Wednesday 28 March 2012

பக்தன் அம்பரீஷ மன்னன்

           எழுதீவுகளும், ஏழு கடல்களும் கொண்ட மேதினியை ஆண்டு வந்த அம்பரீஷ மன்னன் விஷ்ணு பக்தியால் சிறந்து விளங்கினான்.உலகில் உள்ள சுகம் தரும் விசயங்களும் செல்வங்களும் நிலையற்றவை என்று நினைத்து பற்றற்று வாழ்ந்து அரசனுக்குரிய கடமைகளை செய்வான்.சாதுக்களையும் பக்தர்களையும் பெரிதும் மதிப்பான்.பல கோயில்களை எழுப்பி திருப்பணிகளை செய்வான்.தன்னையே ஸ்ரீ விஷ்ணு பகவானின் சேவையில் அர்பணித்து விட்டான்.மனதால் பகவானை தியானிப்பான்.கைகளால் அர்ச்சித்து,காதுகளால் பகவானின் திருவிளையாடல்களை கேட்டு, வாக்கால் அவர் திருநாமத்தை ஜபித்து பகவான் திரு நைவேத்தியத்தை புசித்து,ரசித்து கால்களால் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு நடை பயணம் சென்று வணங்கினான்.
            சரஸ்வதி நதிக்கரையில் புகழ் பெற்ற கௌதமர்,அஸிதர் முதலிய மகரிஷிகளை வைத்து செல்வச்சிறப்புடன் பெரும் தக்ஷனைகள் கொண்ட பல அச்வமேத யாகங்களை செய்தான்.அவனது நல்லாட்சியில் சொர்கத்தையும் விரும்பாத பிரஜைகளும் குறையாத செல்வங்களை பெற்று விஷ்ணு பக்தர்களாக சந்தோசத்துடன் வாழ்ந்தனர்.இவ்வாறு அம்பரீஷ ராஜாபக்தியோகத்துடன் தவ வாழ்கையை மேற்கொண்டு மக்களை காக்கும் அரசனுக்குரிய கடமைகளை செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.
            ஒரு நாள் அரண்மனையில் ஸ்ரீ விஷ்ணு பகவானை அம்பரீஷன் மெய்மறந்து பூஜை செய்துகொண்டிருந்த போது ஸ்ரீ விஷ்ணு பகவான் அவன் மீது பேரன்பு கொண்டு பக்தியில் மகிழ்ந்து தன சுதர்சன சக்கரத்தை பரிசாக அளித்தார்.அது விரோதிகளை வீழ்த்தக்கூடியதாகவும் , பக்தர்களை ரட்சிப்பதர்காகவும் அவனிடம் வந்து  இருந்தது.அதனை பக்தியுடன் பெற்றுக்கொண்ட அரசன் அதை தன அரண்மனை பூஜை மாளிகையில் வைத்து பூஜை செய்து வந்தான்.
           அம்பரீஷன் மனைவியும் அவனை போலவே பக்தியில் சிறந்தவளாக அவனுடன் சேர்ந்து ஸ்ரீ விஷ்ணுபகவானை ஆராதித்து வந்தாள்.தன் மனைவியுடன் ஒரு முறை ஒரு வருடம் வரை பூர்த்தியாகும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான்.விரதம் முடியும் போது அவன் கார்த்திகை மாதம் மூன்று நாள் உபவாசம் இருந்தான்.யமுனையில் நீராடி மது வனத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானுக்கு சந்தன மாலை, ஆபரணம் ஆகிய செல்வங்களுடன் சிறப்பாக அபிஷேகம் செய்து பூஜை செய்தான்.அரசனால் எல்லா செல்வங்களும் பெற்று நிறைவாக வாழ்ந்த பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறுசுவை விருந்து படைத்தான்.பசுக்களை தானம் செய்தான்.ஏகாதேசி விரதத்தை முடிப்பதற்கு பாரணை (புசிப்பதற்கு)செய்ய தயாராகும்போது சாபமும் வரமும் கொடுக்கும் வல்லமை படைத்த மகாரிஷி துர்வாசர் அதிதியாக அங்கு வந்து சேர்ந்தார்.
            துர்வாசர் வருகை தந்தவுடன் அரசன் அம்பரீஷன் அவருக்கு ஆசனமளித்து பாத பூஜை செய்தான்.விலைஉயர்ந்த பொருட்களை கொண்டு பூஜித்தான்.அதன் பின் ஏகாதசி விரதம் முடிக்கும் போஜனம் செய்ய வேண்டினான்.துர்வாசர் அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நதியில் நீராட சென்றார்.துவாதசி நேரம் கழிந்து கொண்டு இருந்தது.அரசன் தர்ம சங்கடத்தில் வீழ்ந்தவன் பிராமண குருமார்களிடம் யோசனை கேட்டான்.--- பிராமணர்களே நான் துவாதசி விரத போஜனம் செய்தால் துர்வாசரை விட்டு விட்டு போஜனம் செய்த பாவியாவேன்.ஆனால் துவாதசி திதியில் விரதத்தை முடித்துக்கொள்ள போஜனம் செய்யாமல் இருந்தால் ஏகாதசி விரதம் இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.இப்போது நான் என்ன செய்வது?அரசன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் கூறினார்கள். அரசே இதற்க்கு ஒரு வழி இருக்கிறது.அதாவது துவாதசி நேரம் கழியும் முன்பு நீங்கள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகுங்கள். அது போஜனம் செய்வதற்கு சமமாகவும் இருக்கும். அல்லது போஜனம் செய்யாமல் இருப்பதற்கும் சமமாகும் வேத சாஸ்த்திரங்கள் இவ்வாறு தான் கூறுகின்றன.
           பிராமணர்கள் இவ்வாறு கூறிய பின் அம்பரீஷன் அவர்கள் சொற்படி தீர்த்தத்தை மட்டும் பருகி துவாதசி பாரணையை முடித்துக்கொண்டான்.துர்வாசமுனிவரை எதிர்பார்த்து காத்திருந்தபோது துர்வாசர் யமுனையில் நீராடிவிட்டு வழிபாட்டு கடமைகளை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.அரசன் கைகள் கூப்பியபடி நின்றான்.துர்வாசர் தன் ஞானதிருஷ்டியால் அரசன் விரதத்தை முடித்துக்கொண்டதை அறிந்து கொண்டார்.மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்த பிராமணர்களை நோக்கி கூறினார். இதோ பார்த்தீர்களா மரியாதை துறந்த அரசன் இவன் செல்வ செருக்கு மிகுதியால் என்னை அவமதித்து நான் வருவதற்குள் போஜனம செய்து விரதத்தை முடித்துக்கொண்டான்.அதிதியாக வந்த என்னை விருந்து சாப்பிட அழைத்து விட்டு நான் உண்ணும் முன் இவன் விரதத்தை முடித்துக்கொண்டான்.இப்போது இவனுக்கு பாடம் புகட்ட போகிறேன் பாருங்கள். என்று கூறி ஆத்திரம் மேலிட்டு தன் ஜடையிலிருந்து ஒன்றை பிடுங்கி பூமியில் போட்டார்.அதிலிருந்து கிருத்யா என்ற பேய் உருவாகியது.அது பிரளய கால அக்னி போல தகித்துக்கொண்டு இருந்தது.நெருப்பே உருவானது போல இருந்தது.கையில் வாள் பிடித்து பூமி நடுங்க ஓடிப்போய் அம்பரீஷனை  தாக்க பாய்ந்தது.தன்னை தாக்க வந்த  கிருத்யா பேயை கண்டதும் தன்னை காத்துக்கொள்ள அம்பரீஷன் சுதர்சன சக்ரத்தை தியானம் செய்தான்.அக்கணமே விஷ்ணு பகவானின் பக்தனை காக்க சுதர்சன சக்கரம் எதிரில் தோன்றியது.மாபெரும் நெருப்பு சர்பத்தை சுட்டு சாம்பலாக்குவது போல தீ ஜுவாலையுடன் சுதர்சனம், கிருத்யா பேயை நொடியில் எரித்து சாம்பலாக்கி விட்டது


