Wednesday, 2 May 2012

மாமன்னன் பிருது

ராஜரிஷி அங்கன் என்பவர் பரத கண்டத்தை ஆட்சி புரிந்து வந்தார்.அவரது நல்லாட்சியில் குடிமக்கள் எந்த குறையுமின்றி சுகமாக வாழ்ந்தனர்.
            ஒரு சமயம் அரசன் அங்கன் அசுவமேத மகா யாகத்தை ஆரம்பித்தார்.அந்த யாகத்தில் வேத விற்பன்னர்களும் ரித்விஜர்களும் யாகஹவிர்பாகத்தை தேவர்களுக்கு அர்ப்பணித்து மந்திர உச்சாடனம் செய்தனர்.ஆனால் தேவர்கள் அந்த ஹவிர் பாகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.ரித்விஜர்கள் அரசரிடம் கூறினார்கள்.--"ஹோமத்தில் இட்ட பதார்த்தங்களை நாங்களே புனிதமாக தயாரித்தோம்.சிரத்தையுடன் அக்னியில் அர்ப்பணித்தோம். நாங்கள் வேத மந்திரங்களை பிழையின்றி உச்சரித்தோம்.ஆயினும் தேவர்கள் தாங்கள் வழங்கிய பிரசாதத்தை ஏற்க மறுக்கின்றனர்.தாங்கள் தயவு செய்து மௌனத்தை கலைத்து யாகசபை அங்கத்தினரை இதற்குண்டான காரணத்தை பற்றி கேட்கவேண்டும்."
            அரசர் தன் மௌனத்தை கலைத்து சபை அங்கத்தினர்களை வினவினார்.--"சுவாமிகளே தேவர்களுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?ஏன் யாக ஹவிர்பாகத்தை ஏற்க மறுக்கின்றனர்?சபை அங்கத்தினர்கள் கூறினார்கள்.-- "அரசே இந்த ஜன்மத்தில் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனால் சகல நற்குணங்களும் நிறைந்த நீங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்கிறீர்கள்.குழந்தை இல்லாத காரணத்தால் தேவர்கள் உங்கள் ஹவிர் பாகத்தை ஏற்க மறுக்கிறார்கள்.மகப்பேறு உண்டாவதற்கு முதலில் வழியை தேடுங்கள்.புத்திர செல்வம் நிறைந்திருந்தால் தேவர்கள் ஹவிர் பாகத்தை ஏற்று அருள் புரிவார்கள்" என்று கூறினார்கள்.
            சந்தான பாக்கியம் ஏற்படுவதற்காக விஷ்ணு பகவானை குறித்து யாகம் செய்யுங்கள்.பகவானை அழைத்து யாகம் செய்தால் நிச்சயம் தேவர்கள் ஹவிர் பாகத்தை ஏற்றுக்கொள்வார்கள்.என்றார்கள்.உடனே அரசர் ஆணைக்கு இணங்க புத்திர பாக்கியத்தை குறிக்கோளாக வைத்து விஷ்ணு பகவானிடம் வேண்டுதலை பிரகடனப்படுத்தி ஹவிர்பாகத்தை யாகத்தில் ரித்விஜர்கள் சமர்பித்தனர். அக்னியில் ஆஹுதி இட்டவுடன் அக்னி குண்டத்தில் இருந்து பொன்னொளி வீசும் வஸ்த்திர ஆபரணங்களுடன் ஒரு தேவ புருஷன் தோன்றினான்.அவன் கையில் பாயசம் நிறைந்த பொற்பாத்திரம் இருந்தது.அதை அரசரிடம் கொடுத்து விட்டு மாயமாக மறைந்தான்.பகவானின் அருளை உணர்ந்த மன்னர் அதை பயபக்தியுடன் வாங்கி ராணி சுநிதாவிடம் கொடுத்தார்.சுநிதா அந்த தெய்வீக பாயாசத்தை உண்டு ஒரு மகனை பெற்றாள்.
அவனுக்கு வேன் என்று பெயர் சூட்டினார்கள்.அந்த ராஜகுமாரன் குணம் கெட்டவனாக வளர்ந்தான்.சுநிதாவின் தந்தை அதர்ம வம்சத்தில் தோன்றியதால் எல்லாவித தீமைகளும் அவனிடம் குடி கொண்டு இருந்தன.
             வேட்டையாடச்சென்று அப்பாவி விலங்குகளை கொல்வான். சக தோழர்களுடன் விளையாடும்போது தோழன் என்று கூட நினைக்காமல் சிறு தகராறில் கொன்று விடுவான்.பிரஜைகளும் மற்ற அனைவரும் வேன் வருகிறான் என்றால் அலறி அடித்து ஓடுவார்கள்.மன்னன் அங்கன் பலவிதமாக அவனை திருத்த முயன்றார்.எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.ராஜகுமாரன் அனைவரையும் இம்சித்துக்கொண்டு இருப்பான்.மன்னன் குடிமக்களிடம் நன்மதிப்பையும், புகழையும் இழந்தார்.வருத்தம் மேலிட்டு கூறினார்.உலகில் புத்திர பாக்கியம் அடையாத மனிதர்கள் புண்ணியவான்கள்.பூர்வ ஜன்மத்தில் அவர்கள் ஹரியை ஆராதித்து இருப்பார்கள்.ஏனெனில் கேட்ட மகனின் அடாத செயல்களால் துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மகனை பெற்றதால் கெட்ட பெயரும் பழியும் தான் மிஞ்சுகின்றன.நல்ல மகனை பெற்றால் அவனிடம் பாசமும் பந்தமும் ஏற்படுகின்றன.ஆனால் நமக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்கும் குணம் கெட்ட மகனால் நம்மையும் சேர்த்து நரகத்திற்கு இழுத்து செல்வான்.இவ்வாறு யோசித்துக்கொண்டே இரவில் தூக்கம் வராமல் தவித்தார்.திடீரென பட்டுப்பஞ்சனையில் இருந்து எழுந்தார்.செல்வச்சிறப்புமிக்க அரண்மனையிலிருந்து எவரும் அறியாத நிலையில் வெளியேறி காட்டிற்கு சென்று விட்டார்.
