Thursday 5 April 2012

ஜடபரதன்

ரிஷபதேவரின் மகன் பரதன் கடல் சூழ்ந்த பூமியை நல்லாட்சி புரிந்து வந்தார் .பல வருஷங்களாக அஜநாபவர்ஷம் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட தேசம் பரதன் நெடுங்காலம் அறம் தவறாது மக்களை தன் மக்கள் போல பாவித்து ஆட்சி புரிந்ததால் பாரத வர்ஷம் என்று அழைக்கப்பட்டது.
            பல தக்ஷிணைகள் கொண்ட பற்பல யாகங்களை நடத்தும்போது அத்வர்யு பிராமணர்கள் நெருப்பில் ஆஹுதி இடுவதற்கு ஹவிசை கையில் எடுக்கும்போது (யாகத்தில் இடப்படும் நெய் முதலிய சாமக்கிரிகள் ) யாகத்தின் யஜமானத்தலைவன் பரதன் யாகத்தின் புண்ணிய பலன் அனைத்தையும் தனக்கென்று கருதாமல் பகவானுக்கே சமர்ப்பணம் செய்து வந்தார்.இதயத்தில் இருக்கும் பற்று பகைகளை துடைத்தெறிந்துவிட்டு இந்திரன்,சூரியன் முதலிய தேவர்களை தனித்து வழிபடாமல் அவர்களை விசுவரூபமாக விளங்கும் பகவானின் அங்கங்களில் தியானம் செய்து மகிழ்வார்.
            இவ்வாறு பல வருட காலம் ஆட்சி செய்த பின் உலக விஷயங்களில் இருந்து விடுபட நினைத்தார்.தன்னுடைய ஐந்து புதல்வர்களுக்கும் ராஜ்யத்தை பிரித்துக்கொடுத்துவிட்டு புலஹாசிரமம் நோக்கி தவ வாழ்க்கையை ஏற்று தவம் செய்ய புறப்பட்டார்.புலஹாசிரமம் நைமிஷாரன்யத்தில் இருந்தது.அங்கு சக்கர நதி என்று பிரசித்தி பெற்ற கண்டகி நதியில் சாலகிராம கற்கள் நிறைந்து ரிஷிகளின் ஆசிரமங்கள் அருகில் பிரவகித்துக்கொண்டு இருந்தது.சாளக்கிராமக்கற்களில் சக்கர சின்னம் இருப்பதால் அது சக்கர நதி என்று பெயர் பெற்றிருந்தது.
            புலஹாசிரம தபோவனத்தில் ஒரு ஏகாந்த ஸ்தானமாக தேர்ந்தெடுத்து மலர்கள், துளசி,இலை, காய்கனிகள் ஆகியவற்றை கொண்டு பகவானை அர்சித்துக்கொண்டு தவம் இருந்தார்.மனதில் இருந்த எல்லாவித ஆசைகளையும் விட்டொழித்து நியமங்கள் தவறாது பூஜை,அர்ச்சனை செய்துகொண்டிருக்கையில் பக்தியின் பரவச நிலை அடைந்து விடுவார்.பிரேமையின் உச்சக்கட்ட நிலையில் மனமுருகி ரோமஞ்சிதமடைந்து பேரின்பத்தில் திளைப்பார்.அப்போது அவர் கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கும்.வெளியில் எதுவும் புலப்படாமல் அகக் கண்களில் ஸ்ரீ ஹரியின் செந்தாமரை திருவடிகள் மட்டும் தெரியும்.அவற்றில் மனம் லயித்து பரமானந்தத்தில் மூழ்கிவிட்ட காரணத்தால் வெளிஉலக தொடர்பற்று பூஜா விதி முறைகளையும் மறந்து போவார்.
            ஒரு நாள் கண்டகி நதியில் ஸ்நானம் செய்து விட்டு சூரிய பகவானை பூஜித்து அன்றாட வழிபாடுகளை முடித்து நதிக்கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.அச்சமயம் கருவுற்றிருந்த ஒரு பெண் மான் அங்கு வந்து நீர் அருந்திக்கொண்டு இருந்தது.அச்சமயம் அந்தக்காடே அதிரும்படி சிங்க கர்ஜனை கேட்டது.அந்த பயங்கர சப்தத்தால் பீதியடைந்த மான் தண்ணீர் குடிப்பதை விட்டு விட்டு குழப்பத்தில் எங்கே ஓடுவது என்று தெரியாமல் நீருக்குள் குதித்து நதியை கடக்க ஓடியது.மிகவும் பயந்த அதிர்ச்சியில் கர்பத்தில் இருந்த மான் குட்டி தண்ணீரில் வந்து விழுந்து நீர் பிரவாகத்தில் அடித்து சென்றது.தாய், மான்குட்டியை ஈன்றதும் பயத்தில் நடுங்கி சோர்வுற்று கரையில் வந்து விழுந்து இறந்தது.இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பரதன் இரக்கம் மேலிட்டு உள்ளம் உருகி நீரில் அடித்துச்சென்றுகொண்டிருந்த மான் குட்டியை தூக்கிக்கொண்டு வந்தார்.தாயில்லா குழந்தை பாவம் சொந்த பந்தங்களில் இருந்து பிரிந்து அனாதையாகிவிட்டது என்று கூறி அதை தன் ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்.அது உயிர் பிழைக்க ஆவன செய்தார்.
            அது பிழைத்து வாழ குடிப்பதற்கு பால் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை  செய்தார்.தாயில்லா மான்குட்டி மீது நாளுக்கு நாள் பாசம் பொங்கி வந்தது.
ஆசிரமத்தில் சிங்கம்,புலி முதலிய பிராணிகள் வந்து விடுமோ என்று கண்ணும் கருத்தும் ஒன்றி போய் பாதுகாத்து வந்தார்.மான்குட்டியுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.அவரது  தவம் ,பூஜைகள், யமநியமங்கள் எல்லாம் சிறிது சிறிதாக அவரிடம் இருந்து விடைபெற்று விட்டன.அவர் இவ்வாறு நினைப்பார்:



