பொழுது அல்லது ஒரு நிமிடம் கழிந்தாலும் அது மோட்சத்தை தரக்கூடியதாக இருக்கும்.ராஜரிஷி கட்வாங்கன் இறப்பதற்கு சில நிமிடங்களே இருக்கும்போது அனைத்துவிசயங்களையும் மனதிலிருந்து நீக்கி விட்டு இறைவனடி சேர தயாராகிவிட்டார்.அந்த நொடிபொழுதில் பரம பதம் அடைந்து விட்டார்.மன்னரே தங்களுக்கு கிடைத்திருக்கும் அவகாசமோ ஏழு நாட்கள் இன்னமும் இருக்கின்றன.அதற்குள் தன் ஆத்மாவை மேம்படுத்த எவ்வளவோ சாதிக்கலாம்.ஆதலால் கவலைப்படாதீர்கள்.என்று சுகதேவர் ஆறுதல் அளித்து விட்டு கங்கையில் மூழ்கி எழுந்து தர்பாசனத்தில் அமரச்சொன்னார்.ஓம் என்ற பிரணவத்தை தியானம் செய்யும் முறையையும் பிராணவாயுவை அடக்கி பரம்பொருளை பாதாதி கேசம் வரை தியானிக்கும் முறையையும் கூறினார்.ஞான வைராக்யத்தை உண்டாக்கும் விசயங்களையும் கூறினார்.
                                                                                                   (தொடரும்)