Sunday 10 June 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி

கூர்ம அவதாரம் எடுத்த பகவானுக்கு முதுகில் மந்திர மலை சுற்றுவது தன் முதுகில் சொரிவது போல இருந்தது. பகவானின் மகிமை அளவற்றது.வேதங்களும் உபநிஷதங்களும் அவர் மகிமைகளை வர்ணிக்க முடியாமல் திணறுகின்றன.வாசுகி நாகத்தை பிடித்து இழுக்கும் போது தேவர்களுக்குள் தெய்வ சக்தியாக அசுரருக்குள் அசுர சக்தியாக பகவான் செயல் பட்டார்.வாசுகி பாம்பை மயக்கமடைய செய்து அருள் புரிந்தார்.மந்திர மலை உச்சியில் தன் சக்தியால் மலையை அமுக்கினார்.பிரம்மா,சங்கரர் முதலிய தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.திமிங்கலம்,மீன் முதலிய நீர் வாழ் பிராணிகள் நீரின் சுழற்சியால் மயக்க மடைந்தனர்.நாக ராஜா வாசுகி யின் ஆயிரம் கண்களில் இருந்தும் வாய்களில் இருந்தும் விஷம் கலந்த அக்னி சுவாச காற்று புகையாக கிளம்பியது.அதனால் காட்டு தீயில் கருகி போன சால மரங்கள் போல அசுரர்கள் காட்சியளித்தனர் .அந்த அக்னி காற்று தேவர்களையும் விடவில்லை.அவர்கள் ஆடை அணிகலன்கள் அனைத்தும் கருத்து போயின.அவர்கள் வெப்பத்தால் துவண்டனர்.பகவான் தேவர்கள் பக்கம் இருந்ததால் மலை தூறல் பட்டு சில் என்று கடல் காற்று வீசியது.தேவர்களும் அசுரர்களும் துவள்வதை கண்டு பகவான் தன் நான்கு திருக்கரங்கள் பிடித்து இழுத்து கடைந்தார். மஞ்சள் பட்டாடையும் அழகிய கேசமும் பறக்க குண்டலங்கள் ஆட ஆபரணங்கள் மின்ன அகல விசுவத்தையும் வென்ற நல்லவர்களுக்கு அபயம் அளிக்கும் நான்கு திருக்கரங்கள் கொண்டு பகவான் கடைந்தார்.அச்சமயம் கடல் வாழ் உயிரினங்கள் இங்கும் அங்கும் ஓடி கலக்கமடைந்தன.கடலை வேகமாக கடைந்தால் கடலில் இருந்து விஷம் பொங்கி வந்தது.விஷம் வேகமாக பரவ ஆரம்பித்தது.கடலிலும் பூமியிலும் ஆகாயத்திலும் உயிரினங்கள் தஞ்சமடைய வழியின்றி தவித்தன. இனி நம்மை காப்பவர் எவரோ? என்று கத்திக்கொண்டு ஓடினர்.பிரஜாபதிகளும் தேவர்களும் கைலாயத்தை நோக்கி ஓடினர்.அங்கு சிவபெருமான் பார்வதி தேவியுடன் தவக்கோலத்தில் இருந்தார்.அனைவரும் சிவனை நோக்கி துதி செய்தனர்.---பெருமானே மூவுலகங்களையும் இந்த நெருப்பாக சுடும் விஷம் தாக்க வருகிறது.ஜகத்குருவான நீங்கள் எம்மை காத்தருள வேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் நீங்கள்.தன்னொளி கொண்டவர்.தேவர்,மானிடர் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் உயிர் கொடுக்கும் ஈசன் பிரம்ம தத்துவமாக விளங்குகிறீர்கள்.அறக்கடவுள் ரிஷபத்தை வாகனமாக கொண்ட நீங்கள் பிரணவ வேத விசுவ ரூபமாக  நிற்கிறீர்கள், பகவானே தங்களின் எல்லையில்லா விசுவ ரூபத்தை பிரம்மா,இந்திரன் முதலிய தேவர்களாலும் வர்ணிக்க முடியாத பட்சத்தில் எங்களால் எப்படி முடியும்?தன ஆற்றலை மறைத்துக்கொண்டு மக்கள் நன்மைக்காக தாங்கள் பிரத்யேட்சமாக காட்சி அளிக்கிறீர்கள்.
            சிவபெருமான் கூறினார்: "தேவி பார்த்தாயா,மக்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்து இருக்கின்றனர். பிரஜைகளை ரட்சிப்பது என் கடமை அல்லவா?சான்றோர் தன் உயிரை கொடுத்தாவது மக்கள் உயிரை காப்பாற்றுவார்கள்.அது அவர்களுடைய இயல்பு.சிவபெருமான் இவ்வாறு கூறியதும் அனைத்தும் அறிந்த பார்வதி தேவி புன்னகை பூத்து ஆமோதித்தாள்.கருணை கடலான சிவபெருமான் ஜீவலோகத்தை ரட்சிக்க கொடிய ஹாலா ஹல விஷத்தை ஒன்று திரட்டி கையில் எடுத்து விழுங்கி விட்டார்.விஷத்தை உண்டதால் கழுத்து நீல நிறமாகி விட்டது.அதுவும் சிவபெருமானின் அழகைகூட்டி காண்பித்தது.கீழே சிதறுண்ட விஷ துளிகளை தேள்,சர்ப்பம் போன்ற விஷ ஜந்துக்களும்,விஷ தாவரங்களும் தன்னுள் கிரகித்துக்கொண்டன.