.சுதர்சன சக்கரம் அத்துடன் சாந்தமாகாமல் துர்வாசரை நோக்கி பாய்ந்தது.துர்வாசர் தாம் ஏவிவிட்ட பேய் எரிந்து போனதை கண்டார்.மேலும் சுதர்சனம் தன்னை நோக்கி வருவதையும் கண்டார்.அவர் பீதியடைந்து தன் உயிரை காத்துக்கொள்ள ஓடினார்.ஆனால் காட்டு தீ காட்டில் இருக்கும் பாம்புகளையும் மிருகங்களையும் எரிப்பதற்கு வேகமாக ஜுவாலையுடன் வருவது போல சுதர்சனம் தீ ஜுவாலையுடன் துர்வாசரை துரத்த ஆரம்பித்தது..துர்வாசர் தீ ஜுவாலை வெப்பத்தால் சரீரமெல்லாம் தகிக்க தீர்வு காண முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.அவர் இமயமலைக்குகைக்குள் போய் ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் எங்கும் தடையின்றி அவரை பின் தொடர்ந்தது.அவர் பூமியில் மலை காடு முதலிய இடங்களிலும் அதள விதள பாதாள லோகங்களிலும் கடலுக்குள்ளும் ஓடி ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் அவரை விட வில்லை.திசைகளை காக்கும் தெய்வங்களின் சொர்கத்திற்கும் சென்றார்.தேவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை.
            இறுதியில் பிரம்ம லோகத்தில் பிரம்மாவை தன்னை காக்கும்படி சரண் அடைந்தார்.ஆனால் பிரம்மா கூறினார்--எனது ஆயுள் இரண்டு பாரர்த்த காலம் தான்.அதன் பின் கால சொரூபனான பரம்பொருள் ஸ்ரீ விஷ்ணு பகவான் தான் படைத்த சிருஷ்டிகளை அழித்து ஒடுக்கி விடுவார்.அவர் கண் அசைவினால் அகில புவனங்களும் எரிந்து சாம்பலாகி விடும்.பிரளய காலத்தில் உயிர்களை தன்னுள் ஒடுக்கி விடுவார்.அவ்வாறு இருக்க நான்,பூதேஸ்வரன் சிவபெருமான், தேவர்கள் அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டவர்கள்.அவர் விருப்பப்படியே நாங்கள் மூவுலகங்களையும் இயக்குகிறோம்.(தொடரும்)

No comments:

Post a Comment