Friday 13 April 2012

ஜடபரதன் தொடர்ச்சி 1

அனைத்துயிர்களிலும் பகவானை காணும் மகா புருசர்கள் என்றும் பகையும் பற்றும் துறந்து விட்டவர்கள் , அவர்களை பகவானே பல சக்தி வடிவங்கள் கொண்டு எப்போதும் காத்துக்கொண்டு இருப்பார்.
            சிந்து சௌவீர தேசாதிபதி ரஹுகணன் என்ற அரசன் ஞானோபதேசம் பெறுவதற்காக இட்சுமதி நதிக்கரையோரம் பல்லக்கில் சென்று கொண்டிருந்தபோது பல்லக்கு தூக்குபவர்களுக்கு மேலும் ஒரு ஆள் தேவைப்பட்டது. அச்சமயம் ஓர் இடத்தில் வேலை ஏதும் செய்யாமல் பேசாமல் அமர்ந்திருக்கும் பரதனை அவர்கள் கண்டார்கள்.இவன் நல்ல திடகாத்திரமாக வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான்.என்று பல்லக்கு தூக்குபவர்கள் அவரை அழைத்து வந்து ஒருபக்கம் பல்லக்கு தூக்க சொன்னார்கள்.அவரும் அந்த ஆட்களோடு சேர்ந்து பல்லக்கை தூக்கிக்கொண்டு நடந்தார்.அப்போது அவர் இரண்டு அடி முன்னால் ஏதாவது பூச்சி எறும்பு முதலிய உயிர்கள் நடுவில் வந்து கால்களில் மிதிபடாமல் இருக்க பார்த்துக்கொண்டே நடந்தார்.அதனால் பல்லக்கு தூக்கும் மற்றவர்களோடு சேர்ந்து நடக்க முடியவில்லை. பல்லக்கு ஆட்டம் கண்டது.
            பல்லக்கு ஆடுகிறதே,ஏன் சீராக போகவில்லை?என்று பல்லக்கு தூக்குபவர்களை அரசன் வினவினான்.அதற்க்கு அவர்கள் புதிதாக வந்தவன் எங்களுடன் சேர்ந்து வரவில்லை.அதனால் பல்லக்கு ஆடுகிறது என்றார்கள்.
அரசன் பரதனை நோக்கி ஏன் அப்பா பல்லக்கு தூக்கி, அதற்குள் தளர்ந்து விட்டாய்?உடல் நலிந்து மெலிந்து இருக்கிறாய்.பாவம் வயதாகிவிட்ட உன்னை பல்லக்கு தூக்க வைத்து விட்டார்களோ?என்று கிண்டலாக பேசினான்.பரதன் மேலும் அதே போல பல்லக்கை சீராக தூக்காமல் ஆட்டிக்கொண்டே தூக்கி சென்றார்.இதனால் மிகுந்த கோபம் அடைந்த அரசன் என்ன தைரியம் இருந்தால் என்னை அவமதித்து இப்படி செய்வாய்.? உனக்கு தக்க தண்டனை தரவேண்டும் என்றார்.
           பரதனுக்கு நான் என்ற அகந்தை விட்டுப்போனதால் அரசனின் அதிகார பேச்சுக்குரலால் எந்த வகையிலும் அவர் பாதிக்க வில்லை.தன்னை போல அனைவரையும் நினைத்த பரதன் பிரியமாக பேசினார்.அரசே நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.எல்லாம் நிலையற்றவை என்றிருக்கும்போது பாரமாக இருந்தால் தானே அதை சுமப்பது கஷ்டம் என்று சொல்ல முடியும்?. திடகாத்திரமாக இருப்பது சரீரம் தான்.ஆத்மா என்றும் மாறாதது.குண்டாக இருப்பதுசரீரம்மெலிந்துஇருப்பது,வியாதி,மனக்கவலை,பசி,தாகம்,பயம்,கலகம்,ஆசை,கிழப்பருவம்,நித்திரை,பிரேமை,குரோதம்,கர்வம்,சோகம் இவையெல்லாம் சேர்ந்தது தான் தேகம்.அந்த தேகத்தை எனது என்று நினைப்பவர்களுக்கே இன்பமும் துன்பமும் வருகிறது.எனக்கோ தேகத்தில் பற்று இல்லை.உயிரோடு இருக்கிறவரை தான் உணர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.நீங்கள் அரசன்,நான் சேவகன் என்று நினைப்பது தற்காலிகமானது.அனைவருக்குள் இருக்கும் ஆத்மாவோ என்றும் அழியாதது.இருப்பினும் தங்கள் ஆணைப்படி நடக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.நானோ அனைத்தையும் கடந்த நிலையில் ஜடமாக இருக்கிறேன்.என்னை தண்டித்து என்ன பிரயோஜனம்.அது அரைத்த மாவையே அரைக்கும் போலாகிவிடாதா?என்றார்.