            விடிந்ததும் அரசரை காணவில்லை என்று உறவினர்களும், மந்திரிகளும்,புரோகிதர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.காடு மலைகளிலும் நாட்டிலும் ஊரிலும் தேடச்சொல்லி வீரர்களை அனுப்பினார்கள்.யோகத்தின் ரகசியத்தை அறியாதவர்கள் உலகமெங்கும் கடவுளை தேடினால் கடவுள் கிடைப்பாரா?அந்த கதை ஆகிவிட்டது.மன்னன் எங்கு சென்று மறைந்தார் என்று தெரியவில்லை.
            பிருகு முதலிய ரிஷி முனிவர்கள் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போனால் குற்றங்கள் நடக்கும் என்று நினைத்து சிலகாலம் பொறுத்திருந்து வேறு வழியின்றி சுநிதாவின் மகன் வேனை பட்டாபிஷேகம் செய்து வைத்து அரசனாக்கினார்கள்.வேன் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் கொள்ளையர்களும் தீயவர்களும் அடங்கி ஒடுங்கினர்.ஆனால் அரசன் வேன் இஸ்வர்ய மதம் பிடித்து கொடுங்கோல் ஆட்சி நடத்தினான்.மதம் பிடித்த யானை போல அடக்கு முறையை கையாண்டு ஆட்சி செலுத்தினான்.ரிஷி முனிவர்கள் சித்தி பெறுவதற்காக யாகங்கள் செய்ய கூடாது என்று உத்தரவு போட்டான்.குடிமக்களை துன்புறுத்தும் வகையில் சட்டம் இயற்றினான்.
            ரிஷிகளும் முனிவர்களும் ஒன்று கூடி பேசினார்கள்.இப்போது குடிமக்கள் இருதலை கொள்ளி எறும்பு போலாகிவிட்டார்கள்.நாட்டில் அரசனால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்று வேனை அரசனாக்கினோம்.அரசனாவதற்கு அவனுக்கு சற்றும் தகுதி இல்லை. கொள்ளையர்களிடமிருந்து குடிமக்களை காப்பாற்ற வேனை அரசனாக்கினோம்.அவன் இயல்பு சற்றும் மாறவில்லை.இப்படியே விட்டால் குடிமக்களை நாசம் செய்து விடுவான்.இறுதியாக அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்.தர்மோபதேசம் செய்து அறவழி நடந்தால் அனைவருக்கும் நலம் உண்டாகும்.என்று அவனிடம் கூறுவோம்.நாம் கூறும் நல்ல வார்த்தைகளை அவன் கேட்கவில்லை என்றால் குடிமக்களின் தூற்றுதலால் நாசப்பட்டு போனவேளை, நாம் சபித்து கொன்றுவிடுவோம்.  என்று கூறிவிட்டு ரிஷிகளும் முனிவர்களும் அரசனிடம் சென்று கூறினார்.             மன்னரே!நாங்கள் கூறப்போகும் அறிவுரையை கேளுங்கள்.இதை ஏற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆயுள்,செல்வம்,பலம்,புகழ்,எல்லாம் மேலும் பெருகும்.ஒரு மனிதன் மனம் வாக்கு,காயம்,அறிவு,ஆகியவற்றால் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அதனால் இகலோகத்தில் அனைவரின் வாழ்த்துக்களை பெற்று நீங்கள் மேன்மை அடைவீர்கள்.பரலோகத்தில் சுவர்க்கம் சென்று நற்கதியடைவீர்கள்.பிரஜைகள் நலமாக வாழ நல்ல திட்டங்களை உருவாக்குங்கள்.அரசன் கொள்ளையர்களிடம் இருந்து பிரஜைகளை காக்க வேண்டும்.அரசே மனிதர்கள் அனைவரும் தம்தம் கடமைகளை செய்து கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும்.விஷ்ணு பகவான் பிரம்ம தேவர் முதலிய தேவர்களுக்கும் தேவன் ஆவார்.அவரை மகிழ்வித்து விட்டால் உலகில் அடைவதற்கு எதுவும் துர்லபம் இல்லை.மேலும் குடிமக்கள் அல்லது ரிஷி முனிவர்கள் நாட்டு நலனுக்காக அரசனின் மேன்மைக்காக யாகங்கள் செய்வார்கள்.அதற்க்கு தாங்கள் தடை விதிக்க கூடாது.(தொடரும்)

No comments:

Post a Comment