Wednesday 30 May 2012

மரணமில்லா பெருவாழ்வு

ஒரு சமயம் துர்வாசமுனிவர் வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானை சேவித்து விட்டு பகவானிடம் தெய்வீக மலர் மாலையை பிரசாதமாக பெற்றுக்கொண்டு வந்தார்.வழியில் தேவராஜா இந்திரன் ஐராவத யானை மீது அமர்ந்து எதிரில் வந்தான். அச்சமயம் துர்வாச முனிவர் தான் கொண்டு வந்த மலர் மாலையை இந்திரனுக்கு பரிசாக அருளினார்.இந்திரனோ அதை அலட்சியமாக வாங்கி  ஐராவத யானையின் தலை மீது போட்டான்.யானை அந்த மாலையை துதிக்கையில் எடுத்து காலடியில் போட்டு நசுக்கி கசக்கிற்று.இக்காட்சியை கண்ட துர்வாசருக்கு மிகுந்த கோபம் வந்தது.பெருமாளின் மாலையை யானை காலடியில் போட்டு மிதிக்கவா நான் மாலையை உன்னிடம் தந்தேன்?நீ பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு கிரீடத்தில் சூட்டிக்கொள்வாய் என்று நினைத்தேன்.நீ பகவானின் அருளை பெற தகுதியற்றவன்.பகவானின் அருள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கு தான் வரும்.ஆதலால் நீ இப்போதே தேவ ராஜ லக்ஷ்மியை இழந்து ஒன்றுமில்லாதவனாக போய்விடுவாய்.என்று கூறி விட்டு விரைந்து சென்று விட்டார்.
            அன்று முதல் தேவர்களுக்காக நடத்தப்படும் யாகங்கள் நின்று போயின.அசுர சக்கரவர்த்தி பலி அசுரபடைகளுடன் வந்து தேவர்களோடு போர் செய்தார்.தேவர்கள் தரப்பில் மிகுந்த சேதம் ஏற்பட்டது.தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்து ஆலோசித்தனர்.மரணத்தை வெல்லும் வழியை பற்றி விவாதித்தனர்.அனைவரும் பிரம்ம தேவரிடம் சென்றனர்.பிரம்ம தேவர் இந்திரன், வாயு,அக்னி முதலிய தேவர்களை அழைத்துக்கொண்டு வைகுண்ட லோகம் சென்றார்.அங்கு விஷ்ணு பகவானை மனமுருக வேண்டினார்.--"பகவானே தேவர்கள் செல்வங்கள் இழந்து பலமும் இழந்து நிற்கின்றனர்.இவர்களை எதிர்க்கும் சக்திகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.பகவானே சிவபெருமானும் நானும் தேவர்களும் அசுரர்களும் மானிடர்களும் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் தங்களின் சொற்ப ஆற்றலில் இருந்து வெளிப்பட்டு இருக்கிறார்கள்.அவ்வாறு இருக்க தங்களது விராட விசுவ ரூபத்தை எப்படி வர்ணிக்க முடியும்?பிரபுவே தங்கள் பார்வையில் எவரும் தீயவர் இல்லை.நல்லவர்களும் இல்லை.ஒரு தலை பட்சமாக எவரும் பகைவர் இல்லை. எவரும் அன்பர் இல்லை.அவ்வாறு இருந்தும் சத்துவ,ராஜஸ,தாமச குணங்களை ஏற்று லோகங்களை படைத்து காத்து அழித்துஅனைவரையும் உய்வதற்கு அருள் செய்கிறீர்கள்.சரண் அடைந்தவரை காப்பவரே தாங்கள் பற்றற்று எதிலும் தொடர்பில்லாமல் சத்திய சொரூபமாக ஆதி அந்தமில்லாது அனைத்துயிர்களிலும் ஆத்மாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் புன்னகையுடன் தரிசனம் தந்து அருள் பார்வையுடன்  நோக்க வேண்டும். ஆசைகளுக்கு அடிமைப்பட்டு மனிதர்கள் கர்மங்கள் செய்யும் போது துன்பங்களை தான் அதிகம் அனுபவிக்கிறார்கள்.ஆனால் செய்த கருமங்களை தங்களுக்கு அர்ப்பணம் செய்யும் போது அவர்கள் மனம் அமைதி அடைந்து தங்களை நினைக்கிறது.எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் ஜீவராசிகளுக்கேல்லாம் பிரியமானவர். அவர்கள் நலத்தை காப்பவர். ஆத்மாவாக இருப்பவர்.
            தேவர்களின் துதி பாடலை கேட்டு எங்கும் நிறைந்த பரம்பொருள் விஷ்ணு பகவான் தன்னோளியால் திசையெல்லாம் பிரகாசிக்க செய்து அவர்கள் முன் சங்கு சக்கர தாரியாக ஒப்பற்ற பேரழகுடன் தோன்றினார்.தேவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் கூறினார்."பிரம்மா முதலிய தேவர்களே கவலை படவேண்டாம்.அசுரர்கள் வளர்ச்சியின் காலம் இது.ஆதலால் நாம் காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டுமானால் அசுரர்களுடன் முதலில் நீங்கள் நட்பு கொள்ள வேண்டும்.(எப்படி என்றால் பாம்பு பிடாரன் கூடைக்குள் ஒரு எலி ஒன்று நுழைந்து விட்டது.கூடைக்குள் எலி நுழைந்தவுடன் பாம்பு சொன்னது.எலியே நீ கூடையை கடித்து ஒரு ஓட்டையை போட்டு விட்டால் நாம் இருவரும் தப்பித்து வெளியேறி விடுவோம். பாம்பு சொன்னதை நம்பி எலி கூடையை கடித்து ஓட்டை செய்தது.பாம்பு திடீரென எலியை விழுங்கி விட்டு ஓட்டை வழியாக தப்பித்து போய் விட்டது.)பாற்கடலில் இருந்து நீங்கள் அமிர்தம் பெறுவதற்கு முதலில் முயற்சி செய்ய வேண்டும்.