            ஜடமாக இருந்த பரதன் இவ்வாறு கூறி முடித்து தேகத்தில் பற்று வைக்காத சாந்த மூர்த்தி, வினைப்பயன்களை போக்க மீண்டும் பல்லக்கை தூக்க முயன்றார்.அச்சமயம் சிந்து சௌவீர மன்னன் அவர் பேச்சு தத்துவங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்து பல்லக்கை விட்டு கீழே இறங்கினான்.சிந்து சௌவீர மன்னன் தத்துவ ஞானம் அறிவதில் மிக ஆவலாக இருந்தான்.பல யோக சாஸ்த்திரங்கள் படித்திருந்தான்.பரமாத்ம ஞானத்தை பற்றி பரதன் பேசியதை கேட்டு அகந்தையை விட்டொழித்து பரதன் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து கூறினான்.தெய்வ சொரூபமாக என்னிடம் வந்து தத்துவ ஞானம் பேசினீர்கள்.பூணூல் தரித்து பிரம்ம தேஜஸ் மறைக்கப்பட்டு நீறு பூத்த நெருப்பு போலிருக்கும் தாங்கள் யார்?நீங்கள் பித்தர் போல திரியும் அவ தூதர் தத்தாத்ரேயர் தானா? அல்லது நான் தேடிக்கொண்டிருக்கும் கபில முனிவரா?இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள்?யாருக்கு மகனாக எங்கு பிறந்தீர்கள்?நான் இந்திரன் வஜ்ராயுதத்தை அல்லது சிவபெருமானின் திரிசூலத்தையும் கண்டு பயப்பட மாட்டேன்.அல்லது தேவர்களின் ஆயுதங்களாலும் எனக்கு பயமில்லை.ஆனால் தங்களை போன்ற இறைவன் அருள் பெற்ற பிராமணரை அவமதித்த பாவத்தை நினைத்து பயப்படுகிறேன்.என்னை மன்னிக்க வேண்டும்.பிரம்ம ஞானத்தை விளக்கும் தாங்கள் கூறும் தத்துவங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்போன்ற சுக போகங்களில் திளைத்து இருப்பவனுக்கு யோகேஸ்வரர்களின் பேச்சும் செயலும் எங்கே புரியப்போகிறது?
            யுத்தம் போன்ற காரியத்தில் ஈடுபடும்போது சிரமமும் தேகத்தில் வலியும் ஏற்படுகிறது.தங்களுக்கும் சுமை தூக்கும்போது சிரமம் உண்டாகுமே?ஆனால் தாங்கள் தனக்கும் தேகத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.மேலும் அடுப்பில் வைத்த நீர் நிறைந்த பாத்திரம் சூடாகிறது.அதில் போட்ட அரிசி வெந்து போகிறது.இந்த நிலை எப்படி பொய்யாகும்.அதாவது தேகம்,மனம்,புலன்கள்,பிராணம் ஆகியவை பாதிக்கப்படும் போது ஆத்மாவும் பாதிக்கப்படும். அது தொடர்பில்லாமல் எப்படி இருக்க முடியும்?அரசன் என்ற அகந்தையால் தங்களை அவமதித்து விட்டேன்.தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.எனக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டுகிறேன்.அரசன் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பரதன் இவ்வுலகில் பிறந்த பயனை அடைவதற்காக ஏற்பட்டிருக்கும் பிறவாமை என்ற மோட்ச வழிகளை கூறி ஆத்ம ஞானோபதேசம் செய்தார்.
            மனிதன் ஞானம் பெற்று மாயையை வெல்ல வேண்டும்.மனதிற்கும் ஆத்மாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மனத்தால் சுக துக்கங்களை அனுபவிப்பதனால் கர்மபலங்கள் மனிதனை பின்தொடர்கின்றன.அதனால் அவன் பாவ புண்ணிய கர்மங்களை செய்கிறான்.அதன் ஜனன மரண சுழற்ச்சியில் சிக்கிக்கொள்கிறான்.இந்த உலக இயக்கம் உண்மை போல தோற்றமளித்தாலும் அவை நிலையற்றவை.அதனால் அதை பொய் என்று கூறுகிறோம்.பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேரவேண்டுமானால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, இறைவனடி சேர வேண்டுமானால் எல்லாம் வல்ல ஈசனை சரணடைய வேண்டும்.அடியார்களை தொழுது அவர்களிடம் உபதேசம் பெற்று பற்றற்ற வாழ்க்கை நடத்த வேண்டும்.தான், தனது என்று எதையும் கருதாமல் பகவானுக்கே அர்ப்பணம் செய்து கடமைகளை செய்ய வேண்டும்.பரமாத்மாவின் அம்சமாக தன்னுள் உரையும் ஆத்மாவை உணர வேண்டும்.பரதன் இவ்வாறு மேலும் பல ஆத்ம தத்துவ உபதேசங்களை செய்து முடிவில் கூறினார்.
