Sunday 18 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி

பரீட்சித்மன்னனை அங்கு கூடி இருந்த ரிஷிகள் அனைவரும் புகழ்ந்தனர்.
           ராஜரிஷிசிரோமணி!பாண்டவ வம்சத்தில் உதித்த நீங்கள் பகவத் சேவையை பெரிதாக கருதி அரச சிம்மாசனத்தை ஒரு நொடியில் துறந்து விட்டீர்கள்.இதில் ஒன்றும் வியப்பு இல்லை.உங்கள் தந்தையும் தாதயர்களும் ஸ்ரீ கிருஷ்ணபகவான் மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர்கள்.நீங்கள் சரீரம் துறந்து மோட்ச கதி அடையும் வரை நாங்கள் இங்கு ஆத்ம தத்துவங்களை பேசிக்கொண்டு கூடவே இருக்கிறோம்.என்றனர்.
           அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.---- அதிரூப அழகு சுந்தரரான பதினாறு வயது நிரம்பிய பரம ஞானி சுக தேவர் அங்கு தோன்றினார்.ஐந்து வயதிலேயே ஞானியாகிவிட்டவர் மகரிஷ்களாலும் தெய்வ ரிஷிகளாலும் வணங்கப்படுபவர். சுக தேவர் வருகை தந்ததை கண்டு மேலும் தன்னை பாக்யவானாக நினைத்த பரீட்சித் அவரை வரவேற்று பூஜை செய்து உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.சாஷ்டாங்கமாக தண்டனிட்டு வணங்கி கூறினார்.
           நட்சத்திர தாரகைகள் நடுவில் சந்திரன் பிரகாசிப்பதை போல மகாரிஷி கணங்களுக்கு மத்தியில் சோபை தரும் பெருமானே குற்றம் புரிந்த க்ஷத்ரிய அரசன் என்னை தேடி என்னிடம் அதிதியாக வந்துள்ளீர்கள்.இது நான் செய்த தவப்பயன் தான்.தங்களை நினைத்த மாத்திரத்தில் மனிதன் தூயவனாகிவிடுவானே அப்படிப்பட்டவர் என்னை காண வந்திருப்பது ஸ்ரீ ஹரியின் கிருபையை தவிர வேறென்ன சொல்ல முடியும்?தாங்கள் பசுவிடம் பால் கறக்கும் நேரம் வரை தான் ஒரு இடத்தில தங்குவீர்கள்.அவ்வாறு இருக்க நான் நற்கதியடைய என் மீது அருளை பொழிவதற்காக எழு நாட்கள் என்னுடன் இருந்து பிறவாமை அருளும் பகவத்கதைகளையும் ஆன்மீக தத்துவங்களையும் உபதேசிக்க வந்துள்ளீர்கள். என்றால் நான் எப்படி தங்களுக்கு நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.
           தங்களிடம் இரண்டு விஷயங்கள் கேட்டுக்கொள்கிறேன்.சுவாமி!யோகியர்களுக்கும் பரம குருவே மரணத்தை நெருங்கும் மனிதன் எதை செய்தால் அவன் நற்கதி யடைய முடியும்?எந்த மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்?எந்த தெய்வத்தை நினைக்க வேண்டும்?இரண்டாவது உலகில் வாழும் போது எந்த கடமைகளை செய்து அவன் தன் ஆத்மாவை மேம்படச்செய்து மோட்சகதியடைவான்? 
           ஸ்ரீ சுகதேவர் கூறினார்.--- மன்னரே இந்த ஏழு நாட்களும் ஆத்ம தத்துவ போதனைகள் கலந்து பக்திரசம் நிறைந்த பகவத் கதைகளை கூறுகிறேன்.அது பிற்காலத்தில் பாகவத புராணம் என்று பெயரிட்டு ஞானிகள் குறிப்பிடுவார்கள்.உன் கேள்விகளுக்கு விடை அதிலிருக்கும்.வேதத்திற்கு நிகரான இந்த பாகவத புராணம் என் தந்தை வேத வியாசரால் எனக்கு அருளப்பட்டது.ராஜேந்திரனே மனிதன் உலகில் ஆரோக்யமாக வாழும்போதே பெரியவர்களை சேவித்து பகவான் நாம ஜபம் செய்து பகவானை நினைத்துக்கொண்டே அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து தன்னலமற்று கடமைகளை செய்ய வேண்டும்.ஆனால் மனிதர்கள் மனதில் நினைக்காமல் தன் குடும்பத்தில் பற்று கொண்டு வேலைகள் செய்கிறார்கள்.மனைவி மக்கள் மீது அதீத பாசம் கொண்டு பாடுபட்டு உழைத்து உழைத்து அவனது நீண்ட ஆயுள் நொடியில் கழிந்து விடுகிறது.பரீட்சித்மன்னரே அபயமளிக்கும் பரமபதம் அடைய விரும்புகிறவன் சர்வாத்மாவாக,சர்வசக்திமானாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் தெய்வீக கதைகளை கேட்டு அவர் திருநாம பஜனை செய்து பூஜனை செய்ய வேண்டும்.மரணம் நெருங்கும்போது பகவானின் நினைவு அவசியம் வர வேண்டும்.அதற்க்கு தகுந்தபடி ஞானம்,பக்தி,தர்மம்,ஆகியவற்றை வாழ்க்கையில் என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்.இதுவே ஜன்மம் எடுத்ததற்கு பலன் என்று கருதப்படுகிறது.
           பரீட்சித் மகாராஜா மோட்சம் அடையும் வழியை பற்றி சிந்திக்காமல் மனிதன் தன் ஆயுளை வீணாக கழித்து விடுகிறான்.பகவானின் சிந்தனையில் ஒரு பொழுது அல்லது ஒரு நிமிடம் கழிந்தாலும் அது மோட்சத்தை தரக்கூடியதாக இருக்கும்.ராஜரிஷி கட்வாங்கன் இறப்பதற்கு சில நிமிடங்களே இருக்கும்போது அனைத்துவிசயங்களையும் மனதிலிருந்து நீக்கி விட்டு இறைவனடி சேர தயாராகிவிட்டார்.அந்த நொடிபொழுதில் பரம பதம் அடைந்து விட்டார்.மன்னரே தங்களுக்கு கிடைத்திருக்கும் அவகாசமோ ஏழு நாட்கள் இன்னமும் இருக்கின்றன.அதற்குள் தன் ஆத்மாவை மேம்படுத்த எவ்வளவோ சாதிக்கலாம்.ஆதலால் கவலைப்படாதீர்கள்.என்று சுகதேவர் ஆறுதல் அளித்து விட்டு கங்கையில் மூழ்கி எழுந்து தர்பாசனத்தில் அமரச்சொன்னார்.ஓம் என்ற பிரணவத்தை தியானம் செய்யும் முறையையும் பிராணவாயுவை அடக்கி பரம்பொருளை பாதாதி கேசம் வரை தியானிக்கும் முறையையும் கூறினார்.ஞான வைராக்யத்தை உண்டாக்கும் விசயங்களையும் கூறினார்.
                                                                                                   (தொடரும்)

No comments:

Post a Comment