Sunday 4 March 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 4

பிரம்மதேவரே விஷ்ணு பகவானின் அஞ்ஞான மாயையால் அறிவு மயக்கம் ஏற்பட்டு குற்றம் செய்தவர்களை பற்றி நான் பேசுவதுமில்லை.நினைத்துக்கொண்டிருப்பதுமில்லை.அவர்கள் குற்றத்தை உணர்வதற்காக சிறிய தண்டனை கொடுத்தேன்.அஸ்வினி குமாரர்கள் அருள்பெற்று தேவர்களும் மற்ற ப்ருகு முதலியவர்களும் முன்பு போல் நலமாகட்டும்.தக்ஷன் ஆட்டுத்தலை பெற்று உயிருடன் எழட்டும்.சிவபெருமான் இவ்வாறு அருளுரை கூறியதும் அனைவரும் சிவபெருமானை அழைத்துக்கொண்டு யாகம் செய்த இடத்திற்கு சென்றனர்.சிவபெருமான் கூறியது போல யாக பலி கொடுத்த ஆட்டுத்தலையை தக்ஷன் கழுத்தில் பொருத்தினார்கள்.அக்கணமே தக்ஷன் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்று எழுந்தான்.சிவபெருமானுக்கு செய்த துரோகத்தை எண்ணி கண்ணீர் வடித்தான்.சதி தேவியை நினைத்து வருந்தினான்.அவனால் பேச முடிய வில்லை.சிவபெருமானை அருளால் பக்தி பெருக்கெடுத்து அன்புடன் தொழுதான்.---நான் குற்றம் செய்து விட்டேன்.பிரபுவே தாங்களே பிரம்மாவாக இருந்து அறத்தை காப்பாற்றுவதற்காக வேத வித்தை, தவம்,விரதம் ஆகியவற்றை அனுஷ்டிக்கும் பிராமணர்களை படைத்தீர்கள்.ஸ்ரீ ஹரிக்கும் தங்களுக்கும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் கருணை இருக்கிறது.மாடு மேய்ப்பவன் பசுக்களை சரியான பாதையில் கொண்டு போவது போல எங்களை நேர்படுத்தி நல் வழி காட்டி விட்டீர்கள்.நான் தங்களை தூற்றி விட்டு நரகத்திற்கு போக இருந்தேன்.தாங்கள் கருணை காட்டி எம்மை காப்பாற்றி விட்டீர்கள்.தங்களை மகிழ்விக்க என்னிடம் ஒரு நல்ல குணம் கூட இல்லை.ஆதலால் எம்மை காத்தருள வேண்டும்.என்று தக்ஷன் வேண்டிக்கொண்டான்.
          ஆஷுதோஷ சங்கர பகவானிடம் இவ்வாறு மன்னிப்பு கேட்டுக்கொண்டதும் பிரம்மா முதலிய தேவர்களும், உபாத்யாயர்களும், ஆச்சார்யர்களும் துணையாக இருக்க தக்ஷன் யாகத்தை மீண்டும் தொடங்கினான்.பூத பேய்களால் வந்த அசுப தோஷத்தை சாந்தி செய்வதற்கு விஷ்ணு பகவானை நினைத்து பாயச புரோடாசத்தை ஹோமம் செய்தனர்.தக்ஷன் விஷ்ணு பகவானை தியானம் செய்தான்.அக்கணமே பகவான் கருடன் மீதேறி வந்து 10  திசைகளையும் பிரகாசித்துக்கொண்டு எதிரில் தரிசனம் தந்தார்.அனைவரும் விஷ்ணு பகவானை பூஜித்தனர்.தனித்தனியாக துதி செய்தனர்.
           விஷ்ணு பகவான் தக்ஷனை நோக்கி கூறினார்.----- "தக்ஷ பிரஜாபதி!ஜகத்தின் காரண கர்த்தாவாக யாமே பிரம்மாவாக, சிவபெருமானாக இருக்கிறோம்.தூய பர பிரம்ம சொரூபத்தை சான்றோர்கள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்று பிரித்து ஆராதிக்கும் முறையை எளிமையாக்கி உபதேசித்துள்ளார்கள்.ஒரே பிரம்ம சொரூபத்தில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பு இல்லை.மும் மூர்த்திகளில் பேதம் காண்பவர் சாந்தி யடைய மாட்டார்கள்.நானே பிரம்மாவாக இருந்து படைக்கிறேன்,விஷ்ணுவாக இவ்வுலகை ரட்சிக்கிறேன்,சிவசொரூபம் எடுத்து உலகங்களை அழிக்கிறேன்"
விஷ்ணு பகவான் இவ்வாறு கூறியதும் தக்ஷன் தெளிவடைந்தான்.தான் செய்த யாகத்தில் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் மூவருக்கும் அவிர்பாகம் கொடுத்து ஹோமம் செய்து யாகத்தை பூர்த்தி செய்தான்.
          இந்தக்கதையை படித்தவர்களுக்கு நீண்ட ஆயுள் பெற்று உலகில் பெயரும் புகழும் அடைவார்கள் என்பது புராண வாக்கு.

No comments:

Post a Comment