மான்குட்டி பாவம் என்னையே நம்பி என்னிடம் வந்து விட்டது.தன் கூட்டத்தை விட்டு விட்டு என்னையே தாய் தந்தையாக உற்ற பந்துவாக, தோழனாக நினைக்கிறது.என்னை தவிர எவரையும் அறியாத மான்குட்டியை நான் தான் காப்பாற்ற வேண்டும்.சரண் அடைந்தவர்களை காப்பாற்றுவது பெரியோர்களின் கடமை அன்றோ!
            தர்பை, சமித்துக்கள், மலர்கள்,பழங்கள் ஆகியவற்றை சேகரிக்க காட்டிற்குள் செல்வதானால் புலி, ஓநாய்களிடம் இருந்து காப்பாற்ற மான் குட்டியை அழைத்துக்கொண்டு போவார்.காட்டில் பசும்புல்லை தின்பதற்கு இவர் கூடவராமல் இருக்கும்போது மிகவும் பிரியமாக அதை தோளில் சுமந்து செல்வார்.அதனை நெஞ்சோடு அனைத்துக்கொள்வார். தியானம்,பூஜைகள் செய்து கொண்டிருக்கும்போது நடுநடுவில் எழுந்து சென்று மான்குட்டியை பார்த்து விட்டு வந்தால் தான் நிம்மதி அடைவார்.
            மான்குட்டி புல்,இலை,செடிகளை நோக்கி வெகுதூரம் சென்று விட்டாலோ காணாமல் போன பணப்பையை நினைத்து மனிதன் வருந்துவது போல வருந்தி தவிப்பார்.என் செல்வத்தை காணவில்லையே எங்கு சென்றுவிட்டதோ?என்று புலம்புவார்.நான் செய்த குற்றம் என்னவோ?நான் செய்த குற்றத்தை மறந்து என்னிடம் ஓடி வருமா?அல்லது பசும்புல் மேய்ந்து கொண்டு வெகு தொலைவில் சென்று விட்டதே!ஓநாய்,புலி,காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்கள் தனியாக திரிந்துகொண்டிருக்கும் மான்குட்டியை சூழ்ந்து கொண்டதோ?ஐயோ என்ன செய்வேன்!சூரிய அஸ்தமனமாகிவிட்டதே இன்னமும் மான்குட்டி வர வில்லையே என்று புலம்புவார்.
            நான் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துகொண்டிருக்கையில் உன் பிஞ்சு கொம்புகளை கொண்டு என் மீது தேய்த்து என் தியானத்தை கலைப்பாய்.உன் சுட்டித்தனத்தை கண்டு நான் மகிழ்ந்து போவேன்.மேலும் பகவானுக்கு நிவேதனம் செய்வதற்காக தர்பையில் ஹவிசை வைத்திருக்கும்போது நீ அதை வாயால் கடித்து இழுப்பாய். அச்சமயம் நான் உன்னை கடிந்து கொள்வேன்.அதனால் பயந்து பரம சாது போல சேஷ்டைகளை விட்டு விட்டு ஓர் இடத்தில் உட்கார்ந்து விடுவாய்.குட்டி மானே நீ எங்கு சென்றாய்.என்று புலம்பிவிட்டு மான் குட்டி கால் பதித்த சின்னத்தை பூமியில் கண்டு தேடிக்கொண்டு போவார்.கடந்த ஜன்ம கர்மபலன் மான்குட்டி ரூபமாக வந்து மோட்ச மார்க்கத்தில் தடையாக வந்து விட்ட காரணத்தால் யோக சாதனையில் இருந்து தவறி விட்டார்.(தொடரும்)

No comments:

Post a Comment