            கடலில் தாவரங்களையும் ஒளஷதங்களையும் போட வேண்டும்.மந்திர மலையை சமுத்திரத்தில் போட்டு மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி என் உதவியால் கடைய வேண்டும்.முதலில் கடலில் விஷம் பொங்கி வரும்.நீங்கள் அதைக்கண்டு அஞ்ச வேண்டாம்.மேலும் கடலில் இருந்து பல வித ஐஸ்வர்யங்கள் வரும். எதற்கும் நீங்கள் ஆசை படாமல் இருக்க வேண்டும்.ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டால் கோபப்பட கூடாது.பகவான் அமிர்தம் கிடைக்கும் வழியை இவ்வாறு கூறி விட்டு மறைந்தார்.சர்வ சக்தி படைத்த இறைவனின் திரு உள்ளப்படி நடக்கப்போவதை யார் தான் அறிவார்?பிரம்மாவும் சிவபெருமானும் அவர் அவர் இருப்பிடத்திற்கு சென்று விட்டனர்.
            தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பலிச்சக்கரவர்த்தியை காணச்சென்றனர்.கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் வருவதை கண்டு அசுரர்கள் இதுதான் நல்ல சந்தர்பம் என்று கருதி அவர்களை பிடிக்கமுயன்றனர்.அசுர ராஜா பலி நட்பும் பகையும் உள்ள அரசியலை நன்கு அறிந்தவர்.தூய கீர்த்தி பெற்ற பலி தேவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அசுர தளபதிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.அசுர சேனாதிபதிகளும், மந்திரிகளும் புடை சூழ சிம்மாசனத்தில் அமர்ந்த பலி ராஜா தங்கள் வருகைக்கு என்ன காரணம் என்று வினவினார்.இந்திரன் சமாதானம் பேசுவதற்காக இங்கு வந்துள்ளோம். என்றார்.பலி அவர்களை தகுந்தபடி உபசரித்து பேச சொன்னார்.விஷ்ணு பகவான் உபதேசித்தபடி தேவர்கள் நாம் இருவரும் ஒத்துழைத்தால் அமிதம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர்.இரு தரப்பினரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அமிர்தம் கடைவதற்கு சம்மதித்தனர்.பலி ராஜாவின் படைத்தளபதிகள் உற்சாகமானார்கள்.அதன்பின் தேவர்களும் மிகுந்த பலசாலிகளான அசுர படை தலைவர்களும் மந்திர மலையை தூக்க முற்பட்டனர்.மாபெரும் மலையை தூக்க முடியாமல் தூக்கி நழுவ விட்டனர்.மலை அடியில் சில தேவர்களும் அசுரர்களும் நசுங்கி இறந்தனர்.அப்போது ஆபத்பாந்தவன் விஷ்ணு பகவான் தோன்றினார்.அவர் அனாயாசமாக மலையை தூக்கி கருடன் மீது ஏற்றிக்கொண்டு கடற்கரை வந்து சேர்த்தார்.
            அனைவரும் கடலுக்குள் மலையை போட்டு வாசுகி பாம்பை அதில் சுற்றினர்.முதலில் தேவர்கள் பாம்பின் தலைப்பக்கம் பிடித்தனர்.அப்போது அசுரர்கள் கூறினார்கள்.பாம்பின் வாலை பிடிப்பது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது.நாங்கள் வேதங்களை கற்று தேர்ந்தவர்கள்.கல்வியில் சிறந்து விளங்கும் நாங்கள் உயர் குடியில் பிறந்தவர்கள்.வீரத்திற்கு எடுத்துக்காட்டாக பல வீர தீர செயல்கள் புரிந்து புகழ் பெற்றவர்கள்.தேவர்களை விட நாம் ஒன்றும் குறைந்து போகவில்லை.என்று கூறிவிட்டு அசுரர்கள் ஒருபக்கம் பேசாமல் நின்று கொண்டார்கள்.விஷ்ணு பகவான் புன்னகைத்துவிட்டு வாசுகி தலையை விட்டு விட்டு வாலை பிடித்துக்கொண்டார்.தேவர்கள் பகவான் பக்கம் சென்று வாலை பிடித்துக்கொண்டனர்.பலம் மிக்க தேவர்களும் அசுரர்களும் கடைய ஆரம்பித்தவுடன் மந்தர மலை கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது.அனைவரும் உற்சாகம் இழந்தனர்.இதை அறிந்த விஷ்ணு பகவான் ஒரு பெரிய விசாலமான ஆமை வடிவம் எடுத்து கடலுக்குள் சென்றார்.புதைந்த மந்தர மலையை மேல் தூக்கி முதுகில் தாங்கிகொண்டார்.அதன் பின் மந்தர மலை நன்றாக சுற்றி கடலை கடைந்தது.(தொடரும்)

No comments:

Post a Comment