              அரசே நானும் பூர்வ ஜன்மத்தில் உங்களை போல் ஓர் அரசனாக இருந்தவன் தான்.அரச போகங்களையும், பரலோக மேன்மைகளையும்,  இகலோக விசயங்களையும் துறந்துவிட்டு தபோவனம் சென்று தவமியற்றி கொண்டிருந்தேன்.என் தவ வாழ்க்கையில் ஒரு விபத்து போல ஒரு மான்குட்டி மேல் பிரியம் வைத்து விட்டேன்.அதனால் மோட்சம் அளிக்கும் தவயோகத்திலிருந்து வழி தவறி போய்விட்டேன்.மான் பிறவி எடுத்து போன பிறவி நினைவுகள் தப்பாமல் காலத்தை கடத்தினேன்.அதனால் தான் இந்த ஜென்மத்தில் எவரிடமும் தொடர்புகொள்ளாமல் பற்றற்று இருக்கிறேன்.பகவானின் சிந்தனைகளிலேயே காலத்தை கழிக்கிறேன்.என்று கூறினார்.
            ஞானம்,யோகம் முதலிய பல ஆத்மீக விசயங்களை கேட்டபின் தெளிவு பெற்று அரசன் கூறினான்.சுவாமி இன்று நான் தங்களை தரிசித்து பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டேன்.பிரம்ம ஞானத்தை உபதேசித்து என்னை கடைத்தேற்றி விட்டீர்கள்.தங்களை சேவித்து நான் பாக்கியவானாகிவிட்டேன்.தங்களை போன்று மறைந்து வாழும் பிரம்ம ஞானிகளை நமஸ்காரம் செய்கிறேன்.தங்களை போன்ற பிரம்ம ஞானிகள் முதியவர்களாகவோ,இளம்வயதினராகவோ, அல்லது பாலகர்களாகவோ கூட இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.ரஹுகணன் இவ்வாறு தெளிவு பெற்று மன நிறைவுடன் புறப்பட்டான்.ராஜரிஷி பரதனை பற்றி சான்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள்.ஊர் குருவிகள் கருடனொடு போட்டியிட்டு பறக்க முடியாது.அதுபோல பூமியில் இருக்கும் அரசர்கள் எவராலும் பரதனின் பெருமையை அடையமுடியாது.ஸ்ரீ ஹரியின் மீது அளவற்ற அன்பு கொண்டு பரதன் மனைவி,மக்கள்,மற்றும் அரச போகங்களை துறந்து காட்டிற்கு சென்றார்.
            அளவற்ற செல்வங்கள் ராஜ போகங்கள், ஆட்சியின் அதிகாரம்,உயர்ந்த பதவி, பெயர்,புகழ் ஆகியவற்றை தேவர்களும் விரும்புவார்கள்.அந்த மேன்மையின் லக்ஷ்மி கடாட்சம் நம் மீது விழாதா என்று ஏங்குவார்கள்.மாமன்னர் பரதனோ பகவானின் பாதார விந்தங்களில் மனம் லயித்து விட்டதனால் அந்த லக்ஷ்மி செல்வங்களை துச்சமாக நினைத்தார்.மான் சரீரத்தை துறக்கும் போது அவர் உரக்க கூறினார்.யோக சாதனையால் தேட வேண்டியவர், தர்மத்தை காப்பவர்,பிரகிருதி சக்தியின் ஈஸ்வரர்,சர்வாந்தராத்மாவாக விளங்குபவரான யக்ஞா மூர்த்தி நாராயணரை வணங்குகிறேன்.
            மனிதன் பரத மன்னரின் தூய வரலாற்றினை பாராயணம் செய்தால் பாரில் கீர்த்தியும் ஆயுளும் பெற்று மோட்சம் அடைவான்.இந்த கதையை படிப்பவன், பிறருக்கு படித்து சொல்பவன் விரும்பியவை அனைத்தையும் அடைவான்.பிறரிடம் கையேந்தி நிற்க மாட்டான்.

No comments:

Post a Comment