             சிவபெருமான் விஷத்தை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டதும் இதமான சுகந்த காற்று வீசியது.எங்கும் அமைதி நிலவியது.வெப்பம் தணிந்தது.தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள்.முதன் முதலாக காமதேனு தோன்றியது.அக்னி ஹோத்திர காரியங்களுக்காக உபயோகப்படும் கோமாதா, யாகம் செய்வதற்காக பஞ்சகவ்யம் தந்து (நெய்,பால்,தயிர்,கோமயம் ,சாணம்)யாக பூஜை நடத்துபவருக்கு நற்கதி அளிக்கவல்லது. சத்தியலோகம் சேர்பிக்கும் காமதேனுவை பிரம்ம ரிஷிகள் தமக்கு வேண்டும் என்று ஏற்றுக்கொண்டனர்.அதன் பின் உச்சைசிரவா என்ற பறக்கும் குதிரை தோன்றியது.அசுர ராஜா பலி அதை ஏற்றுக்கொண்டார்.ஐராவதம் என்ற வெள்ளையானை தோன்றியது.அதை இந்திரன் ஏற்றுக்கொண்டார்.அதன்பின் கௌஸ்த்துபமணி என்ற பத்ம ராக மணி ரத்தினம் வந்தது.அதை விஷ்ணு பகவான் ஏற்றுக்கொண்டு கழுத்தில் அணிந்து கொண்டார்.அதன் பின் கற்பக விருட்சமும் அப்சரஸ்களும் தோன்றினர்.இவர்களுடன் லக்ஷ்மி தேவி வந்தார்.அவளுடைய சௌந்தர்யமும் இளமையும் அனைவரையும் மயங்க வைத்தது.அவள் திசையெங்கும் ஒளி வீசி நிற்பதை கண்டு தேவர்களும், முனிவர்களும்,அசுரர்களும் அவளை அடைய வேண்டும் என்று ஆசைபட்டனர்.இந்திரன் லக்ஷ்மி தேவி அமர்வதற்கு ஒரு சொர்ண சிம்மாசனம் கொண்டு வந்தார்.புனித நதிகள் எல்லாம் உருவம் தரித்து பொற்கலசங்களில் அபிஷேகம் செய்வதற்கு புனித தீர்த்த நீர் கொண்டு வந்தனர்.காமதேனு பஞ்ச கவ்யம் கொண்டு வந்தாள். பூமிதேவி ஒளஷத மூலிகைகளை புனித நீரில் சேர்த்தார்.வசந்த ரிது சித்திரை,வைகாசியில் பூக்கும் மலர்களை கொண்டு வந்தது.கந்தர்வர்கள் சங்கீதம் பாட அப்சரஸ்கள் நடனமாட மேகங்கள் உருவம் தரித்து மிருதங்கம்,துந்துபி,டமரு ஒலிக்கச்செய்து வீணா வேணு சங்கு நாதம் இசைக்க ரிஷி முனிவர்கள் அனைவரும் முறைப்படி பகவதி லக்ஷ்மி தேவிக்கு அபிஷேகம் செய்தனர்.லக்ஷ்மி தேவி தாமரை மலரை கையில் ஏந்தி சொர்ண சிம்மாசனத்தில் வீற்று இருந்தாள். திக்கஜஸ்கள் பொற்கலசங்கள் கொண்டு ஒளஷதங்கள் கலந்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தன.பிரம்ம ரிஷிகள் வேத மந்திரத்தை ஓதினர்.சமுத்திர ராஜன் தேவிக்கு பட்டாடை சாத்தினான்.வருண பகவான் தேவிக்கு வைஜயந்தி மாலையை சூற்றினான்.பிரஜாபதி விசுவ கர்மா பொன் வைர வைடூர்ய ஆபரணங்கள் அணிவித்தான்.சரஸ்வதி தேவி முத்து மாலையும், பிரம்மா தாமரை மலரையும், நாக தேவதைகள் குண்டலங்களையும் தந்தனர்.பிராமணர்கள் ஸ்வஸ்தி மந்திரங்கள் பாட லக்ஷ்மி தேவி மணமாலையை கரங்களில் ஏந்தி புறப்பட்டாள். கொடி இடை ஆட சந்தனமும் கேசரமும் மணக்க பாத கொலுசு சதங்கை ஒலிக்க போர்க்கொடி போல் நடந்து வந்தாள். தனக்கு ஏற்ற மணாளனை தேடினாள். தேவ,கந்தர்வ,யக்ஷ,அசுர,சித்த,சாரணர்களில் தேடிக்கொண்டு வந்தாள்.அவள் மனதில் எண்ணினாள்:-- தவத்தில் சிறந்தவர் கோபத்தை அடக்கவில்லை.சிலரில் ஞானம் இருந்தும் வைராக்கிய ஆசையை ஜெயிக்கவில்லை.மகா மகிமை பொருந்தி இருந்தாலும் காமத்தை வென்றவன் இல்லை.ஐஸ்வர்ய செல்வமிருந்தும் பிறர் தயவை நாட வேண்டிய கட்டாயத்தில் இவர் உள்ளார்.அறத்தில் சிறந்தவர்களாக இருந்தும் இவர்களிடம் பிராணிகளிடம் அன்பும் கருணையும் இல்லை.இவரிடம் தியாகம் இருந்து என்ன பயன்?அது முக்திக்கு உதவியாக இல்லை.இவரிடம் வீரம் இருந்தும் ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை.சில சாது மகாத்மாக்கள் பற்றற்று இருந்து சமாதியில் நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.சில ரிஷிகள் நீண்ட ஆயுள் பெற்றிருந்து காண்பதற்கு அமங்கலமாக இருக்கிறார்கள்.சிலர் அழகாக மங்களகரமாக இருந்தாலும் அற்ப ஆயுள் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.சிலரிடம் இரண்டும் (ஆயுள்,அழகு)இருந்தும் குணம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் (தொடரும்)

No comments:

Post a Comment