Saturday 5 May 2012

மாமன்னன் பிருது தொடர்ச்சி 1

            தேவர்களும் ரிஷி முனிவர்களும் உன்னை வாழ்த்துவார்கள்.ரிஷி முனிவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்டுவிட்டு வேன் அரசன் அவர்களை நோக்கி ஏளனமாக கூறினான்:--"முனிவர்களே உங்களுடைய மடமையை என்னவென்று சொல்வது?அதர்மத்தில் தர்மசிந்தனை கொள்வது சரியல்ல.ஒரு பெண் தன்னை காப்பாற்றும் கணவரை துறந்து வேறு ஒருவனிடம் சென்று சேவை செய்வது சரியா?அது போல சேவை செய்ய கடவுளை போல நான் இருக்க நீங்கள் தேவர்களையும் விஷ்ணு பகவானையும் பூஜிக்கிறீர்கள். அரசன் கடவுளுக்கு சமமானவன். அவனிடம் எல்லா தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.அவன் ஆணையை மீறக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆதலால் முனிவர்களே நான் எதை சொன்னாலும் செய்தாலும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள்.என்று கூறினான்.
        வேன் மன்னன் முனிவர்களின் பேச்சை கேட்டு அறவழியில் நடக்கவில்லை.அவனது கொடுங்கோல் ஆட்சி மேலோங்கியது.தர்ம நெறிகளையும் அறத்தையும் மீறினான்.இதைக்கண்டு ரிஷிமுனிவர்களின் கோபம் அதிகரித்தது.முனிவர்கள் இறுதியில் தம் கோப பார்வையால் நோக்கி இவன் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இவன் செத்தால் தான் உலக மக்களுக்கு விமோசனம் உண்டாகும் என்றனர்.ரிஷிகளின் வாக்கு பலித்தது.வேன் உயிரற்று பூமியில் விழுந்தான்.முனிவர்கள் தம்தம் ஆசிரமத்திற்கு போய் விட்டனர்.வேனின் தாய் சுனிதா மிகவும் அழுது புலம்பினாள்.வேனின் உயிரற்ற உடலை கெடாமல் வைத்துக்கொண்டு இருந்தாள். 
            ஒருநாள் ரிஷிகள் வழக்கம் போல சரஸ்வதி நதிக்கரையில் இறைவழிபாடு நடத்திக்கொண்டு இருந்த போது மாபெரும் தூசி படலத்தை கண்டனர்.என்னவென்று அறிந்தபோது கொள்ளையர்கள் ஊர்களிலும்,கிராமங்களிலும் புகுந்து கொள்ளையடித்து விட்டு குதிரைகளில் ஓடிக்கொண்டு இருந்தனர்.வேன் அரசன் இறந்து விட்டதால் ஏன் என்று கேட்க எவருமில்லாததால் அராஜகம் நிலவியது.அனைவரும் வரம்புகள் மீறி நடந்துகொண்டு இருந்தனர்.நாடு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
            ரிஷி முனிவர்கள் எதிலும் தலையிடாமல் இருப்பதும் சரியல்ல.மக்களின் துயரங்களை துடைப்பதும் நமது கடமை அல்லவா.ஆங்காங்கு நாட்டில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும்போது நாம் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.என்று நினைத்து ரிஷிமுனிவர்கள் ஒன்று கூடி பேசினர். புகழ் மிக்க வீரராஜாக்களும்,அறங்காவலர்களும் தோன்றிய இந்த ராஜரிஷி பரம்பரை கொண்ட வேனின் தந்தை அங்க ராஜாவின் வம்சம் வீணாகிப்போககூடாது.என்று கூறி வேனின் இறந்த உடலை அணுகி சவத்தின் தொடைப்பகுதியை கடைந்தார்கள்.அதிலிருந்து கருத்த நிறமுடைய ஒரு மனிதன் தோன்றினான்.அவன் கை,கால்கள் குட்டையாக இருந்தன.கண்கள் சிவந்து தாடை பெரிதாக,நாசி சப்பையாக தலைகேசம் சிவந்து காணப்பட்டான்.அவன் ரிஷிகளை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.ரிஷிகள் அவனை நோக்கி நீ பேசாமல் இரு என்றனர்.அவன் வேன் அரசனின் பாவத்தின் மொத்த உருவமாக இருந்தான்.(அவன் வம்ச பரம்பரைகளை பிற்காலத்தில் மக்கள் நிஷாதர்கள் என்று அழைத்தனர்.நிஷாதர்கள் வேட ஜாதியை சேர்ந்தவர்கள்.அவர்கள் நாட்டில் குடியேறாமல்காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தனர்.)அதன் பின் ரிஷிமுனிவர்கள் வேனின் புஜங்களை கடைந்தார்கள்.அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.அதிலிருந்து தெய்வாம்சம் பொருந்திய ஒரு அழகான மனிதன் பேரொளியுடன் தோன்றினான். அத்தெய்வ திருமகனை கண்டு ரிஷி முனிவர்கள் கூறினார்கள்.இவன் விசுவத்தை காக்கும் கடவுள் ஸ்ரீ நாராயணனின் தெயவாம்சத்தில் இருந்து தோன்றி இருக்கிறான்.அவனுடன் ஒழி வீசிக்கொண்டு அவன் மனைவி லக்ஷ்மியின் அம்சத்தில் இருந்து வந்திருக்கிறாள்.வானகமும் வையகமும் புகழ இவன் வெண் கொற்றக்குடையின் கீழ் நல்லாட்சி புரிவான்.அதனால் பிருது என்ற பெயருடன் விளங்குவான்.பிருது என்றால் பெரும்புகழ் உடையவன்.என்றார்கள்.பிராமணர்கள் பிருதுவின் புகழ் பாடினார்கள்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.ஆகாயத்தில் சங்கு முழக்கமும் துந்துபி சத்தமும் கேட்டது.தேவரிஷிகளும் பித்ருக்களும் வருகை தந்தனர்.சாட்சாத் பிரம்மா தேவர்களுடன் அங்கு வந்தார்.பிருதுவின் கைகளைபிடித்து கை ரேகைகளை பார்த்து கூறினார்.-- வேன் மகன் நாராயணர் அம்சத்தில் தோன்றியவன் இவன் கை ரேகை சுதர்சன சக்கரத்தில் உள்ளது போல அமைந்துள்ளது.இவன் கால்களில் தாமரை பூ போல ரேகைகள் உள்ளது.இவன் மனைவி அர்ச்சி என்பவள் சாட்சாத் லக்ஷ்மி தேவி அம்சத்தில் இருந்து வந்தவள்.
           அதன் பின் வேதம் ஓதும் பிராமணர்களும்,தேவர்களும்,ரிஷிமுனிவர்களும் பேரரசன் பிருதுவுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.அச்சமயம் நதியும் ,கடலும்,மலையும் உருவெடுத்து ரத்தினங்கள் பரிசாக அளித்தன.அது மட்டுமில்லாமல் நாக தேவதைகள் தெய்வ பசு,பூமிதேவி,பட்சிராஜா,வன தேவதைகள் அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளை கொண்டு வந்தனர்.குபேரன் தங்க சிம்மாசனம் கொண்டு வந்தான்.வருண பகவான் வெண்குடையும்,இந்திரன் வைரக்கிரீடத்தையும் பரிசாக அளித்தனர்.ருத்திர பகவான் வீர வாளையும், அம்பிகை கேடயத்தையும்,அக்னிபகவான் வில்லையும்,சூரியபகவான் ஒளிவீசும் வாளையும் வாயு பகவான் சாமர்ந்களையும் தந்தனர்.
            இறுதியில் கவிபாடும் கவிஞர்கள் பிருதுவின் புகழ் பாட முன் வந்தனர்.அச்சமயம் மேகக்கம்பீர குரலில் வேன் மகன் பிருது மகாராஜா கூறினார்.--"கவிஞர்களே நான் இன்னமும் ஒரு சாதனை கூட புரியவில்லை.எதை வைத்து என்னை பாட போகிறீர்கள்?சாதனைகள் புரிந்தவுடன் என்னை பற்றி பாடலாமே மேலும் புகழுக்கு உரியவர் விஷ்ணு பகவான் இருக்கிறார்.தேவர்களும் இருக்கிறார்கள்.மேலும் அரசர்கள் புகழ் மயக்கம் கொண்டவர்கள்.கவிஞர்கள் அரசனை பற்றி புகழ்ந்து பாடினால் அதற்க்கு தகுந்தபடி சாதனைகள் புரிய வேண்டும்.கவிஞர்கள் பாடும் வஞ்சப் புகழில் வீழ்ந்து அரசர்கள் தற்பெருமை கொண்டு மயக்கத்தில் விழுகின்றனர்.
            பிருது மகாராஜா இவ்வாறு கூறியதும் ரிஷி முனிவர்கள் அனைவரும் பிருதுவின் அடக்கத்தை புகழ்ந்து மாகதவந்தி கவிஞர்களை பிருதுவி பற்றி பாட சொன்னார்கள்.
            கவிஞர்கள் பாடினார்கள்.--பிருது மகாராஜா தாங்கள் படைக்கப்பட்ட உயிரினங்களை விஷ்ணு பகவான் காப்பாற்றுவது போல குடிமக்களுக்கு ஒரு குறையும் ஏற்படாதவாறு காப்பாற்றுவீர்கள்.காலம் தவறாமல் மழை பொழிவது போல மிதமாக வரிவசூளித்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.அற வழி நின்று நீதி வழுவாமல் செங்கோல் ஆட்சி புரிந்து சத்ருவின் குற்றமற்ற மகனை  தண்டிக்காமல்  இருப்பீர்கள் .குற்றம் செய்தவன் 
தன்  மகனாக  இருந்தும்  அவனை தண்டிப்பீர்கள்.இரக்க சித்தமுடைய நீங்கள் யாகங்கள் செய்து இறைவனை வழிபடுவீர்கள்.இறைவனடியார்களை அன்பாக நடத்துவீர்கள்.தீயவர்களை தண்டிப்பீர்கள்.கவிஞர்கள் இவ்வாறு புகழ்ந்து பாடினார்கள்.
            பிருது மகாராஜா ஆட்சியில் அமர்ந்து தன் கடமையை நிறைவேற்றினார்.குடிமக்கள் நன்றாக வீடுகளை அமைத்துக்கொள்ள மேடுபள்ளமாக இருந்த பூமியை சமதலப்படுத்தினார்.பாதைகள் அமைத்தார்.மலைநீர்தேங்கி விவசாயம் செய்ய வழிவகுத்தார்.ஆனால் வருடா வருடம் விவசாயம் பொய்த்துக்கொண்டு இருந்தது.பயிர் விளைச்சல் இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது(தொடரும்)




No comments:

Post a Comment